இலக்கியம் போல் சினிமாவுக்கும் அறிவம்சம் உண்டு என்பதைக் காட்டியவர்!



கலைஞர் 14 வயதில் அரசியலுக்கு வந்தார். நேசமான தொழிலாக சினிமாவை வைத்துக்கொண்டார். கொள்கைகளைக் கடைசிவரை சமரசம் செய்துகொள்ளாமல் சினிமாவில் பயணிப்பது கடினம். கொள்கைப்படியும், நான் வரித்துக் கொண்ட சித்தாந்தத்தின்படியும்தான் நடிப்பேன் என்றால் இந்த 200 படங்களில் நான் பத்துப்படங்களில்தான் நடித்திருப்பேன்.

ஆனால், எதிலும் சமரசம் செய்துகொள்ளாமல் அய்யா மாதிரி தாக்குப்பிடித்த எழுத்தாளர்கள் குறைவு. மக்கள் திலகம் முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமான ‘ராஜகுமாரி’க்கும், நடிகர் திலகம் முதன் முதலில் நடித்த ‘பராசக்தி’க்கும் இவர்தான் வசனம். முதன் முதலில் சிவகுமார் அண்ணன்தான் கலைஞரின் வீரவசனங்கள் புத்தகத்தை எனக்குக் கொடுத்தார்.

அண்ணனோடு சேர்ந்து ‘பராசக்தி’, ‘மனோகரா’, ‘சேரன் செங்குட்டுவன்’, ‘சாக்ரடீஸ்’ வசனத்தையெல்லாம் அவர் வீட்டு மொட்டை மாடியில் பேசியிருக்கோம். கலைஞர் வசனம் பேசித்தான் ‘ஒரு கோயில் இரு தீபங்கள்’ படத்திற்காக வாய்ப்பு தேடினேன்.  

அவர் வசனத்தைப் பேசித் திரிந்தவனுக்கு அவர் வசனத்திலேயே ‘பாலைவன ரோஜாக்கள்’, ‘மண்ணின் மைந்தர்கள்’ படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெருமை.எல்லாத்தையும் விட உயர்ந்தது ‘பெரியார்’ படத்தில் பெரியாராகவே நடிச்சது. அப்போது அய்யா முதல்வராக இருந்தார். தணிக்கையில் ‘பெரியார்’ எந்தப் பிரச்னையும் இல்லாமல் வெளி வந்ததற்கு அவர்தான் காரணம்.

‘பெரியார்’ படத்தில் நான் பெரியாரா நடிக்க முடிவான பிறகு அவரைப் பார்க்கப் போயிருந்தேன். ‘சத்தி, நீ இவ்வளவு உயரமா இருக்கியே... அய்யா வேடம் உனக்கு பொருந்துமா...’னு சந்தேகமா கேட்டார். உடனே மேக்கப் டெஸ்ட் எடுத்த குளோசப் படத்தைக் காட்டினேன்.
பார்த்தவுடனே வியந்துபோய் ‘உயரம்தான் பிரச்னையா இருக்கு. பெரியாராக நடிக்கவே பொறந்தவன் மாதிரி இருக்கியே...’னு சொன்னார். அப்புறம் முதல் காட்சி பார்த்திட்டு கொஞ்ச நேரம் எழுந்திருக்கவே இல்லை. உட்கார்ந்தேயிருந்தார். ‘என்ன அய்யா அப்படியே உட்கார்ந்திருக்கார்’னு நினைச்சு சுத்திக்கிட்டு போய்ப்பார்த்தேன். அப்படியே கண்ணிலிருந்து நீர் வழிய உட்கார்ந்திருந்தார். பாஸ் மார்க் வாங்கிட்டேன்னு குதூ
கலம் ஆகிடுச்சு.

பெரியாரா நடிக்கிறதில் ஒரு சிக்கல் இருக்கு. 200 வருஷங்களுக்கு முன்னாடி இருந்த மன்னனா நடிக்கிறது சுலபம். அவங்களை யாரும் பார்த்திருக்க முடியாது. ஆனால், கலைஞர், பேராசிரியர், ஆசிரியர் வீரமணி மாதிரி பெரியாரோடு பழகினவங்க இன்னும் இருக்காங்க. அதுவும் கலைஞர், ஆசிரியர்கிட்டே பாராட்டு வாங்கறது ரொம்பக் கஷ்டம்.

பெரியார் ஒரு மோதிரம் போட்டிருந்தார். அந்த மோதிரத்துக்கு 110 வயதிருக்கும். அதை  ‘பெரியார்’ பட 100வது நாள் விழாவில் ஆசிரியர் வீரமணி கலைஞரிடம் கொடுத்தார். மோதிரத்தை கலைஞர் எனக்கு அணிவித்தார்.

அது இன்னும் என் விரலில் இருக்கிறது. அய்யாவுக்கு எப்பவும் காமெடி நல்லா வரும். பேசும்போது ‘இந்த மோதிரத்தின் மீது எனக்கும் ஒரு கண் இருந்தது. யார் விரலுக்கு அது போகுமோ என நினைத்துக்கொண்டு இருந்தேன். அது தம்பி சத்யராஜ் விரலுக்குப் போனது பொருத்தம்; மகிழ்ச்சி. இருந்தாலும் சற்று பொறாமையோடுதான் இதை சத்யராஜ் கையில் அணிவிக்கிறேன்...’னு சொன்னார்.

