கிரிக்கெட் A to Z



கிரிக்கெட் பற்றித் தெரியாதவர்கள் இங்கு யார் இருக்கிறார்கள்? தெருவில் குச்சி நட்டு ஆடும் சிறுவர்கள் முதல் மைதானத்தில் ஸ்டம்ப் நட்டு ஆடும் ‘பெருசுகள்’ வரை எல்லோருக்கும் தெரிந்த, பிடித்த விளையாட்டாகவே கிரிக்கெட் இருக்கிறது. அப்படிப்பட்ட கிரிக்கெட் தொடர்பான அரிய பொருட்களைத்தான் சென்னை, எழும்பூரில் வசிக்கும் 69 வயதான ஜே.கே.மகேந்திரன் சேகரித்து வருகிறார். முன்னாள் ரஞ்சி டிராஃபி வீரரான இவர், தேசிய அளவில் இந்திய ஜூனியர் அணிக்கான விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்யும் குழுவில் இருந்தவர்.

இப்போது ராமச்சந்திரா ஸ்போர்ட்ஸ் மெடிசின் மையத்தில் பணியாற்றி வருகிறார். வெள்ளித்திரை மற்றும் விளம்பரங்களிலும் நடித்து வரும் இவர், தன் வீட்டையே கிரிக்கெட் அருங்காட்சியகமாக மாற்றியுள்ளதுதான் ஹைலைட்.‘‘கேரளா, கண்ணூர்தான் சொந்த ஊர். ஆங்கிலேயர் ஆட்சியப்ப பொழுதுபோக்குக்காக கண்ணூர்ல கிரிக்கெட் கிளப்பை அவங்க ஆரம்பிச்சாங்க. அந்த கிளப்புலதான் முதல் முறையா கிரிக்கெட் ஆட ஆரம்பிச்சேன். வீட்டுப் பக்கத்துல பெரிய மைதானம் இருந்தது. பள்ளி விட்டு வந்ததும் மட்டையைத் தூக்கிட்டு அங்க விளையாடப் போயிடுவேன்.

இப்ப கிரிக்கெட்டே என் வாழ்க்கையா மாறிடுச்சு! பத்தாவது முடிச்ச கையோடு கிளப்புல சேர்ந்தேன்...’’ புன்னகைக்கும் மகேந்திரன், பேட்ஸ்மேன் மட்டுமல்ல, விக்கெட் கீப்பர், லெக் ஸ்பின்னர்... என ஆல் ரவுண்டர்.‘‘மாநில அளவுல விளையாடிட்டு இருந்த எனக்கு இந்திய கிரிக்கெட் பள்ளி சார்பா தேசிய அளவுல விளையாட வாய்ப்பு கிடைச்சது. இங்கிலாந்துக்கு எதிரா விளையாடினதை மறக்கவே முடியாது. அந்த சீரிஸ்ல மொஹிந்தர் அமர்நாத், சையத் கிர்மானி, சுரேந்தர் அமர்நாத் கூட இணைஞ்சு ஆடினேன்.

கிட்டத்தட்ட 12 வருஷங்கள் ரஞ்சி டிராஃபில விளையாடி இருக்கேன். இந்தக் காலத்துல கிரிக்கெட் கிளப்புக்காக ஆட அழைப்பு வந்தது. இதன் வழியா பல நாடுகள்ல நடந்த போட்டிகள்ல பங்கேற்று ஆடியிருக்கேன். ஒருவகைல இந்த உலகப் பயணம்தான் கிரிக்கெட் தொடர்பான பொருட்களை சேகரிக்கக் காரணம்! ஆமா, அப்படித்தான் சொல்லணும். வெளிநாடுகள்ல தங்களுக்குப் பிடிச்ச கிரிக்கெட் வீரர்கள் சம்பந்தமான பொருட்களை கலெக்ட் பண்றது சகஜம். அதைப் பார்த்தப்பதான் இந்த ஐடியா ஸ்டிரைக் ஆச்சு...’’ என்ற மகேந்திரன் தொழில் காரணமாக சென்னையில் குடியேறியிருக்கிறார்.

