கரப்பானுக்குக் காதலி பெயர்!



எப்படி காதல் ‘ஒரு ஃபீலிங் மச்சி’யோ அப்படி பிரேக் அப்பும் ஓர் உணர்வுதான்.என்ன... ‘தென்றலே மெல்ல வீசு...’ என்று சொன்ன அதே வாய் ‘அடிடா அவளை வெட்றா அவளை...’ என சோக கீதம் பாடும்! பாடினால் கூட தொலைகிறது எனலாம். சில இடங்களில் ஆளையே காலி செய்வதுதான் பகீர்.ஆக, காதல் அழகான ஆபத்தாகவும் இருக்கிறது.

இதை மனதில் வைத்துதான் அமெரிக்காவின் ஹெம்ஸ்லே விலங்குகள் பாதுகாப்பு மையம் இந்த காதலர் தினத்திற்கு ஒரு ஜாலியான பழிவாங்கும் ஐடியாவுடன் களமிறங்கியுள்ளது!அதாவது, அங்கே இருக்கும் ஒரு கரப்பான் பூச்சிக்கு உங்களுடைய முன்னாள் காதலி அல்லது காதலனின் பெயரைச் சூட்டலாம்! அல்லது உங்கள் தோழன், தோழியின் காதலுக்கு நீங்கள் ஆறுதல் சொல்லும் விதமாக அவர்களது முன்னாள் காதலர் / காதலியின் பெயரை வைக்கலாம்!

இதற்கு அந்த மையம்  நம்மிடம் இருந்து ஒன்றரை டாலர்களை கட்டணமாகப் பெறுகிறது. இந்திய மதிப்பில் 110 ரூபாய்!ஒரு கரப்பான்பூச்சியை தத்தெடுக்கச் சொல்லி அறிவிப்பு கொடுத்தால் வாய்விட்டுச் சிரிப்போம். அதுவே இப்படி எனில் போட்டி போட்டுக்கொண்டு பணத்தை வாரி வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில் இந்த ஐடியாவை அமல்படுத்துகிறது ஹெம்ஸ்லே விலங்குகள் பாதுகாப்பு மையம்.


ரைட். என்ன செய்ய வேண்டும்?

உலகின் எந்த மூலையில் இருப்பினும் சரி www.hemsleyconservationcentre.com என்னும் அந்த மையத்தின் அதிகாரபூர்வ தளத்தில் நுழைந்து ‘கரப்பான்பூச்சி காதலர்தினமா?’ (Cockroach Valentine’s?) என்று இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்தால் அதில் விவரங்கள் இருக்கும்.

‘Add to Cart’ என அழுத்தினால் பணம் செலுத்தும் பக்கத்திற்கு செல்லும். அங்கே ‘Add Note’என்னும் ஆப்ஷனை அழுத்தி உங்கள் முன்னாள் காதலன் அல்லது காதலியின் பெயரை டைப் அடித்து விட்டு செக் அவுட் கொடுத்தால் போதும்... உங்கள் பில்லிங் முகவரி, பெயர் அனைத்தும் கேட்டு இன்னொரு பக்கம் வரும்.

இதில் விவரங்களை நிரப்பி ஓகே கொடுங்கள். உங்களுக்கான கரப்பான் பூச்சி அலாட் செய்யப்பட்டு அதற்கு பெயர் சூட்டப்பட்ட சான்றிதழ் வீடு தேடி வந்துவிடும்! மின்னஞ்சலிலும் சான்றிதழின் ஒரு பிரதி ‘உள்ளேன் ஐயா’ என கண்சிமிட்டும்!

இதே பாணியில் அமெரிக்காவின் பிரான்க்ஸ் மையமும் ‘Name a Roach’ என்னும் பெயரில் இந்த ஜாலி பழிக்குப்பழியைத் தொடங்கியிருக்கிறது!என்ன... ஏகப்பட்ட முன்னாள் காதலர் / காதலிகள் இருந்தால்... ஒவ்வொருவருக்கும் ஒரு கரப்பான்பூச்சியைத் தேர்வு செய்தால்... ஆஃபர் கிடைக்காது! தனித்தனியாகத்தான் பில்கட்ட வேண்டும்!    
           
ஷாலினி நியூட்டன்