எதிர்காலத்தில் நாம் என்னவாக வேண்டும் என்பதை ஃபேஸ்புக்தான் தீர்மானிக்கிறது!



மார்ச் 14, 2014 அன்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க், கோபமாக ஒரு பதிவைத் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதினார்.பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்தது அப்போதுதான்.

‘இன்டர்நெட் என்பது அனைவருக்குமானது. அந்த இணையத்தில் பாதுகாப்பாக எங்களைப் போன்றவர்கள் சமூக வலைத்தளங்களை நடத்த சிரமப்படுகிறோம். எங்கள் நிறுவன கணினி பொறியாளர்கள் அரும்பாடுபடுகிறார்கள். கணினி பாதுகாப்பு நிபுணர்கள் அல்லும் பகலும் உழைத்து ஃபேஸ்புக்கைப் பாதுகாப்பான ஓர் இடமாக மாற்ற முனைகிறார்கள்.  

ஆனால், அமெரிக்க அரசு ஒவ்வொரு முறையும் இதைப் புரிந்துகொள்ளாமல் ஃபேஸ்புக் நிறுவனத்தை இக்கட்டான சூழலில் தள்ளிவிடுகிறது. தொடர்ச்சியாக வரும் பத்திரிகைச் செய்திகள் என்னை வெறுப்படையச் செய்கிறது.  ஒவ்வொரு செய்தியிலும் அரசாங்க கணினி உளவாளிகள் ஃபேஸ்புக்கைத் தவறாகப் பயன்படுத்தி மக்களை உளவு பார்ப்பதாகத் தகவல்கள் வெளியாகிறது.

இதை அமெரிக்க அரசு தடுத்து நிறுத்த வேண்டும்...’- இப்படி நேரடியாகவே அமெரிக்க அரசைக் கண்டித்து மார்க் ஜூகர்பெர்க் எழுதியிருந்தார். காரணம், ‘தி இன்டர்ஸெப்ட்’ என்னும் இணைய நாளிதழில் வந்த ஒரு செய்தி!  அப்படி என்ன செய்தி என்
கிறீர்களா?

வேறொன்றுமில்லை. அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஏஜென்சி (NSA), புதிதாக ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. இந்தத் திட்டத்தின் பெயர் QUANTUMHAND.  அதாவது சந்தேகத்துக்குரிய மக்களின் கணினியில் ஒரு ‘மால்வேர்’ இன்ஸ்டால் செய்யப்படும். இந்தப் பணியை NSA உருவாக்கியிருக்கும் ‘டர்பைன்’ என்னும் கணினி மென்பொருள் ரோபோ பார்த்துக்கொள்ளும்!

இந்த மால்வேர் ஒருவரின் கணினியில் இன்ஸ்டால் செய்யப்பட்டால், அந்தக் குறிப்பிட்ட நபருக்குத் தெரியாமல் அவர் கணினியில் இருக்கும் அனைத்துத் தகவல்களையும் NSA கணினிக்கு அனுப்பி வைத்துவிடும்!இந்த இடத்தில் மால்வேர் என்றால் என்ன என்ற கேள்வி எழும்.சிம்பிள். திட்டமிட்டுத் தவறான வழிகளில் பயன்படுத்தப்படும் சிறப்பு கணினி நிரல்கள்தான் மால்வேர்.

இதை ஒரு குட்டி ஆப் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். இந்த மால்வேர் நம் கணினி அல்லது ஸ்மார்ட் போனில் இருப்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில் அவை மறைக்கப்பட்ட நிரல்களாக இருக்கின்றன. நம் கணினியில் உள்ள தகவல்களைத் திருடவோ அல்லது கணினியில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்களை முடக்கவோ அவை பயன்படுத்தப்படுகின்றன.

இந்த மால்வேர்கள் மிகவும் சிறிய ஃபைல்கள். இவை நம் மின்னஞ்சலில் ஒரு சின்ன புகைப்படத்தில் கூட வரலாம். அதாவது எந்த வடிவில் வேண்டுமானாலும் நம் கணினி அல்லது ஸ்மார்ட் ஃபோனில் இன்ஸ்டால் செய்யப்படலாம். மின்னஞ்சல், பாடல், படம், புகைப்படம், மின் ஆவணங்கள்... என எந்த உருவிலும் புகுந்துவிடலாம்.

