லைஃப் டிராவல்



பலரும் நினைக்கிற மாதிரி பெயரும் புகழும் அவ்வளவு ஈசியா கிடைக்கலை..!

மனம் திறக்கிறார் இயக்குநர் மோகன் ராஜா

அப்பா தயாரிப்பாளர், தம்பி ஹீரோ என்பதாலேயே இயக்குநர் மோகன் ராஜா ஜெயித்திருக்கிறார் என்றுதானே பலரும் நினைக்கிறோம்..? போலவே ரீமேக் படங்களால்தான் வெற்றி பெற்றார் என்றும்தானே?

நிச்சயமாக இல்லை! இயக்குநர் மோகன்ராஜா இன்று அடைந்திருக்கும் வெற்றியை யாரும் தங்கத் தட்டில் வைத்து அவரிடம் கொடுக்கவில்லை! கஷ்டப்பட்டுதான் இன்றைய நிலையை அடைந்திருக்கிறார்.

அவரது வாழ்க்கைப் பயணம் அதைத்தான் தெளிவாக உணர்த்துகிறது...
என் கூட படிச்சவன். இத்தனை வருடங்கள் ஆகியும் அவனால சினிமால சக்சஸ் ஆக முடியல. ஒருநாள் நைட்டு போன் செஞ்சு, ‘உனக்கு இருக்கிற மாதிரி எனக்கும் ஒரு அப்பா இருந்திருந்தா நானும் பெரிய ஆளா வந்திருப்பேன்’னு சொன்னான்.

இது எனக்கு ஷாக்கிங்கா இல்ல. அவன் சொன்னது சரியா தவறானு கூட பார்க்க விரும்பல. எங்கப்பா எங்களை சொகுசாதான் வளர்த்தாரு. எங்களுக்குத் தேவையானதை நாங்க கேட்பதற்கு முன்பே வாங்கிக் கொடுத்தாரு!ஆனா, என் தனித்திறமையோடும் சுய சிந்தனையோடும்தான் வளர்ந்திருக்கேன். ஆக்சுவலா அவர் எங்களுக்கு கொடுத்த வசதிகளை எல்லாம் அனுபவிக்கிறப்ப அவர் பட்ட கஷ்டங்கள்தான் கண்முன்னாடி நிழலாடும்!  

அப்பாவோட பூர்வீகம் மதுரை, திருமங்கலம். 12 வயசுல சினிமா ஆசையால சென்னைக்கு நடந்தே வந்தவர். பாண்டிபஜார்ல கிடைச்ச வேலைகளைப் பார்த்து, உயிர் வாழ்ந்து அப்புறம்தான் சினிமா முயற்சிகளைத் தொடங்கினார். நான் அனுபவிக்க வேண்டிய கஷ்டங்களை எல்லாம் அவர் அனுபவிச்சதாலதான் இப்ப வசதியான வாழ்க்கையை வாழறேன். கட்டியிருந்த வாட்ச்சை அடமானம் வச்சு வீட்டுச் செலவுக்கு அவர் பணம் கொடுத்தது எனக்குத் தெரியும்!

தன் தொழில்ல அவர் கெட்டிக்காரர்னு இந்தியா முழுக்க பெயர் வாங்கியிருக்கார். அவரோட தொழில் கர்வம் என்னை பிரமிக்க வைக்குது. ஸ்கிரீன்ப்ளே, எடிட்டிங், புரொட்யூசர்னு எல்லாமா இருக்கிற நபரைப் பார்க்கறது அபூர்வம். அப்பா இப்படி இருந்தது எங்க அதிர்ஷ்டம்.
ஆங்கில இலக்கியத்துலயும் தமிழ் இலக்கியத்துலயும் அம்மா எம்ஏ முடிச்சிருக்காங்க.

