டோல்கேட் வசூல்… அநீதி செய்கிறதா அரசு ?



இளங்கோ கிருஷ்ணன்

இந்தியாவின் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 472 டோல்கேட்கள் இருக்கின்றன. இதில் தமிழகத்தில் மட்டும் 41 டோல்கேட்கள் உள்ளன! இது நாட்டிலேயே நான்காவது பெரிய எண்ணிக்கை!

உலகமயமாக்கலுக்குப் பின் இந்தியா சந்தித்த மாற்றங்களில் முக்கியமானது சாலைக் கட்டமைப்பு மேம்பட்டது. வழக்கமாக,  நெடுஞ்சாலைத்துறை நிதி ஒதுக்கி அந்தக் காசில் போடப்படும் சாலைகள் போய் தனியார் நிறுவனங்கள் களமிறங்கி ஒப்பந்த  அடிப்படையில் போடப்படும் சாலைகள் புழக்கத்துக்கு வந்தன. நாடு முழுதும் ரத்தநாளங்களாக விரிந்து பரந்திருக்கும் சாலைகளில்  நாள்தோறும் ஊர்ந்து செல்லும் கோடிக்கணக்கான வாகனங்களின் வழியே பெருகுகிறது நமது ஜிடிபி என்னும் மொத்த உள்நாட்டு உற்பத்தி.தேசிய நெடுஞ்சாலைகள், பைபாஸ் சாலைகள் எல்லாம் வழுக்கிக்கொண்டு போகும் வேகப் பயணத்துக்கு என்னவோ நன்றாகத்தான்  இருக்கின்றன. ஆனால், ஆங்காங்கே மறித்து டோல்கேட் வைத்துப் பிடுங்கப்படும் காசை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது.  அதிலும், இந்தக் கட்டணத் தொகை வேறு ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

தொடர்ந்து அதிகரிக்கும் எரிபொருள் செலவு ஒருபுறம் என்றால் இந்த டோல்கேட் கட்டண உயர்வு மறுபுறம். இதனால், பயணம் என்பதே  சங்கடமானதாக மாறிக்கொண்டிருக்கிறது.  சென்னையிலிருந்து சேலத்துக்கு காரில் செல்வதற்குள் 600 ரூபாய் வரை கட்டணம் கட்ட  வேண்டிய நிலை. கோவையிலிருந்து சென்னைக்கு ஒருவர் தனியார் பேருந்தில் வந்தால் குறைந்தபட்சம் 600 ரூபாய் கட்டணமாகிறது என்றால் அதில் சுமார் நூற்று முப்பது வரை டோல்கேட் கட்டணங்களுக்கே செல்கிறது. தனியார் பேருந்துகளில் மூன்றில்  ஒரு பங்கு டோல்கேட் கட்டணங்கள்தான். இந்தியாவின் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 472 டோல்கேட்கள் இருப்பதாக  மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை இணையதளம் தெரிவிக்கிறது. இது எப்போது அப்டேட் செய்யப்பட்ட தகவல் என்ற விவரங்கள்  தெரியவில்லை.

இதன்படி தமிழகத்தில் மட்டும் நாற்பத்தொரு டோல்கேட்கள் உள்ளன! இது நாட்டிலேயே நான்காவது பெரிய எண்ணிக்கை! இந்தியாவிலேயே அதிகளவில் டோல்கேட் உள்ள மாநிலமாக ராஜஸ்தான்தான் உள்ளது. இங்கு மட்டும் அறுபது டோல்கேட்கள் உள்ளன.  இதற்கு அடுத்த நிலையில் ஐம்பத்தொரு டோல்கேட்களுடன் உத்தரப்பிரதேசம் உள்ளது. இதற்கு அடுத்த நிலையில் நாற்பத்து நான்கு  எண்ணிக்கையோடு கர்நாடகம் உள்ளது. அடுத்த நிலையில் நாம் இருக்கிறோம். ஆந்திராவில் நாற்பதும் தெலுங்கானாவில் பதினொன்றும்  உள்ளன. இவ்விரண்டும் இணைந்தால் நம்மைவிட அதிக டோல்கேட் கட்டணம் கட்டுபவர்களாக தெலுங்கு மக்கள் இருப்பார்கள்.சரி, அதிக அளவிலான டோல்கேட்கள் நம் மாநிலத்தில் உள்ளது என்றால் அதிக நீளமுள்ள சாலைகள் நம் மாநிலத்தில்  இருப்பதாகத்தானே அர்த்தம்?

அதுதான் இல்லை. உதாரணமாக மகாராஷ்டிராவில் உள்ள சாலை நீளத்தில் அநேகமாக மூன்றில் ஒரு பங்குதான் நம் மாநிலத்தில்  இருக்கிறது. ஆனால், மகாராஷ்டிராவைவிட அதிக எண்ணிக்கையிலான டோல்கேட்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளன! பொதுவாக, ஒவ்வொரு  அறுபது கிலோமீட்டருக்கும் ஒரு டோல்கேட் நிறுவப்பட வேண்டும் என்பது விதிகளில் ஒன்று. ஆனால், இடம் கையகப்படுத்துதலில்  ஏற்படும் சிக்கல்கள், உள்ளூர், மாவட்ட எல்லைகள் ஆகியவற்றின் காரணமாக சில சமயங்களில் இப்படி குறைந்தபட்ச தொலைவைப்  பராமரிக்க முடியாமல் போகிறது என்று ஒரு ஒரு காரணம் சொல்கிறார்கள். எனில் மாநில அரசு நினைத்தால் இந்த உள்ளூர், மாவட்ட  வரியை, அதற்கான டோல்கேட் வசூலைத் தவிர்க்க முடியாதா? கண்டிப்பாக முடியும்.

