பகவான்



யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்

புதிய தொடர் - 7

வாழ்க்கை ஆரம்பிப்பதற்கு முன்பே நான் மரணத்தை அறிந்தவன்!


தாய்வழிப் பாட்டனாரிடம் ஏழு வயது வரை ரஜனீஷ் வளர்ந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அவருடைய தந்தைவழிப் பாட்டனார்  மீதும் ரஜனீஷ் பெரும் அன்பு கொண்டிருந்தார். இவரது கண்களில் எப்போதும் தென்படும் குறும்பும், குதூகலமும் அவரது தாத்தாவிடமிருந்து  வந்தது என்று ஊர்மக்கள் சொல்வார்கள்ரஜனீஷ், ஆற்றங்கரைக்குச் செல்லும்போது சில நேரங்களில் அவரோடு தாத்தாவும் வருவதுண்டு.  அவருக்கு தன் பேரனின் கையைப் பிடித்துக்கொண்டு நடக்க மிகவும் பிடிக்கும்.ஆனால், ரஜனீஷ் இதைத் தவிர்ப்பார்.ஒருமுறை தாத்தா  கேட்டார். “உனக்கு இந்த தாத்தாவைப் பிடிக்காதா?”“மிகவும் பிடிக்கும். இருந்தாலும் உங்கள் கையைப் பிடித்துக் கொண்டு நடக்க  மாட்டேன்!”“அதுதான் ஏனென்று கேட்டேன்...”

“என் வாழ்நாள் முழுக்க இதே போல உங்களால் என் கையைப் பிடித்துக்கொண்டு வரமுடியுமா?”“அது எப்படி முடியும்? நானோ  எழுபத்தைந்து வயது கிழவன். நீ பத்து வயதுகூட நிரம்பாத சிறுவன். இன்னும் சில காலம்தான் நான் உயிர் வாழ்வேன். நீ நீண்ட காலம்  இருக்கப் போகிறாய். வாழ்க்கை முழுக்க உன்னோடு நானிருக்க இயற்கை அனுமதிக்காதே?” “அதனால்தான் சொல்கிறேன். நான் தனியே  நடக்க விரும்புகிறேன். பிரிவுத்துயரைத்  தாங்க முடியாது...”குழந்தை என்று நினைத்து பழகிக்கொண்டிருக்கும் தன் பேரனின் அறிவு  விசாலத்தை எண்ணி தாத்தாவுக்கு பெருமையாக இருந்தது.அதேநேரம் ரஜனீஷின் மனசுக்குள் ‘மரணம்’ என்கிற நிகழ்வு பெரும்  கொந்தளிப்புகளையும், சிந்தனைகளையும் ஏற்படுத்திக் கொண்டிருந்ததை அவர் அறிய மாட்டார்.

ரஜனீஷ் பிறந்தபோது அவருக்கு ஜாதகம் பார்க்கப்பட்டது. ஜாதகத்தை கணித்த ஜோதிடர், “இந்தக் குழந்தை ஏழு வயது வரைதான்  உயிரோடு இருப்பான்...” என்று கூறினார்.வேறொரு தலைசிறந்த ஜோதிடரும் கிட்டத்தட்ட இதே கருத்தைத்தான் கூறினார்.“ஏழு வயது கண்டத்தை கடந்தால் பதினான்கு வயதில் பெரிய கண்டம் இருக்கிறது. அதையும் கடந்தால் இருபத்தோரு வயதில் மரணம்  நிச்சயம்!”குடும்பத்தார் பதறிப் போனார்கள்.கொஞ்சம் விவரம் தெரிந்த வயதில் ரஜனீஷுக்கு இது தெரிய வந்தது. எனவேதான் மரணம்  குறித்து அவர் நிறைய சிந்திக்கத் தொடங்கியிருந்தார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதுபற்றி விவரம் தெரிந்தவர்களிடம் அவர்  விவாதிக்கவும் தவறவில்லை.

