ரத்த மகுடம்-52



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

மற்றவர்களை விடுவிடுவென்று விசாரித்துக் கொண்டு போன அனந்தவர்மர், கடிகையைச் சேர்ந்த பாலகனை விசாரிக்கும் நேரம் வந்ததும் நிதானித்தார்.ஒருமுறை பாலகனைக் கூர்ந்து நோக்கினார். அதைத் தொடர்ந்து அந்தப் பிரேதக் கண்களில் சில கணங்கள் சிந்தனைகள் படர்ந்தன. கடைசியாக ஏதோ முடிவுக்கு வந்ததற்கு அறிகுறியாக தன் தலையை ஒருமுறை அசைத்துவிட்டு பாலகனை எழுந்து நிற்கும்படி கேட்டுக் கொண்டார்.

விசாரணையின் விளைவைப் பற்றி ஓரளவு கணித்துவிட்ட பாலகன், கம்பீரமாக எழுந்து நின்றான். ஐந்தடிகள் முன்னால் நகர்ந்தான். கூர்மையான தன் விழிகளால் அந்த நீதி மண்டபத்தை அலசினான். முகத்தில் படர்ந்திருந்த சாந்தம் அப்படியே இருந்தது.எல்லோரையும் ஒரு பார்வை பார்ப்பதுபோது தன் கருவிழிகளைச் சுழலவிட்டுவிட்டு நீதிபதியின் ஆசனத்தில் அமர்ந்திருந்த அனந்தவர்மரின் மேல் தன் பார்வையைப் பதித்தான்.இரண்டு ஜோடிக் கண்களும் மீண்டும் ஒருமுறை கலந்தன.

மனதுக்குள் என்னவிதமான உணர்வுகள் பொங்கி எழுந்ததோ... எதையும் வெளிப்படுத்தாமல் தன் நிதானத்தையும் கைவிடாமல் விசாரணையைத் தொடர்ந்தார் அனந்தவர்மர்.‘‘பாலகனே! நாம் இருவரும் ஒருவரையொருவர் முன்பே அறிவோம்..!’’ என்றார்.‘‘ஆம்... நன்றாக அறிவோம்...’’ அதே நிதானத்துடன் பாலகன் பதில் அளித்தான்.உடனே சலசலப்புக் குறைந்தது. கயிற்றால் கட்டிப் போட்டதுபோல் நீதி மண்டபத்தில் இருந்த மக்கள் அமைதியாக விசாரணையை கவனிக்கத் தொடங்கினார்கள்.

‘‘நீதி அதிகாரி, குற்றவாளி என்ற இவ்வித உறவில் நாம் முன்பு சந்திக்கவில்லை...’’ அனந்தவர்மர் சுட்டிக் காட்டினார்.‘‘ஏற்கிறேன்...’’ கணீரென்ற குரலில் பிசிறு தட்டாமல் பாலகன் சொன்னான். ‘‘அப்பொழுது தூதுவனாக வந்தேன்...’’‘‘யாருடைய தூதுவனாக என்பதை இந்த அவைக்கு நீயே தெரிவிக்கிறாயா அல்லது...’’ அனந்தவர்மர் இழுத்தார்.‘‘சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் தூதுவனாக! இதைச் சொல்வதில் எனக்கென்ன அச்சம்..?’’

‘‘கேட்பதில் எனக்கும் அச்சமில்லை!’’ பிரேதக் கண்களில் அலட்சியம் வழிந்தது. சற்றே கிண்டலும். ‘‘அப்படி சாளுக்கிய மன்னரின் சார்பாக என்னிடம் தூது வந்தவன் இப்பொழுது சாளுக்கியர்களின் எதிரியாக, பல்லவர்களுக்குத் துணை போனதாக, விசாரணை மண்டபத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறாய் என்பதை காஞ்சி மக்கள் அறிய வேண்டுமல்லவா..?’’

‘‘கண்டிப்பாக அறிய வேண்டும்!’’ பட்டென்று பாலகன் இடைமறித்தான்.‘‘எதைக் குறிப்பால் உணர்த்த வருகிறாய்..?’’ அனந்தவர்மரின் கண்கள் இடுங்கின.
‘‘உங்கள் முன்னேற்றத்தை!’’‘‘விளக்க முடியுமா..?’’‘‘தாராளமாக. பல்லவ நாட்டை... இந்த காஞ்சி மாநகரத்தை இப்பொழுது யார் ஆட்சி செய்கிறார்கள்..?’’ கேட்ட பாலகன், நிதானத்தைக் கைவிடாமல் தொடர்ந்தான். ‘‘இதை நீங்களே இந்த அவைக்கு சொல்கிறீர்களா அல்லது...’’ நிறுத்திய பாலகனின் உதட்டில் புன்னகை பூத்தது.

