டிஎம்எஸ்சுக்காக வாழும் ரசிகர்!



பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் என்கிற டி.எம்.எஸ்சுக்கு அறிமுகம் தேவையில்லை. கணீர் குரல் என்றாலே அது இந்த மூன்றெழுத்துக்கள்தான். இன்று அவர் நம்முடன் இல்லை. ஆனாலும் அவர் பாடிய பாடல்கள் நம்முடன்தான் கலந்திருக்கின்றன. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக பாடலில் கோலோச்சியவர்.

அப்படிப்பட்டவரின் பாடல்களை பொக்கிஷமாகச் சேகரித்து பாதுகாத்து வருகிறார் சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பரசுராம். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த இவர் இப்போது பல்வேறு ஆன்மிகப் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

‘‘சொந்த ஊர் திருச்சி. பத்தாவது வரை படிச்சேன். அப்புறம் வேலைக்காக 1971ல சென்னைக்கு வந்தேன். தனியார் டீ நிறுவனத்துல 25 வருஷங்கள் வேலை பார்த்தேன்.சின்ன வயசுல இருந்தே புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும். அதுதான் இப்ப இலக்கிய, ஆன்மிகக் கட்டுரைகளை நான் எழுதக் காரணம்னு நினைக்கறேன்...’’ என்ற பரசுராம் டிஎம்எஸ் குறித்து பேசத் தொடங்கும்போதே தழுதழுக்கிறார்.

‘‘அவர் பாடல்களைக் கேட்டுத்தான் வளர்ந்தேன். சொல்லப்போனா என்னை வளர்த்ததே டிஎம்எஸ் ஐயாதான். வீட்ல கிராமஃபோன்ல அப்பா அவர் பாடல்களை ஒலிக்க விடுவார். அந்தக் கணீர் குரல் என்னை சுண்டி இழுக்கும். சினிமால நடிக்கிறவங்களேதான் சம்பந்தப்பட்ட பாடல்களையும் பாடறாங்கனு நினைச்சுட்டு இருந்தேன். பின்னணிப் பாடகர்னு ஒருத்தர் உண்டுனு அப்ப தெரியாது.

ஒருமுறை ‘தெய்வத்தாய்’ படத்தை என் அண்ணாவும் நானும் பார்த்தோம். அதுல எம்ஜிஆர் ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...’னு பாடி நடிச்சிருப்பார். மறுநாள் அந்தப் பாட்டை ரேடியோவுல ஒலிபரப்பினாங்க. அப்ப வால்வ் ரேடியோ வைச்சிருக்கறது பெரிய விஷயம். பக்கத்து வீட்டுல அந்த ரேடியோ இருந்தது. அவங்கதான் ‘இது டிஎம்எஸ் பாடினது’னு சொன்னாங்க.

முதல்ல எனக்கு ஒண்ணும் புரியல. எம்ஜிஆர்தானே பாடினார்... நாமே சினிமாவுல பார்த்தோமேனு குழம்பினேன். அப்புறம்தான் அந்த வீட்டு அக்கா எனக்கு பின்னணிப் பாடகர்களைப் பத்தி புரிய வைச்சாங்க...’’ என மலரும் நிகழ்வுகளில் மூழ்கிய பரசுராம், இதன்பிறகு தீவிர டிஎம்எஸ் ரசிகராகி இருக்கிறார்.

‘‘என்ன ஓர் ஆளுமை... எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர்னு பலருக்கும் அவர் பாடியிருக்கார். ஆனா, எல்லாமே ஒரே மாதிரி இருக்காது. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு குரலா இருக்கும். அந்தத் தோரணைக்கும் வார்த்தை உச்சரிப்புக்கும் நான் மயங்கலைனா மனுஷனே இல்ல!

வேலைக்குப் போன பிறகு கைல காசு சேர்ந்தது.

வீட்டுச் செலவுக்குப் போக எனக்குனு ஒரு தொகையை சேமிச்சேன். அப்ப கேசட் கிடையாது. கிராமஃபோன் ரிக்கார்ட்ஸ்தான். 78 ஆர்பிஎம். அதனோட தரத்துக்கு இப்ப வர்ற சிடி / டிவிடி எல்லாம் பக்கத்துல கூட நிக்க முடியாது. பாடலின் ஆழம், உச்சரிப்பு, பின்னணி இசைனு தனித்தனியா உணர முடியும்.

சென்னை மார்கெட்டுல இல்லாத பொருட்கள் கூட இப்ப சென்னை சென்ட்ரல் பக்கத்துல புறநகர் ரயில் நிலையம் இருக்கிற, அப்ப மூர்மார்க்கெட்டா இருந்த பகுதில கிடைக்கும். அங்க கிராமஃபோன் தட்டுகளை சேர்த்து வைச்சிருந்த காசுல வாங்குவேன்.டிஎம்எஸ் ஐயா பாடின சினிமா பாட்டுகள் மட்டுமில்ல... கர்நாடக சங்கீதப் பாடல்கள், பக்திப் பாடல்கள், இசைக் கச்சேரிகள்னு அவர் பாடின எல்லாத்தையும் வாங்க ஆரம்பிச்சேன். சில பாடல்கள் ரேடியோவுல ஒலிக்கிறப்ப அதை அப்படியே பதிவு பண்ணிடுவேன்.

