ஆதித்த கரிகாலனை கொலை செய்தது குந்தவையா...?!



போஸ்ட் மார்ட்டம்-4

தலைப்புக்கான காரணத்தைப் பார்க்கும் முன் ஓர் எட்டு பிற்காலச் சோழர்களின் Blood line - இரத்த உறவை - பார்த்துவிடலாம். ம்ஹும். டிரவுசர் கிழியும் அளவுக்கு எல்லாம் ஹிஸ்டரியை இங்கே போதிக்கப் போவதில்லை! ஜஸ்ட் நுனிப்புல்தான்!இந்த பிற்காலச் சோழர் பரம்பரை விஜயாலய சோழனிடம் இருந்து தொடங்குகிறது.

இந்த விஜயாலய சோழனின் மகன் ஆதித்த சோழன். இவருக்கு இளங்கோ பிச்சி, பல்லவ திரிபுவனதேவி என இரு மனைவிகள். இதில் மூத்தவரான இளங்கோ பிச்சிக்கு பிறந்தவர் கன்னரதேவன். ஆனால், இவருக்கு சோழ அரியணை மறுக்கப்பட்டது. பதிலாக இரண்டாவது மனைவியான பல்லவ திரிபுவனதேவியின் மகன் பராந்தக சோழர் அரியணை ஏறினார்!

இந்த பராந்தக சோழருக்கு கோக்கிழானடிகள், பழுவூர் அரசி என இரு மனைவிகள்.இதில் முதல் மனைவியான கோக்கிழானடிகளுக்குப் பிறந்தவர்கள் இராஜாதித்யன், கண்டராதித்தன் ஆகிய இருவர். இவர்களில் முதல் மகனான இராஜாதித்யன், தக்கோலம் போரில் இறந்தார் அல்லது கொல்லப்பட்டார்.

இரண்டாவது மனைவியான பழுவூர் அரசி வழியே பராந்தக சோழருக்கு மூன்று மகன்கள் பிறந்தனர். மூத்தவர் அரிஞ்சய சோழர். இரண்டாவதாகப் பிறந்தவர் உத்தமசீலி. இதில் இரண்டாவது மகனான உத்தமசீலியின் தலையையே போரில் பாண்டிய மன்னரான வீரபாண்டியன் சீவினார். இதற்குப் பழிவாங்கவே அதே வீரபாண்டியனின் தலையைக் கொய்தார் ஆதித்த கரிகாலன்.

இந்த ஆதித்த கரிகாலன், சுந்தர சோழரின் மகன். சுந்தர சோழர் யார்? பராந்தக சோழருக்கும் அவரது இரண்டாவது மனைவியான பழுவூர் அரசிக்கும் பிறந்த முதல் மகனான அரிஞ்சய சோழரின் புதல்வர். சுந்தர சோழருக்கும் வானவன் மாதேவிக்கும் மூன்று பிள்ளைகள். அதில் மூத்தவரே ஆதித்த கரிகாலன். அடுத்தது குந்தவை. மூன்றாவதாகப் பிறந்தவரே பின்னாளில் ராஜராஜ சோழனாகப் பதவி ஏற்ற அருண்மொழி. இந்த ராஜராஜ சோழனுக்குப் பிறகு சோழ சிம்மாசனத்தில் அமர்ந்தவர் இராஜேந்திர சோழன்.

இந்த இரத்த உறவுகள் எல்லாம் பராந்தக சோழனுக்கும் அவரது இரண்டாவது மனைவியான பழுவூர் அரசிக்கும் உரியது.எனில் அதே பராந்தக சோழனுக்கும் அவரது முதல் மனைவியான கோக்கிழானடிகளுக்கும் உரிய Blood line?முன்பே சொன்னபடி இவர்களது முதல் மகனான இராஜாதித்யன் தக்கோலம் போரில் இறந்துவிட்டார். இரண்டாவது மகனான கண்டராதித்தன், செம்பியன் மாதேவியை மணந்து சில ஆண்டுகள் சோழ மன்னராக இருந்தார். இவர்களுக்கு வாரிசு இல்லாததால், தன் தம்பியும் - தனது சிற்றன்னையின் மூத்த மகனுமான அரிஞ்சயருக்கு இளவரசு பட்டம் சூட்டிவிட்டு சிவப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