அனந்தவர்மரின் பிரேதக் கண்கள் ஒரு கணம் ஒளிர்ந்தன. தான், தொடுத்த அதே வினா! கடிகையைச் சேர்ந்த பாலகன் லேசுப்
பட்டவனல்ல. ‘‘அதற்கென்ன... எல்லோருக்கும் தெரிந்ததுதானே..?’’‘‘தெரிந்ததை மறுமுறை உரைப்பதில் என்ன தயக்கம்..?’’‘‘தயக்கம் என யார் சொன்னது..?’’

‘‘எனில் வினாவுக்கு விடையளிக்கலாமே! பல்லவ நாட்டை... இந்த காஞ்சி மாநகரத்தை இப்பொழுது யார் ஆட்சி செய்கிறார்கள்..?’’ இம்முறை பாலகன் அதே கேள்விக்கு அழுத்தம் கொடுத்தான்.‘‘சாளுக்கியர்கள்தான்! அதில் உனக்கேதும் சந்தேகம் இருக்கிறதா..?’’
‘‘இருக்கிறது!’’ சொன்ன பாலகன் தன் நெஞ்சை நிமிர்த்தினான்.

‘‘இப்பொழுதே அம்பை எய்து விடலாமா..?’’ சுற்றிலும் மறைந்திருந்த வீரர்களில் ஒருவன் கேட்டான்.‘‘கூடாது!’’ தலைவன் போல் காணப்பட்டவன் குரலை உயர்த்தாமல் சீறினான்.
‘‘பின் எப்பொழுது அம்புகளைத் தொடுக்க வேண்டும்..?’’

‘‘அந்தப் பெண் தன் வில்லின் நாணை இழுத்ததும்!’’ என்றபடி நீதி மண்டபத்தின் மாடித் தூணோரம் மறைந்திருந்த சிவகாமியை சுட்டிக் காட்டினான் வீரர்களின் தலைவன். ‘‘அப்படித்தான் நமக்கு உத்தரவு. அதை மீறக் கூடாது. இமைக்காமல் அவளை விட்டு பார்வையை அகற்றாமல் இருங்கள்...’’
‘‘அதுவரை ஏன் காத்திருக்க வேண்டும்..? இப்பொழுதே நம் அனைவரின் அம்புகளாலும் அவளை வீழ்த்தி விடலாமே..?’’‘‘கூடாது. நமக்கு இடப்பட்ட கட்டளை வேறு...’’

‘‘சரி... அவளைச் சுற்றி வளைத்து சிறைப்பிடித்து விடலாம் அல்லவா..?’’
‘‘ஒருபோதும் அப்படிச் செய்யக் கூடாது என உத்தரவு!’’
வீரன் ஒரு கணம் யோசித்தான். ‘‘ஒருவேளை அவள் நாணை இழுக்கவில்லை என்றால்..?’’
கேட்டவனைக் கூர்ந்து பார்த்தான் தலைவன். ‘‘நீங்களும் அவள் மீது அம்புகளைப் பொழிய வேண்டாம்!’’‘‘எதுவும் செய்யாமல் விசாரணை முடிந்து கூட்டத்தோடு கூட்டமாக அவளும் கலைந்து சென்றால்..?’’

‘‘தடுக்க வேண்டாம்!’’ பட்டென்று சொன்னான் தலைவன். ‘‘அவளைப் பின்தொடரவும் வேண்டாம்! சொன்னது நினைவிருக்கட்டும்...’’ சிவகாமியை ஒரு கணம் பார்த்துவிட்டு தன் மறைவிடத்திலிருந்து அகன்றான் அந்தத் தலைவன்.வீரர்களுக்கு எதுவும் புரியவில்லை. ஆனாலும் தலைவனின் கட்டளைக்கு அடிபணிந்து தங்கள் வில்லில் நாண் ஏற்றினார்கள். சிவகாமியையே, அவளது அசைவையே உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கினார்கள்.
‘‘என்ன சந்தேகமோ..?’’ குரலில் எந்த வேறுபாட்டையும் காண்பிக்காமல் நிதானமாகவே அனந்தவர்மர் கேட்டார்.

