காதலை அன்பு என்றும் சொல்லலாம்!



கார்த்தி கலகல

‘‘வேலன்டைன்ஸ் டேல என் படம் ரிலீசாவது இதுதான் முதல்முறைனு நினைக்கறேன். கலர்ஃபுல்லான ஒரு காதலும் ‘தேவ்’ல இருக்கறதால பொருத்தமான தினத்துலதான் வெளியாகுது.காதல் என்பது ஒரு பெண்ணையோ ஆணையோ மட்டும் நேசிப்பதல்ல. அதையும் தாண்டி நிறைய விஷயங்கள் இருக்கு!

இதுல நான் பயணங்களின் காதலன்! நான் மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படிக்கற காலத்துலதான் ‘காதலர் தினம்’ நம்ம ஊர்லயும் ஃபேமஸாகுது. புது விஷயமா பார்த்தாங்க. காதலர்கள் ஏதோ அன்னிக்கு ஒருநாள் மட்டும் லவ்வை கொண்டாடினா போதும் என்பது மாதிரி ஃபீல் கிரியேட்டாச்சு.இப்ப உள்ள யூத்ஸ் தெளிவா இருக்காங்க.

லவ்னா அதுல அன்பும் நம்மை நேசிப்பவர்களின் அக்கறையும் சேர்ந்திருக்குனு புரிஞ்சிருக்காங்க. ஃபாரீன்ல ‘ஃபாதர்ஸ் டே’, ‘மதர்ஸ் டே’னு ஒவ்வொன்றையும் தனித்தனியா குறிப்பிட்டு ஒரு நாளை கொண்டாடறாங்க.

அங்க பெத்தவங்களும் பிள்ளைகளும் தனித்தனியா இருக்கறதால இப்படிப்பட்ட தினங்கள் தேவைப்படுது. இந்த லாஜிக் நம்ம ஊருக்கு பொருந்தாது. அதே மாதிரிதான் காதலர் தினமும்!சின்ஸியரா அன்பு காட்டுறவங்களுக்கு எல்லா நாளும் லவ்வர்ஸ் டேதான்! சிலர் வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷலா தங்கள் மனைவிக்கு ஸ்பெஷல் கிஃப்ட் கொடுத்து அசத்துவாங்க.

ஆக்சுவலா ஒவ்வொருத்தருக்கும் அவங்கங்க பர்த்டேதான் ஸ்பெஷல்! எனக்கு என் மனைவியின் பிறந்தநாள்தான் ஸ்பெஷல் டே! அன்னிக்கு அவங்களுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்து அசத்திடுவேன்...’’ஃப்ரெண்ட்லியாக பேசுகிறார் கார்த்தி. ‘தீரன் அதிகாரம் ஒன்று’க்கு பிறகு மீண்டும் ரகுல் ப்ரீத்சிங்குடன் ‘தேவ்’ ஆக ஜோடி போட்டு வருகிறார்.யார் இந்த ‘தேவ்’..?

ட்ராவல் லவ்வர். அட்வென்ச்சர் ப்ரியன். ஸ்போர்ட்ஸ் காதலன். இப்படி நிறைய சொல்லலாம். ‘பையா’வுக்குப் பிறகு இளமையும் இனிமையுமா ஆழமான காதல் கதை வந்துச்சு.இப்ப இருக்கற யங்ஸ்டர்ஸுக்கு பிடிச்ச படமா ‘தேவ்’ இருக்கும். ‘கடைக்குட்டி சிங்கம்’ல கொஞ்சம் வெயிட் போட்டிருந்தேன். அதை முடிச்ச வேகத்துல இதுல வந்தேன். எடை குறைச்சு ஸ்டைலீஷ் லுக் கொண்டு வந்தேன்.

படத்துல ரேஸ் பைக் ரைடிங் பண்ணுவேன். நிறைய டிராவல் இருக்கு. அதுக்காகவே பிஎம்டபிள்யூ பைக் ஓட்ட கத்துக்கிட்டேன். ‘பையா’வுல ஒரு அழகான காதலும், ஒரு ரோடு டிராவலும் இருக்கும். அந்த ரெண்டும் இதுலயும் இருக்கு! ஆனா, அதைத்தாண்டி இந்தக் கதைல இருக்கிற ஃப்ரெஷ்னெஸ் உங்களை ஆச்சரியப்படுத்தும்.

கதையைக் கேட்டதுமே ஹாரிஸ் ஜெயராஜ் சார், ‘செம ஃப்ரெஷ்’னு உற்சாகமானார்! இந்த ஃபீல் படம் பார்க்கிற எல்லாருக்கும் கிடைக்கும்.
அடுத்தவங்களோட சுக துக்கங்களை அவங்களோட இடத்துல இருந்து பார்க்கறவன் தேவ். பொறுமையும் பக்குவமும் நிறைந்த பையன். ‘கடைக்குட்டி’ல பாண்டிராஜ் எப்படி அவரோட வாழ்க்கையை சொல்லியிருந்தாரோ... அதே போல இந்தப் படத்துல புது இயக்குநர் ரஜத் ரவிஷங்கர், தான் அனுபவிச்ச ஒரு லைஃபை சொல்லியிருக்கார்.

