ராதிகா முதல் ராம்கி வரை... மனம் திறக்கிறார் நிரோஷா



எளிமையும், இனிமையுமாக மிளிர்கிறார் நிரோஷா. ‘அக்னி நட்சத்திர’த்தில் ‘வா வா... அன்பே... அன்பே...’ என அன்றைய ரசிகர்களை  அசத்தியவர், இப்போது இல்லத்தரசிகளின் இதயங்களைக் கவர்ந்திழுக்கிறார். ‘தாமரை’க்குப் பின் ‘மின்னலே’யில் வில்லத்தனம் கலந்த  கேரக்டரில் மிரட்டி வரும் நிரோஷா, இப்போது சின்னத்திரையில் முதன்முறையாக தன் அக்கா ராதிகாவுடன் ‘சந்திரகுமாரி’யில் இணைந்து  நடித்து வருகிறார்.‘‘சினிமால இருந்து ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகுதான் சீரியலுக்குள் வந்திருக்கேன். ‘சின்னபாப்பா பெரியபாப்பா’  தொடரின் அடுத்தத்த சீஸன்ஸ் பெரிய வரவேற்பா அமைஞ்சது. அடுத்து வந்த ‘தாமரை’ இன்னும் பெரிய ரீச்.

அதுல என்னோட நடிச்ச நீலிமா, எல்.ராஜா அண்ணா, அஸ்வின், ஜெயராம்னு நாங்க ஒரு டீம் ஆகிட்டோம். இப்ப நாங்க அஞ்சு பேருமே  க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். வாட்ஸ் அப்ல தனி குரூப் ஆரம்பிச்சு அரட்டை அடிச்சிட்டிருக்கிற அளவுக்கு வந்திருக்கோம்! மாசத்துக்கு ஒருமுறை  வெளில போவோம். லன்ச் சாப்பிடுவோம்...’’ சின்னக் குழந்தை போல் குதூகலிக்கும் நிரோஷா, திரைப்படங்களை விட சீரியல் பட்டி  தொட்டி எங்கும் ஊடுருவி பெயர் வாங்கித் தருகிறது என்கிறார். ‘‘அப்பா காலமானதும் அம்மாதான் எனக்கும் அக்காவுக்கும் பில்லரா  இருந்தாங்க. சின்ன வயசுல நான் பாட்டுப்பாடுவேன். டான்ஸ் ஆடுவேன். ஸோ, நான்தான் சினிமாவுக்கு வருவேன்னு வீட்ல எல்லாரும்  நினைச்சாங்க. ஆனா, அக்கா ராதிகா முதல்ல என்ட்ரி ஆகிட்டாங்க!

இதுக்கு அப்புறம் நிறைய பேர் என்னையும் நடிக்கச் சொல்லி கேட்டாங்க. மணிரத்னம் சார் அப்ரோச் பண்ணினப்ப உடனே சரி  சொல்லிட்டேன். மறுநாளே ‘அக்னி நட்சத்திரம்’ ஷூட் ஆரம்பிச்சுடுச்சு! பேஸிக்கா நான் அப்பா செல்லம். அவர் மட்டும் இருந்திருந்தா நான்  நடிகையானதைப் பார்த்து மகிழ்ந்திருப்பார். அதனால என்ன... இப்பவும் அவர் ஆசீர்வாதம் எனக்கு இருக்குனு முழுமையா நம்பறேன்.  ஒண்ணு தெரியுமா... அப்பா இல்லாத குறையை அவர் இடத்துல இருந்து அக்கா ராதிகா நிறைவேத்திட்டு இருக்காங்க!’’ நெகிழும் நிரோஷா,  தன் சினிமா கேரியரில் ‘அக்னி நட்சத்திர’மும், ‘செந்தூரப் பூவே’வும் முக்கியமானவை என்கிறார்.

‘‘நடிக்க வந்த புதுசுல கேரவன் கல்ச்சர் கிடையாது. ஷூட்டிங் போனா ஷாட் முடிச்சதும், பிரேக்ல மரத்தடில உட்காருவோம். எல்லா  நடிகர்களும் இப்படி அமர்ந்து ஜாலியா அரட்டை அடிப்போம். இப்ப கேரவனும், மொபைலும் ஆர்ட்டிஸ்ட்களுக்கு இடைல இருந்த  கம்யூனிகேஷன், நட்பு எல்லாத்தையும் அறுத்துடுச்சு!படப்பிடிப்பில் எனக்கு எப்பவும் பக்கபலமா இருக்கறது ராஜு அண்ணாவும்,  மோகனும்தான். சினிமா ரொம்ப பிடிச்சது. எங்க போனாலும் மேக்கப் பொருட்கள், சேலைக்கேத்த அக்சசரீஸ் வாங்கற பழக்கம் அதிமாச்சு.
 திரும்பிப் பார்த்தா மலைப்பா இருக்கு. ‘அக்னி நட்சத்திரம்’ வந்து கிட்டத்தட்ட 30 வருஷங்களாச்சு. இப்பவும், இந்த ஜெனரேஷனும்  என்னை எங்காவது பார்த்தா ‘அக்னி நட்சத்திரம்’ நிரோஷானு சொல்றாங்க! இதுதான் சினிமா மேஜிக்!’’ புருவத்தை உயர்த்தி ஆச்சர்யப்படும்  நிரோஷா, தன் அக்கா ராதிகா குறித்து பேசத் தொடங்கியதும் கண் கலங்குகிறார்.

