ரத்த மகுடம்-53



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

சிவகாமி இருந்ததே விசாரணை மண்டபத்தின் உப்பரிகையில் இருந்த தூணின் மறைவில் என்பதாலும், மாடியில் மக்கள் அனுமதிக்கப்படாததாலும், காற்று மட்டுமே அங்கு நீக்கமற நிறைந்திருந்ததாலும் சிவகாமி சரிந்ததையோ அவள் உடலில் அம்புகள் பாய்ந்ததையோ ஒருவரும் கவனிக்கவில்லை.மழையென பொழிந்த அம்புகளால் அலறும் சக்தியை அவளும் இழந்திருந்தாள்.

நியாயமாகப் பார்த்தால் சிவகாமியின் உயிர் அந்த இடத்திலேயே பிரிந்திருக்க வேண்டும். இடைவிடாமல் அம்புகளை எய்த சாளுக்கிய வீரர்களின் நோக்கமும் அதுதான். அதனாலேயே அம்புகளைப் பாய்ச்சியதும் தங்கள் கடமை முடிந்தது என விலகவும் செய்தார்கள்.ஆனால், மனிதன் கணக்கிடும் நியாய, அநியாயங்கள் வேறு... இயற்கையின் கணிப்பு வேறு என்பதை ஒருபோதும் எந்த உயிரும் உணர்வதில்லையே! அப்படி உணரும் சக்தி இருந்திருந்தால் மனித குல வரலாறே வேறு விதமாக அல்லவா மாறியிருக்கும்!

எதிர்பாராத கணத்தில் உயிரை விட்டவர்களும் உண்டு. எதிர்பார்த்த கணத்தில் பிரிய இருந்த உயிர், பிரியாமல் கெட்டிப்பட்டதும் உண்டு. சரித்திரம் என்பதே இந்த இரண்டு சாத்தியங்களாலும் நிரம்பியதுதான். உயிர் மட்டுமல்ல... வெற்றி தோல்விகள் கூட கணத்தில் தீர்மானிக்கப்படுபவைதான்.
மனித எத்தனங்கள் எல்லாமே இப்படி கணத்துக்கு முன் மண்டியிட்டு தாழ்பணிந்திருக்கின்றன. இந்தக் கணத்தை கடவுள் என டையாளப்படுத்துபவர்களும் உண்டு; இயற்கையின் விதி என அறிவிப்பவர்களும் உண்டு; இவை இரண்டுமல்ல என மறுத்து மூன்றாவதாக வேறு எதையாவது குறிப்பிடுபவர்களும் உண்டு.

எது எப்படியிருந்தாலும் கணங்கள் மட்டும் எல்லா கணங்களிலும் யாருக்காவது கனத்தபடியே இருக்கின்றன; சரித்திரத்தை காலம்
தோறும் எழுதியபடி இருக்கின்றன.அப்படியொரு கணம்தான் அந்தக் கணத்தில் சிவகாமிக்கு வாய்த்தது!அலறும் சக்தியற்று சரிந்தவளின் செவியில் மக்கள் கூக்குரலும் அங்கும் இங்கும் ஓடுவதும் துல்லியமாகவும் துல்லியமற்றும் விழுந்தது. ஒலிப்பது கனவிலா நிஜத்திலா என்பதை உணரும் சக்தி அப்போது அவளுக்கு இல்லை.

‘கரிகாலனுக்கு நீ உதவியதாக ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன... இதுகுறித்து என்ன சொல்ல நினைக்கிறாய்..?’ என நீதிபதியின் இருக்கையில் அமர்ந்தபடி அனந்தவர்மன் கேட்ட வினாவுக்கு அந்த கடிகை பாலகன் என்ன பதில் சொன்னான்..? ஒருவேளை அவன் சொன்ன விடையைத் தொடர்ந்துதான் இந்தக் கூச்சலும் குழப்பமும் ஏற்படுகிறதா..? பொய்மையும் வாய்மை இடத்து என்பதை மறுத்து உண்மையையே அந்தப் பாலகன் கூறிவிட்டானா..? அவனுக்கு மரண தண்டனை அறிவித்து விட்டார்களா..? அப்படி மட்டும் நிகழ்ந்துவிட்டால் கரிகாலன் தன்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டாரே...
மயக்கம் முற்றிலுமாகத் தன்னைத் தழுவும் முன் சிவகாமியின் உள்ளத்தில் படர்ந்த சிந்தனைகள் இவைதான்.

அதன்பிறகு எண்ணங்கள் அவளை விட்டு அகன்றன. தன் நினைவை அவள் இழந்தாள்.ஒருவேளை அம்புகள் சிவகாமியின் உடலைத் தைக்காவிட்டாலும் நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு தன் நினைவை அவள் இழந்திருப்பாள். ஏனெனில் கற்பனைக்கும் அப்பாற்பட்ட காட்சிகள் அடுத்தடுத்து விசாரணை மண்டபத்தில் அரங்கேறின.

