பில்லியர்ட்ஸ் 213 ஆட வயது தடையில்லை!!



அழுத்தமாகச் சொல்கிறார் தமிழக பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்நூக்கர் சங்கத்தின் மாநிலத் தலைவர்

மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதல் பெண். சீனியர் பிரிவில் மாநில முன்னாள் சாம்பியன். பில்லியர்ட்ஸ்  விளையாட்டைத் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் கொண்டு செல்ல முயற்சிகளை மேற்கொள்ளும் ஆர்வலர்... இவை அனைத்தும்  ஒருவருக்கே பொருந்தும். அவர், செளமினி ஸ்ரீநிவாஸ். ‘‘கிரிக்கெட், ஹாக்கி, அத்லெட்டிக்ஸ் மாதிரி க்யூ ஸ்போர்ட்ஸ் கிடையாது.  இதுவொரு இன்டோர் கேம். கிளப்லதான் அதிகமா விளையாடறாங்க. அதனாலதானோ என்னவோ இந்த கேம் சரியா மக்கள்கிட்ட ரீச்  ஆகலைனு நினைக்கிறேன். ஏனோ, இந்த விளையாட்டுக்குப் பெண்கள் வர்றதே இல்ல. நானே 45 வயசுலதான் பில்லியர்ட்ஸும்  ஸ்நூக்கரும் ஆடக் கத்துக்கிட்டேன். இதுக்கு வயசு ஒரு தடையில்ல...’’

புன்னகைக்கும் சௌமினியின் சொந்த ஊர் ஆந்திராவிலுள்ள எட்லலங்கா என்ற கிராமம்.‘‘பாபா அணுமின் நிலையத்துல அப்பா வேலை  பார்த்ததால மும்பைல செட்டிலானோம். ஸ்கூல் லைஃப் அங்கதான். அப்பாவுக்கு கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு டிரான்ஸ்ஃபரானதும்  சென்னை வந்தோம். பியுசி, காலேஜை இங்க முடிச்சேன்.விளையாட்டுல எப்பவும் ஆர்வம் உண்டு. டேபிள் டென்னிஸ், ஷட்டில்காக்,  ரன்னிங்னு எல்லாத்துலயும் கலந்துகிட்டு ஜெயிப்பேன். கல்யாணமானதும் வாழ்க்கை மாறிப்போச்சு.ஸ்டெல்லா மேரிஸ் காலேஜ்ல மூணு  வருஷம் பேராசிரியர் பணி. குழந்தைங்க பிறந்ததும் வீட்டைக் கவனிக்கவே நேரம் சரியா இருந்துச்சு. சமையல், தோட்டக்கலை எல்லாம்  ரொம்பப் பிடிக்கும்.

இது ஒருபக்கம் நடக்கும் போதே நர்சரி பள்ளியை எடுத்து நடத்த ஆரம்பிச்சேன். அந்தப் பள்ளியை வீட்டுக்குப் பக்கத்துல இருந்த ஒருத்தங்க  நடத்திட்டு இருந்தாங்க. அவங்க வெளிநாடு போகவேண்டிய சூழல். என்னைய பார்த்துக்கச் ெசான்னாங்க. மனசுக்குப் பிடிச்ச வேலை.  ஏத்துக்கிட்டு செய்ய ஆரம்பிச்சேன். பசங்க பெரியவங்களானதும் படிப்பை முடிச்சுட்டு அமெரிக்கா போய்ட்டாங்க. வீட்ல போர் அடிச்சது. என்  கணவர் ஸ்ரீநிவாஸுடன் காந்திநகர் ஜிம்கானா கிளப்ல உறுப்பினரா சேர்ந்து பில்லியர்ட்ஸ் ஆட ஆரம்பிச்சேன். அப்பதான் இந்த  விளையாட்டுல ஆர்வமாச்சு. ஆனா, போட்டினு எதிலும் கலந்துக்காம ஒரு ஹாபியா ஆடினேன்...’’ என்கிறவர் சங்கத்துக்கு வந்த கதை  சுவாரஸ்யமானது. ‘‘அப்ப  தமிழக பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்நூக்கர் சங்கத்துச் செயலாளரா இருந்த சசிகாந்த் சார் காந்திநகர் கிளப்ல நான்  விளையாடுறதைப் பார்த்துட்டு, ‘ரொம்ப நல்லா ஆடுறீங்க. நம்ம அசோசியேஷன்ல வந்து விளையாடுங்க...’னு சொன்னார்.

‘இதை ஒரு ஹாபியாதான் சார் ஆடுறேன். சின்னப் பசங்க கூட பங்கெடுத்து போட்டி போடுற எண்ணம் இல்ல. இப்பவே 48  வயசாகிடுச்சு...’னு மறுத்தேன். அவர், ‘நீங்க வரணும். பெண்கள் இந்த ஸ்போர்ட்ஸ்ல பங்கேற்கறது குறைவா இருக்கு. வயசெல்லாம்  தடையில்ல. நடிகை கமலாதேவி 62 வயசுலதான் தேசிய பெண்கள் சாம்பியன்ஷிப் டைட்டில் வாங்கினாங்க. அப்புறம், 66 வயசுல  ரெண்டாவது தடவையா சாம்பியன் ஆனாங்க. நீங்களும் ஆடலாமே...’னு ஊக்கப்படுத்தினார். உடனே, சங்கத்துல உறுப்பினரா சேர்ந்து  மாநில அளவுல ஆடினேன். அதுல ரெண்டாவது பரிசு கிடைச்சது. பிறகு, தேசியஅளவுல தில்லி போய் காலிறுதி வரை வந்தேன். அப்புறம்,  2002, 2003ல் பில்லியர்ட்ஸ், ஸ்நூக்கர்ல மாநில சாம்பியன் ஆனேன்...’’ என்கிற சௌமினி, ‘‘நான் அசோசியேஷன்ல தலைவரா வருவேன்னு நினைச்சுக்கூட பார்க்கல...’’ என்கிறார்.

