ரத்த மகுடம்



பிரமாண்டமான சரித்திரத் தொடர் - 14

‘‘என்னவொரு அழுத்தமான தெளிவான வரலாற்றை எளிமையாகச் சொல்லியிருக்கிறாய் ஹிரண்ய வர்மா! கேட்கக் கேட்க திகட்டவே இல்லை! இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த பிரதேசத்தை சாளுக்கியர்கள் ஆள நிச்சயம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்! சாளுக்கியர்கள் மீது நீ கொண்ட அன்புக்கும் எங்கள் அரசு... தவறு... நம் அரசு ஸ்திரப்படத் தேவையான நாக விஷங்கள் தோய்த்த ஆயுதங்களைக் கொடுத்ததற்கும் எங்கள் மன்னர் விக்கிரமாதித்தர் சார்பாக உனக்கு நன்றி தெரிவிக்கிறேன்! மன்னரிடம் சொல்லி உனக்கு தக்க கைமாறு செய்யவும் வழிவகுக்கிறேன்!’’

கணீரென்று அறிவித்தபடி தங்கள் அருகில் வந்த சாளுக்கியர்களின் போர் அமைச்சரான ஸ்ரீராமபுண்ய வல்லபரை இமைக்கவும் மறந்து பார்த்தார் ஹிரண்ய வர்மர். ‘‘திகைப்புக்குக் காரணம் புரிகிறது ஹிரண்ய வர்மா! என்னை நானே அறிமுகப்படுத்திக் கொள்வதில் தயக்கம் ஏதுமில்லை.

அடியேனின் திருநாமம் ஸ்ரீராமபுண்ய வல்லபன் என்பது. சாளுக்கிய மன்னரிடம் போர் அமைச்சராகப் பணிபுரிகிறேன். உன் அளவுக்கு பிரபலமானவன் அல்ல. சாதாரண மனிதன். எனவே, கடல் கடந்த தேசத்தின் அரசனான நீ என்னை அறிந்திருக்க வாய்ப்பில்லை...’’அலட்சியமாகச் சொல்லிவிட்டு தன் பார்வையைத் திருப்பினார்.

தள்ளி நின்றிருந்த கரிகாலன் மீதும் அவனை ஒட்டி நின்றிருந்த சிவகாமியின் மீதும் அவர் நயனங்கள் படிந்தன. மொட்டினை விரிக்கும் மலரைப் போல் அவர் உதட்டில் புன்னகை பூத்தது.

‘‘உலகிலேயே பரவசமானது இளம் காதலர்களை நேருக்கு நேர் எதிர்கொள்வதுதான்! சரிதானே கரிகாலா?’’ சுரங்கமே அதிரும் வகையில் வாய்விட்டுச் சிரித்த ஸ்ரீராமபுண்ய வல்லபர், சட்டென்று கரிகாலனை நெருங்கி அவன் செவியோரம் முணுமுணுத்தார்.‘‘ஆமாம்... சிவகாமியின் சபதத்தை அறிந்துகொண்டாயா அல்லது உன்னைத் தாக்கிய அவளது அழகு பாணங்கள் ஏற்படுத்திய மயக்கத்திலிருந்து இன்னமும் விடுபடாமல் இருக்கிறாயா?

இரண்டாவதாகச் சொன்னதுதான் சரியாக இருக்க வேண்டும். வனாந்திரப் பிரதேசத்தில் மெய்மறந்து இருவரும் இருந்ததைத்தான் பார்த்துக் கொண்டே இருந்தேனே...’’ சிவகாமி தன்னிரு உள்ளங்கைகளையும் மடக்கி இறுக்கினாள். அதைக் கண்டு ஸ்ரீராமபுண்ய வல்லபர் தன் முகத்தில் போலி அதிர்ச்சியைக் காட்டினார். ‘‘பயமாக இருக்கிறது சிவகாமி! கோபப்பட்டு என்னை எரித்து விடாதே!’’ நடிப்பின் இலக்கணத்தை அரங்கேற்றிய சாளுக்கியர்களின் போர் அமைச்சர் அப்படியே திரும்பி ஹிரண்ய வர்மரை ஏறிட்டார். ‘‘நாம் உரையாட வேண்டியது நிறைய இருக்கிறது.