பட்டத்துக்கு வந்த அரிஞ்சயர், தன் மகனான சுந்தர சோழருக்கு இளவரசர் பட்டம் சூட்டினார். ஆக, அரிஞ்சயர் மறைந்ததும் சுந்தர சோழர் பட்டத்துக்கு வந்தார்!ஆனால், அரிஞ்சயர் பட்டத்துக்கு வந்து மறைந்து... பிறகு அவர் மகன் சுந்தர சோழர் அரியணை ஏறியபோது -
ஒரு திருப்பம் ஏற்பட்டது! யெஸ். சோழ மன்னர் பதவியே வேண்டாம் என முடிவு செய்து சிவனடியாராக வாழத் தொடங்கிய கண்டராதித்தர் - செம்பியன் மாதேவி தம்பதிகளுக்கு அவர்களது இறுதிக் காலத்தில் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்தக் குழந்தையே பின்னாளில் சுந்தர சோழருக்கு பிறகு பட்டம் ஏறிய உத்தம சோழன்!

ஆனால், இந்த உத்தம சோழன் அரியணையில் ஏறியது கூட எதிர்பாராத வகையில்தான்! ஏனெனில் சோழ மன்னராக அப்போது இருந்த சுந்தர சோழர், நியாயமாகப் பட்டத்துக்கு வர வேண்டிய கண்டராதித்தரின் மகன் உத்தம சோழனுக்கு இளவரசு பட்டம் சூட்டவில்லை. பதிலாக தன் மகன் ஆதித்த கரிகாலனுக்குத்தான் இளவரசு பட்டத்தை சூட்டினார்!

இப்படி பட்டம் சூட்டப்பட்ட ஆதித்த கரிகாலன்தான் படுகொலை செய்யப்பட்டார். இதன்பிறகே நியாயமாக பட்டத்துக்கு வரவேண்டிய உத்தம சோழன் அரியணை ஏறினார்.ஆனால், இந்த உத்தம சோழனுக்குப் பிறகு சோழ மன்னராக முடிசூட வேண்டிய இவரது மகன் புறக்கணிக்கப்பட்டார். பதிலாக சுந்தர சோழரின் இரண்டாவது மகனும் ஆதித்த கரிகாலனின் தம்பியுமான அருண்மொழி என்கிற ராஜராஜசோழன் பட்டத்துக்கு வந்தார்.
இந்த ராஜராஜ சோழன் காலத்தில் ஆலய அதிகாரியாக உத்தம சோழனின் மகன் இருந்தார்! ஆலயத் திருப்பணிகளில் இவர் ஊழல் செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்டு ராஜராஜ சோழனால் இவர் - உத்தம சோழனின் மகன் - தண்டிக்கப்பட்டார்!

எனவே ராஜராஜ சோழனின் மகன் இராஜேந்திர சோழன் அரியணை ஏற இருந்த எல்லா தடைகளும் அகற்றப்பட்டன! இதுதான் பிற்காலச் சோழர்களின் பரம்பரை.கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது ஓர் உண்மை பளிச்சிடும். அதாவது விஜயாலய சோழரின் Blood lineல் மூத்த  மகன்களுக்கு மகுடம் கிட்டவில்லை! கன்னர தேவன், இராஜாதித்யன், ஆதித்த  கரிகாலன் ஆகியோர் இதற்கு உதாரணங்கள். இது ஏன் என்பதற்கான காரணத்தை கதாசிரியர்கள் ஆராய்ந்து தனி நாவல்களாக எழுதட்டும்!

இப்போது நம் இலக்கு ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தது யார் என்பதை போஸ்ட் மார்ட்டம் செய்வதுதான்.
ரைட். பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளா ஆதித்த கரிகாலனைக் கொன்றது..?

இல்லை என்பதே இப்போது கிடைத்திருக்கும் ஆதாரங்கள் சொல்பவை. ஒருவேளை உதவி புரிந்திருக்கலாம். ஆனால், கொன்றது இவர்கள் அல்ல.
எனில் ஆதித்த கரிகாலனின் இளைய சகோதரியும் ராஜராஜ சோழனின் அக்காவுமான குந்தவையின் கணவர் வந்தியத்
தேவன்தான் கொன்றாரா..?

சரித்திர ஆதாரங்களே இதற்கு விடையளிக்கின்றன. ஆம் என திட்டவட்டமாகச் சொல்லாமல் உதவினார் என்ற தொனியில்! ஏனெனில், ஆதித்த கரிகாலன் படுகொலை செய்யப்பட்டபிறகு பட்டத்துக்கு வந்த கண்டராதித்தரின் மகன் உத்தம சோழரின் காலத்தில் சில ஆண்டுகள் - 12 ஆண்டுகள் என்கிறார்கள் - வந்தியத்தேவன் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதே ஆதித்த கரிகாலனின் படுகொலைக்குத் துணை போனதாக!வந்தியத்தேவன் ஏன் இந்தப் படுகொலைக்கு துணை போக வேண்டும்..? பழிக்குப்பழி வாங்கத்தான் என சில வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.இந்த வந்தியத்தேவன் வாணர் குலத்தைச் சேர்ந்தவர். பாலாற்றுக்கு வடக்கே சித்தூர் வரை அமைந்திருந்த  நாட்டை வாணிகம்பாடி, வாணர் நாடு என்றழைத்தனர். இப்போதும் இப்பகுதியில் வாணியம்பாடி என்ற ஊர் உள்ளதை நினைவில் கொள்வது நல்லது.

