நான் 27 வயதில் தேசிய விருது வாங்கினேன்... என் மகள் 9 வயதிலேயே வாங்கிட்டாள்! :உன்னிகிருஷ்ணன் பரவசம்



மயக்கும் குரலே அவருக்கு முகவரி. திரை இசை, கர்நாடக சங்கீதம் ஆகிய இரண்டு தளங்களிலும் மிகப் பெரிய ரசிகர் கூட்டத்தை கடந்த  இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தன் கூடவே வைத்திருப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அது உன்னிகிருஷ்ணன் போன்ற சில  புத்திசாலிகளால் மட்டுமே சாத்தியம். அதிர்ந்து பேசத் தெரியாதவர். சிக்கலான கேள்விகளுக்குக் கூட சிரிப்பை மட்டுமே பதிலாகத்  தருகிறார்.

‘என்னவளே...’ என்று கொஞ்சினீர்கள். தமிழ் ரசிகர்கள் என்னவரே... என்று உங்களைக் கொண்டாடினார்கள். அந்த வெல்வட் குரலை  அண்மைக் காலமாக சினிமாவில் கேட்க முடியவில்லையே..?

எல்லாத்துக்கும் ஒரு ரவுண்டு இருக்கு. அது என் விஷயத்திலும் உண்டு. ஒரு காலத்தில் டி.எம்.எஸ், சுசீலா, ஈஸ்வரி என்று ஜாம்பவான்கள்  இசையில் ஆட்சி செய்தார்கள். புதுசாக யாரும் உள்ளே வர முடியாது. காரணம் அவர்கள் மிகவும் திறமையானவர்கள். ஒரே டேக்கில் பாடக்  கூடியவர்கள். புதியவர்களால் அப்படி முடியாது. அப்போ மீடியா கிடையாது. யூ டியூப், ரியாலிட்டி ஷோ எதுவும் கிடையாது. நாம  பாடணும்னு ஆசைப்பட்டாலும் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். எனக்கு முதலில் பாட ஆர்வமே இல்லை! யார் சான்ஸ் தருவார்கள்?ரஹ்மான்தான் இந்த டிரெண்டை ஆரம்பிச்சார். புது வாய்ஸ், புது சவுண்ட் என்று பல முயற்சிகளைச் செய்தார். பெரிய வெற்றியும் பெற்றார்.  சொல்லப் போனால் அது புயல் மாதிரி அடிச்சது. அந்தப் போக்கு இப்பவும் தொடர்கிறது.

நான் பத்து வருடங்கள் தொடர்ந்து சினிமாவில் பாடினேன். ரஹ்மானுக்கு பாடினது ஜாஸ்தி. ஹரிஹரன் வந்தார், கார்த்திக், திப்பு, பாம்பே  ஜெயஸ்ரீ, கே.கே. என வரிசையா வந்தார்கள். அப்புறம் டி.வி. சூப்பர் சிங்கர்ஸ் படையெடுக்கிறார்கள். இன்று நடிகர்கள், மியூஸிக்  டைரக்டர்கள் எல்லோருமே மாறிக்கிட்டே இருக்கிறார்கள். ரஹ்மான் அடுத்த கட்டமா சர்வதேச அளவிற்கு போகிறார். அவர் சாமர்த்தியம்  எல்லோருக்கும் வராது. ஆக, மாற்றத்தை நாம ஏற்க கத்துக்கணும். அதுக்கும் மேல ரசிக்கணும். ‘எங்க காலம் அப்படி’ னு புலம்பக் கூடாது.

சினிமா இசை, புதுமை என்ற பெயரில் ரொம்ப ஓசையாகிவிட்டதே?

எல்லாம் கால மாற்றம். இன்றைக்கு மேற்கத்திய பாதிப்பு நம் நடைமுறை வாழ்வில் வந்துவிட்டபிறகு இசையில் மட்டும் வராதா? நான்  கடைசியா ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘நண்பேன்டா’ படத்தில் ‘ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா...’ என்ற மெலடியை பாடினேன்.  நல்ல கிளாஸிகல் அடிப்படையிலான பாடல். ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ படத்தில் ஜிப்ரான் ‘கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்...’  என்றொரு டூயட் போட்டிருப்பார். முகாரி ராகம் இழைந்து ஓடும். இப்படி எப்போதாவது நல்ல மெலடிகளை கேட்க முடியுது. சில  இசையமைப்பாளர்களுக்கு கர்நாடிக் மியூஸிக் அதிகம் தெரியவில்லை.

வெஸ்டர்ன்தான் தெரிகிறது. அதில் சமாளிக்கிறார்கள். இன்று அதிரடியா வேணும்னு கேட்கிறார்கள் ரசிகர்கள்! அப்புறம் முன்பு உதித்  நாராயணன்,சுக்வீந்தர் சிங் குரலை ரசித்தார்கள். எஸ்.பி.பி, தாஸண்ணா (ஜேசுதாஸ்) குரலையே கேட்டுப் பழகியவர்களுக்கு அது புதுசு.  தமிழ் உச்சரிப்பைப்பற்றி நம்மவர்கள் கவலைப்படலை. இப்போது சித் ஸ்ரீராம் குரல் இளைஞர்களுக்கு பிடித்துள்ளது. இன்று புதுசா  வருகிறார்கள். இசையமைப்பாளரோ, பாடகரோ ஏதோ ஒரு விதத்தில் வித்தியாசமா இருக்கணும்!

இன்று திரை இசையில் தொழில் நுட்பம்தான் ஆட்சி செய்கிறது. லைவ் ஆர்கெஸ்ட்ராவின் சுகத்தை நாம் இழந்துவிட்டோம் என்றால்  உங்கள் பதில்?


