கர்நாடிக் மியூஸிக்தான் என் இதயம்!



அழுத்தமாகச் சொல்கிறார் ‘தள்ளிப்போகாதே...’ புகழ் சித் ஸ்ரீராம்

‘இன்கே இன்கே கவாலி...’, ‘மறுவார்த்தை பேசாதே...’ என்று அண்மைக் காலமாக அவர் பாடுவதெல்லாம் அடுத்த நிமிடமே ‘வைரலாகி’ இளசுகள் மத்தியில் பரபரப்பாகி விடுகிறது!பாடகர் சித் ஸ்ரீராம், சமீப காலத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் மூலம் கோடம்பாக்கத்திற்கு கிடைத்த இனிமையான வரவு. இன்னொரு புறம் கர்நாடக சங்கீத சபாக்கள் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் சூறாவளி. சென்னை மயிலாப்பூர் ஹோட்டலில் அவரைச் சந்தித்தோம். ஆங்கில வேகத்துக்கு தமிழ் தடுமாறியது என்றாலும் முடிந்தவரை தாய் மொழியிலேயே பேசினார்!

திடீரென்று பெரிய பெயர், புகழ்... எப்படியிருக்கிறது இந்த உணர்வு?  சந்தோஷம்தான். எனக்கு மேடை மேல் எப்பவுமே ஒரு காதல் உண்டு. மூணு வயசுல பாட ஆரம்பிச்சு நாலு வயசுல மேடை ஏறிட்டேன். பாடகராகணும்கிறது என் சின்ன வயசு கனவு. இப்ப ஒண்ணு ஒண்ணா நிறைவேறுது. 2012ம் வருஷம் ‘கடல்’ படத்தில் வரும் ‘அடியே...’ எனக்கு முதல் பிரேக் தந்தது. 2015ல் ‘தள்ளிப்போகாதே...’ அடுத்த பிரேக் கொடுத்தது. வரிசையா பாடல்கள் ஹிட்டானது தெய்வ அருள்.

சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்று ஆசைப்பட்டாலும், கர்நாடிக் மியூஸிக்தான் என் இதயம். அந்த மேடைகளில் ஏறும்போதெல்லாம் மனசு பூரிப்பாகும். அதுவே என்னை மேலும் மேலும் செதுக்கும். புதுப்பிக்கும்.முன்பெல்லாம் இளம் வயதில் சென்னை வந்து சபாக்களில் பாடுவேன். மக்கள் யாருமே இருக்கமாட்டார்கள். என் முதல் கர்நாடிக் கச்சேரி ‘ஹம்ஸத்வனி’ அமைப்புக்காக 2001ம் ஆண்டு நடந்தது. அப்ப என் வயசு 11. அதுக்கு முன்னாடி பத்து வயசு வரை என் அக்காவோட பாடியிருக்கேன்! டிசம்பர் சீசனில் கூட பாடியிருக்கேன்.

சென்னை மேடைகளில் பாட இவ்வளவு ஆர்வம் உள்ள நீங்கள் ஏன் அமெரிக்கா போனீர்கள்?

என் அப்பா ராமின் வேலை காரணமாகத்தான். அவர் பிஸினஸில் இருந்தார். அப்புறம் பேங்க் வேலைக்கு மாறினார். நான் 1990ம் வருஷம் பிறந்தேன். அடுத்த வருஷமே அப்பாவுக்கு டிரான்ஸ்பர் கிடைத்து குடும்பத்தோடு அமெரிக்கா போயிட்டோம். முதலில் நியூயார்க், அப்புறம் கலிஃபோர்னியா.