‘‘இந்த சங்கம் ஆரம்பத்துல வள்ளுவர் கோட்டத்துல இருந்துச்சு. இதை ‘இந்து’ குழுமத்தின் நிறுவனர் நரசிம்மன் சார்தான் 1970ல்  ஆரம்பிச்சார். அப்புறம், அசோசியேஷன் கோபாலபுரம் வந்தது. இதனுடன் தனி லைசென்ஸ் பெற்ற பார் இருக்கு. அதுதான் சங்கத்துக்கு  வருமானம். ஆனா, போதுமான வருமானம் இல்லாம அங்கிருந்து நகர வேண்டியதாகிடுச்சு. அப்ப நான் மந்தவெளில் இருக்குற இடத்தைத்  தேர்ந்தெடுத்துக் கொடுத்தேன். இதுக்கு முன்னாடி நடந்த சாம்பியன்ஷிப் போட்டிக்கும் என்னால முடிஞ்சவரை பணிகள் செய்தேன்.  இதையெல்லாம் பார்த்திட்டு ‘மேடத்தை சங்கத்தின் மாநிலத் தலைவரா நியமிக்கலாம்...’னு எல்லோரும் சொன்னாங்க. நான் போட்டியே  இல்லாம தேர்ந்தெடுக்கப்பட்டது எனக்கே ஆச்சரியம்தான்...’’ என்ற செளமினி இங்கிருந்து சாம்பியன் ஆனவர்களைப் பட்டியலிட்டார்.

‘‘தமிழ்நாடு அசோசியேஷன்ல இருந்து பல பேர் உலகளவிலும், தேசிய அளவிலும் சாம்பியன் ஆகியிருக்காங்க. இதுல, ரஃபத் ஹபீப்  2002ம் வருடம் ஆசிய விளையாட்டுப் போட்டில தங்கம் வென்றார். தேசிய அளவுல இரண்டாவது ரேங்க் பிடித்த சையத் அலீம் இந்த சங்கத்தைச் சேர்ந்தவர்தான். அப்புறம், சித்தார்த் ராவ் தேசிய சாம்பியன் டைட்டில் வென்றவர். ஸ்ரீகிருஷ்ணா சப்-ஜூனியர், ஜூனியர்  பிரிவுல தேசிய சாம்பியன். தவிர, அண்டர் 16 பிரிவுலயும் இவர் சாம்பியன். பெண்கள்ல அனுபமாவும், வித்யா பிள்ளையும் நம்பிக்கை தந்து  கலக்கிட்டு இருக்காங்க. கடந்த வருஷம் அனுபமா, அண்டர் 16 ஸ்நூக்கர் பிரிவுல உலக சாம்பியன் அடிச்சாங்க. வித்யா பிள்ளை ஐந்து  முறை தேசிய சாம்பியன் ஆனவங்க. இவ்வளவு பெருமை கொண்டது இந்த சங்கம். இப்ப நானூறு ஆண் உறுப்பினர்களும், நான்கே பெண்  உறுப்பினர்களும்தான் சங்கத்துல இருக்காங்க. உடனே பெண் உறுப்பினர்கள் இவ்வளவுதானானு கேட்காதீங்க. மற்ற கிளப்கள்லயும்  ஆடுறாங்க. இருந்தும் இந்த ஸ்போர்ட்ஸ்ல அவங்களோட பங்கேற்பு குறைவு தான்.

மேட்ச்னு வர்றப்ப முப்பது பெண்களே கலந்துக்கறாங்க. இந்த நிலை மாறணும். அதுக்கான பணிகளைச் செய்திட்டு இருக்கேன். இப்ப நாங்க  தமிழகம் முழுவதும் ஸ்கூல், காலேஜ் லெவல்ல நிறைய போட்டிகள் நடத்திட்டு வர்றோம். மாணவர்களும் ஆர்வமா விளையாட  ஆரம்பிச்சிருக்காங்க. மாநில அரசு எங்க சங்கத்துக்கு நிரந்தரமா ஒரு இடம் ஒதுக்கித் தந்தா இன்னும் சிறப்பா நடத்தலாம். இந்த  விளையாட்டையும் மேம்படுத்தலாம். அதுக்காக பேசிட்டு இருக்கோம். இது ஒரு நல்ல விளையாட்டு. மனதை ஒருநிலைப்படுத்தி நம்ம  லட்சியத்தை அடைய வைக்கும். நிறைய வேலைவாய்ப்பும் இதுல இருக்கு. இங்கிருந்து ரயில்வேஸ், பெட்ரோல் நிறுவனங்கள்னு மத்திய  அரசு வேலைக்குப் பலர் போயிருக்காங்க...’’ என்று சொல்லும் சௌமினிக்கு இப்போது வயது 66.                                

-பேராச்சி கண்ணன்
படங்கள் : ஆ.வின்சென்ட் பால்