ரஜனீஷுக்கு அப்போது ஐந்து, ஆறு வயதிருக்கும். குசும் என்கிற அழகிய தங்கை அவருக்கு இருந்தாள். ரஜனீஷ், ஏழு வயது கண்டத்தை  எட்டும்போது அவர் மரணிக்கவில்லை. மாறாக அவரது தங்கை மரணித்துவிட்டாள்.இந்த மரணம் அவருக்குள் அந்த வயதிலேயே  மிகக்கடுமையான துயரத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகே துறவியைப் போல பேசவும், நடந்துகொள்ளவும் தொடங்கினார்.இதே காலகட்டத்தில்தான் அவருடைய தாய்வழிப் பாட்டனாரான அவரது குச்வாடா தாத்தாவும் காலமானார். அந்த தாத்தாவை மரணம்  எப்படி நெருங்கியது என்பதை உடனிருந்து கண்டார்.தாத்தாவுக்கு முதலில் நடக்க இயலாமல் போனது. படுத்த படுக்கையானார். ரஜனீஷ்  கூடவே இருந்து அவரோடு பேசிக்கொண்டே இருந்தார்.அடுத்து தாத்தாவுக்கு பேசும் சக்தி குறைந்துகொண்டே போனது. அடுத்து அவரால்  கண்களையே திறக்க முடியவில்லை. அப்படியே மயக்கநிலைக்குப் போனார்.

மாட்டு வண்டி கட்டி அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முயற்சியின் போது கடைசி மூச்சையும் விட்டார்.ஒவ்வொரு நாள் மாலையிலும் இருள் எத்தனை இயல்பாக ஊரை ஆக்கிரமிக்கிறதோ, மரணமும் அதுபோலத்தான் ஒரு மனிதனின் கடைசி  நாட்களில் நடக்கிறது.பற்று கொண்ட மனிதர்களின் மரணம்தான் நம்மைக் கடுமையாக பாதிக்கிறது.தங்கை மற்றும் தாத்தாவின்  மரணத்தால் ஏற்பட்ட பிரிவுத்துயரை சிறுவயதிலேயே சந்தித்து விட்டதாலோ என்னவோ, எவர் மீதும் பற்று வைக்காமல் தனியாக இருக்கப்  பழகுவது என்கிற மனப்பாங்குக்கு ரஜனீஷ் வந்திருந்தார்.மேலும், ஜோதிடர்கள் தனக்கு கணித்த மரணத்தைப் பற்றியும் அவர் மனசுக்குள்  விசாரணை நடத்திக் கொண்டிருந்தார். பின்னாளில், “என் வாழ்க்கை ஆரம்பிப்பதற்கு முன்பே நான் மரணத்தை அறிந்தவன்!” என்று அவர்  சொன்னது, இந்த அனுபவங்களின் அடிப்படையில்தான்.

ரஜனீஷின் குடும்பம் சமணக் குடும்பமாக இருந்தாலும் அவரது தந்தை வழிப் பாட்டனார் ‘ஸோர்பா’ என்கிற இனக்குழுவினரின் சடங்குகள்  மற்றும் பழக்கவழக்கங்களைப் பின்பற்றக் கூடியவராக இருந்து வந்தார்.உண்பதும், உறங்குவதுமாக அவருடைய கடைசிக்காலம் மகிழ்ச்சியாக  இருந்து வந்தது. அவர் மரணம் குறித்து எவ்வித அச்சமும் கொண்டிருக்கவில்லை. அதுதான் ரஜனீஷுக்கு ஆச்சரியம்.“கடவுளைப் பற்றியே  பயப்படாதவன் நான். மரணம் குறித்து ஏன் அஞ்சப் போகிறேன்?” என்று ஒருமுறை ரஜனீஷிடம் சொன்னார்.அவர் மரணிக்கும் வேளையிலும்  கூட, “மகிழ்ச்சியாக வாழ்ந்து முடித்தவன் நான். மரணத்தையும் மகிழ்ச்சியோடு ஏற்கிறேன்...” என்று சொல்லிவிட்டே இறந்தார்.ஒட்டுமொத்த  மனித இனமுமே அஞ்சக்கூடிய மரணத்தை மகிழ்ச்சியோடு தன் தாத்தா ஏற்றது ரஜனீஷுக்கு வியப்பாகவும், பெருமையாகவும் இருந்தது.