லைவ் சுகம்தான். ஆனால், நாம இப்படியே உட்கார்ந்திருக்க முடியுமா? நகர வேண்டாமா? டெக்னாலஜி எங்கோ போய்விட்டது. அதைப்  பயன்படுத்தினால் வேலை சுலபமா முடிவதாக நினைக்கிறார்கள். இன்று தொழில் ரீதியாக இல்லாத பாடகர்களும் பாடுகிறார்கள். ‘பிட்ச்’  கரெக்‌ஷன் என்று வந்தாச்சு. பாடறபோதே இதைப் பண்ணலாம். முன்பெல்லாம் லைவ் ஆர்கெஸ்ட்ராவில் ஒரு பாட்டை பாடிவிட்டால்  முடிந்து போச்சு. ஏதாவது சின்ன ஸ்ருதி விலகல் இருந்தது பின்னால் தெரியவந்தால் ஒண்ணும் பண்ண முடியாது. மறுபடியும்  எல்லோரையும் கூட்ட முடியுமா? ஆக,டெக்னாலஜியின் சௌகரியத்தை ஏற்கும்போது, அதன் அசௌகரியத்தையும் பொறுத்துக்  கொள்ளவேண்டும்!

இன்றைய பாடகர்களில் திறமைசாலிகள் என்று யாரைச் சொல்வீர்கள்?


நிறைய இளைஞர்களை சொல்லலாம். கார்த்திக், ஹரிச்சரண், சத்தியபிரகாஷ் ,அப்புறம் சித் ஸ்ரீராம்... இன்னும் கூட இருக்கிறார்கள்.  இவர்கள் அனைவரும் கர்நாடிக் கற்றவர்கள். சித் ஸ்ரீராம் இப்போது சபாக்களில் நிறைய கச்சேரிகளே செய்கிறார்.

மாதம் தவறாமல் உங்கள் வீட்டுக்கு நிறைய பார்வையற்றவர்கள் வருவார்களாமே?

ஆமாம். சுமார் பத்து வருஷமா வருகிறார்கள். வெளியூர்களிலிருந்து எல்லாம் வருவார்கள். படிப்பிற்கு ட்யூஷன் ஃபீஸ் கேட்டு வருவதே  அதிகம். முடிந்தவரை ‘இல்லை’ எனச் சொல்வதில்லை. இந்த விஷயத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது பாடகர் ஸ்ரீனிவாஸ். ஒரு நாள்  போன் செய்து, ‘பார்வையற்றவர்கள் நிறைய பேர் வருகிறார்கள். உங்களிடம் ஒரு சிலரை அனுப்பட்டுமா?’ என்றார். ‘தாராளமா’ என்றேன்.  அப்போதிலிருந்து வருகிறார்கள்! அதேபோல் என்னிடம் பாட்டு சொல்லிக்கொள்ளும் குழந்தைகள் யாரிடமும் கட்டணம் வாங்கியதில்லை.  முடிந்தால் எனது ‘மகாமாயா’ அறக்கட்டளைக்கு ஏதாவது செய்யுங்கள் என்பேன்! அடுத்தவருக்கு கொடுக்கும்போது இருக்கும் சந்தோஷம்,  நாம் வாங்கும்போது இல்லை என்பது என் அபிப்பிராயம். தினமும் படுக்கும் போது தூக்கம் நிம்மதியாக வரவேண்டாமா?

பாட ஆரம்பித்து முப்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன. நினைத்ததை அடைந்தீர்களா?

நான் முதலில் நினைக்கவே இல்லையே..! எனக்கு கனவுகளும் இல்லை. நான் எப்பவுமே விதியை நம்புபவன். கவிஞர் கண்ணதாசன்  சொல்வார் ‘ஏழு ஸ்வரங்களில் எத்தனை ராகம்’ பாட்டில் ‘பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம், பயணம் நடத்திவிடு மறைந்திடும்  பாவம்...’ என்று. எனக்குப் பிடித்த வரிகள். பி.காம் முடிச்சு, அது தொடர்பா மேல படிக்க நினைச்சபோது, மியூஸிக் இழுத்தது. ஆக,  வேலையை விட்டேன். எனக்குப் பிரியமான கிரிக்கெட்டை துறந்தேன். என்னைச் சுற்றி இருப்பவர்கள் எனக்குக் கிடைத்த நல்லவர்கள்.
வாழ்க்கை சந்தோஷமா இருக்கு. மனைவி ப்ரியா என்னை புரிந்தவர்.

நல்லா பாடுவார். அவங்க மோகினியாட்டம் டான்ஸர். பையன் கிருஷ்ணா, பொறியியல் படிக்கிறான். பாடுவான். மகள் உத்ரா, ‘சைவம்’  படத்தில் வரும் ‘அழகே அழகே...’ பாட்டுக்காக தேசிய விருதைப் பெற்றார். நா.முத்துக்குமார் எழுதின பாட்டு. நான் 27 வயதில் தேசிய  விருது வாங்கினேன். என் மகள் 9 வயதிலேயே வாங்கிட்டாள்! இப்போது என்னை ‘உத்ராவின் அப்பா’ என்கிறார்கள். பெருமைதானே.  இறைவன் நமக்கு இவ்வளவு சந்தோஷங்களைத் தந்திருக்கிறார். இதுவே பெரிசுதான்! பேராசைப்பட்டால்தானே வருத்தப்படணும்!
            
- வி.சந்திரசேகரன்
படங்கள் : ஆ.வின்சென்ட் பால்