நீதிமன்றமா? நாடாளுமன்றமா?சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி, திருமணம் தாண்டிய உறவு கிரிமினல் குற்றமில்லை, ஒருபால் உறவு தவறில்லை... போன்ற அதிரடியான தீர்ப்புகளை வழங்கி அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியது உச்சநீதிமன்றம்.
இந்த தீர்ப்புகளுக்கு பாராட்டுகள் குவிந்தாலும், ‘‘நீதிமன்றத்தால் மக்களின் பிரச்னையைத் தீர்க்க முடியாது. நாடாளுமன்றம் செய்ய வேண்டிய வேலையை நீதிமன்றம் செய்து வருகிறது. இது ஜனநாயகத்துக்கே ஆபத்தானது...’’ என்ற எதிர்க்குரலும் வலுத்திருக்கிறது.

இன்னொரு பக்கம் ‘‘நாடாளுமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தைத் தவிர்த்து மக்கள் பிரச்னையைத் தீர்க்கும் அதிகாரம் மக்களின் கைகளுக்கே வர வேண்டும்...’’ என்று புரட்சிக்குரல் எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள். இந்நிலையில் இதுதொடர்பான நிபுணர்களை அணுகினோம்.

‘‘அரசு, நாடாளுமன்றம், நீதிமன்றம் இவற்றிற்கான அதிகார வரையறை தெளிவாகவே வகுக்கப்பட்டுள்ளது. இம்மூன்றும் தங்களுடைய எல்லைக்குள் செயல்பட்டால் பிரச்னை எழுவதற்கே வாய்ப்பில்லை. எல்லை தாண்டி அதிகாரத்தைப் பயன்படுத்தும் போதுதான் சிக்கல் உருவாகிறது...’’ என்று பேச ஆரம்பித்தார் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு.

‘‘சமீபத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகள் இதை இன்னமும் கூர்மைப்படுத்தியுள்ளது. ‘இயற்கைக்கு விரோதமான பாலியல் உறவு கிரிமினல் குற்றமாகாது’ என்ற தீர்ப்பின் பின்னணியைப் பார்த்தால் ஒரு விஷயம் புலப்படும்.

2013ல் இந்தப் பிரச்னை கிரிமினல் குற்றமா? இல்லையா? என்ற விஷயத்தில் உச்சநீதிமன்றமானது, ‘இது தன் அதிகார வரையறைக்குள் வராது, நாடாளுமன்றமே முடிவு செய்ய வேண்டும்’ என்று ஒதுங்கிக்கொண்டது தவறான முன்னுதாரணம். ஒரு பிரச்னை, ஒரு சிறிய குழு சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் அதற்கு தீர்வு சொல்ல வேண்டியது உச்சநீதிமன்றத்தின் கடமை.

பின்னர் அதே பிரச்னை உச்சநீதிமன்றத்தின் தீர்வுக்குக் கொண்டு வரப்பட்டபோது, ‘இதுபற்றி தனக்கு கருத்து ஏதுமில்லை, இதை உச்சநீதிமன்றமே முடிவு செய்து கொள்ளலாம்’ என்று மத்திய அரசு கூறியது விசித்திரமானது.

சில விஷயங்களில் நாடாளுமன்றம் தங்களது கருத்தை வெளிப்படையாகக் கூறத் தயங்குவது ஓட்டு வங்கி அரசியலின் விளைவே. ஆனால், நீதிமன்றங்கள் சட்டங்களை சீராய்வுக்கு உட்படுத்தும்போது நாடாளுமன்றத்துக்கு அப்படிப்பட்ட தர்மசங்கடங்கள் ஏற்படாது.

ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களின் விருப்பம் என்ற பெயரில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகச் செயல்படும்போது அதை தட்டிக்கேட்க அதிகாரம்  படைத்த ஒரே அமைப்பு உச்சநீதிமன்றம் மட்டுமே. உச்சநீதிமன்றத்தின் சில தீர்ப்புகள் அன்றைய நடைமுறை, வெகுஜன கருத்துகளுக்கு முரண்படலாம். ஆனால், அதன் தீர்ப்பு இறுதியான தீர்ப்பு என்பதனால் அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

அதே நேரத்தில் எப்பொழுதுமே நீதிமன்றங்கள் சரியான தீர்ப்பைத்தான் அளிக்கும் என்பதற்கும் உத்தரவாதமில்லை. வேண்டுமானால் தீர்ப்புகளின் அடிப்படையை நாடாளுமன்றத்தின் சட்டங்களின் மூலம் மாற்றலாம். ஆனால், தீர்ப்பையே நாடாளுமன்றத்தால் ரத்து செய்யமுடியாது.

