பகவான்-29



பகவானின் இராணுவம்!

“குண்டு வெடிச்சிடிச்சி…”
பதறிப்போன ஷீலா அப்படியே போன் ரிசீவரை போட்டுவிட்டு வெளியே ஓடிவந்து பார்த்தார்.அந்த விடியற்காலையில் ரஜனீஷ்புரம் அமைதியாக இருந்தது. குண்டு வெடித்ததற்கான தடயம் எங்கேயும் காணோம்.மறுபடியும் அறைக்கு ஓடிவந்து, ரிசீவரை காதில் வைத்தார்.

“ரஜனீஷ்புரத்தில் அல்ல. போர்ட்லேண்ட் ஹோட்டலில்…” எதிர்முனை விளக்கமாகச் சொல்லியது.போர்ட்லேண்ட் நகரில் தங்கும் விடுதி ஒன்றினை அமைத்திருந்தார்கள்.விமானத்தில் வெளியூர் செல்லும் சன்னியாசிகளுக்கும், வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்கும் ஆசிரமமே அங்கு ஒரு ஹோட்டலை நடத்தி வந்தது.

“ஏதாவது உயிரிழப்பு?” ஷீலாவின் குரலில் சோகம் கப்பியிருந்தது.“இல்லை. குண்டு வைக்க முயற்சித்தவனே படுகாயம் அடைந்திருக்கிறான்...”உடனடியாக ஷீலாவும், ரஜனீஷ்புரத்தின் முக்கியஸ்தர்களும் காரை எடுத்துக்கொண்டு போர்ட்லேண்ட் நோக்கி விரைந்தார்கள்.
ரஜனீஷ்புரத்தில்தான் குண்டு வைக்க அவர்கள் முயற்சி செய்தார்கள்.

ஆனால் -இவர்கள் உஷாராகிவிட, பொன்னை வைக்கும் இடத்தில் பூவையாவது வைப்போமென்று போர்ட்லேண்ட் ஹோட்டலில் ‘தீபாவளி’ கொண்டாடச் சென்றிருக்கிறார்கள்.அதிர்ஷ்டவசமாக, குண்டு வைக்கும் முயற்சியின்போதே வெடித்து விட்டது. குண்டு வைத்தவனின் முகத்தின் ஒரு பாதி சிதைந்து, ஒரு கை துண்டானது.வேறு எவருக்கும் காயமில்லை.

இப்படியொரு சம்பவம் அமெரிக்காவில் வேறெங்காவது நடந்திருந்தால் ஒட்டுமொத்த எஃப்.பி.ஐ படையும் குவிந்திருக்கும்.
ஆனால் -ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு கணக்காகத்தான் ரஜனீஷ்புரம் விவகாரத்தில் அமெரிக்க போலீஸார் நடந்துகொண்டனர்.

ஒரேகான் கவர்னர் அலுவலகத்தில் இருந்த ரஜனீஷ் அனுதாபி ஒருவர், அதிகாரபூர்வமற்ற முறையில் தனிச்செய்தி அனுப்பியிருந்தார்.அதாவது, ரஜனீஷ்புரத்தை முற்றிலுமாக முடக்கிவிட அமெரிக்க அதிகார வர்க்கம் விரும்புகிறது. அதை தாங்கள் நேரடியாக செய்யாமல் உள்ளூர் போக்கிரிகளுக்கு ஆதரவாக பின்நின்று செய்ய விரும்புகிறது.

அந்த தனிச்செய்தியை வாசித்த ஷீலாவுக்கு அச்சம் ஏற்பட்டது. இதுவரையில் தங்களுக்கு நிகழ்ந்த உள்ளூர் எதிர்ப்புகள் குறித்த தகவல்களை பகவானின் பார்வைக்குக் கொண்டு செல்லாமல் தானே சமாளித்து வந்தார். இனியும் அப்படிச் செய்வது சாத்தியமில்லை என்று உணர்ந்தார்.ரஜனீஷிடம் நிலவரத்தைச் சொன்னார்.

“அதிகாரத்தின் குணமே இதுதான். எல்லோரையும் சந்தேகிப்பார்கள். தங்கள் அதிகாரத்தை பங்குபோட யாரோ சதி செய்கிறார்கள் என்கிற பதற்றத்திலேயே இருப்பார்கள். அவர்களை நம்பி பிரயோசனமில்லை. ஊடகங்களிடம் பேசு...” என்றார்.
ரஜனீஷின் வழிகாட்டுதல்படி பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார் ஷீலா. அமெரிக்காவின் முக்கிய ஊடகங்கள் அனைத்தும் அந்த சந்திப்புக்கு வந்திருந்தன.