இயேசுநாதரும் கூட தன் மரணத்தை இயல்பாகவே ஏற்றுக் கொண்டவர்தான் என்பதை உணர்ந்து கிறிஸ்தவ மதம் குறித்த நூல்களையும்  வாசிக்கத் தொடங்கினார். மரணம் குறித்து இந்து, இஸ்லாம் நூல்கள் என்ன சொல்கின்றன என்பதை வாசித்தும், விஷயம்  தெரிந்தவர்களிடம் கேட்டும் அறிந்து வைத்துக் கொண்டார்.அந்த காலகட்டத்தில் தன்னை சர்வமத மனிதனாக ரஜனீஷ் வெளிப்படுத்திக்  கொண்டார். இஸ்லாமியரைப் போல தலையில் குல்லா அணிந்து கொண்டு, கிறிஸ்துவ தேவாலயத்துக்குச் சென்று மணிக்கணக்கில்  சிலுவையில் அறையப்பட்ட இயேசு சிலைக்கு முன்பாக தியானம் செய்துகொண்டிருப்பார். தேவாலயத்தில் இருந்த பாதிரியார் ஒருவர்  அடிக்கடி இவரைக் கண்டு ஆச்சரியப்பட்டார். ஒருவேளை இச்சிறுவன் கிறிஸ்துவின் சுவிசேஷத்துக்கு ஆட்பட விரும்புகிறானோ என்று  எண்ணினார்.

ஒருமுறை அவராகவே முன்வந்து பேசினார். “தம்பி, உனக்கு கிறிஸ்துவை மிகவும் பிடிக்குமா?”“ஆமாம். அவரை யாருக்குத்தான்  பிடிக்காது!”“நீயும் கிறிஸ்துவைப் போல மாற விரும்புகிறாயா?”“இல்லை. என்னை யாரும் சிலுவையில் அறைய நான் விரும்பவில்லை!”  முகத்தில் அடித்தாற்போல ரஜனீஷ் சொன்ன பதில், பாதிரியாரைத்திகைக்க வைத்தது. தேவாலயங்களுக்குச் சென்றதைப் போல  மசூதிகளுக்கும் கூட ரஜனீஷ் செல்வார். அங்கும் ஒருவர் கேட்டார். “நீ இஸ்லாமியனாக மாற விரும்புகிறாயா?”“இல்லை. நான் மனிதன்.  எனக்கு முகமூடி தேவையில்லை. மதம் என்பது முகமூடியே தவிர வேறல்ல. கடவுள் எனக்கு அளித்திருக்கும் தனித்தன்மை
யுடன் என்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்!”

புத்தர், மகாவீரர், இயேசு, முகம்மது நபி போன்றோர் எல்லாம் மனிதகுலத்துக்கு வழிகாட்டிகள். அவரவருடைய தனித்தன்மையைப் பேண  முடிந்ததால்தான் அவர்களால் பிறப்பு, மரணம் குறித்த அறிவை எட்ட முடிந்தது. இயேசுவைப் போலவோ, புத்தரைப் போலவே நாம் மாற  வேண்டியதில்லை. அவரவர் தமக்கென்றிருக்கும் தனித்தன்மையோடே வாழவேண்டும், சிந்திக்க வேண்டும். அப்போதுதான் அவரவருக்கான  ஞானம் அவரவருக்குக் கிடைக்குமென்கிற தெளிவுக்கு ரஜனீஷ், மிகக்குறைந்த வயதிலேயே வந்துவிட்டார். மதங்களோ, நூல்களோ  அவருக்கு கற்றுக் கொடுத்த ஆன்மீக ஞானத்தைக் காட்டிலும் அவருடைய அளவில்லா சிந்திக்கும் திறனே அவருக்கான ஞானத்தை  வானளவு உயரமாகக் கட்டி அமைத்தது.

