தெற்கு வாழ்கிறது...வடக்கு தேய்கிறது! வறுமை ஒழிப்புத் திட்டங்கள் ஒரு பார்வை



கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட நிதி ஆயோக்கின் அறிக்கை ஒன்று இந்தியாவின் வறுமை ஒழிப்பு பற்றி பேசுகிறது.  ஐநா சபையின் தீர்மானத்தின்படி நாள் ஒன்றுக்கு 1.9 டாலருக்கும் குறைவான வருமானம் உடையவர்கள் வறுமையானவர்கள் என்று அறியப்படுகிறது.

இந்த அளவுகோலின்படி இந்தியர்களில் பலர் வறுமைக்கோட்டைத் தாண்டிவிட்டதாகச் சொல்கிறார்கள்.  உண்மையில் இந்த அளவுகோல் மிகமிகக் குறைவு என்று நம் அனைவருக்கும் தெரியும். இன்றைய தேதியில் நாள் ஒன்றுக்கு நூற்று சொச்சம் சம்பாதிக்கும் ஒருவர் என்ன மாதிரியான ஒரு வாழ்வை வாழ்ந்துவிட முடியும் என்பதை நாம் அறிவோம்.

ஆனால், இது இந்தியாவின் பொருளாதாரச் சூழல் மட்டுமல்ல; உலக அளவிலான பொருளாதாரச் சூழலையும் கணக்கில் கொண்டு சொல்லப்படுகிறது என்கிறார்கள். இந்தக் கணக்கில் பார்த்தால்கூட நம் நாட்டில் இன்னமும் பலகோடிப் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழே  தான்வாழ்கிறார்கள்!

நம் அரசுகளின் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் கணிசமாக வெற்றி பெற்றிருந்தாலும் வறுமையை நாம் முற்றிலுமாக ஒழித்துவிட முடியவில்லை என்று சொல்லும் இந்த அறிக்கைப்படி இந்தியாவைப் பொறுத்தவரை தென் இந்தியாவும் வடகிழக்கு மாநிலங்களும் பொருளாதார ரீதியாக முன்னேறிக்கொண்டிருக்கும் முன்னோடி மாநிலங்களாக உள்ளன என்கிறார்கள்.

பசு வளையம் எனப்படும் மத்திய மாநிலங்களில்தான் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் அதிகமாக உள்ளார்கள். இங்கு எல்லாம் சுதந்திர இந்தியாவின் உண்மையான வளர்ச்சி சரியாகப் போய்ச் சேரவேயில்லை என்பதைத்தான் இந்த அறிக்கை காட்டுகிறது. வறுமை என்பதை வெறுமனே பொருளாதார வருமானம் என்பதை மட்டும் வைத்து ஐநா கணிக்கவில்லை. முன்பு உண்ண உணவு, உடுத்த உடை, வசிக்க இருப்பிடம் இருப்பதுவே வறுமையற்ற நிலை என்று ஒரு பொதுவான அளவுகோல் இருந்தது.

இப்போது, வருமானத்தைத் தவிரவும் வாழ்க்கைக்கு அடிப்படையான நான்கு விஷயங்கள் ஒருவருக்கு எப்படி கிடைக்கின்றன என்பதை வைத்தே ஒருவர் வறுமையானவரா இல்லையா என்கிறார்கள். சரி; அது என்ன நான்கு விஷயங்கள்?
 
மருத்துவ வசதி, பிரசவகால வசதிகள், வேலை வாய்ப்பு, நிரந்தர வசிப்பிடம் இந்த நான்கும் ஒருவருக்கு சரியாகக் கிடைக்கிறதா என்பதைக் கொண்டே இப்போது ஒருவர் வறுமையானவரா என்பது பரிசீலிக்கப்படுகிறது.ஐநா சபை இந்தியாவைப்  பொறுத்தவரை எதிர்வரும் 2030ம் ஆண்டுக்குள்ளாக இந்தியாவில் இந்த நான்கிலும் தன்னிறைவை அடைய வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன்படி, மருத்துவ வசதி, மருத்துவக் காப்பீடு உட்பட அடிப்படையான மருத்துவ சேவைகள் நம் நாட்டில் 28.7% பேருக்கே சரியாகக் கிடைக்கின்றன என்கிறார்கள். இன்னமும் பதினொரு ஆண்டுகளில் இதை நூறு சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

