கூச்ச சுபாவம் கொண்டவர் இயக்குநரான கதை!



தைரியம் தரும் சுமங்கலி இயக்குநர் ஏ.பி.ராஜேந்திரன்

மனம் நிறைய ஆசை. ஆனால், சினிமா கம்பெனிக்குள் சென்று வாய்ப்பு கேட்க பயம். கூச்சம். எனவே வெறுமனே கம்பெனி வாசலில் நாள் முழுக்க அமைதியாக நின்ற ஒருவர் இன்று சின்னத்திரையில் சக்சஸ்ஃபுல் சீரியல் இயக்குநராக இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?
சன் டி.வி.யில் நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் மெகா தொடரான ‘சுமங்கலி’யின் இயக்குநர் ஏ.பி.ராஜேந்திரன்தான் அவர்.

‘‘சீரியல்களை பொறுத்தவரை எப்பவும் கதைதான் ஹீரோ. இயக்குநரோ, நடிகரோ அவங்கள்லாம் அதுக்கு பிறகுதான். காட்சிகள்ல புதுசா தினுசா ஏதாவது ஒரு விஷயம் இருந்தாபோதும். ஜெயிச்சுடும். ‘கல்யாணபரிசு’ தொடரை முதல் எபிசோடிலிருந்து ஆயிரத்து நூறாவது எபிசோடு வரை இயக்கினேன். அப்ப புதுமுயற்சிகள் நிறைய பண்ணினோம்.

ஹெலிகேம் கேமரால ஷூட் செய்யப்பட்ட முதல் சீரியல்னு அதை பாராட்டினாங்க. ஏற்காடு, ஏலகிரி, பெங்களூருனு அவுட்டோர்ல அதிக நாட்கள் ஷூட் நடந்தது. என் தொடர்கள்ல கண்டிப்பா ஏதாவது வித்தியாசமா புதுமையா இருக்கும்...’’ அடக்கமாக சொல்லும் ராஜேந்திரன் சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வந்தவர்.

‘‘சொந்த ஊர் புதுக்கோட்டை பக்கம் மறமடக்கி கிராமம். எங்க குடும்பம் கொஞ்சம் பெருசு. அப்பா பொன்னுசாமி, விவசாயி. எனக்கு கருப்பாயி, அன்னக்கொடினு இரண்டு அம்மாக்கள். ரெண்டு பேருமே அக்கா, தங்கைங்க. என் ரெண்டு அம்மாக்களுக்கும் சேர்த்து என் கூடப் பொறந்தவங்க ரெண்டு அண்ணன்கள், ரெண்டு அக்காக்கள், ரெண்டு தங்கச்சிங்கனு ஆறுபேர்.

எங்கப்பா மிகப்பெரிய சினிமா ரசிகர். படங்களை ரசிச்சுப் பார்ப்பார். நான் பொறந்தப்ப கூட அவர் தியேட்டர்ல படம் பார்த்துட்டுதான் வந்தாராம்! அதுவும் ‘இலட்சிய நடிகர்’ எஸ்.எஸ்.ராஜேந்திரன் படம்! அதனாலயே எனக்கு ராஜேந்திரன்னு பெயர் வைச்சார்...’’ புன்னகைக்கும் ராஜேந்திரன், நாள்தோறும் தன் ஊர் டூரிங் டாக்கீஸில் ஈவினிங் ஷோ, நைட் ஷோ என இரண்டையும் பார்த்துவிடுவாராம்!

‘‘இப்படி இருந்தா எப்படி ? படிப்பு எப்படி மண்டைல ஏறும்? நடிக்கிற ஆசைல சென்னைக்கு வந்துட்டேன். இயல்பாவே நான் கூச்ச சுபாவி. அதனால வாய்ப்புதேடி சினிமா கம்பெனிகளுக்கு போனாலும் வாசல்லயே நின்னுடுவேன். உள்ள போகவும், அங்கிருந்தவங்ககிட்ட பேசவும் தயங்குவேன். காம்பவுண்ட்டையே சுத்திச்சுத்தி வருவேன்.

அப்ப ஆர்ட் டிபார்ட்மென்ட்ல ஓர்க் பண்ற என்.டி.சி.சரவணன் நண்பரானார். என் ஆர்வத்தை புரிஞ்சுகிட்டு ஆர்ட் அசிஸ்டென்ட்டா சேர்த்துவிட்டார். ரமேஷ் கண்ணா சாரும் விவேக் சாரும் நடிச்ச ‘சூப்பர் ஸ்டோர்ஸ்’ சீரியல்ல வேலை பார்த்தேன். அப்புறம் சிவகுமார் சார் நடிச்ச ‘நீதிமான்’ சீரியல்.ஒரு கட்டத்துல ஆர்ட் டைரக்டர் ஆகிடுவோமோனு பயம் வந்தது.