‘‘வாட் அ பர்சனாலிட்டி! அவங்க சினிமாவுக்கு வந்து 40 வருடங்களாகுது. எப்பேர்ப்பட்ட சாதனை! அப்பவும் சரி இப்பவும் சரி பிரேக்கே  இல்லாம உற்சாகத்தோடு நடிச்சுட்டு இருக்காங்க. எந்த கேரக்டரா இருந்தாலும் அதுல தன் முத்திரையைப் பதிக்கறாங்க.நடிகையா  மட்டுமில்லாம தயாரிப்பாளராகவும், குடும்பத் தலைவியாகவும்... ஏன், நல்ல அக்காவாகவும் இருக்காங்க. எங்க அப்பா எம்.ஆர்.ராதாவின்  இடத்தை பெருமளவு அக்கா ரீப்ளேஸ் செய்திருக்காங்கனு உறுதியா சொல்லுவேன். எப்பவும் அக்கா வெளிப்படையா பேசுவாங்க;  இருப்பாங்க. முதல் முறையா அவங்க கூட ‘சந்திரகுமாரி’ சீரியல்ல நடிக்கறேன். ஆனா, சரித்திர போர்ஷன்ல இல்ல. நிகழ்கால  போர்ஷன்ல! எங்களுக்கு காம்பினேஷன் சீன்ஸ் இருக்கு. சரியா செய்தா உடனே மனசார பாராட்டிடுவாங்க. என் மேக்கப்ல கரெக்‌ஷன்ஸ்  சொல்றது, காஸ்ட்யூம் தொடர்பா கைட் பண்றதுனு தன் மக மாதிரியே இப்பவும் என்னை கைல வைச்சுத் தாங்கறாங்க.

அக்கா சமையல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். பிரமாதமா சமைப்பாங்க. அவங்களால ஏதாவது எனக்கு காரியம் ஆகணும்னா... அக்காகிட்ட  கேட்க தயக்கமா இருந்தா உடனே பெரிய அத்தான்கிட்ட (சரத்குமார்) கேட்பேன். எதுவா இருந்தாலும் உடனே வாங்கிக் கொடுத்துடுவார்.  அவரை மாதிரியே அவரது பையன் ராகுலும். உதவுற குணம் அவனுக்கும் அதிகம். நல்லாவும் சமைப்பான்!’’ கண்களை விரித்து சிரிப்பவர்,  தன் கணவர் ராம்கிதான் தனது குரு, ஃப்ரெண்ட், அட்வைசர் எல்லாமும் என்கிறார்.ஒரு நடிகரா, டெக்னீஷியனா நிறைய விஷயங்கள்  எனக்கு கத்துக் கொடுத்திருக்கார். நல்ல மனிதர். தான் உண்டு தன் வேலையுண்டுனு இருப்பார். பயங்கர படிப்பாளி. பாலிடிக்ஸ்ல இருந்து  எலக்ட்ரானிக்ஸ் அயிட்டங்கள் வரை எல்லாவற்றையும் அக்கு வேறு ஆணி வேறா அலசுவார்; பேசுவார்; தெரிஞ்சு வைச்சிருப்பார்.  சுயமுன்னேற்றம் பத்தி அவர் பேசறதை கேட்டா நமக்கே நம்ம மேல நம்பிக்கை வந்துடும்!

இப்ப தெலுங்குல அவர் நடிச்சு வெளியான ‘ஆர்.எக்ஸ்.100’ சூப்பர் ஹிட் ஆகியிருக்கு. வில்லனா பண்ற ஐடியா இல்லாததால நல்ல  கேரக்டர்கள் இருக்கிற கதைகளைத் தேடிட்டு இருக்கார். படம் டைரக்ட் பண்ற ஐடியாவும் அவருக்கு இருக்கு. அரசு விளம்பரபடங்கள்  நிறைய பண்ணிட்டிருக்கோம். நான் ஹீரோயினா இருக்கிறப்பவே எடிட்டிங் படிக்க ஆரம்பிச்சேன். இடைல நிறுத்தினேன். இப்ப மறுபடியும்  எடிட்டிங் கத்துக்கிட்டு சர்டிஃபைட் ‘எஃப்சிபி’ எடிட்டரா ஆகியிருக்கேன். இதுக்கு காரணம் ராம்கிதான்.நிறைய டிவி தொடர்களை  தயாரிச்சிருக்கேன். டைரக்‌ஷன் ஐடியா இருக்கு. ஸ்கிரிப்ட் ஒர்க்குக்கு ராம்கி உதவறார். வெப்சீரீஸ் தயாரிக்கறேன். ஆனா, சினிமா ஒரு  கடல். நான் கத்துக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு!’’ அடக்கத்துடன் சொல்லும் நிரோஷா, தெலுங்கு ,கன்னடப் படங்களிலும்  இப்போது நடித்து வருகிறார்.  

-மை.பாரதிராஜா