உலகின் அழகான அமைச்சர்!



இஸ்ரேலிய குழந்தைகளின் ரோல் மாடல். யூத இளம் பெண்களின் ஆதர்சம். அறிவும் துடிப்பும் மிளிரும் ஆளுமை. உலகின் 100 முக்கியமான யூதர்களில் ஒருவர்... என்று பன்முகங்களுடன் வலம் வருகிறார் ஐலட் ஷாகேத்!ஈராக் நாட்டிலிருந்து இஸ்ரேலிற்குப் புலம் பெயர்ந்த வசதியான குடும்பத்தில் பிறந்தவர் ஐலட்.

8 வயதில் அரசியல் விவாத நிகழ்வு ஒன்றை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறார். வலதுசாரியைச் சேர்ந்த ஒருவரின் பேச்சு ஐலட்டை வெகுவாக கவர்ந்திருக்கிறது. ‘‘ஒரு வலதுசாரி அரசியல்வாதியாக வேண்டும்... என்ற தீராத விருப்பம் 8 வயதிலேயே எனக்குள் துளிர்விட்டது...’’ என சமீபத்தில் ஐலட் நினைவுகூர்ந்திருக்கிறார்.

அமெரிக்க நிறுவனத்தில் சாஃப்ட்வேர் எஞ்சினியராக இருந்த ஐலட்டிற்கு, பிரதமர் அலுவலகத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அங்கே தன்னைப் போலவே வலதுசாரி அரசியலில் தீவிர ஈடுபாடுள்ள நஃப்தாலி பென்னட் என்பவரைச் சந்தித்தார்.
இருவரும் பிரதமர் அலுவலகத்திலிருந்து விலகி, 2010ல் ‘மை இஸ்ரேல்’ என்ற மூவ்மென்ட்டை ஆரம்பித்து தங்களின் கொள்கைகளை, எதிர்காலத் திட்டங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட ஆரம்பித்தனர். 2008ல் உருவான யூதக் கட்சியான ‘தி ஜுவிஷ் ஹோமி’ல் தன்னை இணைத்துக்கொண்டு நஃப்தாலி அதன் தலைவரானார். அவரைப் பின் தொடர்ந்து போன ஐலட், அந்தக் கட்சி யில் பெரிய பொறுப்பை இப்போது வகிக்கிறார்.

2015ல் நடந்த தேர்தலில் ‘தி ஜூவிஷ் ஹோம்’ சார்பாக போட்டியிட்டு இஸ்ரேலின் சட்ட அமைச்சரானார். இப்போது வரை சட்ட அமைச்சராக ஐலட் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் இஸ்ரேல் நாளிதழ்களில் தலைப்புச் செய்தி! இத்தனைக்கும் 2010 வரை ஐலட்டைப் பற்றியோ, நஃப்தாலியைக் குறித்தோ இஸ்ரேலில் உள்ளவர்களுக்கே பெரிதாகத் தெரியாது என்பது ஆச்சர்யம்.

இஸ்ரேலிய விமானப்படையில் பைலட்டாக இருந்தவரைத் திருமணம் செய்துகொண்ட ஐலட், இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகியிருக்கிறார். இப்போது ஐலட்டின் வயது 42.

த.சக்திவேல்