டபுள் எம்ஏ! அப்ப இருந்த எளிமையான வாழ்க்கைச் சூழல்லயும் சந்தோஷமா வாழ்ந்தாங்க. எங்களையும் சந்தோஷமா வைச்சிருந்தாங்க. அவங்க எம்ஏ படிக்கிறப்ப நான் அவங்க வயித்துல இருந்தேன். அதைச் சொல்லிச் சொல்லியே என்னை வளர்த்தாங்க. எனக்கும் தமிழ் இலக்கியம் கத்துக் கொடுத்தாங்க.

ஓய்வு நேரங்கள்ல நானும் என் தங்கையும் அப்பாவோட ஆபீஸ்ல ஃபிலிம் சுருள்களை வச்சுத்தான் விளையாடியிருக்கோம்! அப்பவே ஃபிலிம் ஜாயின்ட், நெகட்டிவ் ஜாயின்ட், ரோல் சுத்தி வைக்கறது... இப்படி சின்னச் சின்ன வேலைகளை ஆர்வமா செய்திருக்கேன்.

அப்புறம் அப்பா டப்பிங் படங்களைத் தயாரிச்சார். பிறகு நேரடிப் படங்கள். எல்லாமே லாபம் கொடுத்தது. ராம்கி நடிச்ச ‘தொட்டில் சபதம்’ படத்தை அவர் தயாரிச்சப்ப எனக்கு 12 வயசு. அதுல நான் கேஷியரா வேலை  பார்த்தேன்! முழு ஆண்டு பரீட்சை விடுமுறை முழுக்க ஷூட்டிங் ஸ்பாட்டுலதான் இருந்தேன். எல்லாருக்கும் பேட்டா காசு கொடுத்தேன்.

அப்ப டிவிடி கிடையாது. டெக்குதான். ஆங்கிலப் படங்களை போட்டுக் காட்டி அந்தப் படத்தோட இயக்குநர் யாரு... ஒவ்வொரு ஷாட்டையும் எப்படி கம்போஸ் பண்ணினாங்கனு எல்லா நுணுக்கங்களையும் அப்பா கத்துக் கொடுத்தார். ‘கிரேட் எஸ்கேப்’ படத்தை அவர் மடில அமர்ந்து கேட்டதும் பார்த்ததும் பசுமையா இப்பவும் நினைவுல இருக்கு.

ஆந்திரால அப்பாவுக்கு அவ்வளவு மரியாதை. அப்பா தயாரிச்ச படங்கள் வெளியாகறப்ப அந்த மொழி சூப்பர் ஸ்டார்கள் கூட தங்கள் பட ரிலீசை தள்ளி வைப்பாங்க. நெல்லூர் காவலி நகர்ல இருந்து வைசாக் வரை 750 கி.மீ. தூரம் வரை எங்க படங்கள் ரிலீஸ் ஆகற எல்லா தியேட்டர்களுக்கும் விசிட் அடிச்சிருக்கேன். கலெக்‌ஷன் ரிப்போர்ட்  பார்த்திருக்கேன். தெலுங்குல அப்பா தயாரிச்ச 9 படங்களும் சில்வர் ஜூப்ளி!
சில தியேட்டர்கள்ல தவிர்க்க முடியாம ஒரு சீனை கட் பண்ண வேண்டியிருக்கும்.

அதை நானே கூட இருந்து கட் பண்ணியிருக்கேன்! சில இடங்கள்ல ரெண்டு ரீலை கட் பண்ணிட்டு ஓட்டுவாங்க. அதைத் தேடிக் கண்டுபிடிச்சு, ஒட்டவச்சு ஓட்ட வைப்பேன். ஆடியன்ஸ் எந்த சீன்ல கைதட்டறாங்க...

எப்ப ஃபீல் ஆவறாங்கனு உன்னிப்பா கவனிப்பேன்.  சென்னை நியூ காலேஜ்ல பிஏ கார்ப்பரேட் படிச்சேன். புரொடக்‌ஷனுக்கு பயன்படுமேன்னு அந்த டைம்ல அந்த டிகிரியை எடுத்துப் படிச்சேன். மத்த பசங்க மாதிரி ஆஃப்டர் காலேஜ் லைஃப்ல எனக்கு ஆர்வம் இருந்ததில்ல. கிளாஸ் முடிஞ்சதும் அப்பாவோட எடிட்டிங் ரூமோ அல்லது ப்ளூடைமண்ட்ல ஒரு டிக்கெட் வாங்கிட்டு தொடர்ந்து நாலு ஷோஸ் ஒரே படத்தை பார்க்கறதோதான் என் வேலை.