அதற்கு முன் உன் சந்தேகத்தைத் தீர்த்துவிட்டால் இயல்பாகப் பேசமுடியும். இதற்கும் முன் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். ஒரு தேசத்தின் மன்னனாக நீ இருந்தும் சாதாரண போர் அமைச்சனான நான் உன்னை ஒருமையில் அழைக்கக் காரணம் இருக்கிறது. அது பகை நாட்டின் போர் அமைச்சன் என்பதால் அல்ல. அந்தளவுக்கு சாளுக்கியர்கள் மரியாதை தெரியாதவர்கள் அல்ல...’’ என்றபடி ஹிரண்ய வர்மரை நெருங்கி அவர் தோளை அணைத்தார். ‘‘வயது காரணமாக மட்டும் உன்னை ஒருமையில் அழைக்கவில்லை.

உறவு முறையின் அடிப்படையிலும்தான்! என்ன அப்படிப் பார்க்கிறாய்! ஹிரண்ய வர்மா... நானும் உன் கோத்திரத்தைச் சேர்ந்தவன்தான்! கவுண்டின்ய கோத்திரம். சத்திரியர்களாக இருந்தும் பல்லவர்கள் தங்களை பரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாக அறிவித்துக் கொள்கிறார்கள்.

இது தமிழகத்துக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். ஆனால், கடல் கடந்த தேசத்தை ஆள்பவன் நீ. உன் நாட்டை ஒரு காலத்தில் ஆட்சி செய்தவர் கவுண்டின்யர். எனவே, ஏதோ ஒரு வகையில் உன் குருதியில் எங்கள் கோத்திரமும் கலந்திருக்கிறது. அந்த வகையில், நாம் இருவருமே உறவினர்கள்தான்!’’

மெல்ல ஸ்ரீராமபுண்ய வல்லபரின் அணைப்பிலிருந்து விடுபட்டு எதையோ சொல்ல முற்பட்ட ஹிரண்ய வர்மரை தன் கரங்களை உயர்த்தித் தடுத்தார். ‘‘இதை நீ ஏற்கவில்லை என்றாலும் எனக்குக் கவலையில்லை.

என் எண்ணத்தை மாற்றுவதாகவும் இல்லை. அவரவர் நினைப்பில் அவரவர் இருப்பதில் தவறேதுமில்லை!’’ சொன்ன சாளுக்கியர்களின் போர் அமைச்சர் தன்னை விட்டு விலகிய ஹிரண்ய வர்மரை மீண்டும் நெருங்கவில்லை. மாறாக, இருந்த இடத்திலிருந்தே கரிகாலனையும் சிவகாமியையும் மாறி மாறிப் பார்த்துப் புன்னகைத்தார்.‘‘ஹிரண்ய வர்மனுக்கு நன்றி தெரிவித்து விட்டேன்!

அடுத்து உங்கள் இருவருக்கும் என் அன்பை வெளிப்படுத்த வேண்டும். எதற்குத் தெரியுமா? இந்த ஆயுதக் குவியல் இருக்கும் இடத்துக்கு என்னை அழைத்து வந்ததற்கு!’’ தங்களைப் பின்தொடர்ந்து வந்ததால் இந்த இடத்துக்கு வர முடிந்தது என்பதையே அவர் குறிப்பிடுகிறார் என்பது கரிகாலனுக்கும் சிவகாமிக்கும் புரிந்தது.

என்றாலும் அவரே அதை வெளிப்படுத்தட்டும் என அமைதியாக நின்றார்கள். இதை உணர்ந்ததுபோல் ஸ்ரீராமபுண்ய வல்லபரும் தொடர்ந்தார்.‘‘எவ்வித சிரமமும் இன்றி பல்லவ நாட்டை சாளுக்கியர்கள் கைப்பற்றி இருக்கிறார்கள்...’’‘‘சின்ன திருத்தம். கைப்பற்றவில்லை.

