விஸ்வரூபம் 2



சர்வதேசத் தீவிரவாதிகளை வேட்டையாடுவதுதான் ‘விஸ்வரூபம் 2’.முதல் பாகம் விட்டுச்சென்ற இறுதிக்காட்சியின் நுழைவில் புதுப்படம் ஆரம்பிக்கிறது. உளவுத்துறையின் அதிகாரியான கமல்ஹாசன் அமெரிக்காவை அழிக்க முற்படுபவர்களைக் கண்டுபிடிக்க அனுப்பப்படுகிறார். படை பயிற்சியில் தேறிய ஆண்ட்ரியா துணையிருக்க, மனைவி பூஜா குமார் இணையிருக்க பயணம் ஆரம்பிக்கிறது.

தீவிரவாதிகளின் தலைவன் அங்கிருந்து தப்பிக்க, மறுபடியும் தேடுதல் ஆரம்பிக்கிறது. செயற்கையான சுனாமியை ஏற்படுத்தி லண்டனை அழிக்க முயற்சிக்க, கமல் மனைவி துணையோடு அபாய முயற்சியை முறியடிக்கிறார்.

தீவிரவாதிகளின் அடுத்த குறி தில்லி. வீரதீரத்துடன் அதையும் முறியடிக்கிற முயற்சியில் ஆண்ட்ரியா பலியாகிறார். இந்தத் தடவை கொதித்துப்போய் தீவிர வாதிகளைப் பிடிக்கப்போன கமலைக் கட்டிப்போட்டு, பூஜா குமாரை வதைக்கிறார்கள். கமல் தப்பினாரா... மனைவியை சேதம் இல்லாமல் காப்பாற்றினாரா... என்பதே மீதிக்கதை.

மிகவும் சிரமம் கொண்ட கதாபாத்திரத்தை ஜஸ்ட் லைக் தட் செய்கிறார் கமல். அம்மாவின் மறதி நோய்க்கு முன்னால் தன்னை அடையாளம் காணாத அவஸ்தை, துக்கம், ஆற்றாமை எல்லாம் முகத்தில் நுணுக்கமாய் வெளிப்படத் தவிக்குமிடம், ஆனந்த் மகாதேவனோடு உளவுத்துறையின் உள் அரசியலை, அரசியல்வாதிகளின் விளையாட்டை சரளமாகப் பேசிக்கொள்ளும் விதம்... என கமல் ஆள்கிறார்.

சண்டைக்காட்சியில் இன்றைய இளைய நடிகர்களுக்கு முழு சவால் தருகிறார். அதே விதத்தில் பூஜா குமாருடன் காதல், அந்தரங்க வெளிப்பாட்டில் அவ்வளவு நளினம். ‘பெயின் இருந்தால்தான் கெயின்’ என்ற வார்த்தைகளோடு பூஜாவுடன் தொடங்கும் உரசல்களில் காமம் சுடர் விடுகிறது.ஆண்ட்ரியா உற்சாகமும், இளமையுமாய் செம ஜில்! பூஜாவுடன் இருந்துகொண்டே கமலுக்குக் கொடுக்கும் சீண்டல்கள் ஆல் டைம் வசீகரம்.

உளவுத்துறையின் உயர் அதிகாரிகளாக சேகர் கபூர், தீவிரவாதிகளின் தலைவனாக ராகுல் போஸ், உள்ளிருந்தே கமலை அழிக்கப்பார்க்கும் அதிகாரி ஆனந்த் மகாதேவன், அம்மாவாக வகிதா ரஹ்மான் என அனைவரும் இயல்பான நடிப்பிற்கு பாடம் எடுக்கிறார்கள்.ஜிப்ரானின் பின்னணியில் அனல். சண்டைக் காட்சியில் சனு, ஷாம்தத்தின் கேமராவில் சர்வதேசத் தரம்.

இவ்வளவு எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் படத்தைப் பார்க்க வைத்தது ஏனோ! படுபயங்கரமான லண்டன் கடலுக்குஅடியில் கிடக்கும் வெடிப்பொருளைக் கைப்பற்ற கமல் மனைவிதான் கிடைத்தாரா... அடுத்தடுத்து தொடர்பில்லாத காட்சிகள்... ‘விஸ்வரூபம் 1’ இட்லியை ‘விஸ்வரூபம் 2’ உப்புமாவாக மாற்றியிருக்கிறார்களோ என எண்ண வைக்கிறது.                         

குங்குமம் விமர்சனக்குழு