ஒருகட்டத்தில் மரணம் குறித்த மாயையிலிருந்து முற்றிலுமாக ரஜனீஷ் வெளியே வந்துவிட்டிருந்தார்.அவருக்கு பதினான்கு வயது  நெருங்கிக் கொண்டிருந்தது. ஜோதிடர்களின் கணிப்பு மெய்யாகி விடுமோ என்று குடும்பத்தினர் அஞ்சிக் கொண்டிருந்தனர்.ரஜனீஷோ  குடும்பத்தை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். மரணம் வந்தால் தன்னுடைய தாத்தாவைப் போலவே தானும் மகிழ்ச்சியாக எதிர்கொள்ள  வேண்டுமென்று தயாராக இருந்தார்.அந்த நாட்களில் இரவு வேளைகளில் வீட்டில் தங்குவதில்லை. கோயில் ஒன்றுக்குச் சென்று படுத்துக்  கொள்வார். உறக்கம் வரும் வரையிலும் மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பார். தன் மரணம் எந்த வடிவில் நிகழும் என்பதை அறிய  அவர் ஆவலாகவே இருந்தார் என்றுகூடச் சொல்லலாம்.ஒரு நாள் இரவு. அவர் உறங்கிக் கொண்டிருந்தபோது, தன் உடல் மீது ஏதோ  அசைவு ஏற்படுவதை உணர்ந்தார். மெல்ல கண் விழித்தார்.நீளமான நாகம் ஒன்று அவரது உடல் மீது  ஊர்ந்துகொண்டிருந்தது.

(தரிசனம் தருவார்)

ஏழு வயது கண்டத்தை கடந்தால் பதினான்கு வயதில் பெரிய கண்டம் இருக்கிறது. அதையும் கடந்தால் இருபத்தோரு வயதில் மரணம்  நிச்சயம்!

மகிழ்ச்சி மலரவேண்டும்!

“எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் மலர்களைப் போல இருங்கள்!” என்கிறார் ஓஷோ.இதற்கு இயேசுநாதர் அவரது  சீடர்களிடம் சொன்னதை மேற்கோள் காட்டுகிறார்.“தோட்டங்களில் செடிகளில் மலர்ந்த லில்லி மலர்களை கவனியுங்கள். அவற்றின் அழகு,  அவை மகிழ்ச்சியாக இருப்பதை வெளிப்படுத்துகின்றன. அவற்றின் வண்ணத்திலும், வனப்பிலும் மனமிழந்து நாமும் மகிழ்ச்சியடைகிறோம்.  மகிழ்ச்சியாக இருப்பதையும், மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதையும் மலர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.மிகக்குறுகிய  நேரமே உலகில் வாழக்கூடிய மலர் ஏற்படுத்தக்கூடிய மகிழ்ச்சியை நீண்ட காலம் வாழக்கூடிய நாம் ஏற்படுத்துவதே ஞானம் அல்லவா?”

இயேசுவின் இந்தக் கருத்தைச் சொன்ன ஓஷோ, நாம் வாழக்கூடிய அந்தந்த நிமிடத்தை மகிழ்ச்சிகரமாக மாற்றிக்கொண்டால் போதும்.  ஏனெனில், கடந்த காலமோ, எதிர்காலமோ நம் கட்டுப்பாட்டில் இல்லை. நிகழ்காலத்தை நாம் கட்டுப்படுத்த முடியும். எதிர்காலத்தில் இந்த  நிகழ்காலம்தான் கடந்தகாலமாக ஆகப்போகிறது. அந்த எதிர்காலத்தின் நிகழ்காலமும், கடந்தகாலமும் மகிழ்ச்சிக்குரியதாக இருந்தால்  மேலும் எதிர்கொள்ள இருக்கும் மகிழ்ச்சியான எதிர்காலம் குறித்தும் நம்பிக்கை பிறக்கும் என்றார்!