மக்களுக்கும் கலைச் செல்வங்களுக்கும் சேதாரம் ஏற்படக்கூடாது என்பதற்காக எங்கள் பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மர் தற்காலிகமாக விட்டுக் கொடுத்திருக்கிறார். காலத்தால் நீங்கள் வெற்றி பெற்றிருப்பதாகக் கருதுகிறீர்கள். மற்றபடி நாங்கள் தோல்வியடையவில்லை...’’ இடைமறித்தான் கரிகாலன்.

‘‘இப்படித்தான் நீங்கள் பூசி மெழுகப் போகிறீர்கள் என்பதும், இதே வாசகத்தை வரலாற்றில் பதிய வைக்க முற்படப் போகிறீர்கள் என்றும் எங்களுக்குத் தெரியும். இதை நம்புவதற்கு சாளுக்கியர்கள் ஒன்றும் மடையர்களல்ல! சீறி வந்த எங்கள் படைகளை எதிர்கொள்ளப் பயந்து தன் தலைநகரான காஞ்சிபுரத்தை விட்டு ஓடி ஒளிந்தவன்தான் உங்கள் பரமேஸ்வர வர்மன்!

இந்த உண்மை வாதாபியின் கல்வெட்டில் நிரந்தரமாக இருக்கும்!’’ ‘‘எனில் அதை அழிக்கும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது...’’ நெஞ்சை நிமிர்த்திச் சொன்னான் கரிகாலன்.‘‘எப்படி? நரசிம்ம வர்மனைப் போல் வாதாபியை எரித்தா..?’’ கேட்ட ஸ்ரீராமபுண்ய வல்லபரின் கண்கள் சிவந்தன.

‘‘அன்று மகேந்திர வர்மனின் புதல்வன் செய்த காரியத்துக்குப் பழிக்குப் பழி வாங்கத்தான் எங்கள் மன்னர் விக்கிரமாதித்தர் புறப்பட்டிருக்கிறார். அவர் தலைமையில் ஒவ்வொரு சாளுக்கியனும் அணிதிரண்டிருக்கிறான். அதுவும் நாடி நரம்பெல்லாம் பல்லவர்களுக்கு பதிலடி தர வேண்டும் என்ற வெறியுடன்!

ஓடி ஒளிந்திருக்கும் நீங்கள் படைகளைத் திரட்ட முற்படுவீர்கள் என்பதும், அதன் ஒரு பகுதி யாக எங்கோ மறைந்திருக்கும் பல்லவ இளவல் ராஜசிம்மனைத் தொடர்புகொள்ள முயல்வீர்கள் என்பதும் அரசியல் பாடம் படித்த அனைவரும் ஊகிக்கக் கூடியதுதான்.

இதற்காக ராஜசிம்மனின் அந்தரங்க நண்பனான நீ களத்தில் இறங்குவாய் என்பதும் எதிர்பார்த்ததுதான். அதனால்தான் உன்னைப் பின்தொடர கதம்ப இளவரசன் இரவிவர்மனை நியமித்தோம். எதிர்பாராத நேரத்தில் அவன் உங்களிடம் சிக்கிக் கொண்டான். மாற்றாக வேறு யாரையும் அனுப்பாமல், திமிங்கலத்தைப் பிடிக்க நானே களத்தில் குதித்தேன்.

உங்களைப் பின்தொடர்ந்தேன். சிறை செய்யும் நோக்கம் இல்லாததால் உங்களைக் கைது செய்யவில்லை. பார்வையை விட்டு விலகாமல் பார்த்துக்கொண்டேன். அதனாலேயே உங்கள் சரசங்களையும் காண நேரிட்டது! அதற்காக மன்னிப்பும், இந்த ஆயுதக் குவியல் இருக்கும் இடத்தைக் காண்பித்ததற்காக நன்றியும் தெரிவிக்கிறேன்! இதைச் சொல்வது ஸ்ரீராமபுண்ய வல்லபன் அல்ல! சாளுக்கிய தேசத்தின் போர் அமைச்சர்!’’ சொன்னவர் ‘‘யாரங்கே!’’ என்று குரல் கொடுத்தார்.