எங்கம்மா லதாவுக்கு கர்நாடிக்கில் நிரம்ப ஈடுபாடு உண்டு. வித்வான் எஸ்.ராஜத்திடம் முறைப்படி கற்றவர். எங்கள் தாத்தா ஆர்.ராஜகோபாலனே கர்நாடிக் வித்வான். அதனால அம்மா அமெரிக்காவில் கர்நாடிக் பள்ளி ஆரம்பிச்சார். அப்பா நான் இசை கற்கணும்னு விரும்பினார். அதனால் சீசனுக்கும், கோடைக்கும் சென்னை வரும்போதெல்லாம் தாத்தாவிடம் கற்றுக்கொண்டேன்.

அமெரிக்காவில் பத்தாவது படிக்கிறபோதே ‘இசையே என் வாழ்க்கை’ என்று முடிவு செய்துவிட்டேன். ஸ்கூல் முடிச்சவுடன் ‘பெர்க்கிலி காலேஜ் ஆஃப் மியூஸிக்’கில் சேர்ந்துவிட்டேன்.

மேற்கத்திய இசையையும் முறைப்படி கற்றீர்களா?

ஆர் ஆண்ட் பி எனப்படும் மேற்கத்திய இசை வகையில் எனக்கு ஈடுபாடு வந்து, அதை நானே, ரேடியோ, சிடி கேட்டு கற்றேன். தொடர்ந்து ஏழு வருடம் இதற்காக சற்று நேரம் ஒதுக்கிக் கொண்டு பயிற்சி செய்தேன். பர்க்கிலி கல்லூரியில் படிக்கிறபோதே கம்போஸிங் பண்ணுவேன். நொட்டேஷன், ஆங்கில பாட்டுக்களுக்கு வரி எழுதுவேன்.

இப்படி பல விஷயங்களை செய்தாலும், எம்.எஸ். அம்மா, மதுரை மணி அய்யர் மாதிரியெல்லாம் பாடணும் என்பதே அம்மாவின் கனவாக இருந்தது. எனக்கும் அப்படி ஒரு வெறி வந்தது. கர்நாடிக் பாடறபோது ஏற்படற திருப்தி, மன நிம்மதி வேறு எதிலும் வரவில்லை.

இன்று கர்நாடக சங்கீத மேடைகளில் உங்களுக்கு வரும் கூட்டம், உங்கள் சினிமா பாட்டுக்களை கேட்டு வரும் கூட்டம். உங்களது கல்யாணியையும் காம்போதியையும் கேட்டு லயித்துப் போய் வரும் கூட்டமில்லை என்கிறார்களே?

சொல்லட்டும்! ஆரம்பத்தில் அப்படி இருக்கலாம். ஆனால், அவர்களே திரும்பத் திரும்ப வருகிறார்கள் என்றால் என் கர்நாடிக் மியூஸிக்கில் லயித்துதானே வருகிறார்கள்?! இரண்டரை மணி நேரம் உட்காருகிறார்களே... அதையும் கவனிக்க வேண்டும்.

நீங்கள் பாரம்பரிய இசையை பாடறபோது அது சற்று மேற்கத்திய பாதிப்பில் உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளதே?

ஒப்புக்கொள்ளவே மாட்டேன். என் ஸ்டைல் புதுசா இருப்பதால் அப்படித்தோன்றலாம். அது அல்ல உண்மை. பரிசுத்தமான கர்நாடிக் மியூஸிக்கை தரவே ஒவ்வொரு கச்சேரியிலும் முயல்கிறேன்! இந்த இசையில் என் பயணம் என்பது கர்நாடிக் மியூஸிக்கில் உள்ள ஆழத்தை கொண்டு வர வேண்டும் என்பதுதான். அதற்காக மேலும் மேலும் தொடர்ந்து முயற்சிக்கிறேன்.

தனிப்பட்ட முறையில் நிறைய ஆல்பங்கள் வெளியிட்டிருக்கிறீர்களாமே..?

