விளக்கு மனிதா!



தீபத்தை தேய்த்தால் பூதம் வரும். நாம் கேட்பதைக் கொடுக்கும்! இது ஃபேன்டஸி கதையில் சாத்தியம். நிஜத்தில்? நம் நாட்டின் வரலாற்றை உணர முடியும்! கேரள மாநிலம் கோழிக்கோட்டில், அந்த நகரம் போலவே ஐ.சி.ஆர்.பிரசாத் வீடும் பசுமையாக இருக்கிறது. பொறியாளரான இவர், தன் வீட்டின் முதல் தளத்தை விளக்குகளின் அருங்காட்சியகமாக மாற்றியுள்ளார்! ‘‘பிறந்தது வளர்ந்தது எல்லாம் இங்கதான். விளக்கு, வெளிச்சம் மேல எனக்கு ஈடுபாடு ஏற்படக் காரணம் கலங்கரை விளக்கங்கள்! சென்னையில் கலங்கரை விளக்கத்துல பொறியாளரா வேலை பார்த்தேன்.

இந்தியாவுல இருக்கிற அனைத்து கலங்கரை விளக்கங்களைப் பத்தியும் ஆய்வு செஞ்சு நூல் எழுதி இருக்கேன். சென்னை கலங்கரை விளக்கத்துல அருங்காட்சியகம் இருக்கு இல்லையா..? அதை அமைச்சுக் கொடுத்தது நான்தான்! இது தவிர இன்னும் ஐந்து கலங்கரை விளக்கங்கள் சார்ந்த அருங்காட்சியகத்தையும் அமைச்சிருக்கேன்! இதெல்லாம் ரொம்ப விருப்பத்தோடு செய்தது. காரணம், அதன் வெளிச்சம்! பல மைல்களுக்கு அப்பால் கடல்ல இருக்கிற கப்பலுக்கு கரையில இருந்து வெளிச்சம் மூலமா வழிகாட்டுவது பெரிய விஷயமில்லையா..?

இந்த வியப்புதான் விளக்குகளை சேகரிக்கக் காரணம்!’’ புன்னகைக்கும் இந்த 62 வயது இளைஞர், கடந்த 20 வருடங்களாக விளக்குகளைச் சேகரித்து வருகிறார். ‘‘என் கலெக்‌ஷன்ல கி.பி.2ம் நூற்றாண்டு காலத்து விளக்கும் இருக்கு! ரெண்டு கற்களை உரசி நெருப்பை கற்கால மனிதர்கள் உண்டாக்கினாங்கனு நம்ம எல்லாருக்கும் தெரியும். இப்படி அவங்க உருவாக்கின நெருப்பு வெளிச்சத்தையும் கொடுத்தது; குளிர் காயவும் உதவினது. அப்புறம் கருங்கல்லையே தூண் மாதிரி அமைச்சு அதுக்கு மேல முதன்முதல்ல விளக்கை எரியவிட்டாங்க.

நாகரீகம் வளர வளர மக்களும் இரும்பால செய்யப்பட்ட விளக்குகளுக்கு மாறினாங்க!’’ என்ற பிரசாத், செல்வந்தர் வீடுகளில் மட்டுமே அந்தக் காலத்தில் விளக்குகள் இருந்தன என்கிறார்.‘‘ஆடம்பரப் பொருளா அது இருந்ததுதான் காரணம். விளக்குகளை சேகரிக்க ஆரம்பிச்சப்ப அது பத்தின விவரங்களையும் தேடினேன். அப்பதான் இதெல்லாம் கிடைச்சது. நெருப்பு எல்லாருக்கும் பொதுவா இருந்தாலும் அதைத் தாங்கி நிற்கிற விளக்குகளை செல்வந்தர்களும் அரச குடும்பத்தினரும்தான் பயன்படுத்தி இருக்காங்க. அடித்தட்டு மக்கள் இருட்டறதுக்கு முன்னாடியே சாப்பிட்டு தூங்கிடுவாங்க!

காலம் மாற மாற விளக்குகளின் பயன்பாடும் பரவலாச்சு. கலங்கரை விளக்கம் தொடர்பா நிறைய இடங்களுக்கு பயணம் செய்வேன். அப்ப அந்த ஊர்ல இருந்து ஏதாவது ஒரு விளக்கை வாங்கிட்டு வந்துடுவேன். அந்த வகைல 2 ஆயிரம் விளக்குகள் வரை இப்ப என் கலெக்‌ஷன்ல இருக்கு!’’ பெருமையாகச் சொல்லும் பிரசாத் விளக்குகளின் சரித்திரத்தை சுருக்கமாகச் சொன்னார். ‘‘கருங்கல் விளக்குதான் இப்ப இருக்கிற குத்து விளக்குக்கு முன்னோடி. இரும்பு, பித்தளை, வெள்ளினு பல ரகங்கள், டிசைன்கள்ல குத்துவிளக்குகள் இருக்கு. மதுரைலதான் முதல்ல சாவி குத்துவிளக்கு அறிமுகமாச்சு.

