சமூக அவலங்களை எதிர்த்து கேள்வி கேட்பவன்தான் இந்த தமிழரசன்!



பாபு யோகேஸ்வரன் பளீச்!

‘‘அருமையா வளர்ந்துட்டு இருக்கான் ‘தமிழரசன்’. நினைச்சபடி டார்கெட் பக்காவாக போய்க்கிட்டு இருக்கு. 20 - 20 ஆட்டத்துக்கே ஹைலைட்ஸ் கட்
பண்ணிப்போட்டா எப்படி இருக்கும்? அப்படி வந்திட்டு இருக்கு படம். கதையாகச் சொல்லும்போதே விஜய் ஆண்டனிக்கு பிடிச்சிருந்தது. இடைவேளை வரைக்கும் சொல்லி முடிச்சிருந்தேன். ‘ஜனவரியில் ஷூட்டிங் போயிடலாம். ரெடியாக இருங்க’ன்னு சொல்லிட்டார். அப்புறம்தான் ஒருநாள் திடீர்னு அடுத்த பகுதியைக் கேட்டார்.

இப்ப விஜய் ஆண்டனி இருக்கிறது அழகான அடுத்த கட்டம். இதுவரைக்கும் புரிந்து அறிந்ததில் உணர்ந்து அவர் நகர்ந்து வந்திருப்பது அருமையான தருணம். அவர் இந்த இடத்திற்கு வந்ததைப் பார்த்தபிறகு நான் சும்மா இருக்க முடியுமா... நிறைய அழகான விஷயங்களை அடுக்கியிருக்கேன். இயக்குநராக நிச்சயம் ‘தமிழரசன்’ என் பேரைச் சொல்லும்.

அஸ்திவாரம் விஜய் ஆண்டனி மாதிரி பலமாக இருக்கும்போது எதுவுமே சாத்தியம் தாங்க!’’
பேசிக்கொண்டே உட்கார்கிறார் இயக்குநர் பாபு யோகேஸ்வரன். ‘எல்லாக் கண்ணீரையும் வியர்வை துடைக்கும்’ என்பதற்கு உதாரணம் மாதிரி உற்சாகப் புன்னகை தருகிறார். பத்திரிகையாளராக இருந்து இயக்குநராகி இருப்பவருக்கு இது இரண்டாவது படம். முதல் படம், ஜெயம் ரவி நடித்த ‘தாஸ்’.

‘தமிழரசன்’னு சொன்னதும் அரசியல் உட்பட வேறு பல விஷயங்கள் ஞாபகத்திற்கு வருது...தமிழரசன்னு பெயர் வச்சு இருக்கிறவங்களை தேடினால் லட்சக்கணக்கில் கிடைப்பாங்களே. என்னைய, ‘பாபு யோகேஸ்வரன்’னு பெயர் கேட்டதும் ‘நீங்க இலங்கையா’ன்னு கேட்டவங்க அநேகம்! முதல் எழுத்து ராசி பார்த்து அப்பா, அம்மா வைச்ச பெயர்தான்னு சொல்லியே அலுத்துப்போச்சு.

இது ‘தமிழரசன்’னு ஒருத்தரோட கதை. 40 வயதில் மனைவி, குழந்தைனு சந்தோஷமாக இருந்துகிட்டு இருக்கிற ஒருத்தர்தான். இந்தக் கதையை சூப்பர் ஹீரோவும் பண்ண முடியாது, அதற்குக் கீழே இருக்கிறவங்களும் செய்ய முடியாது.

இரண்டு, மூணு பேர்தான் இருக்காங்க. மத்த இரண்டு பேர்கிட்டே நான் கேட்கவே இல்லை. இதில், பத்து கேரக்டர்கள் போல இருக்கும். ஆனால், ஒவ்வொன்றும் அதனதன் தனித்துவத்தில் நிக்கும். மூணு சீன் வந்திட்டு போறவரா இருக்கலாம், ஒரு சீனோடு தங்கள் பணியை முடிச்சிட்டும் ஒருத்தர் திரும்பலாம்.

ஆனால், எல்ேலாரும் தங்களை ஒரு Reference  ஆக பார்க்கிற கேரக்டராகவே அது இருக்கும். சுரேஷ் கோபி ஐந்து வருஷங்களா மலையாளத்தில் நடிக்கலை. ஏன்னு கேட்டதற்கு, செய்ததையே செய்ய வேண்டியிருக்குன்னு சொல்லிட்டாரு. இதில் விஜய் ஆண்டனிக்கு இணையாக ஒரு வேடம். அவரை நினைச்சுக்கிட்டேன்.

நேரில் பார்க்கப்போனால், ‘எல்லாம் சரி, கதை எனக்கு பிடிச்சால்தான் நடிப்பேன்’னு ஒரே வரியில் சொல்லிட்டாரு. கேட்டதும் உடனே ஓகே சொல்ல, அங்கே பெரிய ஆச்சர்யம். ‘டேய், சுரேஷ் கோபி மறுபடியும் நடிக்க ஆரம்பிச்சிட்டார்டா’ன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.
நேத்தைக்கு இதே இடத்தில் அவர் நடிச்சதைப் பார்த்திட்டு அத்தனை பேரும் ஒண்ணுபோல கை தட்டினாங்க.