ஆமாம் 2010ம் வருஷத்திலிருந்து ரிலீஸ் செய்கிறேன். மியூஸிக் கம்போஸ் பண்ணுவது தவிர, பாட்டு வரிகளையும் ஆங்கிலத்தில் எழுதறேன். 2019, பிப்ரவரியில் முழு நீள ஆல்பம் ஒன்றை சர்வதேச அளவில் வெளியிடறேன். அதில் எல்லாவிதமான பரிட்சார்த்த முயற்சிகளையும் செய்வேன்.
நீங்களும் தமிழ்ப் படங்களுக்கு இசையமைக்கலாமே?

எதிர்காலத்தில் செய்யலாம். இப்போ என் சிந்தனை எல்லாம் கர்நாடிக் மியூஸிக் மேடை, தனிப்பட்ட ஆல்பம், சினிமாவில் பாடுவது... இந்த மூன்றும்தான். நேரம் வரட்டும். எதையும் தீர யோசித்து செய்ய வேண்டும் என நினைப்பவன் நான்.கர்நாடக சங்கீதத்தில் இப்போதுள்ளவர்களில் நீங்கள் யாருடைய ரசிகர்?

டி.வி.சங்கர நாராயணன், அருணா சாய்ராம், சஞ்சய் சுப்ரமணியம், டி.எம்.கிருஷ்ணா. இவர்கள் ஒவ்வொருவருமே ரொம்ப வித்தியாசமான ஸ்டைல் வைத்துள்ளார்கள். பழைய பாடகர்களில் மதுரைமணி அய்யர், செம்மங்குடி, எம்.எஸ். அப்புறம் மதுரை சோமு! சங்கீதத்தை ரொம்ப உருக்கமா பாடி ரசிகர்களை உணர்வுப் பூர்வமா தன்னோட கொண்டு போகிற சாமர்த்தியம் சோமுவுக்கு உண்டு! அவரது ராக ஆலாபனைகளை திரும்பத் திரும்ப கேட்கிறேன்! வேற உலகத்திற்கு நம்மை அழைத்துப் போகிறார்! அந்த ஈர்ப்பால்தான் அவர் பிரபலப்படுத்திய ‘என்ன கவி பாடினாலும்...’ பாடலை சபாக்களில் பாடறேன்.

ரஹ்மானிடம் உங்களுக்கு பெரிய ஈடுபாடு உண்டு என்கிறார்களே..?

ஆமாம். எனக்கு குரு மாதிரிதான்! இசையை நாம் எப்படி அணுகவேண்டும் என்று அழகா சொல்லித் தயந்துள்ளார். நிறைய அறிவுரைகள் சொல்லியிருக்கிறார். அவர் எப்பவுமே புதுமைகள் செய்ய தங்காதவர். புதுப்புது ட்ரெண்ட்களை உருவாக்குவார். அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். சினிமா பாடல் மட்டுமல்ல... கர்நாடக சங்கீத நுணுக்கங்கள் கூட! சமயத்தில் ஜாலியாகவும் பேசுவார்! என் இசை வாழ்க்கையை பொறுத்தவரை அவருக்கு நான் நிறைய கடமைப் பட்டுள்ளேன்.

இளையராஜாவை சந்தித்தீர்களாமே?

ஓரிரு தடவை சந்தித்திருக்கிறேன். அவருக்கு இன்னும் பாடவில்லை. உண்மையில் அவர் என்னிடம் பேசவே இல்லை. பாடச் சொன்னார். முத்து சுவாமி தீட்சதரின் சுப பந்துவராளிராக கீர்த்தனையான ‘ஸ்ரீ சத்ய நாராயணம்...’ பாடினேன். சிரித்தார். அவ்வளவுதான்.

எப்போது கல்யாணம்?

முடிவு பண்ணலை. அதற்கான மனபலம் இப்போது இல்லை. இரண்டு வருஷம் கழிச்சு வரலாம். ஆனால், ஒன்று. அவள் கர்நாடிக் மியூஸிக்கை நேசிக்கும் பெண்ணாக இருக்கவேண்டும். நம்மூர் பெண்ணாக இருக்க வேண்டும்!

வி.சந்திரசேகரன்

ஆ.வின்சென்ட் பால்