அபிநந்தனை விடுவித்தது பாகிஸ்தான் அல்ல..! மிக் - 21...கவலையை ஏற்படுத்தும் பின்னணி தகவல்கள்

கடந்த 26ம் தேதி பாலகோட் தாக்குதலுக்குப் பின்னர், பாகிஸ்தானின் எப் - 16 ரக விமானம் இந்திய எல்லையில் பறந்த போது இந்திய ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். இதற்கு பதிலடியாக மிக் - 21 என்ற இந்திய விமானப்படை விமானத்தில் பறந்த தமிழகத்தைச் சேர்ந்த விமானி அபிநந்தன் வர்த்தமான், பாகிஸ்தான் எல்லையில் நடந்த சண்டையில் பாராசூட்டில் குதித்து ஒரு கிராமத்தில் சிக்கிக்கொண்டார். இரண்டு நாட்களுக்குப் பின்னர் பல்வேறு நிர்ப்பந்தங்களால் இந்தியாவிடம் அபிநந்தனை பாகிஸ்தான் அரசு ஒப்படைத்தது.

இந்நிலையில் அபிநந்தன் இயக்கிய மிக் - 21 விமானம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ரஷ்ய தயாரிப்பான மிக் போர் விமான ரகங்கள் 1960ம் ஆண்டு மத்தியில் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது. 1971 முதல் 2012 ஏப்ரல் வரை சராசரியாக ஆண்டுக்கு 12 மிக் விமானங்கள் விபத்துக்குள்ளாகி உள்ளன.

1990களின் மத்தியில் இந்த விமானங்கள் ஓய்வு பெற்றாலும் ‘பைசன்’ தர நிலைக்கு மேம்படுத்தப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.கடந்த 1971 முதல் 2012 ஏப்ரல் வரை மிக் ரக விமானங்களால் ஏற்பட்ட விபத்தில் 171 விமானிகள், 39 பொதுமக்கள், 2 சேவையாளர், ஒரு விமானி இறந்ததாக 2012 மே மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

அதேபோல் கடந்த 2012 ஏப்ரல் முதல் 2016 மார்ச் வரை இந்திய விமானப்படை விமானங்கள் 28 முறை விபத்துக்குள்ளாகி இருக்கின்றன. இதில் நான்கிற்கும் (எட்டு) மேல் மிக் - 21 ரகத்தைச் சேர்ந்தவை. மொத்தமாக 200க்கும் மேற்பட்டோரைப் பலிகொண்ட மிக் - 21 ரக விமானத்தை ‘பறக்கும் சவப்பெட்டி’ என்றும், ‘விதவை தயாரிப்பாளர்’ என்றும் விமானப்படையில் பணியாற்றியவர்கள் கூறுகின்றனர்.

இந்திய விமானப்படையிடம் 42 ஜெட் போர் விமானங்களுக்கு அனுமதி இருந்தாலும் கூட இப்போது 31 மட்டுமே உள்ளன. இதற்கு புதிய போர் விமானங்களை வாங்குவதில் உள்ள மந்தநிலையே காரணம் என்று கூறப்படுகிறது. அடுத்த பத்தாண்டுகளில் மிக் - 21, 27, 29 ரக பதினான்கு போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் இருந்து ஓய்வு பெறவுள்ளன; மேலும், 2027ல் 19 போர் விமானங்களும், 2032ல் 16 போர் விமானங்களும் ஓய்வு பெறுவதாக இருக்கும்.

சுகோய்-20, தேஜஸ் இலகுரக போர் விமானம், ரபேல் ஜெட் விமானங்கள் ஆகியவை புதியதாக சேர்க்கப்படும் என்று நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.கடந்த பிப்ரவரி 20ல் - அதாவது புல்வாமா தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்குப் பின் - இந்திய விமானப்படை தேஜஸ் எம்.கே -1 இறுதி இயக்கத்திற்கான அனுமதியை அல்லது ‘சேவையை விடுவித்தல்’ ஆவணங்களைப் பெற்றுள்ளது.