பிரசவகால மருத்துவ சிகிச்சைகள் மற்றும் சலுகைகள் ஆகியவையும் வறுமையை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்திய அரசு இதற்கென கடந்த 2017ம் ஆண்டிலேயே பிரசவகால சலுகைகள் சட்டத்தில் சில முக்கியமான திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை இப்போது பிரசவகால சலுகைகள் என்பது வெறும் 36% ஆக உள்ளது. இதுவும் 2030க்குள் நூறு சதவீதம் நிறைவேற வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பை உறுதி செய்வது, வறுமை ஒழிப்புத் திட்டங்களில் முக்கியமானது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் ஒன்று இதற்காகவே நடைமுறையில் உள்ளது. நூறு நாள் வேலைத்திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களை அரசு இந்தத் திட்டத்தின்கீழ் இயக்கிவந்தாலும் இன்றைய தேதிக்கு நாம் வேலை வாய்ப்பு வழங்குவதில் 84%தான் தன்னிறைவை அடைந்துள்ளோம். வரும் 2030க்குள் இதனை நூறு சதவீதமாக மாற்ற வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் நிரந்தரமான வசிப்பிடம் என்பது வறுமையை நிர்ணயிக்கும் காரணிகளில் ஒன்று. இந்தியாவைப் பொறுத்தவரை இன்றும் பலகோடிப் பேர் வீடற்றவர்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில் வெறும் பத்து சதவீதம் பேருக்குத்தான் நிரந்தர சொந்த வீடு உள்ளது என்கிறது ஒரு புள்ளிவிவரம். கிட்டத்தட்ட ஒரு பெரும்பகுதி மக்கள் தொகை சொந்த வீடு இல்லாதவர்களாகவும் கிட்டத்தட்ட அதில் கணிசமானவர்கள் வீடே இல்லாதவர்களாகவும் இருப்பது நம் நாட்டின் துயரங்களில் ஒன்று. இதையும் 2030க்குள் முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வளவு அடிப்படையான விஷயங்களில் தன்னிறைவு அடையவே நாம் இன்னமும் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம் என்கிற கசப்பான உண்மை ஒருபுறம் என்றால் இதை எல்லாம் சொன்னது போல அடுத்த பத்து வருடங்களில் சாதித்துக்காட்ட இயலுமா என்ற மலைப்பு ஒருபுறம் நமக்கு ஏற்படுகிறது.

வறுமைக்கோட்டுக்குக் கீழ் வசிப்பவர்களில் வட இந்தியா, வடகிழக்கு இந்தியாவில்தான் அதிகம் பேர் உள்ளார்கள். சத்தீஷ்கரில் 39.93%மும், ஜார்கண்டில் 36.96%மும், மணிப்பூரில் 36.89%மும், அருணாசலப்பிரதேசத்தில் 34.67%மும் பீகாரில் 33.74%மும் வறுமைக்கோட்டுக்குக்
கீழ் வசிக்கிறார்கள். கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு மேல் வறுமைக்கோட்டுக்குக் கீழ் என்பது நிஜமாகவே மோசமான விஷயம்.

மருத்துவ வசதி மற்றும் மருத்துவக் காப்பீடு வீட்டில் ஒருவருக்குக்கூட கிடைக்காத நபர்கள் உள்ள மாநிலங்களாகவும் அவர்களே உள்ளார்கள். அசாம் 10.4, உத்தரப்பிரதேசம் 6.1, நாகலாந்து 6.1, ஜம்மு & காஷ்மீர் 4.2, மணிப்பூர் 3.6 என்ற விகிதத்தில் இந்த வசதி உள்ளது.உத்தரவாதமான வேலை வாய்ப்பு கிடைக்காத மாநிலங்களில் ஒரே ஒரு தென்னிந்திய மாநிலம் உள்ளது. தெலுங்கானா!

உத்தரவாதமான வேலை வாய்ப்பை வழங்காத மாநிலங்கள் பட்டியலில் 77.06 என்ற விகிதத்தில் உள்ளது. ஜார்கண்டு 70.34, பீகார் 75.63, சத்தீஷ்கர் 77.25, மத்தியப் பிரதேசம் 79.68 என்ற விகிதத்தில் உள்ளன.பேறுகால மருத்துவ சலுகைகளைப் பொறுத்தவரை மிக மோசமான மாநிலங்களாக வட இந்தியாவே உள்ளது. இமாச்சலப்பிரதேசத்தில் 13.1, தெலுங்கானா 12.2, குஜராத் 8.2, மகாராஷ்ட்ரா 8.7, கோவா 7.4 என்ற விகிதத்தில் உள்ளன.

வீடற்றவர்கள் பட்டியலிலும் முதலிடம் வடநாட்டவர்க்கே. இதிலும் ஆந்திரா மட்டுமே ஒரே மோசமான தென்னிந்திய மாநிலம். மத்தியப்பிரதேசம் 21.42, மகாராஷ்ட்ரா 17.18, ராஜஸ்தான் 16.51, சத்தீஷ்கர் 15.77, ஆந்திரா 15.34. அடிப்படையான இந்த நான்கு கட்டுமானங்களும் மோசமாக உள்ள மாநிலங்களில் ஜார்கண்டு, மத்தியப்பிரதேசம், மணிப்பூர், மகாராஷ்ட்ரா ஆகியவையே தலைமை வகிக்கின்றன. இதில் மணிப்பூர் மட்டுமே வடகிழக்கு மாநிலம்.

இந்தியாவின் பெரிய பொருளாதாரம், அதிக ஜிடிபி தரும் மாநிலம் என்று சொல்லும் மகாராஷ்ட்ரா இந்தப் பட்டியலில் இருப்பதைப் பாருங்கள். மும்பையையும் இன்னும் சில தொழில் நகரங்களையும் கழித்துவிட்டால் மகாராஷ்ட்ராவின் உண்மையான நிலை என்ன என்பதை இந்தப் பட்டியல் மறைமுகமாகச் சொல்கிறது.

சரி, இந்த வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளில் முன்னணியில் இருக்கும் மாநிலங்களில் முதல் மாநிலம் எது தெரியுமா?

 யெஸ்… தமிழ்நாடுதான். திரிபுரா, மிசோரம், மேகாலயா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் இதற்கு அடுத்த நிலையில் இருக்கின்றன. கர்நாடகமும், கேரளமும், தெலுங்கானாவும் முன்னணிப் பட்டியலில் இல்லை என்றாலும் மிக வேகமாக வளர்ச்சியடையும் மாநிலங்கள் பட்டியலிலேயே இருக்கின்றன.

இளங்கோ கிருஷ்ணன்