‘தமிழரசன்’ எப்படி இருப்பான்?
சமூகப் பிரச்னைதான். நமக்கு ஆகாத ஒரு விஷயத்தை, எந்த நிமிஷமும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கு. சகலத்திலும் ஊழல்ங்கிற ஒரு சூழலில் இருந்துகிட்டு இருக்கோம். முடிந்தவரை சகித்துக்கொண்டால்தான் இங்ேக வாழ்வு வசப்படும். பொறுமையை இழந்தால், வேறு வழியில்லாம திரும்பி நின்று கேள்வி கேட்டால் பிரச்னைதான்.

அப்படி ஒரு கட்டம் தமிழரசனுக்கு வருகிறது. குடும்பத்தை அள்ளி அணைக்கிற விஜய் ஆண்டனி எதிரிகளைத் துள்ளி அடிக்கிறார். அதுதான் படம்.
எப்படிப் பொருந்தியிருக்கார் விஜய் ஆண்டனி!அவர் எப்பவும் சும்மா வந்திட்டுப்போற நடிகர் இல்லை. பழக்கம் கை வந்து, நடிப்பதின் சௌகரியம் புரிந்து, ஃபைன் ட்யூன் பண்ணின நடிப்பு. கதையின் நுட்பங்களை மனதில் கொண்டு வந்தால் தவிர, இப்படி யாராலும் இயல்பாகச் செய்ய முடியாது. ஆனால் விஜய் ஆண்டனி அதை லாவகமாக தாண்டிக்கொண்டு வந்தார்.

அடுத்தடுத்த பக்கங்களின் சுவாரஸ்யம் பின்னும். திரைக்கதையில் இருக்கிற அருமையான திருப்பங்களின் முடிவில் நடப்பது என்ன என்பதுதான் நாம் காணப்போகிற விடை. ரம்யா நம்பீசன் திறமையான நடிப்பு, ஏற்கிற கேரக்டரை உள்வாங்கிறதுன்னு நல்ல இடத்தில் இப்ப இருக்காங்க. ரம்யா - விஜய் ஆண்டனி கெமிஸ்ட்ரி... இதில் ஹிஸ்டரி. நடிக்கிற விதத்தில், போகிற போக்கைப் பார்த்தால் அவங்களை கேரளா பக்கம் திருப்பி அனுப்ப மாட்டாங்க போல. நம்ம தலைநகர்ல செட்டிலாக வேண்டிய அவசியம் வந்திடலாம். யோகிபாபுவும் படத்தில் இருக்கிறார். படத்தோட ஒன்றி வருகிறார்.

படத்திற்கு இசை இளையராஜா...இப்பவும் அவரைக் கேட்டுவிட்டுத்தானே தூங்குறோம்! ஆண்டாண்டு காலமாக ஒரு மனிதர் இப்படியா பின்தொடர்ந்து வருவார்! எவ்வளவு மனசை ஆக்கிரமிப்பு பண்ணி வைச்சிருக்கார். அவர் மியூசிக் போடறதுக்கு முன்னாடி, பின்னாடி எவ்வளவு ரஸ வித்தைகள் நடந்திருக்கு. இதெல்லாம் தெரியாமல், ஒரு தலைமுறை இங்கே வந்திடுச்சே! மௌனத்தின் அவசியத்தைக்கூட அவர்தானே கத்துக்கொடுத்தாரு.

மறுபடி அவரை ஒரு மாஸ் படத்துக்கு அழைச்சிட்டு வந்திருக்கோம். நாம்தான் அவரை மிஸ் பண்றோம்... அவர் இல்லைனு இங்கே புரியணும். புரடியூசர் பெப்ஸி சிவா நியாயமாக இந்தப்  படத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை விடவும் ஒரு மடங்கு அதிகமாக செலவு செய்திருக்கிறார். அவரின்றி இந்தப்படம் பெரிதாகி இருக்காது.

எனக்கு நிறைய கேமராமேன்கள் நண்பர்கள். ஆனால், இதைப் பண்ண வேண்டியவர் ஆர்.டி.ராஜசேகர்தான். அவரே பண்றேன்னு ஆசையாக வந்தார்.
முழு திருப்தியாக, ஒரு ஃபுல்மீல்ஸ் மாதிரியாக ஒரு படம் பார்க்கிற இடம் இருக்கு இல்லையா... அந்த இடத்தில் வைச்சுப்பார்க்கத்தான் இந்தத் ‘தமிழரசன்’. எனக்கு எழுத்து, சினிமா எல்லாம் ஒண்ணுதான். எல்லாம் உண்மையாக இருக்கணும். ‘தமிழரசன்’ அப்படி உண்மையாக இருப்பான்னு நம்புறேன்.

நா.கதிர்வேலன்