இந்தியா முழுக்க டூவீலர்லயே சுத்தி வந்தவர் அவர். ஸ்கிரிப்ட்ல பழமையும் புதுமையும் சரிவிகிதத்துல கலந்திருக்கார். ட்ரெயின்ல நீண்டதூரப்பயணமாகும்போது பெரிய அளவுல நிகழ்வுகள் இருக்காது. அதேநேரம் ரயில் சிநேகம் அந்தப் பயணத்தை இனிமையாக மாத்தியிருக்கும்.
அப்படிப்பட்ட இனிமையை ‘தேவ்’ கொடுக்கும். எனக்கு அப்பாவா பிரகாஷ்ராஜ் சார் நடிச்சிருக்கார். ‘தோழா’வுக்குப் பிறகு எங்க காம்பினேஷன் இதுலயும் பேசப்படும். ‘தீரனு’க்குப் பிறகு ரகுல் எனக்கு ஜோடி சேர்ந்திருக்காங்க.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் சார், என் லக்கி கேமராமேன் ஆகிட்டார். அவரும் நானும் ஒர்க் பண்ணின ‘சிறுத்தை’, ‘கொம்பன்’, ‘கடைக்குட்டிசிங்கம்’னு எல்லாமே செம ஹிட். இந்தப் பட ஷூட் முடிஞ்சதும், ‘புதுவிஷயங்கள் நிறைய கத்துக்கிட்ட மாதிரி இருக்கு’னு சந்தோஷப்பட்டார்.
இந்தப் படத்தோட தயாரிப்பாளர் லக்‌ஷ்மணும் நானும் முப்பது வருஷ நண்பர்கள். என் மேல அன்பும் அக்கறையும் உள்ளவர். எப்பவும் என்னைப் பத்தியே யோசிப்பவர். அவர் இந்தப் படத்தை தயாரிச்சது நிஜமாகவே சந்தோஷமா இருக்கு.

என்ன சொல்றாங்க ரகுல்..?பயங்கர பங்க்ச்சுவாலிட்டி பொண்ணு. இதுல அவங்க பிசினஸ் உமன். அமெரிக்கால இருந்து இங்க வர்றவங்க. கேரக்டருக்கு பொருத்தமா ரகுல் இருந்ததால ஃபிக்ஸ் பண்ணினோம்.இதுல அவங்க கேரக்டர் பேரு மேக்னா. ஒர்க்கஹாலிக் கேர்ள் ஆக கலக்கியிருக்காங்க. இதுல ரொம்ப சிரிச்சு பேசமாட்டாங்க. ‘தீரனை’விட இதுல லவ் போர்ஷன்ஸ் அதிகம். ரகுலின் அம்மாவா ரம்யா கிருஷ்ணன் நடிச்சிருக்காங்க.
பாலிடிக்ஸ்ல கலக்கறாரே பிரகாஷ்ராஜ்..?

தேவ்கிட்ட ‘உன் வாழ்க்கை உன் கையில். நீதான் உன் வாழ்க்கையை செதுக்கணும்... தீர்மானிக்கணும்’னு சொல்லி முழுச் சுதந்திரம் கொடுக்கற அப்பாவா நடிச்சிருக்கார். ஒருவகைல இதுதான் அவரோட ரியல் லைஃப். இயல்பாகவே அவர் நிறைய படிக்கறவர். ஸ்பாட்ல அரசியல் பத்தியும் பேச்சு திரும்பும்.

எங்கோ ஒரு பிரச்னை நடக்கிறப்ப பெருசா நமக்குக் கோபம் வராது. அதுவே நம்ம வீட்லனா யாரா இருந்தாலும் கோபம் கொப்பளிக்கும். பிரகாஷ்ராஜ் சார் கோபத்தையும் அப்படித்தான் பார்க்கறேன். பிரச்னையை சந்திச்சிருக்கார். போராடறார். மக்கள் மேல ரொம்பவும் அக்கறையா இருக்கார்.

குலுமணாலில ஏற்பட்ட நிலச்சரிவுல மாட்டிக்கிட்டீங்களாமே..?
ஆமா. கதைக்காக குலுமணாலி, குல்மார்க், பஞ்சகனி, இமாச்சல பிரதேசம், உக்ரைன்னு நிறைய இடங்களுக்கு போனோம். இதுல குலுமணாலி ஷூட் மறக்கவே முடியாதது. அங்க அழகிய மலை, பனிச்சரிவுல படம் பிடிக்கலாம்னு ப்ளான்.போனா... கனமழை, வெள்ளம், நிலச்சரிவுனு சிக்கிக்கிட்டோம். ஒரு பெரிய  பாலமே உடைஞ்சிடுச்சு. எங்க கார், வேன் எல்லாம் அடிச்சுட்டு போயிடுச்சு. கண் முன்னால நிலச்சரிவுனால பாறைகள் உருண்டு
வருவதைப் பார்த்தோம்.

ஊருக்குத் திரும்பலாம்னு கார்ல ஏறி கடுமையான டிராஃபிக்ல மாட்டிக்கிட்டேன். நாலஞ்சு மணி நேரம் கார்லயே இருந்தேன். அப்புறம் பக்கத்துல ஒரு கிராமத்துல தங்கியிருந்து மறுநாள்தான் சென்னை வந்தேன்.குலுமணாலில நிைலமை சீரானதும் மறுபடியும் போய் ஷூட் பண்ணினோம். இயக்குநர் ரஜத் காட்சிகளுக்காக அவ்வளவு உழைச்சிருக்கார்!l

மை.பாரதிராஜா