‘‘எங்க குடும்பத் தொழில் கார்மென்ட் சம்பந்தமானது. சென்னைல ஒரு கிளை ஆரம்பிச்சாங்க. அதைப் பார்த்துக்க இங்க வந்தேன். தொழில் ஒருபக்கம், கிரிக்கெட் மறுபக்கம்னு இருந்தேன். இது கூட சேகரிப்பும் சேர்ந்தது. சென்னைக்கு வந்த ஒரு வருஷத்துல கிரிக்கெட்டுல இருந்து ஓய்வு பெற்றேன். சேகரிப்புல முழு கவனமும் செலுத்தினேன். இதே துறைல இருக்கிறதால கலெக்ட் பண்றது ஈசினு நினைச்சுடாதீங்க. ஆக்சுவலா விளையாட்டை விட இது கடினம். உலகம் முழுக்க பயணப்படணும்.

பலரைச் சந்திக்கணும். எது வாங்கணும், எது முக்கியமானதுன்னு தெரியணும். சிலர்கிட்ட கெஞ்சணும். வேறு சிலர்கிட்ட பண்டமாற்று முறைல வாங்கணும். எல்லாத்தையும் விட பணம் வேணும்! இவ்வளவு இருந்தாலும் கிரிக்கெட் வீரர்களை சந்திக்கறது சுலபமில்ல. சில சந்திப்பு சுமுகமா அமையும். பலநேரங்கள்ல விரட்டப்படுவோம்! இதை எல்லாம் தாங்கிக்கணும்.

பொறுமையும் ஆர்வமும் எப்பவும் தேவை...’’ அழுத்தமாகச் சொல்லும் மகேந்திரன், தன் சேகரிப்புகளைப் பற்றி விவரிக்கத் தொடங்கினார்.‘‘சிலர் கிரிக்கெட் பந்துகள், இல்லைனா மட்டைகளை மட்டும் சேகரிப்பாங்க. நான் கிரிக்கெட் தொடர்பான எல்லாத்தையும் கலெக்ட் பண்றேன். மட்டை, பந்து, டை, வைன் பாட்டில்கள், கீ செயின், பிளேசர், டீ ஷர்ட், தொப்பி, புத்தகங்கள், பெயின்டிங்ஸ்னு சொல்லிக்கிட்டே போகலாம்.

கிரிக்கெட் அல்லது தொழில் தொடர்பா எந்த ஊருக்குப் போனாலும் முதல் வேலையா அங்க இருக்கிற பழைய சாமான் / புத்தகக் கடைகளுக்குப் போவேன். அப்படித்தான் ஒருமுறை தென்னாப்பிரிக்கா போயிருந்தப்ப அங்கிருந்த ஒரு பழைய புத்தகக் கடைல 800 கிரிக்கெட் சம்பந்தமான புத்தகங்களைப் பார்த்தேன். உடனே அதை வாங்கினேன். அதுல 1897ல பிரசுரமான ‘த ஜூப்ளி புக் ஆஃப் கிரிக்கெட்’டும் ஒண்ணு.

கிரிக்கெட் வரலாற்றின் முக்கியமான நூல்னு இதைச் சொல்லலாம். கிரிக்கெட்டின் ஜாம்பவான்னா அது ரஞ்ஜித் சிங்தான். இவர் பெயர்லதான் ரஞ்சி டிராஃபியே நடக்குது. இவர் 350 புத்தகங்கள்ல கையெழுத்துப் போட்டிருக்கார். அதுல இரண்டு புத்தகம் என்கிட்ட இருக்கு! ஆஸ்திரேலிய வீரரான டெனிஸ் லில்லி பயன்படுத்தின அலுமினிய மட்டையை பொக்கிஷமா பாதுகாக்கறேன்.

பொதுவா மரத்துலதான் கிரிக்கெட் பேட் இருக்கும். இதுக்கு மாறா டெனிஸ் லில்லி அலுமினியத்துல 7 பேட் வைச்சிருந்தார்! அதைப் பயன்படுத்தக் கூடாதுனு தடை விதிச்சாங்க. அவரைச் சந்திக்கிறப்ப இதுபத்தி கேட்டேன். ‘இப்ப என் கைல இரண்டுதான் இருக்கு’னு சொல்லி அதுக்கு ஒரு விலையைக் குறிப்பிட்டார். மிகப் பெரிய தொகை. அவ்வளவு என்னால கொடுக்க முடியாதுனு திரும்பிட்டேன்.