அவ்வளவு ஏன், பல நேரங்களில் மிகச் சிறப்பான antivirus மென்பொருட்களால் கூட சில மால்வேர்களைக் கண்டுபிடிக்க முடியாது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!இதைத்தான் அமெரிக்காவின் உளவுப் பிரிவு பயன்படுத்துகிறது. குவாண்டம் ஹேண்ட், திட்டத்தின்படி சந்தேகத்துக்குரிய மக்கள், அதாவது போராளிகள், இயற்கை ஆதரவாளர்கள், பத்திரிகையாளர்கள், களப்பணியாளர்கள், அரசு ஊழியர்கள்... இத்யாதி இத்யாதி... சுருக்கமாக சந்தேகப்படும் நபரின் கணினி அல்லது ஸ்மார்ட் போனில் அவர்களது அந்தரங்கங்களைத் திருடும் மால்வேர் ஒன்றை இன்ஸ்டால் செய்கிறார்கள்.

சரி... யார் யார் சந்தேகப்படும் நபர்..? இதை அவர்கள் எந்தப் பதிவு அல்லது பாடல் அல்லது புகைப்படத்துக்கு லைக் செய்கிறார்கள்... என்ன மாதிரியான பதிவுகளை எழுதுகிறார்கள் என்பதை வைத்து ஃபேஸ்புக் அல்காரிதம் தரம் பிரிக்கிறதல்லவா... இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்கள்!

இப்படி அமெரிக்க உளவு நிறுவனம் ஒன்றல்ல இரண்டல்ல... பல லட்சம் ஃபேஸ்புக் பயனாளிகளை சந்தேகப்படுகிறது!ஒரே நேரத்தில் இவர்கள் அனைவரது கணினி அல்லது ஸ்மார்ட் போனில் மால்வேரை புகுத்த ஒரு appஐ உருவாக்கியிருக்கிறார்கள். அதுதான் ‘டர்பைன்’ (Turbin)!இந்த ஆப் வழியே ஒரே நேரத்தில் 60 ஆயிரம் கணினி அல்லது ஸ்மார்ட் போனில் மால்ேவரை இன்ஸ்டால் செய்ய முடியும்! இதன் பிறகு தனக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்டை அந்த மால்வேர் பார்த்துக் கொள்ளும்!

ஒருவேளை பயனாளிகளின் ஆன்டி வைரஸ், அந்த மால்ேவரை நீக்கிவிட்டால் மீண்டும் அதை வேறொரு வடிவில் இன்ஸ்டால் செய்யும் பொறுப்பையும் டர்பைன்  பார்த்துக்கொள்ளும்!ரைட். அமெரிக்க உளவு நிறுவனம் எல்லா சமூகவலைத்தளங்களிலும்தானே இதைச் செய்கிறது..? இதற்கு குறிப்பாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் ஏன் கோபப்பட வேண்டும்?

காரணம், 99% ஃபேஸ்புக் வழியாக இந்த மென்பொருள் அவரவர் கணினி அல்லது ஸ்மார்ட் போனில் இன்ஸ்டால் செய்யப்படுவதால்தான்!அதாவது கண்காணிக்க தேர்வு செய்யப்பட்ட மக்கள் எப்போது தங்கள் ஃபேஸ்புக் பக்கத்துக்கு நுழைந்தாலும் உடனே டர்ைபன் மென்
பொருள் அவர்களை NSA உருவாக்கி வைத்திருக்கும் ஃபேஸ்புக் சர்வருக்கு அழைத்து வந்துவிடும்! இது பயனாளிக்குத் தெரியவே தெரியாது!இதன் பிறகு சில மைக்ரோ செகண்ட்ஸ் போதும். காதும் காதும் வைத்தது போல் மால்ேவரை இன்ஸ்டால் செய்துவிடும்! பிறகு ஃபேஸ்புக் சர்வருக்கு அவரை அழைத்து வந்து விட்டுவிடும்!  

இதைத்தான் ‘தி இன்டர்ஸெப்ட்’ மின்னிதழின் நிருபர் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். ஒவ்வொருமுறையும் அமெரிக்க அரசு தன் ஃபேஸ்புக் நிறுவனத்தைத் தவறாகப் பயன்படுத்துவதும், அதைப் பற்றிய செய்திகள் வந்து தன் நிறுவனத்தின் பெயர் மக்கள் மத்தியில் கெட்டுப் போவதும் மார்க் ஜூகர்பெர்க்கை அதிகம் கோபம் கொள்ளச் செய்தது. அதன் வெளிப்பாடுதான் ஆரம்பத்தில் நாம் சொன்ன - அவர் பதித்த - ஸ்டேட்டஸ்!