அடுத்து, நீதிமன்றத்தில் நீதிபதிகளின் நியமனத்தில் சமூக பிரதிநிதித்துவம் அளித்தால் மட்டுமே சரியான தீர்ப்புகள் வரும் என சிலர் சொல்கிறார்கள். இது தவறு. உதாரணமாக ‘ஐயப்பனை பெண் பக்தைகள் தரிசிக்க செல்லலாமா?’ என்ற வழக்கில் நான்கு ஆண் நீதிபதிகள் பெண்களுக்கு ஆதரவாகவும், ஒரு பெண் நீதிபதி அது தவறு என்றும் தீர்ப்பளித்தது இதற்கு உதாரணம்.

பிரதிநிதித்துவ நியமனம் என்பது எல்லா பிரச்னைக்கும் தீர்வல்ல. அரசியலமைப்புச் சட்டத்தில் நீதிமன்றத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டுமென்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ள சூழ்நிலையில் திறமையான நேர்மையான நீதிபதிகளால் மட்டுமே சட்டங்களை முறையாக வியாக்கியானம் செய்ய முடியும்.

எனவே நீதிமன்றங்களால் மக்கள் பிரச்னையைத் தீர்க்க முடியாது என்று சமீப காலமாக ஒலிக்கும் குரல் பாசிச சித்தாந்தத்தின் அடிப்படையில் எழுப்பப்படும் குரலே. ‘பள்ளிவாசலை இடித்து ராமர் கோயிலைக் கட்டுவோம், சபரிமலைக்குப் பெண் பக்தைகள் வந்தால் அவர்களைக் கூறுபோடுவோம்’ என்று கூக்குரலிடுபவர்கள்தான் அந்தக் குரலின் சொந்தக்காரர்கள்.

ஒரு நாடு, ஒரு சமயம், ஒரு மொழி என்று இந்தியாவின் பன்முகத்தன்மையைக் குலைக்க முற்படுபவர்களுக்கு அரசியலமைப்புச் சட்டமும், உச்சநீதிமன்றமும்தான் ஒரே செக்...’’ என்று கறாராக சந்துரு முடிக்க, இதுகுறித்த இன்னொரு பார்வையை விவரித்தார் பேராசிரியர் அ.மார்க்ஸ்.

‘‘ஒரு ஜனநாயக அமைப்பில் அரசியல் சட்டமும் அது வரையறுக்கும் அடிப்படை உரிமைகளுமே இறுதியானது. ஆனால், அந்த அடிப்படை உரிமைகள் சரியாக காக்கப்படுகின்றனவா என்பதற்கு யார் உத்தரவாதம்? நாடாளுமன்றமா இல்லை நீதிமன்றமா என்பது அடிப்படைக் கேள்வி.

நீதிமன்றத்துக்கு நிறைவேற்றும் அதிகாரம் கிடையாது. அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன எனும் குற்றச்சாட்டு வைக்கப்படும்போது அதை ஆய்வு செய்து நாடாளுமன்றத்திற்குக் கட்டளையிட மட்டுமே முடியும்.

ஆனால், அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளில் மூன்றில் இரண்டு பங்கை பெரும்பான்மையின் மூலம் நாடாளுமன்றம் மாற்றவோ ரத்து செய்யவோ முடியும். அவ்வாறு செய்யப்படும் மாற்றங்கள் அரசியல் சட்டத்தின் அடிப்படை தொனிக்கு எதிராக இருப்பதாக உச்சநீதிமன்றம் கண்டால் அந்த மாற்றத்தை அது ரத்து செய்யவும் முடியும் என்பது கேசவானந்த பாரதி வழக்கு மூலம் நிறுவப்பட்ட ஒரு வழமை.

