13 வயதில் உலகின் தலைசிறந்த பியானோ மாஸ்டர்! அசத்தும் தமிழக மாணவன்



ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்து ஒரு புகைப்படமாவது எடுக்க வேண்டும் என பலரும் காத்திருக்க... அவரோ ஒரு சிறுவனைத் தேடிச் சென்று படம் எடுத்துக் கொள்கிறார். சமூக வலைத்தளத்தில் அப்படத்தைப் பகிர்ந்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்!

மட்டுமா..? உள்ளூர் மீடியாக்கள் முதல் உலக மீடியாக்கள் வரை எல்லோரும் அந்தச் சிறுவனின் வீட்டு வாசலில் காத்திருக்கிறார்கள்!
பியானோ வாசித்து ஏழு கோடி பரிசு, ‘உலகிலேயே சிறந்தவர்’ என்ற விருது, சிறு முது அறிஞர் என விக்கிப்பீடியாவில் பட்டம்... பதிமூன்று வயது லிதியன் நாதஸ்வரம், உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியிருக்கிறார்!  

‘‘என் பையன்தான் லிதியன் நாதஸ்வரம். சுருக்கமா லிதியன்...’’ பெருமையும் பூரிப்புமாகப் பேச ஆரம்பிக்கிறார் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படத்தின் இசையமைப்பாளரான வர்ஷன் சதீஷ். ‘‘அவனுக்கு அப்ப ஒண்ணரை வயசு. இசை மேல அவ்வளவு பைத்தியமா இருந்தான். அந்த நொடில இசைதான் லிதியனுக்கு எதிர்காலம்னு புரிஞ்சுபோச்சு! ஒரு தகப்பனா இதுக்கு எப்படி உதவ முடியுமோ அப்படி தோள் கொடுக்கத் தயாரானேன்!
என் பொண்ணு அமிர்தவர்ஷினியும் அப்படித்தான். இசை மேல அவ்வளவு ஈடுபாடு.

உண்மைல இப்படி பையனும் பொண்ணும் இசை சார்ந்து வளர நினைப்பாங்கனு நாங்க துளிக்கூட எதிர்பார்க்கலை...’’ நெகிழ்ச்சியுடன் சொல்லும் வர்ஷன் சதீஷ், முதல் வகுப்புடன் லிதியனை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டார்!

‘‘பலருக்கு இது அதிர்ச்சியா இருக்கலாம்! ஆனா, லிதியனோட எதிர்காலத்துக்கு இதுதான் நல்லதுனு தைரியமா முடிவு எடுத்தேன். என் கூடவே அவன் இருக்கணும்னு விரும்பினேன். 7 மணிக்கு எழுந்து அவசர அவசரமா சாப்பிட்டு ஸ்கூல்ல போய் அவனைத் தள்ள விரும்பலை. இதுக்கு என் மனைவி ஜான்சியும் உறுதுணையா இருந்தாங்க.

உடனே படிப்பை குறை சொல்றேன்னு நினைக்காதீங்க. லிதியன் இசைக்கலைஞன்! இதுக்கான கல்வி பள்ளில கிடைக்காது! இதுவே அவன் டாக்டர், இன்ஜினியரிங்னு ஆர்வம் காட்டியிருந்தா நானும் அட்மிஷனுக்காக ஸ்கூல் ஸ்கூலா அலைஞ்சிருப்பேன். மாறா இசை மேல லிதியன் ஆர்வம் காட்டினதுனால எங்கெல்லாம் அவனால இசையைக் கத்துக்க முடியுமோ அங்க எல்லாம் அவனைக் கொண்டு போய் விட தயாரா இருந்தேன். எந்த இசைக் கருவியை வைச்சாலும் அதை எடுத்து வாசிக்க ஆரம்பிக்கிற கலைஞனுக்கு அதுக்கு ஏத்த தீனியைக் கொடுக்கறதுதானே நியாயம்..?’’
கேட்கும் வர்ஷன் சதீஷ், எட்டு வயதில் தன் மகன் பியானோ மேல் ஈடுபாடு காட்டுவதைக் கண்டுபிடித்திருக்கிறார்.

‘‘ஆக்சுவலா அவன் தபேலா, புல்லாங்குழல்னு எல்லாம் வாசிப்பான். ஆனா, பியானோ மேல வெறி இருந்தது. எந்த நோட்ஸ், என்ன ஸ்பீட் சொன்னாலும் வாசிக்க ஆரம்பிச்சான்! ரஹ்மான் சார் கல்லூரிலதான் இசை வகுப்புல சேர்த்து விட்டேன். அந்தக் கல்லூரி எங்கள மாதிரி இசை ஆர்வலர்களுக்கு வரம்...’’ நெகிழ்ச்சியுடன் வர்ஷன் முடிக்க, தூக்கவே முடியாத கனமான ஒரு கண்ணாடி விருதுடன் வந்தார் லிதியன்!  