அடுத்த கணம் இரண்டிரண்டு பேராக வரிசையில் சாளுக்கிய வீரர்கள் வேல்களுடனும் வாட்களுடனும் சுரங்கத்துக்குள் நுழைந்து ஹிரண்ய வர்மர், கரிகாலன், சிவகாமி ஆகியோரைச் சுற்றி நின்றார்கள்.‘‘கரிகாலா! உன்னை சிறை செய்யும் நோக்கம் இல்லை. ஹிரண்ய வர்மா... கடல் கடந்த தேசத்தின் மன்னன் நீ! எங்கள் நாட்டு வணிகப் பொருட்களுக்கு உன் நாட்டில் சந்தை வேண்டும்.

அதற்கு உத்தரவாதம் கொடுக்கும் பட்சத்தில் உன்னையும் விடுவிக்கிறேன்! மூவரும் எவ்வித அச்சமும் இன்றி இங்கிருந்து வெளியேறலாம். இந்த ஆயுதங்கள் சாளுக்கியர்களுக்குச் சொந்தமானது. இனி இதை எங்கள் வீரர்கள் பாதுகாப்பார்கள்!’’அறிவித்த ஸ்ரீராமபுண்ய வல்லபர், பழையபடி கரிகாலனை நெருங்கி அவன் செவியில் முணுமுணுத்தார்.

‘‘கதம்ப இளவரசன் எச்சரித்தும், ஹிரண்ய வர்மன் எடுத்துச் சொல்லியும் சிவகாமியை நீ ஏன் சந்தேகப்படாமல் இருக்கிறாய் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது! அது வயதின் கோளாறு அல்ல. இயற்கையின் விதி! பெண்ணைப் படைத்ததே ஆணுக்கு இன்பம் அளிக்கத்தானே! இதைத் தவிர வேறெந்தப் பணியைத்தான் பெண்களால் மேற்கொள்ள முடியும், சொல்! அந்த மகிழ்ச்சியை உனக்கும் வழங்குகிறேன்.

பூரணமாக நீயும் அனுபவி. உன்னுடனேயே சிவகாமியை அழைத்துச் செல்!’’ என்றபடி கண்சிமிட்டினார். தன் தோளுடன் ஒட்டியிருந்த சிவகாமியின் தோள்கள் ஸ்ரீராமபுண்ய வல்லபர் பேசப் பேச கடினப்பட்டதை உணர்ந்த கரிகாலன், அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிந்திருந்தான்.

அதுவேதான் சாளுக்கிய போர் அமைச்சர் கண்சிமிட்டி முடித்ததும் அரங்கேறியது. ஸ்ரீராமபுண்ய வல்லபர் மறைந்திருந்து கண்டது சிவகாமியின் சிருங்கார ரசத்தைத்தான். ஆனால், அவளுக்குள் ரவுத்திர ரசமும் இரண்டறக் கலந்திருக்கிறது என்பதை கரிகாலன் மட்டும்தானே அறிவான்..! அவன் உணர்ந்ததை அப்போது அங்கிருந்தவர்களுக்கு சிவகாமி வெளிப்படுத்தினாள். என்ன ஏது என்று மற்றவர்கள் சுதாரிப்பதற்குள் குனிந்து வளைந்து உயர்ந்து பாய்ந்து சென்றவள், குவிக்கப்பட்டிருந்த நாக விஷங்கள் தோய்ந்த வாட்களின் குவியலில் இருந்து ஒன்றை லாவகமாக உருவினாள்.