மிக் - 21 குறித்து விமான நிபுணர்கள், ‘மிக்-21 ரக விமானங்களை இன்னமும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் கடைசி நாடு இந்தியாதான்; அமெரிக்க தயாரிப்பான பாகிஸ்தானின் எப் - 16 விமானத்திற்கு முன் ஈடுகொடுக்க முடியாமல் மிக் - 21ல் பறந்த விமானி போர்க்கைதியாக பிடிபட்டது 2019ம் ஆண்டில் அவமானமான ஒன்று...’ என்கின்றனர்.

தவிர, ‘இன்றுள்ள போர் ஜெட் விமானங்களை எதிர்த்து சமாளிக்கக்கூடிய வகையில் மேம்பட்ட வான் இயற்பியல் மற்றும் ரேடார்; அதிக ஆயுதங்களை சுமக்கும் திறன்; தொழில்நுட்பம், மின்னணு போர்த்திறன், துல்லியமான ஆயுதங்கள்... உள்ளிட்டவை அடங்கிய நவீன தொழில்நுட்பத்துடன் போர் விமானங்கள் தேவை.

அத்துடன் மிக் - 21ல் இல்லாத அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும். ஒரு போர் விமானமாகப் பார்த்தால் மிக் - 21 ரகம், வழக்கமான சோதனைக்குட்பட்ட சாதாரணமான விமானம்தான். அது துல்லிய தாக்குதலுக்குப் பயன்படாது. ஆயுதங்களோ அல்லது  நம்பகமான கருவிகளோ அதில் இல்லை...’ என்றனர்.

அபிநந்தனை பாகிஸ்தான் அரசு விடுவித்தாலும் இன்று அவர் நம்முடன் இருப்பதற்கு முக்கிய காரணம், மிக் - 21 விமான விபத்தில் உயிர் பிழைத்ததுதான். அந்தளவுக்கு சர்வசாதாரணமாக விபத்தை ஏற்படுத்தும்துர்லபம் இந்த விமானத்துக்கு உண்டு என்கிறார்கள்.இப்படிப்பட்ட போர் விமானத்தை இன்றும் நாம் பயன்படுத்தி வருவது நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.     

உலக நிலவரம் இதுதான்!

உலகின் முன்னணி ஆயுத இறக்குமதியாளர்களில் இந்தியாவும் ஒன்று. இந்தியா தனது ஆயுதங்களின் தேவைகளில் 60 சதவீதத்தை இன்னமும் இறக்குமதி செய்கிறது. ‘ஸ்டாக்ஹோம்’ சர்வதேச சமாதான ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2010 - 2014ம் ஆண்டு காலகட்டத்தில் உலக ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்களிப்பு 15%. இதனை உலக நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.

மறுபுறம், ஆயுத ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ், ஜெர்மனிக்கு அடுத்து சீனா உலகின் மூன்றாவது பெரிய நாடாக உள்ளது. இந்தப் பட்டியலில் இங்கிலாந்தையும் சீனா பின்னுக்குத் தள்ளிவிட்டது.

‘நாட்டிற்குத் தேவைப்படும் ஆயுதங்களில் 70% உள்நாட்டிலேயே தயாரிக்கவேண்டும்’ என்ற இலக்கை 2005ம் ஆண்டிலேயே இந்தியா நிர்ணயத்த நிலையில், இப்போது 35-40 சதவீதம் மட்டுமே இலக்கை எட்டியிருக்கிறது.‘ஸ்டாக்ஹோம்’ ஆய்வுப்படி உலகம் முழுவதும் ராணுவ செலவுகள் ஆண்டுதோறும் 1.2% ஆக அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் ராணுவத்திற்காக மேற்கொள்ளப்படும் செலவில் 43 சதவீதத்தை அமெரிக்கா மட்டுமே செய்து உலக பட்டியலில் முன்னிலையில் உள்ளது.