மும்பைல நடக்கற சர்வதேச திரைப்பட விழாவுக்கு அப்பா ரெகுலரா போவார். 1995ல நடந்த ஃபெஸ்டிவலுக்கு என்னை அனுப்பினார்!  

நான் சினிமாவை முழுசா நேசிக்க ஆரம்பிச்ச இடம் அங்கதான். அன்னிக்கு நான் அடைஞ்ச பரவசத்தை இப்ப வரை சினிமால பதிவு செய்யலை என்பதுதான் உண்மை. விழாவுல 40 நாடுகளின் படங்களைப் பார்த்தேன். எல்லாத்துலயும் கதைநாயகன் தான் கதாநாயகன்!  

அன்னிக்கு எனக்குக் கிடைச்ச எக்ஸ்போஷர் இப்ப எல்லாருக்குமே கிடைக்குது. உலக சினிமாவை ஈஸியா டிவிடி வாங்கி வீட்ல பார்க்க முடியுது. இப்ப சினிமா முன்னேறியிருப்பதற்கும் அந்த எக்ஸ்போஷர்தான் காரணம். காலேஜ் முடிச்சதும் ஃபிலிம் இன்ஸ்டிட்டியூட்ல சேர்ந்தேன். சினிமாவை இன்னும் நேசிக்க ஆரம்பிச்சேன். அப்பாவைத் தாண்டி ஒரு நட்பு வட்டமும் உருவாச்சு. ஃபிலிம் இன்ஸ்டிட்டியூட்ல நான் இயக்கின ‘பழைய கதை’, இப்பவும் என் பெயர் சொல்ற படமா இருக்கு!  

டிஎஃப்டி முடிச்சதும் என் மேல அப்பாவுக்கு நம்பிக்கை வந்துச்சு. ‘இனிமே நீ படம் இயக்கலாம்’னு தைரியம் கொடுத்தார். முதல் படம் தெலுங்குல இயக்கினேன். ‘ஹனுமன் ஜங்ஷன்’. இப்பவும் கொண்டாடப்படும் படமா அது இருக்கு.

ரெண்டாவது படம் திட்டமிடறப்ப தம்பி ரவி ஹீரோவா ரெடியாகி நின்னார். அப்பா தயாரிப்பாளர், அண்ணன் டைரக்‌ஷன், தம்பி ஹீரோனு எங்க எல்லாரோட வாழ்க்கையும் அடங்கி இருந்ததால அழகான ரீமேக்கை இயக்க முடிவு பண்ணினோம். அப்படி ஆரம்பிச்சதுதான் ‘ஜெயம்’.

ஒரு ரயிலையே 18 நாட்கள் வாடகைக்கு எடுத்து ஷூட் பண்ணினோம். அப்படி ஒரு பிரமாண்ட பட்ஜெட்டை எடுக்க அப்பா துணிஞ்சதுக்கு காரணம், கதை மேலயும், நாங்க உருவாக்கின ஸ்கிரிப்ட் மேலயும் அவருக்கு இருந்த நம்பிக்கைதான். அப்புறம் ரீமேக் படங்கள் இயக்கற சூழல் அதுவா அடுத்தடுத்து அமைஞ்சது.   

நான் யோசிச்ச கதையை இயக்குவது சொந்த குழந்தையை வளர்ப்பது மாதிரி. ரீமேக், பக்கத்து வீட்டு குழந்தையை வளர்ப்பது மாதிரி. ஆக்சுவலா ரீமேக்கையும் என் சொந்தக் குழந்தையை விட பெட்டரா பார்த்துப் பார்த்து வளர்த்திருக்கேன்.

