பெத்தநாயக்கும் மெட்ராஸ் காவலும்...



தல புராணம்

அன்றைய மெட்ராஸ்வாசிகளை கதிகலங்க வைத்த கம்பீரப் பெயர், பெத்தநாயக். 1639ம் வருடம் ஆங்கிலேயர்கள் இங்கு வந்திறங்கியபோது இன்றைய போலீஸ் போல அன்று ஊரைக் காவல்காத்து கண்காணித்து வந்தவரே இந்த பெத்தநாயக். இது ஒருவரின் தனிப்பட்ட பெயரல்ல. தலைமைக் காவலராக இருந்தவர் பொதுவில் ‘பெத்தநாயக்’ என்றழைக்கப்பட்டார்.

ஊரின் பாதுகாப்புக்கும், அமைதிக்கும் அவரே பொறுப்பு. அவரின்கீழ் இருபது தலையாரிகள் உதவியாளர்களாகப் பணியாற்றினர்.

இன்றுள்ளது போல் அன்று காவல் என்பது ஒரு முறையான அமைப்பாக இருக்கவில்லை.குற்றம் செய்பவர்களை ஊரின் சத்திரத்திலுள்ள சிறைக் கூடத்தில் அடைத்து வைப்பது பெத்தநாயக்கின் கடமை. பிறகு நீதிமன்றமாகவும் செயல்பட்டு வந்த சத்திரத்தில் வழக்குகள் நடந்து தண்டனைகள் தரப்பட்டன. இதுவே அன்றைய நடைமுறை!

அன்று மெட்ராஸ் என்கிற சிறிய கிராமம் பூந்தமல்லியை நிர்வகித்த பாளையக்காரரான தமர்ல வெங்கடாத்ரியின் கட்டுப்பாட்டில் இருந்தது. பாளையக்காரர்கள் என்பவர்கள் விஜயநகரப் பேரரசை ஆண்ட நாயக்கின் வழித்தோன்றல்கள். பின்னாளில் இவர்களே ஜமீன்தார்களாக மாறினர்.
ஆங்கிலேயர்களுக்கு மெட்ராஸில் கோட்டை கட்டிக் கொள்வதிலிருந்து நீதி வழங்குவது வரை அனைத்து அதிகாரங்களையும் கொடுத்தார் தமர்ல வெங்கடாத்ரி. இவரின்கீழ் பெத்தநாயக் காவல் பணியை மேற்கொண்டார்.

ஆங்கிலேயர்கள் இங்கே கோட்டையை நிறுவியபிறகு முதல்கட்டமாக மெட்ராஸின் காவல் பணியை முறைப்படுத்தினர். காரணம், இங்கே கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வந்ததுதான். மட்டுமல்ல, கருப்பர் நகரில் காளான்களாக முளைத்திருந்த சாராயக் கடைகளால் பல்வேறு பிரச்னைகளும், சண்டைகளும் புதிது புதிதாக வந்தவண்ணம் இருந்தன.

இதனால் கோட்டையின் அருகே இருந்த கருப்பர் நகருக்கும், சுற்றிலும் இருந்த பேட்டைகளுக்கும் பாதுகாப்பு அளிப்பதும், சட்டத்தை மீறுபவர்கள் மற்றும் பிரச்னைகளை உருவாக்குபவர்களை நீதிமன்றத்தின்முன் நிறுத்துவதும் பெத்தநாயக்கின் முக்கியக் கடமையாக்கப்பட்டது.

பின்னர், 1659ம் வருடம் கம்பெனியின் மெட்ராஸ் ஏஜென்ட்டான தாமஸ் சேம்பர் ஒப்பந்தம் ஒன்றைப் போட்டார். அதில் பெத்தநாயக், முழு நேரமாக ஐம்பது உதவியாளர்களை வைத்துக் கொள்ளவேண்டும் என்றும், தேவைப்படும் நேரத்தில் கூடுதலாக நூறு முதல் இருநூறு
உதவியாளர்களைத் திரட்டித்தர வேண்டும் என்றும்  சொல்லப் பட்டது.