அடுத்த இடங்களில் ஐநா பாதுகாப்பு சபையின் 4 நிரந்தர உறுப்பு நாடுகள் உள்ளன. சீனா ஏழு சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் நான்கு சதவீதத்துடனும் உள்ளன.அமெரிக்காவைப் போல சர்வதேச உதவிக்கும் ராணுவத் தலையீட்டிற்கும் சீனா தனது படைகளைப் பயன்படுத்தாததால், அந்த நாட்டிற்கு செலவினங்கள் மிகக் குறைவு. என்றாலும் தனது ராணுவத்தை இந்தியப் பெருங்கடல், தென்சீனக் கடல், ஆர்க்டிக் என சீனா விரிவுபடுத்தியுள்ளதை பல வல்லுனர்கள் சுட்டிக்காட்டி எச்சரிப்பதை இந்தியா கருத்தில் கொள்ள வேண்டும்.

நெருப்பின் வெடிப்பு

பிரான்ஸ் நாட்டின் ‘டஸால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்தால் தயாரிக்கப்படும் அதிநவீன வசதிகளைக் கொண்ட போர் விமானமான ரபேலை, ‘நெருப்பின் வெடிப்பு’ எனத் தமிழில் கூறுகின்றனர். வான்வழித் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் இந்த விமானம் அதிநவீன ரேடார் வசதிகளைக் கொண்டது.

இந்த விமானத்தை அவ்வளவு எளிதாக சுட்டு வீழ்த்திவிட முடியாது. கடுங்குளிர் நிலவும் காஷ்மீரின் ‘லே’ போன்ற மலை உச்சிகளில் அமைந்துள்ள விமான தளங்களில் இருந்தும்கூட இந்த விமானத்தை இயக்க முடியும். மேலும், ஏவுகணைகளைத் தடுத்து அழிக்கும் தொழில் நுட்பமும் இதனிடம் உண்டு.

தவிர, குரல் வழி உத்தரவுகளைக் கொண்டே இவற்றை இயக்கலாம் போன்ற நிறைய அம்சங்கள் உள்ளன. ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ரபேல் விமானம் பல வெற்றிகளைக் கண்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதை உறுதிப்படுத்தும் வகையில், ‘இப்போது ரபேல் மட்டும் இருந்திருந்தால் முடிவுகள் வேறு மாதிரியாக அமைந்திருக்கும்’ என்று பிரதமர் மோடி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தொடரும் ரபேல் சர்ச்சை

மிக் ரக விமானங்களுக்கு பதிலாக  காங்கிரஸ் தலைமையிலான அரசு நடுத்தர பல்நோக்கு போர் விமானங்களை வாங்க முயற்சி எடுத்தது. இதற்காக 6 போர் விமான விற்பனை நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. குறிப்பாக, ரஷ்ய விமானக் கழகம், ஸ்வீடன் ஏரோஸ்பேஸ் நிறுவனமான ஸாப், பிரான்சின் டஸால்ட் ஏவியேஷன், அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் கார்ப்பரேஷன் அண்ட் போயிங், பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலிய நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டன.

முதல் 18 விமானங்கள் பறக்கும் நிலையில் விற்கப்பட்டன; மீதமுள்ள 108 விமானங்கள் பரிமாற்ற - தொழில்நுட்ப உடன்படிக்கைப்படி தயாரிக்கப்படும்.ஆனால், கடந்த 2018 ஏப்ரலில் பிரதமர் மோடி பல்நோக்கு போர் விமானங்களை டெண்டர் பெறுவதற்கு 3 ஆண்டு பேச்சு நடந்த நிலையில் பிரெஞ்சு அரசுடன் நேரடி ஒப்பந்தம் செய்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதாக அறிவித்தார்.

பின்னர் 2018 ஜூலையில் அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நாடாளுமன்றத்தில் 126 பல்நோக்கு போர் விமானங்களுக்கான ஒப்பந்தத்தை திரும்பப் பெறுவதாகக் கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் காங்கிரஸ் கட்சி, ‘ஆளும் பாஜக அரசு வெளிப்படையாக நடந்துகொள்ளவில்லை...’ என்று ெதாடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

செ.அமிர்தலிங்கம்