நான் அப்போது மேடைகளில்  கலைஞர் எழுதிய சிவாஜி வசனங்களைத்தான் பேசிக் கொண்டிருப்பேன். நான் எம்ஜிஆர் ரசிகன்னு அவருக்குத் தெரியும். ஒரு சந்திப்பில், ‘சத்தி நான் எம்ஜிஆருக்கு  ‘நாம்’ படத்துல பிரமாதமான வசனங்கள் எழுதியிருக்கேன் தெரியுமா. அதுல எம்ஜிஆர் ஹீரோ.

வீரப்பா வில்லன். எதிர்பாராமல் வீரப்பா வந்துவிடுவார். எம்ஜிஆர் முகத்தில் ஓர் ஆச்சரியம் வரும். வீரப்பா ‘என்ன முகத்தில் ஆச்சர்யக்குறி...’ என்பார். அதற்கு எம்ஜிஆர், ‘ஆமா ஆச்சரியக் குறிதான். அதையே கொஞ்சம் வளைச்சா கேள்விக்குறியா மாறிடும். கேள்விக்குறியும், அரிவாளும் ஒரே மாதிரிதான் இருக்கும். மறந்து விடாதே...’ என்பார்.

இப்படி அவர் எழுதிய வசனங்களை மறக்காமல், வார்த்தை பிசகாமல் சொல்வார். நினைவுப் பெட்டகம் அவர்.தமிழுக்கு, தமிழ் இனத்திற்கு பெரியாரின் மிக முக்கியமான கொள்கை களை சட்டமாக ஆக்கினார். அதையே திரைப்படங்களில் பாடமாக நடத்தினார். சமூகநீதியை நோக்கிப் பயணிக்கும் அத்தனை பேரும் அவருக்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்.

அய்யா அவர்கள் பேனா பிடித்து எழுதி விட்டு, மேடையில் பேசிவிட்டுப் போன ஒருவர் அல்ல. படங்களில் சமூக நீதியைக் காட்டிய கம்பீரம்தான் வரலாற்றில் அவருக்குத் தனி இடத்தைத் தந்திருக்கிறது. அவர், தான் எழுதுவதையும், பேசுவதையும் இரு தடங்களாக உயர்த்திப்பிடித்தார்.

எங்கள் வீட்டில் கிராமபோன் ரிக்கார்டு இருந்தது. 1954ல் நான் பிறந்தேன். 1952ல் ‘பராசக்தி’ வந்துவிட்டது. 8வது படிக்கும்போது மறுவெளியீட்டில்தான் நான் பார்த்தேன். இப்பவும் ‘பராசக்தி’யின் மொத்த வசனத்தையும் துளிவிடாமல் பேசுவேன். அதே மாதிரி சேரன் செங்குட்டுவன், சாக்ரடீஸ் வசனங்களும் எனக்கு அத்துப்படி.

குறிப்பாக ‘மந்திரிகுமாரி’, ‘மருதநாட்டு இளவரசி’,  ‘அரசிளங்குமரி’ போன்ற படங்களில் சமூக நீதி கருத்துகளை அள்ளித்தெளித்தது அவரது ஆளுமையின் உச்சம்.  பெரியாரின் கருத்துகளைப் படங்களில் புகுத்தியது பெரிதல்ல, அந்தப் படங்களை பெரிய வெற்றி பெற வைத்ததுதான் அவரின் சாதனை. அப்படி வெற்றி பெறாவிட்டால் அதை நோக்கி தமிழ் சினிமாவின் பார்வை திரும்பியிருக்காது.

மக்களின் பார்வையும் பட்டிருக்காது.தமிழ் சினிமாவில் சமூகநீதியை எடுத்துக் கூற கலைஞரைப் போல முன்னொருவருமில்லை, பின்னொரு
வருமில்லை. அரிய வகை மாதிரி அவர். சினிமா என்பது வெறும் கதை சொல்லும் கருவியல்ல என்பதை அவர் உணர்த்தினார். இலக்கியம் போல அதற்கு அறிவம்சமும் உண்டு என்று காட்டினார்.

‘பாலைவன ரோஜாக்கள்’ படம் முழுவதும் அனேகமாக கோபாலபுரத்திலேயே நடந்தது. படத்தில் நான் இருக்கிற வீடு முரசொலி மாறன் அய்யா வீடு. கலைஞர் வீட்டு கார்ஷெட்டை ஒரு சின்ன கடையாக்கினோம். ஒரு மாதத்திற்கு மேலே கோபால புரத்தில் இருந்ததால், நான் அங்கேயிருந்த எல்லோரிடமும் நெருங்கி விட்டேன்.

எல்லோர் வாழ்க்கையும் முடிந்துதான் போகும். ஆனால், அவர் சம்பந்தப்பட்டது எல்லாம் அவரோடு முடிந்துவிடுமா என்ன? அதுதான் அய்யாவின் சாராம்சம்.இவ்வளவு சாதனைகளை நிகழ்த்திவிட்டு அய்யா துயிலில் இருக்கிறார். இறப்பு அவரை மெல்லணைத்து நடத்தியிருக்கும் போல. உறக்கச் சாந்தம் போலிருந்தது அவர் படுத்திருந்தது.

என் போன்றோர் அவரால் ஈர்க்கப்பட்டோம். அவரிடமிருந்து கற்றுக்கொண்டோம். தமிழ் சினிமாவிற்கு கலைஞர் செய்தது ஆகச்சிறந்த பெரிய நன்மை. அவருக்குத் தலைவணங்குகிறேன்.

சத்யராஜ்