ஆனால், நாட்டில் அசாதாரண நிலை நிலவுகிறது எனக் கூறி ‘நெருக்கடிநிலை’யை அரசு அறிவிக்க முடியும் அல்லது அடிப்படை உரிமைகளை ரத்து செய்து மிசா, தடா, பொடா, ஊபா, அஃப்சா முதலான கொடும் அடக்குமுறைச் சட்டங்களை இயற்றி அதை நடைமுறைப்படுத்த முடியும். அத்தகைய சட்டங்கள் செல்லாது எனச் சொல்லி மக்களும் அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுக முடியும்.

ஆனால், ஒன்றை மறக்கக்கூடாது. சுதந்திர இந்தியாவை ஆண்ட அரசுகள் எதுவுமே எக்காலத்திலும் இப்படியான அடக்குமுறைச் சட்டத்தின் துணையில்லாமல் ஆட்சி நடத்தியதில்லை. நீதிமன்றங்கள் இந்த வழக்குகளைக் கையாண்ட விதங்கள் என்றைக்குமே பாராட்டத்தக்கதாக இருந்ததில்லை. நெருக்கடிநிலை அல்லது அடிப்படை உரிமைகளை ரத்து செய்து இத்தகைய சட்டங்களை இயற்றும் அளவிற்கு நாட்டில் நிலைமை உள்ளதா எனப் பிரச்னையை ஆராயாமல் அரசுக்கு இப்படி சட்டம் இயற்ற உரிமை உண்டே என்று அவை அனைத்தையும் இதுவரை இந்திய நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டே வந்துள்ளன.

இந்திராகாந்தி நெருக்கடிநிலையை அறிவித்து அதற்கு எதிரான வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது அன்றைய அட்டர்னி ஜெனரல் நிரேன் டே, ‘நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டால் குடிமக்களுக்கு அவர்களின் உயிரை வைத்துக்கொள்ளும் உரிமை கிடையாது...’ எனச் சொன்னதையும், அதை பெரும்பான்மை அடிப்படையில் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு ‘ஹேபியஸ் கார்பஸ்’ (ஆட்கொணர்வு மனு) உரிமையை மக்களுக்கு ரத்து செய்ததும் சுதந்திரத்துக்குப் பிந்தைய கறைபடிந்த வரலாறுகளில் ஒன்று.

அந்தத் தீர்ப்பில் நீதியரசர் கன்னா அளித்த எதிர்க்கருத்து அற்புதமான ஒன்று. ஒரு கவிதைக்கு நிகரான வாசகங்களைக் கொண்ட கருத்து அது. பயங்கரவாதத்திற்கு எதிரான குற்றங்களில் நீதிபதிகள் ஒரு நடுநிலையான போக்கைக் கையாளாமல் குற்றத்தை உறுதி செய்யும் வண்ணம் அவர்கள் ஒரு புலனாய்வு அதிகாரியின் பாத்திரத்தை ஏற்க வேண்டும் என்கிற நிலையைக் கிரிமினல் சட்டத் திருத்தங்களுக்கான மாலிமத் கமிட்டி மற்றும் மாதவ மேனன் கமிட்டி முதலியன பரிந்துரை செய்தது இன்றும் நடைமுறையில் உள்ளன.

இருப்பினும் ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றத்தையும் நாம் முழுமையாக நம்ப இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏ.ஜி. நூரானி ஒருமுறை சொன்னது போல, ‘நீதிக்கு உத்தரவாதம் தீர்ப்பு எழுத உட்கார்ந்த நீதிபதியின் அன்றைய மனநிலையைப் பொறுத்தது மட்டுமே...’
இந்நிலையில் நாடாளுமன்றங்கள் மேலும் மேலும் தங்களின் பெரும்பான்மை பலத்தைக் கொண்டு மக்களின் உரிமைகளைப் பறிக்கும்போது மக்கள் நீதிமன்றங்களை மட்டுமே நம்பியிருப்பது சாத்தியமில்லாத ஒன்று.

ஆனால், மக்கள் இயக்கங்கள் இதுபோன்ற நிலைகளில் நீதிமன்றங்களை மட்டுமே நம்பியிருக்கும் போக்கே இப்போதும் நிலவுகிறது. அதனால் மக்கள் வீதியில் இறங்குவது தவிர நீதிக்கு எந்த உத்தரவாதமும் இல்லை...’’ என்று அழுத்தமாக முடித்தார் பேராசிரியர்.

டி.ரஞ்சித்