ரஜனீஷ்புரம் அமைக்கப்பட்டதின் நோக்கம், உள்ளூர் மக்களுக்கு தேவையே இல்லாமல் அச்சம் ஊட்டப்பட்டது, தங்களுக்கு எதிராக தீவிரவாதிகளை அரசியல்வாதிகள் கொம்பு சீவிவிடுவது, நெருப்பு வைக்கப்பட்டது உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள், சமீபத்தில் நடந்த போர்ட்லேண்ட் ஹோட்டல் குண்டுவெடிப்பு என்று அத்தனையையும் கொட்டினார் ஷீலா.ஊடகவியலாளர்கள் பலரும் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே கொதித்தார்கள். இவ்வளவு நடந்திருக்கிறது; உடனே எங்களிடம் சொல்லியிருக்கலாமே என்று ஆதங்கப்பட்டார்கள்.அதோடு சரி.குண்டுவெடிப்பு பற்றி ஒரு ஊடகத்தில்கூட சிறிய செய்திகூட வரவில்லை.செய்தியாளர் சந்திப்புக்கு வந்திருந்த ஒவ்வொரு செய்தியாளரிடமும் தனிப்பட்ட முறையில் ஷீலா பேசினார்.

“நாங்கள் என்ன மேடம் செய்யமுடியும்? செய்தியாக்கிக் கொடுத்தோம். எங்கள் முதலாளிகள் வெளியிட மறுக்கிறார்கள். அவர்களுக்கு மேலிடத்திலிருந்து அழுத்தம் போலிருக்கிறது...” என்று பாலிஷாக நழுவினார்கள்.பகவான் கொதித்துப் போனார்.“இனிமேல் நம்மை நாமேதான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அமெரிக்கா அடிப்படையில் வலதுசாரி நாடு. மக்களையும் வலதுசாரிகளாகவே வளர்த்தெடுத்து இருக்கிறார்கள் இந்த அரசியல்வாதிகள். இவர்களை எதிர்கொள்ள முடியாமல்தான் இங்கே ஜோன்ஸ் என்கிற சாமியார், ஆயிரம் பேரோடு தற்கொலை செய்துகொண்டார்...” என்று சொல்லிவிட்டு கொஞ்சம் நிறுத்தினார்.

பக்தர்கள் கூட்டம் அப்படியே அமைதி காத்தது. சாமியார் ஜோன்ஸ் பற்றியும், அவருக்கு என்ன நிகழ்ந்தது என்பதைப் பற்றியும் பகவான் விவரிக்கத் தொடங்கினார்.அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் ஜிம் ஜோன்ஸ், தன்னுடைய ஆன்மீகப் பணிகளை 1950களில் தொடங்கினார். ‘கடவுளரின் சபை’ என்கிற அமைப்பைத் தோற்றுவித்தார்.

‘இயேசுவின் சீடர்கள்’ என்கிற பெயரில் அவருக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
இப்படியே போனால் ஜிம் ஜோன்ஸ் அமெரிக்க அதிபர் தேர்தலிலேயே போட்டியிட்டு அதிகாரத்தை கைப்பற்றக்கூடும் என்று அங்கிருந்த அரசியல்வாதிகள் நடுங்கினர். அவருக்கும், அவரது பக்தர்களுக்கும் எண்ணிலடங்கா தொந்தரவுகளைத் தந்தனர்.

இதைத் தொடர்ந்து தென்னமெரிக்க நாடான கயானாவுக்கு இடம்பெயர்ந்தார் ஜோன்ஸ். இந்தியர்கள் பெரும்பான்மையாகக் குடியேறி வாழும் நாடு கயானா. ஆன்மீகத்தின் மீது மதிப்பு கொண்ட இந்தியர்கள் தங்களைப் பாதுகாப்பார்கள் என்கிற நம்பிக்கையோடுஅந்நாட்டுக்கு இடம்பெயர்ந்த ஜோன்ஸ், அங்கே ரஜனீஷ்புரத்தைப் போலவே ‘ஜோன்ஸ் டவுன்’ என்று தங்களுக்கென பிரத்யேக நகரத்தை உருவாக்கினார்.

ஜோன்ஸ் டவுன் நகருக்கு பல்லாயிரக்கணக்கில் அமெரிக்காவிலிருந்து பக்தர்கள் வந்து சென்றனர். இதையடுத்து ஜோன்ஸ் டவுனில் மனித உரிமை மீறப்படுகிறது, அதை விசாரிக்க அமெரிக்கக்குழு ஒன்று செல்லும் என அமெரிக்கா அறிவித்தது. நாடு விட்டு நாடு வந்தும் தங்களை அமெரிக்கா டார்ச்சர் செய்துகொண்டிருக்கிறது என்கிற கடுப்பில் இருந்தார்கள் சாமியார் ஜோன்ஸின் பக்தர்கள்.

