புள்ள குட்டிகளை படிக்க வைங்கப்பா



ஆகஸ்ட் 14, 1947. பாகிஸ்தானின் சுதந்திர தினம். இந்தியாவுக்கு ஒரு நாள் முன்பாகவே சுதந்திரம் பெற்ற நாடு. சுதந்திரம் பெற்ற குறுகிய காலத்திலேயே (மூன்று வருடங்களில்) இந்தியா, தனக்கான மிகச்சிறந்த அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி 1950, ஜனவரி 26 முதல் முழுமையான ஜனநாயகக் குடியரசாக மலர்ந்தது.
எண்பது கோடிக்கும் அதிகமான மக்கள் பங்குபெறும் தேர்தல் முறை ஜனநாயகத்தில் உலகத்துக்கே முன்னுதாரணமான நாடாக இந்தியா மலர்ந்திருக்கிறது. நமக்கு ஒரு நாள் முன்பாக சுதந்திரம் பெற்ற பாகிஸ்தான்?

அதிபர் முறை, பாராளுமன்ற ஆட்சி முறை என்று மாறி மாறி இன்றுவரை தடுமாறிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது ராணுவப் புரட்சியின் மூலமாக தளபதிகள் நாட்டைக் கைப்பற்றி அதிபராகும் போதெல்லாம் குடிமக்களின் உரிமை, விருப்பங்களுக்கு முக்கியத்துவம் தராமல் கொடுங்கோல் ஆட்சி முரட்டுத்தனமாக நடத்தப்பட்டது.

பாராளுமன்ற ஆட்சி முறைகளின் போதோ, அதிபர் முறையே தேவலாம் எனுமளவுக்கு ஊழல்வாதிகளால் பாகிஸ்தானியர்கள் முற்றாக சுரண்டப்பட்டார்கள். ஜனநாயகப் பாராளுமன்ற முறையில் இந்தியா அடைந்திருக்கும் மகத்தான வெற்றிக்கு அச்சாணியாக விளங்குவது உள்ளாட்சி முறைதான்.

மக்கள் தங்களில் ஒருவரை உள்ளாட்சியில் தேர்ந்தெடுத்து, அவரை எதிர்காலத் தலைவராக வளர்த்தெடுத்து மாநில அளவில், தேசிய அளவில் மக்கள் மன்றங்களில் தரம் உயர்த்திக் கொண்டே செல்கிறார்கள். இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்த நாம் பஞ்சாயத்துராஜ் உள்ளிட்ட உள்ளாட்சி தொடர்பான சட்டங்களால் இந்த நிலையை நன்கு வலுப்படுத்தி இருக்கிறோம்.

டெல்லியிலோ, மாநில தலைநகரங்களிலோதான் சட்டங்களும், திட்டங்களும் இயற்றப்படுகின்றன என்றாலும் அவற்றை அமல்படுத்தும் அதிகாரம் பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட லட்சக்கணக்கானோரிடம் பரவலாக்கப்பட்டிருக்கின்றன.

மாறாக பாகிஸ்தானிலோ தங்களுக்கு ‘யானை மாலை போட்டது போல’ அதிர்ஷ்டவசமாக கிடைக்கும் அதிகாரத்தை யாரும் யாருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புவதில்லை. பாகிஸ்தானுக்கு அதிபர்களாக வந்தவர்கள் பெரும்பாலும் இராணுவ அதிகாரிகள். மொத்த அதிகாரத்தையும் தாங்களே வைத்துக்கொண்டு, தாங்கள் ஆணையிடுவதை மற்றவர்கள் சிரமேற்கொண்டு செய்வதைத்தான் விரும்பக் கூடியவர்கள்.

தாங்கள் விரும்பு வதை செய்வதற்கு சட்டம் தடையாக இருந்தாலும் அதை உடைக்க நினைப்பவர்கள். ராணுவ ஆட்சி முறையில்தான் அப்படியென்றால் பாராளுமன்றம் மற்றும் மாகாணங்களுக்கு தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களும் அப்படித்தான் அங்கே நடந்து கொள்கிறார்கள்.

சமீபத்தில் இங்கே மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள், பதிமூன்று முறை சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணி ஆற்றியவர். இதேபோலத்தான் சமீபத்தில் மறைந்த சோம்நாத் சாட்டர்ஜி அவர்களும் பத்து முறை பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் சேவை செய்தவர்.