இன்னொரு கிரியேட்டரின் ப்ளஸ், மைனஸை தெரிஞ்சு ஒர்க் பண்றது இந்தத் தொழிலுக்கான அடிப்படை விஷயம். ரீமேக் என்பது ஆன்மாவை மறுஆக்கம் செய்வது. உதாரணமா, ‘சம்திங் சம்திங்’ல ஒரு குதிரை பொம்மையை வச்சுதான் கதையே நகரும். தங்கச்சிக்கு கொடுக்கற குதிரை பொம்மையை மண்ணை பிசைந்து தன் கையாலேயே அண்ணன் செஞ்சு கொடுக்கற மாதிரி ஒரு ரெண்டு செகண்ட்ல அப்பா ஷாட் வைக்கச் சொன்னார். ஒரிஜினல்ல இந்த சென்டிமென்ட் சீன் கிடையாது!

இப்படி ரீமேக்ல நிறைய மெனக்கெட்டிருக்கேன். ஒவ்வொரு படத்தின் மறு  ஆக்கத்தின்போதும் அப்பா எனக்கு கத்துக் கொடுத்த விஷயங்கள் எல்லாமே  பாடங்கள்தான். ஒண்ணு தெரியுமா? ரீமேக் பண்றப்ப ஸ்பாட்ல நிறைய சங்கடங்களை சந்திக்க  வேண்டியிருக்கும். நாம ஒரு ஷாட் வைப்போம்.

சாதாரண யூனிட் ஆள் கூட, ‘என்ன  சார் இந்த ஷாட்டை வைக்கறீங்க..? ஒரிஜினல்ல வேற மாதிரிதானே இருக்கும்?’னு  கேட்பாங்க. நுணுக்கமா ஸ்கிரிப்ட்ல நாம் செய்திருக்கிற மாற்றங்கள் அவருக்குத்  தெரியாது! நம்ம திறமை மேல... வெற்றி மேல... அவ்வளவு கேள்விகளை சர்வ  சாதாரணமா எழுப்புவாங்க.

ரீமேக் படத்தை என்னிக்கும் அப்படியே காப்பி அடிச்சதில்ல. அப்படி  அடிச்சிருந்தா அதில் ஆன்மா இருந்திருக்காது. மனசுக்கு இத்தனை நெருக்கம்  இருந்திருக்காது. இதுவரை ஏழு ரீமேக் இயக்கியிருக்கேன்.  அத்தனையுமே சூப்பர் ஹிட். அதேசமயம் உணர்வுக்கும் கலைக்கும்  பொருந்தாத எழுபது ரீமேக் வாய்ப்புகளை மறுத்திருக்கேன்! இப்பவும்  தகுந்த கதைகள் கிடைக்கிறப்ப ரீமேக் பண்ணுவதையும் தொடருவேன்.

பொதுவா ஸ்கிரிப்ட்ல 51 பர்சன்ட் லாஜிக், 49 பர்சன்ட் மேஜிக் இருந்தா அது கன்ஃபார்ம் ஹிட். அதுல மேஜிக் 51 சதவிகிதம், லாஜிக் 49 சதவிகிதம் இருந்தா கூட அந்தக் கதை ஒர்க் அவுட் ஆகாது.  இந்த அனுபவத் தெளிவுடன்தான் சொந்தமா கதை, திரைக்கதை அமைச்சு ‘வேலாயுதம்’ இயக்கினேன்.

இந்தப் படம் பண்ணும்போதே, ‘தனி ஒருவ’னுக்கான விதை கிடைச்சிடுச்சு. அதோட ஹிட்டால என்னை விட அப்பாவுக்கு கூடுதல் சந்தோஷம். ‘வேலைக்காரன்’ல இன்னும் திருப்தியானார். இப்ப ‘தனி ஒருவன் 2’க்கான வேலைகளைத் தொடங்கியிருக்கோம். முதல் பாகத்தை விட ஸ்பீடான திரைக்கதையை நிச்சயம் இதுல எதிர்பார்க்கலாம்!l

மை.பாரதிராஜா

ஆ.வின்சென்ட் பால்