இந்தப் பணிகளுக்கு ஊதியமாக பெத்தநாயக்குக்கு புறநகர்ப் பகுதியில் விளைநிலங்கள் இனாமாக வழங்கப்பட்டன. இதுவே பின்னாளில் பெத்தநாயக்கன்பேட்டை என்றழைக்கப்பட்டது. மேலும் வருமானத்திற்காக அரிசி, எண்ணெய், மீன், வெற்றிலை, பாக்கு போன்றவற்றின் மீது இவர் சிறிய வரிகள் விதித்துக் கொள்ளலாம் எனவும்கூறப்பட்டது.பெத்தநாயக் காவல் பணி மட்டும் செய்யவில்லை.

அவர் இன்சூரன்ஸ் ஏஜென்ட்டாகவும் செயல்பட்டார். ஆம்; திருட்டு, வழிப்பறி போன்றவற்றைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், பாதிக்கப்பட்டவருக்கான இழப்பீட்டை வழங்க வேண்டிய பொறுப்பு பெத்தநாயக்கைச் சார்ந்தது! இதுவே அன்றைய விதி. இதனால், பெத்தநாயக்கும் அவரின் உதவி யாளர்களும் கண்காணிப்பில் அதிதீவிரம் காட்டினர்.

வணிகம் செழிக்க, மெட்ராஸின் மக்கள் தொகை உயர்ந்தது. ஆரம்பத்தில் கோட்டையைச் சுற்றி எண்பது குடும்பங்கள் இருந்த நிலை மாறி, நானூறு ெநசவாளர் குடும்பங்கள் மெட்ராஸில் செட்டிலாயின. நகரம் விரிவடைய, பெத்தநாயக்கின் பணிச்சுமையும் கூடியது. வணிகர்களின் பொருட்களுக்கு மட்டுமல்லாமல் இறக்குமதி, ஏற்றுமதிப் பொருட்களைப் பாதுகாப்பதும், கம்பெனியின் வணிகத்துக்கான துணிகள் வெளுக்கும் இடத்தில் திருட்டு நடக்காமல் பாதுகாப்பதும் பெத்தநாயக்கின் பணிகளில் ஒன்றானது.

‘‘1699ம் வருடம் கோட்டைக் காவல் படையிலிருந்த என்சைன் தாமஸ் சாலமன் என்பவருடன் பதினோரு பேர் மெட்ராஸிலிருந்து தப்பிவிட்டனர். இவர்களைப் பிடிக்கும் பணி பெத்தநாயக்கிடம் வழங்கப்பட்டது.

மெட்ராஸிலிருந்து அறுபது மைல் தூரத்தில் இவர்களைப் பிடித்தது பெத்தநாயக் படை! மன்னிப்பு வழங்கப்படும் என்கிற நிபந்தனையுடன் கோட்டைக்குக் கொண்டு வரப்பட்டவர்களைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டது ஆங்கிலேய அரசு. பின்னர் இவர்கள் இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்’’ என பெத்தநாயக் பணி பற்றி, ‘The Madras Tercentenary Commemoration Volume’ நூலின் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார் சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆசீர்வாதம்.

இந்த தாமஸ் சாலமன்தான் பின்னாளில் ‘Modern History or The Present State of All Nations’ என்கிற புத்தகத்தை எழுதி புகழடைந்தவர்!   
இந்நிலையில், 1701ம் வருடம் மெட்ராஸ் கவர்னராக வந்த தாமஸ் பிட் புது ஒப்பந்தம் ஒன்றைப் போட்டார். இதன்படி, 50 முழுநேர காவல் உதவியாளர்கள் என்பது நூறானது.