‘‘சாளுக்கியர்கள்தான் இந்தப் பல்லவ நாட்டை ஆள்கிறார்களா என்று!’’ பாலகன் சொன்னான்.நீதிமன்றம் ஒரு கணம் குலுங்கியது. எதற்காக அந்தப் பாலகன் சுற்றிச் சுற்றி இந்த சந்தேகத்தைக் கிளப்புகிறான் என யாருக்கும் புரியவில்லை. அவன் மீது மக்களுக்கு பரிதாபம் அதிகரித்தது. ‘ஐயோ பாவம்...’ என தங்கள் கவலையைப் பகிர்ந்துகொண்டார்கள்.‘‘எதனால் இந்த ஐயம்..?’’ அனந்தவர்மரின் உதட்டில் புன்னகை பூத்தது.
‘‘நீதிபதியின் இருக்கையில் நீங்கள் அமர்ந்திருப்பதால்!’’

‘‘ஏன், நான் அமரக் கூடாதா..?’’
‘‘சாஸ்திரத்தில் அதற்கு இடமில்லை!’’‘‘எந்த சாஸ்திரத்தில்..?’’‘‘நீதி சாஸ்திரத்தில்!’’ உரக்கச் சொன்னான் பாலகன். ‘‘நாட்டின் மன்னர் மட்டுமே நீதிபதியின் ஆசனத்தில் அமரலாம்!’’‘‘வேறு யாருக்கும் அந்த வாய்ப்பு இல்லையா..?’’

அனந்தவர்மரின் இந்த வினா ஒரு கணம் பாலகனை நிறுத்தியது. எதையோ சொல்ல வந்தவன் தன் உதடுகளை மூடிக் கொண்டான்.‘‘சொல் பாலகனே! மன்னரைத் தவிர வேறு யார் இந்த இருக்கையில் அமரலாம்..? கடிகையில் நீ பயின்ற நீதி சாஸ்திரத்தில் அதற்கு விடை இருக்குமே..?’’
‘‘பதில் இருக்கிறது! ஆனால், அது முறையான விடையா என்பதில் ஐயமும் இருக்கிறது!’’

‘‘மீண்டும் ஐயமா..?’’ அனந்தவர்மர் வாய்விட்டு நகைத்தார். ‘‘தெளிவாகச் சொல்... காஞ்சி மக்களுக்கும் புரிய வேண்டுமல்லவா..?’’

‘‘மன்னரைத் தவிர அந்த நாட்டில் நீதி பரிபாலனம் செய்பவர் நீதிபதியின் ஆசனத்தில் அமரலாம். அப்படி அமரும் தகுதி படைத்தவர் காஞ்சிக் கடிகையைத் தலைமையேற்று நிர்வகிப்பவராக இருக்க வேண்டும் என்பது பல்லவர்களின் வழக்கம். அதே பழக்கத்தை சாளுக்கிய மன்னரும் காஞ்சியில் கடைப்பிடிக்கிறார். எனவே, என்னை ஒன்று சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் விசாரிக்கலாம் அல்லது கடிகையின் தலைவர் விசாரிக்கலாம்.

இந்த இரண்டையும் சேராத நீங்கள்... சாளுக்கிய மன்னரின் அண்ணனாகவே இருந்தாலும்... நீதிமன்றத்தில் விசாரிக்க உரிமை இல்லை!’’ குரலை உயர்த்தாமல் அதேநேரம் அச்சம் என்பதே இல்லாமலும் பாலகன் அறிவித்தான்.குழுமி இருந்த மக்களால் தங்கள் செவிகளையே நம்ப முடியவில்லை. தன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையிலும் எவ்வளவு தைரியமாகப் பேசுகிறான்...

மக்களின் எண்ண ஓட்டம் அனந்தவர்மருக்கும் புரிந்தது. என்றாலும் அதை வெளிப்படுத்தாமல் தன் விசாரணையைத் தொடர்ந்தார்.‘‘நீ குறிப்பிட்ட இரண்டு இடங்களிலும் நான் இல்லாததால் உன்னை விசாரிக்கும் உரிமை எனக்கு இல்லை என்கிறாய்... அப்படித்தானே..?’’
‘‘ஆம்!’’

‘‘அதுவே நீ குறிப்பிட்ட இரண்டு ஸ்தானங்களில் ஒன்றில் நான் அமர்ந்தால் இந்த விசாரணையை... உன்மீது சுமத்தப்பட்டுள்ள, பல்லவர்களுக்கு உதவி செய்த குற்றச்சாட்டை நான் விசாரிக்கலாம் அல்லவா..?’’கடிகை பாலகன் அவரை வியப்புடன் பார்த்தான். அனந்தவர்மர் என்ன சொல்ல வருகிறார்..?
புரவிக் கொட்டடியில் இருந்த காவலாளிக்குக் கையும் ஓடவில்லை காலும் நகரவில்லை. ஏந்திய ஓலைக்குழலையே வெறித்தான்.
ஐந்து புறாக்கள்...

