மீன்களில் ஃபார்மலின் கலப்படம் நிஜமா?



கலங்கடிக்கும் உண்மைகள்!

அசைவ உணவுப் பிரியர்களுக்கு மீன் என்றாலே தனிக் காதல்தான். விதவிதமாக சமைத்து ரசித்து ருசிப்பார்கள். அசைவப் பிரியர்கள் மட்டுமல்ல, சைவம்  உண்ணும் மக்களில்கூட ஒரு சாரார் மீனை அசைவம் என்று ஒதுக்காமல் சாப்பிடும் வழக்கமும் இங்குண்டு. மருத்துவர்கள் தாராளமாக, நிறைய சாப்பிடலாம் என ஒப்புக்கொள்ளு ஒரே அசைவமும் மீன் மட்டும்தான். காரணம், மீனில் உள்ள ஊட்டச்சத்துக்கள். உடலில் நல்ல கொழுப்பைச் சேர்த்து ஆரோக்கியத்தை அரவணைக்கும் பல சமாசாரங்கள் மீனில் உள்ளன. சென்னை மற்றும் தூத்துக்குடியில் பிடிக்கப்படும் கடல் மீன்களில் ஃபார்மலின் எனும் வேதிப்பொருள் கலக்கப்படுகிறது என்ற பீதி கடந்த வாரம் தீயாய்ப் பரவியது.

‘பிராய்லர் கோழி வேண்டாம், ஆபத்து, மட்டன் விற்கும் விலைக்கு அதன் பக்கமே போக முடியாது...’ என்று பட்ஜெட் பத்மநாபன்களாக வாழும் நகர்ப் புற மிடில்  கிளாஸ்களுக்கு மீன்தான் ஞாயிற்றுக் கிழமை கொண்டாட்டமாக இருந்தது. இதோ இப்போது அதுவும் பாதுகாப்பு இல்லை என்ற செய்தி இடியாக இறங்கியுள்ளது.ஃபார்மல்டிஹைடு என்ற ரசாயனம் பிளாஸ்டிக் பொருட்கள், ரெசின் போன்ற நவீன வேதிப் பொருட்களின் தயாரிப்பிலும் சிலவகை மருந்துகளிலும் பயன்படுகிறது. சருமத்தின் மேல் பூசப்படும் சில வகைக் களிம்புகளில் உள்ள இது சரும வறட்சியைத் தடுத்து, புண்களை, காயங்களைக் குணமாக்கும். அதுபோலவே, தடுப்பூசிகளில் பாக்டீரியா, வைரஸ் கிருமி களைக் கட்டுப்படுத்தும் கிருமி நாசினியாகவும் இது செயல்படுகிறது.

இந்த ஃபார்மல்டிஹைடு ரசாயனப் பொடியை தண்ணீருடன் சேர்க்கும்போது அது ஃபார்மலின் என்ற வேதிக் கரைசலாக மாறுகிறது. ஜீவராசிகளின் திசுக்களில்  உருவாகும் பாக்டீரியா, வைரஸ்களைக் கட்டுப்படுத்தும் இயல்பு இதற்கு இருப்பதால் மரித்தவர்களைப் பதப்படுத்தும் பாடி எம்பால்மிங் முறைக்கு இது மிகவும்  பயன்படுகிறது. இந்த ஃபார்மலினைத்தான் கடலில் இருந்து பிடித்துவரும் மீன்கள் நெடுநாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக அதன் உடலில் சேர்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவுகிறது.இந்த ஃபார்மலின் நேரடியாக உணவில் கலக்க ஏற்றதல்ல. அப்படி நேரடியாக உணவு மூலம் நம் குடலுக்கு வரும்போது நம் இரைப்பையைச் சேதாரமாக்கும். செரிமானக் கோளாறுகள், அல்சர், இரைப்பை மற்றும் குடல் புண்கள் ஆகியவற்றை ஏற்படுத்தும். தொடர்ந்து ஃபார்மலின் நம் உடலில் சேரும்போது இரைப்பை புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய் போன்ற பெரிய பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புண்டு.

தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் சென்ற மீன்களில் ஃபார்மலின் கலந்துள்ளதாகத்தான் முதலில் குற்றச்சாட்டு புறப்பட்டது. அதைத் தொடர்ந்து, சென்னை, தூத்துக்குடி, ஆண்டிப்பட்டி, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் விற்பனையாகும் மீன்களிலும் இந்தக் கலப்படம் நிகழ்ந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. தமிழக அரசு இந்தக் குற்றச்சாட்டை முழுமையாக மறுத்துள்ளது. மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ‘எந்த ஆதாரமுமற்ற திட்டமிட்ட வதந்தி இது’ என்று  அறிவித்துள்ளார்.  எது நிஜம், எது பொய் என்று முழுமையாகத் தெரியாது. ஆனால், உணவுப் பொருட்களில் கலப்படம் என்பது சோற்றில் விஷம் வைப்பதற்கு இணையானது. இதைக் கலப்படக்காரர்கள் உணர மாட்டார்கள். அரசுதான் விழித்துக்கொள்ள வேண்டும். கூடவே, நாமும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

- இளங்கோ கிருஷ்ணன்

 ஃபார்மலின்
மீனைக்
கண்டறிய…


வெண்ணிற ஆய்வுக் கரைசலில் மீன் இறைச்சியைப் போடும்போது கரைசல் மஞ்சள் நிறத்துக்கு மாறுவதைக் கொண்டு ஃபார்மலின் கலப்பைக் கண்டறியலாம்.
அதைவிடவும்  சுலபமான வழி ஒன்று உள்ளது. நாய், பூனை போன்ற விலங்குகள் ஃபார்மலின் கலந்துள்ள மீனைத் தீண்டாது. எனவே, சிறு துண்டை அவற்றுக்கு நறுக்கிப் போடுவதன் மூலம் கலப்படத்தைக் கண்டறியலாம்.