உடனே சின்னத்திரை இயக்குநர் ராஜிவ்பிரசாத் கிட்ட அசிஸ்டென்ட்டா சேர்ந்தேன். கூடவே சினிமா முயற்சிலயும் இறங்கினேன். அதனோட ஒரு பகுதியா நெப்போலியன் சார் நடிச்ச ‘பகவத் சிங்’ பட கம்பெனில ஆபீஸ் பாயாகவும் அந்தப் படத்துல உதவி இயக்குநராகவும் வேலை பார்த்தேன். இந்த ஆபீஸ் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் வீட்டுலயே இருந்ததால... சென்டிமெண்ட்டா நெகிழ்ந்துட்டேன்!

இந்தப் படத்துல நடிச்ச ரமேஷ் கண்ணா சார் கூட ஏற்கனவே அறிமுகம் இருந்ததால அவர் இயக்கின ‘தொடரும்’ படத்துல வேலை பார்க்கிற வாய்ப்பு கிடைச்சது!’’ என சுருக்கமாக தன் ஃப்ளாஷ்பேக்கை சொல்லும் ராஜேந்திரன், கே.பாலசந்தரை நினைத்து நெகிழ்கிறார்.

‘‘மின்பிம்பங்கள் தயாரிப்புல அவர் கதை எழுதின ‘றெக்கை கட்டிய மனசு’ சீரியலை இயக்கினேன். அந்த ஸ்கிரிப்டுல பிங்க் கலர்ல கே.பி. சார் சில விஷயங்களை எழுதியிருப்பார். கூடவே, ‘இது என் சஜஷன்ஸ். மத்தபடி இயக்குநர் என்ன விரும்பறாரோ அப்படியே ஷூட் பண்ணட்டும்’னு குறிப்பிட்டிருப்பார்!

எப்பேர்பட்ட ஜீனியஸ்! ஆனாலும் சின்ன இயக்குநரையும் அவர் மரியாதையோடு நடத்தின அந்தக் குணம் என்னைக் கவர்ந்தது. அதேமாதிரி என்னைப் பார்க்க விரும்பறப்பவும், ‘டைரக்டர் ஃப்ரீயா இருக்கிறப்ப என்னை வந்து பார்க்கச் சொல்லுங்க’னுதான் சொல்வார்!

அங்க ‘றெக்கை கட்டிய மனசு’க்கு பிறகு ‘இது ஒரு காதல்கதை’ இயக்கினேன். அப்புறம் ராதிகா மேம் நடிப்புல சமுத்திரகனி சார் இயக்கின ‘செல்வி’, ‘அரசி’ சீரியல்களுக்கு செகண்ட் யூனிட் டைரக்டரா ஓர்க் பண்ணினேன். என் வேலையைப் பார்த்துட்டு ராடன்ல ‘சூரியவம்சம்’ தொடர் இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தாங்க.

இந்த நேரத்துலதான் எனக்கு கல்யாணமாச்சு. அரேஞ்சுடு மேரேஜ். எங்க கிராமத்துக்கு பக்கத்து ஊர் பொண்ணு. மனைவி பேரு சுதா. சீரியல் நாலேஜ் அவங்களுக்கு அதிகம். ஒரு சீரியலை பார்க்கும்போதே கதை எப்படி நகரும்... அதன் க்ளைமாக்ஸ் எப்படி இருக்கும்னு சொல்லிடுவாங்க!

தொடர்ந்து ‘காதலிக்க நேரமில்லை’, ‘கல்யாண பரிசு’ தொடர்களை இயக்கிட்டு இப்ப ‘சுமங்கலி’ இயக்கறேன். நல்ல ரெஸ்பான்ஸ். சந்தோஷமா இருக்கேன்...’’ நிறைவுடன் சொல்லும் ராஜேந்திரன், பெரியதிரையில் கால் பதிக்க தயாராகிறார்.

‘‘நாலஞ்சு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு இருக்கேன். சீரியல்ல பெயர் வாங்கின மாதிரியே சினிமாலயும் நல்ல இயக்குநர்னு பேரு வாங்கணும்...’’ கனவுடன் சொல்லும் ராஜேந்திரனுக்கு ஹர்ஷினி, யோஷினி என இரு மகள்கள் இருக்கிறார்கள். ‘‘மகிழ்ச்சியா இருக்கேன்..!’’ ஆத்மார்த்தமாக சொல்கிறார்!                       
 
மை.பாரதிராஜா

ஆ.வின்சென்ட் பால்