இப்பரப்பை ஆண்டவர்களே வாணர் குலத்தோர். வல்லம், வாணர்புரம் என்ற இரு தலைநகரத்துடன் பல நூற்றாண்டுகள் இப்பகுதியை ஆண்டனர். இவர்கள் தங்களை மாபலி சக்கரவர்த்தியின் வழி வந்தவர்களாக கூறிக் கொண்டனர். முதலாம் பராந்தக மன்னர் ஆட்சிக் காலத்தில் கங்க மன்னன் பிருதிவிபதியோடு சேர்ந்து வல்லத்தில் வாணர் குலத்துடன் சோழநாடு போர் புரிந்தது. இதற்கான ஆதாரங்களை உதயேந்திர செப்பேட்டிலும், சோழசிங்கபுர (இன்றைய சோளிங்கர்) கல்வெட்டிலும் காணலாம்.

இப்போரில் பராந்தகனிடம் தோல்வியுற்ற வாணர்குல அரசர்கள் இராஷ்டிரகூட மன்னன் கிருஷ்ணதேவனிடம் அடைக்கலம் புகுந்தனர்.இந்த கிருஷ்ணதேவன்தான் கன்னரதேவனின் தாய் இளங்கோ பிச்சியின் தந்தை (பாட்டன்!). இந்த வல்லத்து யுத்தம் கி.பி.911, 912ல் நடந்ததாகக் கொள்ளலாம்.ஆக, தங்கள் வம்சத்தையே அழித்த சோழர்களைப் பழிவாங்க வந்தியத்தேவன் முடிவு செய்திருக்கலாம்... அதன் ஒருபகுதியாக ஆதித்த கரிகாலனைக் கொன்றிருக்கலாம் என்ற வாதத்தை சரித்திர ஆசிரியர்கள் முன்வைக்கிறார்கள்.

அடுத்து சந்தேகத்தின் வட்டத்தில் வருபவர்கள் இருவர்.ஒருவர் ஆதித்த கரிகாலனின் இளைய சகோதரியான குந்தவைப் பிராட்டியார். அடுத்தவர் குந்தவைப் பிராட்டியாரின் தம்பியும் பிற்காலத்தில் மன்னராக சோழ அரியணையில் ஏறியவருமான ராஜராஜ சோழன் என்கிற அருண்மொழி!சற்றே அழுத்தமாக இவர்கள் இருவர் மீதே இப்போது எஃப்.ஐ.ஆர். பதியப்பட்டிருக்கிறது!

காரணம், அடுக்கடுக்கான வினாக்கள்!தளிக்குளத்தார் கோயில் என்ற சிறிய ஆலயம்தான் இடிக்கப்பட்டு அதே இடத்தில் தஞ்சை பெரியகோயில் கட்டப்பட்டது என்கிறார்கள்! சின்ன கோட்டை மறைக்க அதன் மேல் பெரிய கோட்டைக் கிழிப்பது போல் இப்படி ஏன் செய்ய வேண்டும்..? ஒருவேளை அங்குதான் ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்டாரா..?

இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்ததால்தான் இராஜேந்திர சோழன் தஞ்சையை விட்டு நீங்கி தன் காலத்தில் கங்கை கொண்ட சோழபுரம் என்ற தலைநகரை உருவாக்கி அங்கு தஞ்சை பெரிய கோயிலைப் போன்றே பிரமாண்டமாக ஆலயம் ஒன்றை எழுப்பினாரா..?
யார் இந்த இரவிதாஸன்..? சோழ அரச குடும்பத்தில் இவருக்கு என்ன உறவு..?

மன்னராக முடிசூட்டிக் கொண்டதும் எதற்காக பிற நாடுகளின் மீது போர் தொடுக்காமல் முதல் வேலையாக காந்தளூரில் இருந்த ஒரு கடிகையைத் தாக்கி ராஜராஜ சோழன் அழித்தார்..?

(தொடரும்)

கே.என். சிவராமன்