இரண்டிரண்டு பேராக நின்றிருந்த சாளுக்கிய வீரர்கள் நிலைமை புரிந்து தங்கள் வாட்களை உயர்த்தி அவளை எதிர்கொள்வதற்குள் தன் தாக்குதலை மேற்கொண்டாள். முன்னால் நின்றிருந்த இரு சாளுக்கிய வீரர்களும் பிரேதமாக தரையில் விழுந்தார்கள்.

அவர்கள் வயிற்றில் எப்போது தன் கரத்தில் இருந்த வாளை சிவகாமி பாய்ச்சினாள்..? அங்கிருந்த வீரர்களுக்குப் புரியவே இல்லை. இந்தச் சம்பவத்திலிருந்து அவர்கள் மீள்வதற்குள் இரண்டாவது, மூன்றாவது வரிசையில் நின்றிருந்த சாளுக்கிய வீரர்களும் வெட்டுப்பட்ட மரமாகத் தரையில் சாய்ந்தார்கள்! அவ்வளவுதான்,  வரிசையும் ஒழுங்கும் வட்டமும் கலைந்தது.

நிலை தடுமாறிய சாளுக்கிய வீரர்கள் என்ன செய்வது... பதில் தாக்குதல் எப்படி நடத்துவது... எனப் புரியாமல் விழித்தார்கள். ஒன்றிரண்டு பேர் அவசரப்பட்டு சிவகாமியைச் சூழ முற்பட்டார்கள். அப்போது அங்கிருந்த வாட்களின் குவியலில் அவர்களது உடல்கள் உராய்ந்தன. அவ்வளவுதான், நாக விஷங்கள் அவர்களது குருதியில் கலந்தன. இமைக்கும் பொழுதில் சடலமாக விழுந்தார்கள். வெறும் பெண்... சிருங்கார ரசத்துக்கு மட்டுமே உரியவள்... என்றெல்லாம் சிவகாமியைப் பற்றிச் சொன்ன ராமபுண்ய வல்லபர், நடப்பதை நம்ப முடியாமல் பார்த்தார். இந்தத் திகைப்பும் அதிர்ச்சியும் கரிகாலனுக்கு ஏற்படவே இல்லை.

வாளை உயர்த்தியபடி சிவகாமி நின்றிருந்த கோலம் அவனுக்கு ஸ்ரீசக்ர நாயகியைத்தான் நினைவுபடுத்தியது. பிரம்மனின் அம்சமான பிராம்மணியாக; விஷ்ணுவின் சக்தியான வைஷ்ணவியாக; ருத்திரரின் சரிபாதியான மாஹேஸ்வரியாக; வேல்முருகனின் குமார சக்தியான கவுமாரியாக; இந்திரனுக்கு எல்லாமுமான ஐந்திரியாக... காட்சி தந்தாள். அதுமட்டுமா? வராக சக்தியானவள் வராக ரூபமுடையவளாக வராகியாகத் தோன்றினாள். மறுகணம் நிருதி சக்தியாக நாரசிம்மி யாக அச்சமூட்டினாள். தொடர்ந்து யம சக்தியான யாமியாக;

வருண சக்தியான வாருணியாக; குபேர சக்தியான கவுபேரியாக... பலவாறு சாளுக்கிய வீரர்களைப் பந்தாடினாள். தரையில் விழுந்த பிணக் குவியல்களில் இருந்து குருதி ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. அந்த வெள்ளத்தில் மாமிசங்கள் சேறு போலவும், தலைமுடிகள் பாசி போலவும், வாட்களும் வேல்களும் அறுபட்ட கை, கால் உறுப்புகளும் மீன்களைப் போலவும் மிதந்தன. பிரமை பிடித்து நின்ற ஸ்ரீராமபுண்ய வல்லபரை நோக்கி கனல் கக்கும் கண்களுடன் வாளை உயர்த்தியபடி சிவகாமி நெருங்கினாள்...

(தொடரும்)

கே.என்.சிவராமன் ஓவியம்: ஸ்யாம்