COFFEE TABLE



ரைசா ஹேப் பி

பாலாவின் இயக்கத்தில் ‘வர்மா’வில் நடித்தது, ‘சைமா’ அவார்டு ஃபங்ஷனுக்காக துபாய் சென்று வந்தது... என அடுத்தடுத்து சந்தோஷமான  தருணங்கள் அமைந்ததில் செம ஹேப்பியில் மிதக்கிறார் ‘பியார் பிரேமா காதல்’ ரைசா. ஆங்கில நாவல்களை விரும்பிப் படிக்கும்  ரைசாவுக்கு துபாய் ஏர்போர்ட்டில் சில மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல். எதையும் பொருட்படுத்தாமல் கையில் கொண்டு  வந்திருந்த புத்தகத்தை அங்கேயே படிக்க ஆரம்பித்துவிட்டார். அதை இன்ஸ்டாவில் பதிவிட, ஆயிரக்கணக்கான லைக்குகள்  குவிந்துவருகின்றன.

ஊஞ்சலில் ஏஞ்சல்

லண்டனில் இசைக் கச்சேரியை முடித்துவிட்டு மும்பை திரும்பிய ஸ்ருதி ஹாசன், பாலிவுட் இயக்குநர் மகேஷ் மஞ்ச்ரேக்கரின் படத்தில்  பிஸியாகிவிட்டார். ஷூட்டிங் ஸ்பாட்டில் ரிலாக்ஸாக ஊஞ்சலில் ஆடி மகிழ்ந்திருக்கிறார் ஸ்ருதி. அந்த அழகான தருணங்களை  வீடியோவாக்கி தனது இன்ஸ்டா பக்கத்தில் தட்டிவிட, ஸ்ருதியின் சேட்டையை 2 லட்சம் பேர் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.

ஸ்கேட்டிங் டாக்!

அமெரிக்காவின் ஹாட் டாக்கே பென்னி என்ற நாய்தான். லாஸ் வேகாஸ் நகரைச் சேர்ந்த சாங்ரோ என்ற ஸ்கேட்டிங் வீராங்கனையின்  செல்லப்பிராணிதான் இந்த பென்னி. இப்போது பென்னியும் ஸ்கேட்டிங்கில் கலக்குகிறது. பென்னிக்காக ஸ்கேட்டிங் காலணிகளைப்  பிரத்யேகமாக தயாரித்திருக்கிறார்கள். அந்த காலணிகளை அணிந்துகொண்டு பனியில் ஒய்யாரமாக சறுக்கி வரும் பென்னியைப் பார்க்கவே  ஆயிரம் கண்கள் வேண்டும். சாங்ரோவிடமிருந்து ஸ்கேட்டிங் நுணுக்கங்களை பத்தே நாட்களில் பென்னி கற்றுக்கொண்டதுதான் இதில்  ஹைலைட்!

மிரர் லெஸ் கேமரா


இதோ வந்துவிட்டது ஒரு நொடியில் 50 - 60 ஃப்ரேம்களை 4K வீடியோ தரத்தில் ரெக்கார்டு செய்கிற கேமரா. இத்தரத்தில் வெளியாகும்  உலகின் முதல் கேமரா இதுதான். ‘பேனாசோனிக்’ நிறுவனத்தின் ‘லுமிக்ஸ் எஸ்’ வகையைச் சேர்ந்த இக்கேமராவில் இரண்டு மெமரி  ஸ்லாட்கள் உள்ளன. மிரர்லெஸ் டெக்னாலஜியுடன் 47 எம்பி மற்றும் 24 எம்பி ஸ்டோரேஜ்களில் வடிவமைக்கப்பட்ட இந்த கேமரா வருகிற  ஜனவரியில் இருந்து விற்பனைக்கு வருகிறது.

பெண்களைத் தாக்கும் நோய்

‘‘ஆண்களைவிட பெண்களை வேகமாகத் தாக்கும் நோய் இரத்தசோகை. உலகளவில் இந்நோய்க்கு அதிகமாக பலியாவது இந்தியப்  பெண்கள்தான்...’’ என்று பீதியைக் கிளப்பியிருக்கிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு.‘‘இரத்தத்தில் உள்ள சிகப்பு அணுக்களின் குறைபாடே  இரத்தசோகைக்கு மூலகாரணம். இந்தியாவில் இந்நோயால் தாக்கப்பட்டவர்களில் 50% பேர் கர்ப்பிணிகள். சோர்வு, மயக்கம், இடைவிடாத  தலைவலிதான் இதன் முக்கிய அறிகுறிகள்...’’ என்கின்றனர் மருத்துவர்கள்.‘‘இந்தியப் பெண்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் இரும்பு  மற்றும் ஃபோலிக் ஆசிட் சத்து குறைவாக இருப்பதே சிகப்பு அணுக்களின் குறைபாட்டுக்கு முக்கிய காரணம். கர்ப்பிணிகளுக்கு  இரும்புச்சத்தின் தேவை மிக அவசியமானது. இது குறையும்போது தான் பிரசவ காலத்தில் உயிரிழப்பு நேரிடுகிறது...’’ என்று  எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

-குங்குமம் டீம்