ஆனா, விடலை! ஒரு நண்பர் மூலமா அவரோட மத்த அலுமினிய பேட்ஸ் எங்க இருக்குனு தேடிப் பிடிச்சேன் கேரி சோபர்ஸ், பிராட்மேன், விராட் கோலி, தோனி பயன்படுத்தி அவங்க கையெழுத்திட்ட மட்டைகளும் என் சேகரிப்புல இருக்கு...’’ என்ற மகேந்திரனின் வீட்டுச் சுவர்களில் 100 கோகோகோலா கேன்கள் ஃபிரேம் போட்டு அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.

‘‘சச்சின் 100 சதம் அடிச்சதைக் கொண்டாட கோகோகோலா நிறுவனம் 100 கேன்களை வெளியிட்டது. அதுல சச்சின் சதம் பத்தி அவரோட போட்டோவோட குறிப்பு இருக்கும். அதை அப்படியே வாங்கினேன். இதுகூட சச்சின் புகைப்படம் பொறிக்கப்பட்ட தங்கம் வெள்ளி காசுகளும் அடங்கும்.  
1948ல இந்தியா - ஆஸ்திரேலியா இடைல போட்டி நடந்தது.

 அப்ப இரு அணிகளும் கையெழுத்திட்ட பேட், என் சேகரிப்புல இருக்கு! இப்படி அடுக்கிக்கிட்டே போகலாம். இது போக வீரர்கள் போட்டோ பொறிக்கப்பட்டு அதுல அவங்க கையெழுத்திட்ட மட்டைகளையும் கலெக்ட் செய்திருக்கேன். சச்சின், ராகுல், கங்குலி, தோனி... அப்புறம் பழம்பெரும் வீரரான சி.டி.கோபாலன்... இப்படி பலரோட ஆட்டோ கிராஃப் பேட்கள் போட்டோவோடு இருக்கு!’’ என்றவர் கலர் கலரான டைகள் பக்கம் திரும்பினார்.

‘‘இதுல இருக்கிற ஒவ்வொரு ‘டை’யும் ஒவ்வொரு நினைவுச் சின்னம். ஒவ்வொரு கிரிக்கெட் கிளப்பும் தங்களுக்குனு ஒரு நிறத்தை நிர்ணயிச்சிருப்பாங்க. அது சார்ந்த ‘டை’கள் உண்டு. உதாரணமா எம்.சி.சி.  கிரிக்கெட் கிளப்பின் ‘டை’, கோல்டன் மற்றும் பிரவுன் நிறத்துல இருக்கும். அவ்வளவு ஏன், உலகக்கோப்பைக்குனு ஒரு ‘டை’ உண்டு தெரியுமா?!

இப்படி ஒவ்வொரு போட்டி அப்பவும் அறிமுகம் செய்யப்பட்ட ‘டை’களை வாங்கி அடுக்கி ஃபிரேம் போட்டிருக்கேன்! இதே மாதிரிதான் பிளேசர் பாக்கெட்சும். ‘டை’ மாதிரியே ஒவ்வொரு போட்டி அப்பவும் சிறப்பு பிளேசர்ஸ் அறிமுகம் செய்வாங்க. அதுல பாக்கெட் பகுதில அந்தப் போட்டில விளையாடும் நாடுகளின் சின்னம் டிசைன் செய்யப்பட்டிருக்கும்.
http://kungumam.co.in/kungumam_images/2018/20180914/10e.jpg
கிரிக்கெட் குறித்த ஸ்டாம்ப்ஸ் தனி. 2 ஆயிரம் கிரிக்கெட் ஸ்டாம்ப்ஸ் சேகரிச்சிருக்கேன்...’’ என அடுக்கும் மகேந்திரன் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் அருங்காட்சியகம் அமைத்திருக்கிறார்.‘‘ஸ்டேடியத்தைப் புதுப்பிக்கறப்ப அதை நீக்க வேண்டியதாகிடுச்சு. அதனால இப்ப வீட்டையே மியூசியமா மாத்திட்டேன்.

69 எல்லாம் ஒரு வயசா என்ன?! இப்பவும் சேகரிப்புக்காக அலையறேன்... தேடறேன்... பயணப்படறேன்! கேரள கிரிக்கெட் பத்தி ஒரு புத்தகம் எழுதியிருக்கேன். அடுத்ததா பழங்கால கிரிக்கெட் கிளப் குறித்த வரலாற்றை எழுதலாம்னு ஐடியா. இது சார்ந்து போட்டோஸ் கலெக்ட் செய்துட்டு இருக்கேன்!’’ உற்சாகத்துடன் சொல்கிறார் மகேந்திரன்!

- ப்ரியா
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்