‘‘ஸ்கூலுக்குப் போய் படிச்சு எக்சாம்தான் எழுதலையே தவிர பாடங்கள் எல்லாத்தையும் வீட்டுலயே நான் படிக்க அப்பா ஏற்பாடு செஞ்சார். அந்தந்த வயசுக்கு உரிய பாட புக்ஸ் எல்லாமே எங்க வீட்ல இருக்கு...’’ என கண்சிமிட்டிய லிதியனிடம் போட்டி குறித்து கேட்டோம்.‘‘ஆக்சுவலா ‘அமெரிக்கா காட் டேலன்ட்’ , ‘மாஸ்டர் செஃப்’ மாதிரி ஒரு போட்டிதான் அமெரிக்க CBS சேனல்ல வருகிற ‘தி வோர்ல்ட்’ஸ் பெஸ்ட்’ ரியாலிட்டி டேலன்ட் ஷோ. எப்படி இந்த ஷோவுல கலந்துக்கலாம் என்கிற விவரங்கள் எல்லாம் ஆன்லைன்லயே இருக்கு!

அப்படித்தான் அந்த ஷோ டீமுக்கு அப்பா தொடர்ந்து மெயில் அனுப்பினார். என் சிடிக்கள், வீடியோ லிங்க் எல்லாம் அனுப்பினார். நானும் இந்தப் போட்டிக்கு எப்படியெல்லாம் தயாராக முடியுமோ அப்படி எல்லாம் ரெடி ஆனேன்.

ஐந்து கட்ட போட்டிகள். யாரு வேணா என்ன திறமை வேணும்னாலும் காட்டலாம். இந்தியா சார்பா நான் மட்டும்தான். என் திறமை பியானோ. ஒரு நிமிஷத்துல 350 பீட்ஸ் வாசிச்சு முதல்ல போட்டிக்கு தகுதியானேன். ஒரு கைல ‘மிஷன் இம்பாசிபிள்’, இன்னொரு கைல ‘ஹாரி பாட்டர்’ தீம் மியூசிக் வாசிச்சேன்.

அடுத்து கண்களைக் கட்டிக்கிட்டு வாசிச்சேன். இப்படி அடுத்தடுத்த கட்டங்களா முன்னேறினேன். மொத்தம் 50 ஜட்ஜஸ்! பியானோலயே நிறைய பிளான் வெச்சுருந்தோம். ஆனா, அங்க ஐந்து கட்டங்கள் மட்டும்தான். கடைசி லெவல்ல கண்களைக் கட்டிக்கிட்டு வாசிச்சேன். எனக்கு விருது கிடைச்சது!’’ என லிதியன் முடிக்க... தன் மகனின் பெயர் காரணத்தைச் சொன்னார் வர்ஷன்.

‘‘லிதியன் என்பது வெஸ்டர்ன் இசை ராகம். நம்மூர் கர்நாடக சங்கீத ராகமா சொல்லணும்னா கல்யாணி ராகம்! இதுகூட நாதஸ்வர இசைக் கருவியையும் சேர்த்து ‘லிதியன் நாதஸ்வரம்’!  பொதுவா எல்லா பெற்றோர்களும் பத்து - பதினஞ்சு வருஷங்கள் கழிச்சு குழந்தைகளுக்கு உதவும்னு இப்பத்துல இருந்து பணத்தை சேமிக்கறாங்க. இதுக்கு மாறா என் மொத்த உழைப்பையும் இப்ப என் குழந்தைகளுக்குக் கொடுக்கணும்னு நினைச்சேன்.

சரியான வயசுல அவங்களுக்கு எதுல ஆர்வம்னு கண்டுபிடிச்சு அந்தப் பக்கம் அவங்களைத் திருப்பி அதுல தங்கள் திறமையை அவங்க காட்ட நம்மால் முடிந்ததை எல்லாம் செய்தா கண்டிப்பா எல்லா குழந்தைகளும் சாதிப்பாங்க!என் பையனும் பொண்ணும் அதைத்தான் எனக்கு உணர்த்தியிருக்காங்க...’’ லிதியனை பெருமையுடன் பார்த்தபடியே சொல்கிறார் வர்ஷன் சதீஷ்.

ஷாலினி நியூட்டன்

ஆ.வின்சென்ட் பால்