இந்தியாவில் இவர்களைப் போல நூற்றுக் கணக்கானவர்களை அடையாளம் காட்ட முடியும். ஆனால், பாகிஸ்தானிலோ இதுபோன்ற நீண்ட மக்கள் மன்ற அனுபவம் கொண்டவர்கள் உருவாக வாய்ப்பே இல்லை. ஒரு முறை அதிகாரம் கையில் கிடைத்தவுடனேயே, அடுத்த முறை நமக்கு இந்த வாய்ப்பு கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற பரிதவிப்பில் கிடைத்த அதிகாரத்தை முழுமையாக ருசிக்கும் வெறிதான் அவர்களுக்கு உருவாகிறது.

ஒருவேளை உள்ளாட்சி அமைப்புகள் அங்கே ஒப்புக்கு இல்லாமல், வலுவாக இருந்திருந்தால் மாகாணம் மற்றும் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் உரிமைக்காக போராடி ஓரளவுக்காவது மக்களுக்கு உரிமையான அடிப்படை நலத்திட்டங்களைச் செய்து வைக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கும்.

இங்கே இடைச்செருகலாக சொல்ல வேண்டிய செய்தி. 2016ல் நடந்திருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் இன்னமும் நம்முடைய தமிழகத்தில் நடக்கவில்லை. உயர்நீதிமன்றமே பல முறை கெடு விதித்தும் தமிழக அரசு, சப்பையான காரணங்களைச் சொல்லி உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சியே, பாராளுமன்றத்திலும் தமிழகத்தின் ஒட்டுமொத்த 39 இடங்களில் 37 இடங்களை வைத்திருக்கிறது. தேர்தல் நடத்தப்படாமல் உள்ளாட்சி நிர்வாகங்கள் அரசின் அதிகாரத்துக்குட்பட்ட அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகிறது. மாநிலத்தின் ஒட்டுமொத்த அதிகாரமும் ஒரே கட்சியிடம் இருக்கிறது.

அடித்தட்டு மக்கள் உரிமையாகத் தட்டிக் கேட்க உள்ளாட்சியில் அவர்களுக்கு பிரதிநிதிகள் இல்லை. ஒப்பீட்டளவில் இது பாகிஸ்தானில் நடந்து வரும் ஆட்சிமுறையை ஒத்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக மக்கள் அடைந்து வரும் இன்னல்களைத்தான் பாகிஸ்தான், சுதந்திரம் பெற்றதிலிருந்தே அனுபவித்து வருகிறது என்று இந்நிலைமையை நாம் புரிந்து கொள்ளலாம்.

பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு நாட்டில் இருபது கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். உலகின் 33வது பெரிய நாடு. அந்நாடு நிரந்தரமாகவே அரசியல் நிலையின்மையால் அவதிப்படுவது அண்டைநாடான நமக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.

வறுமை, கல்வியறிவின்மையால் பாதிக்கப்படும் பாகிஸ்தானியர்கள் மிகவும் எளிதாக மதரீதியான வன்முறையாளர்களாக மாறுகிறார்கள். பாகிஸ்தானில் ஆட்சிக்கு வருபவர்கள் தங்கள் பலகீனங்களை மறைக்க இந்தியாவை வில்லனாக்கி, இந்த வன்முறையாளர்கள் மூலமாக பிரச்சினையை மூட்டிவிட்டு குளிர் காய்ந்துகொண்டிருக்கிறார்கள்.

நன்கு கல்வி கற்ற, உலக நடப்புகளை அறிந்தவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான். அவரது தலைமை யிலான கட்சி பாராளுமன்றத்தில் அதிக இடங்களைக் கைப்பற்றி இப்போது பாகிஸ்தானின் பிரதமராக அவர் ஆகியிருக்கிறார்.

மக்களுக்காக சிந்திக்கக்கூடிய தலைவராக அவர் உருவெடுக்கும் பட்சத்தில் பாகிஸ்தானின் அவலம் மாறலாம். கமல்ஹாசன் ‘தேவர் மகன்’ படத்தில் சொல்வதைப் போல ‘புள்ள குட்டிகளை படிக்க வைங்கப்பா’ என்றுகூறி, கல்வியறிவைக் கொடுத்து வறுமையை அகற்றுவாரேயானால் அது பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் நல்லதுதான்.                

- யுவகிருஷ்ணா