அக்வாதெரபி என்னும் நீச்சல் பயிற்சி!



உலகளவில் நீர் மூலம் உடல், மனம் வளர்ச்சி பெறுவதற்கான அக்வாதெரபி பயிற்சி முறைகள் பிரபலமாகி வருகின்றன. பூமியின்  மகத்தான பொக்கிஷம் தங்கம், வைரம், வைடூரியமல்ல; நீர்தான்!நதிக்கரையோரம் தொடங்கிய நாகரிகம் டெக் பாய்ச்சலில் வளர்ந்தாலும்  நிறமற்ற, மணமற்ற திரவமான நீரின் பங்களிப்பு இல்லையேல் உயிரினங்களின் உலகவாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும்.கிரேக்கம், சீனம்,  ரோம், எகிப்து ஆகிய நாடுகளில் நோயுற்றவர்களுக்கு நீர் மூலம் சிகிச்சை (ஹைப்போதெரபி) அளிக்கப்பட்டது என்பது தொல் மருத்துவரான  ஹிப்போகிரேட்டஸ் வாக்கு.  

உலகளவில் அக்வாதெரபி பிரபலம் என்றாலும் இந்தியாவில் இப்போதுதான் மெல்ல புகழ்பெற்று வருகிறது. ஹலிவிக், பர்டென்கா,  வாட்ஸூ, அய் சி என பல்வேறு பெயர்களில் அக்வாதெரபி மக்களிடையே பிரபலமாகி வருகிறது.‘‘அக்வாதெரபி முதலில் மருத்துவத்துறை  சார்ந்ததாகவே இருந்தது. இப்போது அதன் பயன்களைப் பார்த்து பல்வேறு ஆரோக்கிய மையங்களும் இதை செயல்படுத்தத்  தொடங்கியுள்ளனர்...” என்கிறார் அக்வாதெரபி ஆலோசகரான பிரசாந்த். அக்வாதெரபியின் அர்த்தம், நீரில் குதித்து நீச்சலடிப்பது என  பொதுவாக பலரும் நினைப்பார்கள். அப்படியல்ல. சாதாரணமாக தரையில் செய்ய முடியாத உடற்பயிற்சிகளைக் கூட நீரில் செய்யலாம்.  செய்கிறார்கள்.

புவியீர்ப்பு விசையைப் பொறுத்து உடல் தசைகளை நெகிழ்த்தி நீரில் செய்யும் உடற்பயிற்சிகள் மகத்தான பயன்களைத் தருகின்றன  என்பதற்கு அறிவியல் ஆதாரங்களும் உண்டு என்கிறது அக்வாதெரபி மைய வட்டாரங்கள். “குறுக்கு, சாய்ந்த, நீள்சதுர கோணங்களில்  புவியீர்ப்பு விசையோடு உடல் ஒருங்கிணையும்போது தசைகளின் இயங்குதிறன் அதிகரிக்கும்!” என ஆச்சரியத் தகவல் தருகிறார் பிரசாந்த். முழங்கால் வலி, இதயநோய் உள்ளவர்களுக்கான பல்வேறு பயிற்சிகளும் அக்வாதெரபியில் உண்டு. “தரையில் எழுபது கிலோ  எடையுள்ளவர்கள் நீரில் 7 கிலோ எடை கொண்டவர்கள் மட்டுமே! இதனால் பயிற்சிகளைச் செய்வதும் எளிது. தசைகள், நினைவுத்திறன்  ஆகியவற்றை இதன்மூலம் புத்துயிர் பெறச் செய்யலாம்...” என்னும் பெங்களூரைச் சேர்ந்த அக்வாதெரபி பயிற்சியாளர் (HIIT) பூஜா அரோரா,  முழங்கால் வலியால் அவதிப்பட்டு அக்வாதெரபியால் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டவர்!                          

-ச.அன்பரசு