தவிர, அவசரக் காலத்தில் உதவுவதற்காக தற்காலிகமாக நூறு பேர் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.காரணம், அன்று தாவூத்கானிடம் ஏற்பட்ட உரசலில் பெத்தநாயக்கின் தலையாரிகளே கோட்டைக் காவல்படையுடன் இணைந்து போரிட்டு ஆங்கிலேயப் படையைக் காப்பாற்றினர். இதனாலேயே, கூடுதல் உதவியாளர்கள் வைத்திருக்க வேண்டும் என ஒப்பந்தத்தில் கூறப்பட்டது.
 
மட்டுமல்ல, இப்போது கோட்டையிலிருந்த கடல் வாயில், சத்திரம், பஜார் போன்ற இடங்களில் கட்டணங்களை வசூலிக்கவும் பெத்தநாயக்கிற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. கம்பெனியின் பழைய பணியாட்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் தவிர மற்ற உள்ளூர் மக்களிடம் பெரிய வீடு ஒன்றுக்கு ஆண்டுக்கு மூன்று ஃபணமும் (fanam - அப்போதைய நாணயம்), ஓரளவு சிறிய வீடுகளுக்கு ஆண்டுக்கு இரண்டு ஃபணமும், மிகச்சிறிய வீடுகளுக்கு ஆண்டிற்கு ஒரு ஃபணமும் வசூலித்துக் கொள்ளலாம் என்றும் சொல்லப்பட்டது. இவையெல்லாம் பெத்தநாயக்கிற்கான வருமானங்கள். அவ்வளவே! பெத்தநாயக் காவலராக மட்டும் இல்லாமல் சிறைப் பாதுகாப்பும் செய்து வந்தார். கைதிகளை சத்திரம் அல்லது மேயர் நீதிமன்றத்துக்குக் கொண்டு வரும் பொறுப்பும் கொடுக்கப்பட்டது.

அன்று கோட்டையின் வடக்கு மதிற்சுவர் அருகே சிறை இருந்தது. இதனுள் ஆறு அறைகள் இருந்தன. இதைக் ‘கோழிக்கூடு’ என்றே அழைத்தனர். அந்தளவுக்கு அறைகள் சிறியதாக இருந்தன. சில நேரங்களில் உள்ளூர் கைதிகளுடன் பிரிட்டிஷ் கைதிகளும் மேற்கிந்தியத் தீவுகளில் இருந்த செயின்ட் ஹெலினா தீவுக்கு அடிமைகளாக அனுப்பப்பட்டனர்.

இந்நேரம் நகரில் வலங்கை, இடங்கை பிரச்னை தலைதூக்கியது. அதாவது வேளாண்மையைச் சாராத தொழிலாளர்கள், வணிகர்கள், தோல் பதனிடுபவர்கள் இடங்கை என்றும்; வேளாண் சார்ந்த விவசாயிகள், தானிய வணிகர்கள், பானை செய்பவர்கள் வலங்கை என்றும் பிரிந்து நின்று பிரச்னையில் ஈடுபட்டனர்.

இந்தப் பிரச்னை 1725ம் வருடம் முத்தியால்பேட்டையில் கோயில் கட்டும் பணியின் போதும் ஏற்பட்டது. உடனடியாகத் தலையிட்டு பிரச்னையை முடித்து வைத்தார் பெத்தநாயக்! இதன்பிறகு, பெத்தநாயக்கிற்கு சில விசேஷ பணிகள் தரப்பட்டன. குறிப்பாக, மேயர் பதவியேற்பு விழாவில் குதிரை மீது ஊர்வலமாக தனது பரிவாரங்களுடன் முன்னே செல்லும்படி பணிக்கப்பட்டார்.

1730ம் வருடம் கவர்னராக இருந்த ஜார்ஜ் மோர்டன் காவல் அமைப்பில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வந்தார். அதில், கருப்பர் நகரில் அமைதியை நிலைநாட்ட அதிக மான காவலர்களை நியமித்தார்.