ஒரு கட்டத்துக்குப் பிறகு ஆடியோ கேசட் எல்லாம் சிடியா மாறிச்சு. அதையும் தேடித் தேடி வாங்கினேன். வேலை முடிஞ்சதும் 61டி பிடிச்சு நேரா மூர்மார்க்   கெட் போயிடுவேன். என் தலையைப் பார்த்ததுமே ‘டிஎம்எஸ் வந்துட்டார்’னு கடைக்காரங்க சொல்லுவாங்க. புதுசா அவங்ககிட்ட வந்த ஐயாவோட கேசட்டை எடுத்துக் கொடுப்பாங்க.

அதுல டிஎம்எஸ் பெயர் இருந்தா போதும். உடனே வாங்கிடுவேன்...’’ என்று சொல்லும் பரசுராம், டிஎம்எஸ் பாடிய பாடல்களை மட்டும் சேகரிக்கவில்லை. அவரது நண்பராக 42 வருடங்கள் இருந்திருக்கிறார்! ‘‘அவரை எப்படியாவது பார்த்துடணும்னு சென்னைக்கு வந்ததுமே ஒரு விடுமுறை நாள்ல அவர் வீட்டுக்குப் போனேன்.

அப்ப எனக்கு வயசு 19. பிரபலமானவர்... என்ன சொல்வாரோனு பயந்தேன். ஆனா, ‘வாங்க தம்பி’னு ஆசையா கூப்பிட்டு உபசரிச்சார். அவர் பாடிய பாடல்களை கூச்சத்தோடு பாடிக் காட்டினேன். சந்தோஷப்பட்டார். அந்த நிமிஷம் ஆரம்பிச்ச எங்க நட்பு அவர் மறையும் வரை தொடர்ந்தது.

மாசத்துக்கு இரண்டு முறையாவது அவரைப் போய் பார்த்துடுவேன். இல்லைனா ‘உடம்புக்கு முடியலையானு ஐயா பார்த்துட்டு வரச் சொன்னாங்க’னு யாராவது ஓர் ஆள் டிஎம்எஸ் ஐயா சார்பா வீட்டுக்கு வந்துடுவாங்க! என் கல்யாணத்தன்னிக்கி அவருக்கு அஞ்சு ரிக்கார்டிங் இருந்தது.

அந்த பிசி ஷெட்யூல்லயும் நேர்ல வந்து என்னை வாழ்த்திட்டுப் போனார்! எங்கப்பா வேதத்துல ஸ்காலர். டிஎம்எஸ் ஐயாவுக்கும் வேதம் தெரியும். இரண்டு பேரும் வேதம் பத்தி மணிக்கணக்குல பேசுவாங்க...’’ நினைவுகளில் தழுதழுக்கும் பரசுராம், இப்போதும் டிஎம்எஸ் பாடிய ஒரு கேசட்டை தேடிக் கொண்டிருக்கிறார்.

‘‘ஐயா பிரபலமானவர். அதனால அவரோட பெரும்பாலான கேசட்டுங்க ஈசியா கிடைச்சுடும். ஆனா, ஒரேஒரு தொகுப்பு மட்டும் இன்னமும் கிடைக்கலை. அது வல்லக்கோட்டை முருகன் பற்றிய திருப்புகழ். ஏழு பாடல்கள் கொண்ட கேசட். அது என்கிட்ட இருந்தது. ஆனா, தொலைஞ்சுடுச்சு. எந்த ஊருக்குப் போனாலும் அது கிடைக்குமானு அங்க இருக்கிற கடைகள்ல எல்லாம் ஏறி இறங்கறேன்.

இன்னமும் கண்ல படலை. தொழில்நுட்பம் வளர்ந்த இன்றைய சூழல்ல இணையத்துல ஒருவேளை கிடைக்கலாம்னு கூட பார்த்துட்டேன். ஏமாற்றம்தான். ஆனா, எப்படியும் ஒருநாள் அதை வாங்கிடுவேன். எனக்கு அது கிடைக்கும்!’’ அழுத்தமாகச் சொல்லும் பரசுராம், இதற்காகச் செய்த செலவை கணக்கு வைத்துக் கொள்ளவில்லை.

‘‘முதல்ல ஐயாவோட குரலுக்கு மயங்கினேன். அப்புறம் அவர் நட்பு கிடைச்சது. நான் சாதாரண மனுஷன். என்னையும் மதிச்சு என் நட்பை அவர் ஏத்துக்கிட்டார். அவர் பாடிய பாடல்கள் அடங்கின தொகுப்பை நான் கேட்டா கொடுத்திருப்பார். ஆனா, அது மரியாதை கிடையாது. தவிர, தேடிப் போய் வாங்கறதுல இருக்கிற சந்தோஷமே தனி. இதுக்கெல்லாம் கணக்குப் பார்க்கறது பாவம்!’’ என்கிறார் பரசுராம்.  

ப்ரியா

படங்கள் ஆ.வின்சென்ட் பால்