அமெரிக்காவின் பிரதிநிதியாக லியோ ரயான் என்கிற அரசியல் தலைவர் தலைமையிலான குழு ஜோன்ஸ்டவுனுக்கு வந்து விசாரணையைத் தொடங்கியது. சிஐஏ செட்டப் செய்திருந்த போலி பக்தர்கள், சாமியார் ஜோன்ஸ் பற்றியும் ஜோன்ஸ் டவுன் பற்றியும் போலியான சாட்சியங்களை உருவாக்கினார்கள்.

ஜோன்ஸ் டவுன் குறித்து எதிர்மறையான விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக அங்கிருந்து விமானத்தில் கிளம்பும் முயற்சியில் இருந்த லியோ ரயான் குழுவினர் மீது சாமியாரின் பக்தர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் லியோ ரயான் கொல்லப்பட்டார்.
ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஜோன்ஸ் டவுன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க உத்தேசித்தது.

அமெரிக்க ராணுவம் நுழைந்தால் பக்தர்களைச் சூறையாடி விடுவார்கள் என்கிற அச்சத்தில் சாமியார் ஜோன்ஸும், அவரது பக்தர்களும் குளிர்பானத்தில் சயனைடு கலந்து குடித்தார்கள். இச்சம்பவத்தில் 918 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 304 பேர் குழந்தைகள்.
பகவான், இந்த சோகமான சரித்திரத்தை விவரித்தபோது அதைக் கேட்டுக் கொண்டிருந்த பக்தர்களில் பலர் வாய்விட்டு அழுதனர்.“பகவானே! நமக்கும் அதுதான் கதியா?” என்று சிலர் கதறியவாறே கேட்டனர்.

“இல்லை. அவர்களிடம் நாம் சண்டையிடப் போகிறோம். அவர்கள் நம்மை அழிப்பதற்கு நாம் அனுமதிக்கப் போவதில்லை. அவர்கள் நம்மில் ஒருவரைத் தொட்டால், நாம் அவர்களில் பதினைந்து பேரைத் தொடுவோம். நம்முடைய ஆட்கள் இனிமேல் ராணுவமாக மாறவேண்டும். நம்முடைய வலிமை என்னவென்பதை அவர்களுக்குக் காட்டவேண்டும்.நெருப்பை நெருப்பு கொண்டு சுடுவோம்...”இதுநாள் வரை அன்பை மட்டுமே போதித்துக் கொண்டிருந்த பகவானை, இவ்வளவு ஆவேசமாக யாருமே கண்டதில்லை.

ஷீலாவை நோக்கிச் சொன்னார்.“ஷீலா, நமக்கான ராணுவத்தைக் கட்டமைக்க என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டுமோ செய். நம் பக்தர்களில் சிலர் முன்னாள் ராணுவத்தினர். அவர்களைப் பயன்படுத்தி நமக்கான படையை உருவாக்கு. அவர்களுக்கு ஆயுதங்களைத் கொடு!”

பகவானே சொல்லிவிட்டார். மறுபேச்சு ஏது?உடனடியாக பக்தர்களிலிருந்து சண்டையிடத் தயாராக இருப்பவர்களைக் கொண்டு ஒரு படை தயாரானது. அவர்களுக்கு ஆயுதப்பயிற்சி உள்ளிட்ட ராணுவப் பயிற்சிகள் தரப்பட்டன. இஸ்ரேல், சுவிட்சர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சார்ந்த ராணுவ நிபுணர்கள் அவர்களுக்கு பயிற்சியளிக்க முன்வந்தார்கள்.

சிறந்த, நம்பிக்கைக்குரிய, வலிமையான சன்னியாசிகள் பகவானின் ராணுவத்தில் இணைந்தனர். தினமும் நான்கு முதல் ஆறு மணி நேரம் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.பகவான் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு மட்டுமே இந்த ரஜனீஷ்புர ராணுவத்தின் லட்சியமாக இருந்தது. ரஜனீஷ்புரம் முழுக்க ஆங்காங்கே கண்காணிப்பு மையங்கள் நிறுவப்பட்டன.

ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். பகவானின் வீட்டை பாதுகாக்க மட்டுமே தனியாக ஒரு கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டது.அது மட்டுமின்றி, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் பகவானைக் காப்பதற்காக ஒரு சுரங்க அமைப்பும் நிறுவினார்கள்.

(தரிசனம் தருவார்)  

யுவகிருஷ்ணா
ஓவியம்: அரஸ்