ரைட். அவரது சந்தைப் பிரச்னையை அவர் பார்த்துக் கொள்வார். நமக்கு இதில் என்ன செய்தி இருக்கிறது..? எங்கோ அமெரிக்காவில் ஓர் அரசு உளவு நிறுவனம் செய்தவற்றைப் பற்றி இந்தியாவில் இருக்கும் நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?

அடிப்படையான ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்வது நல்லது.அமெரிக்காவைப் பொறுத்தவரை உளவு சம்பந்தமான கருவிகள் மற்றும் மென்பொருட்களை அவர்கள் உருவாக்குவது அவர்களது தேவைக்காக மட்டுமல்ல! அதில் கணிசமானவற்றை தங்கள் நட்பு நாடுகளுக்கு உதவுவதற்காகவும் பணம் பெற்றுக்கொண்டு விற்கும் வணிகமாகவும் செய்கிறார்கள்!

ஆக, இந்திய அரசும் இந்த மால்ேவரை அவர்களிடம் இருந்து பெற்று நம்மைக் கண்காணிக்கலாம்! இப்படி நடக்காது என்று சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. ஏற்கனவே நமது ஆதார் கார்டு விவரங்கள் சுண்டல் போல் பலருக்கு விற்பனை செய்யப்பட்டதை இந்த இடத்தில் நாம் நினைவில் கொள்வது நல்லது!

அதனால்தான் இந்த எச்சரிக்கை மணி!

இறுதியாக ஒன்று. இதையும் அறிந்து கொண்டால் உளவு... கண்காணிப்பு... மால்ேவர் ஆகியவை இன்னும் சுலபமாகப் புரியும்.இதை அடிப்படையான ஒரு தகவலில் இருந்து ஆரம்பிக்கலாம்.

இலவசமாக நமக்கு வழங்கப்படுவதாக நாம் நினைக்கும் ஃபேஸ்புக்குக்கு எங்கிருந்து வருமானம் கிடைக்கிறது..? பெரும்பாலும் விளம்பரங்களில் இருந்து! உடனே பத்திரிகை அல்லது டிவியில் வரும் விளம்பரங்கள் போல என நினைக்க வேண்டாம். அவற்றில் வெளிவருவது பொதுவான விளம்பரம். பல லட்சம் பேருக்கு ஒரே நேரத்தில் சென்றடைவது.

ஃபேஸ்புக் விளம்பரங்கள் அப்படியல்ல. இது மேம்படுத்தப்பட்ட ஒரு வடிவம். லட்சக்கணக்கானவர்களுக்கு ஒரே நேரத்தில் காட்டாமல் யாருக்கு எது தேவையோ அவர்களுக்கு மட்டும் அப்பொருளைத் திட்டமிட்டுக் காட்டுவது! இதைத்தான் மைக்ரோ டார்கெட்டிங் என்கிறார்கள்.

இதற்காக - யாருக்கு என்ன தேவை என்பதைக் கண்டுபிடிக்க - ஃபேஸ்புக்கின் வல்லுனர் குழு பலவிதமான அல்காரிதங்களை உருவாக்குகிறது. இதன் அடிப்படையிலேயே செயல்படுகிறது.

மட்டுமல்ல... எதிர்காலத்தில் ஃபேஸ்புக் பயனாளிகள் என்ன மாதிரியாக ஆகவேண்டும் என்பதையும் ‘தொலைநோக்கு’ பார்வையுடன் காய் நகர்த்துகிறார்கள். அதாவது, அவர்களது ரோபோக்களாக ஃபேஸ்புக் பயனாளிகளை மாற்றுவதற்கான அட்வான்ஸ்ட் வெர்ஷன் அல்காரிதங்கள் வந்துவிட்டன.

இதை வைத்துதான் உணர்வுத் தொற்றை ஏற்படுத்துகிறார்கள்; என்ன பொருளை நாம் வாங்க வேண்டும் என முடிவு செய்ய வைக்கிறார்கள்; எந்த கட்சி அல்லது அமைப்புக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதையும் நமக்கு சுட்டிக் காட்டுகிறார்கள்! மால்ேவரை இன்ஸ்டால் செய்து அமெரிக்க அரசின் உளவுத்துறை இதன் வழியாகத்தான் நம் உள்ளத்துடன் சடுகுடு ஆடுகிறது. தனது கைப்பாவையாக நம்மை மாற்றுகிறது!

வினோத் ஆறுமுகம்