காவல் வசதிக்காக நகரை சரியான அளவில் பிரித்தார்.
1746ல் மெட்ராஸ் பிரெஞ்சு வசமானது. பிறகு, 1758ல் மீண்டும் மெட்ராஸைப் பிடிக்க பிரெஞ்சுப் படைகள் முயன்றபோது கடும் போர் நடந்தது. இதில் அப்போது பெத்தநாயக்காக இருந்தவர் மரணமடைந்தார். அவரது அலுவலகம் தற்காலிகமாகச் செயல்படாமல் நின்றது. இதனால், உதவியாளர்களுக்குப் பதிலாக கம்பெனி சிப்பாய்கள் கருப்பர் நகரின் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

ஆனால், பெத்தநாயக் இருக்கும்போது நடந்தது போல பணிகள் சிறப்பாக இல்லை. தரகர்களால் எதேச்சதிகாரமாக வரிகள் வசூலிக்கப்பட்டன. குறிப்பாக,  துபாஷிகளாக இருந்தவர்கள் இந்த வேலைகளில் ஈடுபட்டனர். தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட கூலியிலும் ஒழுங்குமுறைகள் மீறப்பட்டன. வணிகர்கள் பொருட்களைப் பதுக்கி வைத்துக்கொண்டு தட்டுப்பாடு எனக் காரணம் காட்டி விலை உயர்த்தினர். திருட்டும், சாலையோர வழிப்பறியும் அதிகரித்தது.

நகர் சீரழிவை நோக்கிச் சென்றது. இதனால், ஆங்கிலேய நிர்வாகம் காவல் பணிக்காக ஒரு தனித்துவமான போலீஸ் அமைப்பை ஏற்படுத்துவதென முடிவெடுத்தது. 1770ல் போலீஸ் வாரியம் ஒன்றை அன்றைய கவர்னர் ஜோசியஸ் டு ப்ரீ ஏற்படுத்தினார். பொதுமக்களுக்கு ஏற்படும் இடர்ப்பாடுகளைக் களைந்து ஆரோக்கியமான சூழலை நகரில் உருவாக்குவது இதன் நோக்கம்.

தவிர, சரியில்லாத சாலைகள், எரியாமல் இருக்கும் தெரு விளக்குகள், தெருநாய்களின் தொல்லைகள் போன்ற மற்ற பிரச்னைகளிலும் இந்த வாரியம் கவனம் செலுத்தித் தீர்வு சொன்னது. மட்டுமல்ல; நிலுவையில் உள்ள உள்ளூர் மக்களின் வழக்குகளுக்காக ஒரு கச்சேரி நீதிமன்றத்தையும் ஏற்படுத்தியது. சந்தைப் பொருட்களின் விலையையும் ஒழுங்கு செய்தது. ஆனால், ஒரு வருடத்திலேயே இந்த வாரியம் கலைக்கப்பட்டு விட்டது. இதன்பிறகு 1777ல் ஒரு புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

கவர்னர் ஜார்ஜ் ஸ்ட்ராட்டன் முகலாயர்களின் காவல் அமைப்பைப் பார்த்து ‘கொத்தவால்’ என்ற முறையை மெட்ராஸில் கொண்டு வந்தார். ‘கொத்தவால்’ என்றால் கண்காணிப்பது என அர்த்தம்.

இப்படியாக வீரபெருமாள் என்பவர் கொத்தவாலாக நியமிக்கப்பட்டார். இவரது சாவடியை வைத்தே கொத்தவால்சாவடி என்ற பெயர் வந்தது. இன்றும் ஜார்ஜ் டவுனில் கொத்தவால்சாவடியைப் பார்க்கலாம். இவரது பணி சந்தைப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவதும், வியாபாரிகளை ஒழுங்காக நடந்துகொள்ளச் செய்வதுமாகும்.

பின்னர் 1780ல் இந்தக் கொத்தவால் பதவி காவல் கண்காணிப்பாளர் என மாற்றப்பட்டது. இதிலிருந்தே இன்றைய நவீன காவல் அமைப்பிற்கான அடித்தளம் ஆரம்பமானது   

பேராச்சி கண்ணன் ராஜா