ஓர் ஆளோட பாதி உயரம் இருக்கும் இந்த விளக்கோட மேல் முகம் சாவி மாதிரி இருக்கும். 11ம் நூற்றாண்டுல இஸ்லாமியர்கள் நமக்கு பித்தளை விளக்கை அறிமுகப்படுத்தினாங்க. மின்சார விளக்குகள் வர்ற வரைக்கும் கலங்கரை விளக்கத்துல தேங்காய் எண்ணெயாலதான் விளக்கு ஏத்தியிருக்காங்க. இந்த எண்ணெய்ல எரியவிட்டாதான் பிரகாசமாவும் நெடுந்தொலைவு வரையும் வெளிச்சம் கிடைக்கும்! கிட்டத்தட்ட எல்லா பழைய சாமான் கடைகளும் எனக்குத் தெரியும். சென்னை மூர் மார்கெட் எனக்குப் பிடிச்ச இடம். வாரம் ஒருமுறையாவது அங்க போயிடுவேன். இது அங்குள்ள கடைக்காரர்களுக்குத் தெரியும்.

அதனால எனக்காகவே பழங்கால விளக்குகளை எடுத்து வைப்பாங்க. இப்ப இதுக்குனு தரகர்கள் நிறைய வந்துட்டாங்க. அவங்ககிட்ட சொல்லி வைச்சா போதும்...’’ என்ற பிரசாத், சிலமுறை ஏமாந்திருக்கிறாராம்.‘‘ஒரு முறை குஜராத் போயிருந்தப்ப வழக்கம்போல பழைய சாமான் கடைக்குப் போனேன். அங்க ஓட்டமோன் விளக்கு வாங்கினேன். இது துருக்கி நாட்டைச் சேர்ந்த தொங்கும் விளக்குனு சொன்னாங்க. நம்பி வாங்கினேன். அப்புறம்தான் அது டூப்ளிகேட்னு தெரிஞ்சுது!

அதே மாதிரி அமெரிக்கா போயிருந்தப்ப இஸ்லாமிய விளக்குனு சொல்லி தலைல கட்டினாங்க. அப்புறம் அதுவும் போலினு தெரிஞ்சுது. இப்படி சில அனுபவங்கள் இருந்தாலும் வாங்கறதை மட்டும் நிறுத்தலை! எல்லா விளக்கும் வெளிச்சம் தரக்கூடியது தான். ஆனா, அதன் அமைப்பு மாறுபடும். தமிழகத்து குத்து விளக்கோட தண்டு உருண்டையா இருக்கும். அதுவே கேரளாவுல வளையம் வளையமா இருக்கும். இப்பதான் அஞ்சு முகமெல்லாம் வந்திருக்கு. அப்ப இரண்டு, நான்கு, எட்டுனு முகங்கள் இருக்கும்...’’ என்ற பிரசாத், யுத்தக் காலங்களில் பிரத்யேகமான விளக்குகள் பயன்படுத்தப்பட்டன என்கிறார். ‘‘வித்தியாசமா இருந்த ஒரு விளக்கை கொச்சி போயிருந்தப்ப வாங்கினேன்.

அதை ஃபோட்டோ எடுத்து முகநூல்ல போட்டேன். கமெண்ட் போட்டவங்கதான் அது பிளாக் அவுட் விளக்கு; உலகப் போர்ல இதைத்தான் பயன்படுத்தினாங்கனு சொன்னாங்க! இந்த விளக்குல ஒரு திரை உண்டு. மேல விமானம் பறக்கிறப்ப திரையால விளக்கை மூடிடலாம். வெளிச்சம் தெரியாது. விமானம் போனபிறகு திரையைத் திறந்தா வெளிச்சம் கிடைக்கும்! கப்பல்லதான் இந்த விளக்கை அதிகம் பயன்படுத்தி இருக்காங்க. காரைக்குடில ஜாடி போன்ற விளக்கைப் பார்த்தேன். வித்தியாசமா இருக்கவே வாங்கிட்டேன். அந்த விளக்கின் அடிப்பாகத்துல இரண்டடில ஒரு வாக்கியம் பொறிக்கப்பட்டிருந்தது.

ஆய்வு செஞ்சப்ப அது அக்பர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட விளக்குனு தெரிஞ்சுது! பெர்ஷிய மொழில கடவுளைப் போற்றுகிற வாக்கியத்தை பொறிச்சிருக்காங்க!’’ என வியப்பைப் பகிர்ந்து கொண்டவர், ஒவ்வொரு விளக்கின் பின்னாலும் ஒரு வரலாறு இருப்பதாக அழுத்தம்திருத்தமாகக் குறிப்பிடுகிறார். ‘‘பழங்கால விளக்குகள் பத்தி இந்தத் தலைமுறைக்கு தெரியணும்னுதான் என் வீட்டு மேல்தளத்துல ‘தீபாஞ்சலி அருங்காட்சியக’த்தை அமைச்சிருக்கேன். ஒரு டிரஸ்ட் அமைக்கணும். பெரிய பரப்புல மியூசியம் அமைக்கணும்... பார்க்கலாம்...’’ கண்சிமிட்டுகிறார் ஐ.சி.ஆர்.பிரசாத்.

- ப்ரியா