இது மட்டும்தான் குழலுக்குள் இருந்த அந்த ஓலையில் எழுதப்பட்டிருந்தது. ஆனால், அந்த இரு சொற்களும் உணர்த்திய பொருள்...
தலையை உலுக்கிக் கொண்ட புரவிக் கொட்டடியின் காவலாளி வந்த கட்டளைக்கு அடிபணிந்து செயலில் இறங்கினான்.
‘‘நீங்கள் சாளுக்கிய மன்னராக முடிசூட்டிக் கொண்டீர்களா..?’’ பாலகன் வியப்புடன் கேட்டான்.

‘‘இல்லை...’’ அனந்தவர்மரின் பிரேதக் கண்கள் நகைத்தன.
‘‘கடிகையின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறேன்!’’
‘‘எப்போது..?’’

‘‘இன்று காலையில்!’’
‘‘விழா எதுவும் நடத்தப்படவில்லையே..?’’
‘‘தவிர்த்துவிட்டேன்! ஆடம்பரங்களில் விருப்பமில்லை. இந்த விசாரணை மண்டபத்தில் அறிவிப்பதே போதும் எனக் கருது
கிறேன்...’’ அலட்சியமாகச் சொன்ன அனந்தவர்மர், சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு பாலகனை ஏறிட்டார். ‘‘இனி முறைப்படி விசாரணையைத் தொடங்கலாமா..?’’

காஞ்சி மாநகரைக் கடந்து தோப்பினுள் கங்க இளவரசன் நுழைந்ததுமே சாளுக்கிய வீரர்கள் அவனைச் சூழ்ந்தார்கள்.
‘‘என்ன..?’’ கோபத்துடன் கேட்டான் கங்க இளவரசன்.‘‘உங்களை மீண்டும் காஞ்சிக்கு வரும்படி உத்தரவு...’’ வீரர்களில் தலைவன் போல் காணப்பட்டவன் பணிவுடன் பதில் அளித்தான்.

‘‘யார் உத்தரவு..?’’
கேட்ட கங்க இளவரசனிடம் பணிவுடன் முத்திரை மோதிரம் ஒன்றை எடுத்து தலைவன் கொடுத்தான். ‘‘இதைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும்...’’
பார்த்த  கங்க இளவரசன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. உரையாடும் துணிவும் அவனுக்கு  இல்லை. சாளுக்கிய மன்னராலேயே மீற முடியாத இடத்தில் இருந்து அல்லவா உத்தரவு  வந்திருக்கிறது...

பெருமூச்சுடன் தன் இடுப்பில் சாளுக்கிய மன்னர் செருகிய குழலைப் பார்த்தான்.எதுவும் சொல்லாமல் தன் புரவியைத் திருப்பி காஞ்சியை நோக்கிச் செலுத்தினான்.வீரர்கள் தலைவணங்கி அவனுக்கு வழிவிட்டார்கள்!‘‘சாளுக்கியர்களின் ஆளுகைக்கு உட்பட்ட காஞ்சி மாநகரத்துக்குள் பல்லவர்களின் உபசேனாதிபதியும் சோழர்களின் இளவரசனுமான கரிகாலன் யாரும் அறியாமல் வந்து சென்றிருக்கிறான். அவனுக்கு நீ உதவி புரிந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. இதைப்பற்றி நீ என்ன சொல்ல நினைக்கிறாய்..?’’

அனந்தவர்மர் இப்படிக் கேட்டு முடித்ததும் தன் தரப்பைச் சொல்ல பாலகன் வாயைத் திறந்தான்.இதற்காகவே காத்திருந்ததுபோல் தூணோரம் மறைந்திருந்த சிவகாமி தன் கையில் இருந்த வில்லின் நாணை இழுத்தாள்.இமைக்காமல் அவளையே கவனித்துக் கொண்டிருந்த சாளுக்கிய வீரர்கள் பதிலுக்கு தங்கள் வில்லின் நாணை இழுத்தார்கள்.
சிவகாமி குறிபார்த்தாள்.

சாளுக்கிய வீரர்கள் குறிபார்த்தார்கள்.பிடித்த நாணை சிவகாமி செலுத்த முற்பட்டபோது -மழையென அவள் மீது அம்புகள் பெய்தன. எல்லாமே சாளுக்கிய வீரர்கள் செலுத்தியவை.கத்தவும் மறந்து, உடலில் பாய்ந்த அம்புகளுடன் தரையில் சரிந்தாள் சிவகாமி!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்