ஆனால், இந்தப் பணம் யாரின் பாக்கெட்டுகளுக்குப் போகிறது என்பதில் இருக்கிறது சூட்சுமம். அதாவது, அரசு நிறுவனங்கள், தனியார்  நிறுவனங்கள் ஆகியவை மத்திய, மாநில அரசுகளிடம் செய்துகொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்த சாலைகள்  போடப்பட்டிருப்பதால் இருபத்தைந்து ஆண்டுகளோ அல்லது குத்தகை காலம் முடியும் வரையோ அந்த சாலையில் பயணிப்பவர்களிடம்  டோல்கேட் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம். அரசு நிறுவனம் இந்த சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தால் அரசுக்கும்,  தனியார் நிறுவனங்கள் மேற்கொண்டிருந்தால் தனியாரின் பாக்கெட்டுக்கும் காசு போகும் என்பது ஏற்பாடு. தனியார் நிறுவனங்கள்  அமைத்துக்கொடுத்த சாலைகளில் வேண்டுமென்றே மாவட்ட, உள்ளூர் அமைப்புகளுக்கு அழுத்தம் கொடுத்து அந்த இடங்களில் வரி வசூல்  செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது என நாம் சந்தேகிக்க முகாந்திரம் இருக்கிறது.

அதனால்தான்  அதிக நீளமுடைய மஹாராஷ்டிராவில் முப்பத்து மூன்று டோல்கேட்களும் அதைவிடக் குறைவான நம்மிடம் 41  டோல்கேட்களும் இருக்கிறதோ என்னவோ? தமிழகத்தில் நெடுஞ்சாலை ஆணையத்தின் வசம் வெறும் பனிரெண்டு டோல்கேட்களும்  தனியாரின் வசமே எஞ்சிய இருபத்தொன்பது டோல்கேட்களும் உள்ளன என்ற தகவலையும் இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டும். நம்மிடம் வாங்கும் டோல்கேட் கட்டணத்தில் சாலைப் பயன்பாட்டுக் கட்டணத்துடன் அங்கு நமக்கு வழங்கப்படும் அடிப்படை  வசதிகளுக்கான வரிகளும் அடங்கும் என்கிறார்கள். அது என்ன அடிப்படை வசதிகள் என்பதைப் பற்றி எல்லாம் யாரும் கேட்கவே கூடாது.  ஏனெனில் எந்த நெடுஞ்சாலையிலும் அடிப்படை வசதிகள் எதுவுமே பெரும்பாலும் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

மேலும், இந்த நெடுஞ்சாலை கட்டணங்களில் காற்றில் பறக்கும் விதிகள் பல உள்ளன. ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலம்தான் சாலையை  அமைத்த நிறுவனம் வரிவசூல் செய்ய முடியும். ஆனால், பல ஒப்பந்தங்கள் காலாவதியான நிலையிலும் இன்னமும் அந்த நிறுவனங்கள்  வரி வசூல் செய்துகொண்டிருக்கின்றன என்கிறார்கள். இதை எல்லாம் கண்காணிக்க என்ன மாதிரியான அமைப்புகள் நம்மிடம் உள்ளன  என்றும் தெரியவில்லை. கடந்து செல்லும் வாகனங்களின் பெருக்கம் அதிகரிக்கும் விகிதத்துக்கு வசூலிக்கும் கட்டணத்தைக் குறைக்க  வேண்டும் என்றும் ஒரு விதி உள்ளது. ஆனால், எந்த டோல்கேட்டிலும் இந்த விதி கடைப்பிடிக்கப்படுவதே இல்லை. போலவே, இரண்டு  ஆண்டுகள் முடிந்தவுடன் சாலையைப் புதுப்பிக்க வேண்டும் என்றும் விதி உள்ளது. கிட்டத்தட்ட எந்த சாலையையுமே திரும்பப்  புதுப்பித்ததாகத் தகவல்கள் இல்லை.

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் 1992ம் ஆண்டு ஒப்பந்த விதிப்படி அமைக்கப்பட்ட டோல்கேட்களில் ஆண்டுதோறும் ஏப்ரல்  ஒன்றாம் தேதியும், 2008ம் ஆண்டின் ஒப்பந்த விதிப்படி அமைக்கப்பட்ட டோல்கேட்களில் செப்டம்பர் ஒன்றாம் தேதியும் கட்டணத்தைத்  திருத்தி அறிவிக்கலாம். நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இந்த டோல்கேட்கள் நஷ்டத்தில்  இயங்குவதாகக் கணக்குக்காட்டி, கவனிக்க வேண்டியவர்களை கவனித்து, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பத்து முதல் பதினைந்து  சதவீதம் வரை கட்டணத்தை மட்டுமே உயர்த்திக்கொண்டிருக்கிறார்கள் இந்த வசூல் மன்னர்கள்.

அரசோ இதை எல்லாம் கண்டுகொள்வதே  இல்லை. ஏதேனும் ஒருவகையில் தனக்கு வருமானம் வந்தால் போதும் என்ற மனோபாவத்தில் இந்தக் கொள்ளைக் குத்துணைபோய்க்  கொண்டிருக்கிறது. வேலொடு நின்றான் இடு என்றது போலும்கோலொடு நின்றான் இரவு- என்ற குறள்தான் நினைவுக்கு வருகிறது. அரசன்  அளவுக்கு அதிகமாக வரி வசூலிப்பது, வேல் கொண்டு வழி மறித்துப் பறிக்கும் கள்வர் செயலுக்கு ஒப்பானது என்கிறார் வள்ளுவர். இங்கோ, அரசே வழி மறித்துப் பறித்துக்கொண்டிருக்கிறது.