‘‘சொல் பாலகனே... ஏன் மவுனமாக இருக்கிறாய்? கரிகாலனுக்கு நீ ஏன் உதவி புரிந்தாய்? இதற்குமுன் உன் வாழ்க்கையில் நீ கரிகாலனைச் சந்தித்ததும் இல்லை... உறவாடியதும் இல்லை. அப்படியிருக்க யார் சொல்லி பல்லவர்களின் உபசேனாதிபதியான அவனுக்கு உதவி செய்தாய்?’’
பிரேதக் கண்கள் ஜொலிக்க அனந்தவர்மர் இப்படிக் கேட்டதும் கடிகையைச் சேர்ந்த அந்தப் பாலகன் நிமிர்ந்தான். சுற்றிலும் தன் பார்வையைச் சுழலவிட்டு அங்கிருந்த மக்களைப் பார்த்தான்; அலசினான்.

பாலகன் சொல்லவிருக்கும் பதிலுக்காக அனந்தவர்மர் காத்திருந்தாரோ இல்லையோ... பார்வையாளர்களாக வந்திருந்த மக்கள் அனைவரும் தங்கள் செவிகளைக் கூர்தீட்டிக் காத்திருந்தார்கள். பால் வடியும் அந்த முகமும் அதில் ஜொலித்த தேஜஸும் அந்தப் பாலகன் மீது அவர்களுக்கு மரியாதையையும் அன்பையும் ஏற்படுத்தி இருந்தன.

இதற்குமுன் அந்தப் பாலகனை எங்குமே யாருமே சந்தித்ததில்லை என்பதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாக இல்லை. இனி சந்திக்கவே முடியாதோ என்ற அச்சமே அவர்கள் மனதில் விருட்சமாக வளர்ந்து நின்றது! ஏனெனில் அனந்தவர்மர் நடத்திய விசாரணையின் போக்கு எந்தத் திசையில் செல்கிறது என்பது அங்கிருந்த அனைவருக்குமே புரிந்திருந்தது. துடிக்கும் இதயத்துடன் பாலகனையே இமைக்காமல் பார்த்தார்கள்.

மக்களின் எண்ண ஓட்டத்தை ஸ்படிகம் போல் பாலகன் படித்தான். படிக்க மட்டுமே செய்தான். மற்றபடி அதில் தன் கவனத்தைக் குவிக்கவில்லை. யாருடைய ஆறுதலும் அன்பும் அவனுக்கு அவசியமாகவும் படவில்லை. நெஞ்சை நிமிர்த்தி அலட்சியத்துடன் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல அனந்தவர்மரை நோக்கி அவன் வாயைத் திறந்தான்.

ஆனால், ஒரேயொரு எழுத்து சொல் கூட அவன் உதட்டிலிருந்து பிறக்கவில்லை! பிறக்க அக்கணமும் அனுமதிக்கவில்லை!
ஏனெனில் அக்கணத்தையும் அதற்கடுத்து வந்த கணங்களையும் அசுவங்கள் ஆக்கிரமித்தன!ஆம். புரவிகள்! எங்கிருந்து எப்படி வந்தன என்பதை ஒருவராலும் ஆராய முடியவில்லை. கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட அசுவங்கள் விசாரணை மண்டபத்துக்குள் புகுந்தன. அவை அனைத்துமே அப்பொழுதுதான் அரபு நாட்டிலிருந்து மல்லைத் துறைமுகத்தில் வந்து இறங்கியவை. கடற்கரை மணலில் ஓடவிட்டு சரிபார்க்கப்பட்டு காஞ்சி மாநகரத்தை வந்தடைபவை. மற்றபடி இன்னமும் பழக்கப்படாதவை.

எனவே மக்கள் கூட்டத்துக்குள் அவை தறிகெட்டுப் பாய்ந்தன. அவற்றை அடக்கும் வல்லமை படைத்த அசுவ சாஸ்திரிகள் அங்கு இல்லாததால் மனம்போன போக்கில் அவை பாய்ந்தன.அவற்றின் குளம்புகளில் மிதிபடாத வண்ணம் தப்பிக்க மக்கள் மட்டுமல்ல... நீதிபதியின் இருக்கையில் அமர்ந்திருந்த அனந்தவர்மரும் அவருக்குக் காவலாக நின்ற சாளுக்கிய வீரர்களும் முயன்றார்கள்.

எல்லோரும் எல்லா இடங்களிலும் ஓடி தப்பிக்க முயன்றார்கள். முண்டியடித்தார்கள். ஒருவர் மீது மற்றவர் மோதி விழுந்தார்கள். விழுந்தவர்கள் வெளியில் பாய்ந்தார்கள்.இந்த அமளிகள் எல்லாம் அடங்க ஒரு நாழிகையானது.தகவல் அறிவிக்கப்பட்டு வந்து சேர்ந்த சாளுக்கிய அசுவ சாஸ்திரிகள் ஒருவழியாக புரவிகளை அடக்கினார்கள். அனைத்தையும் கொட்டடிக்கு அழைத்துச் சென்றார்கள்.எல்லாம் முடிந்தபிறகுதான் அந்த உண்மை தெரிந்தது.

விசாரணைக் கூண்டில் இருந்த அந்த கடிகை பாலகனைக் காணவில்லை!இது மட்டுமே அங்கிருந்த அனந்தவர்மரும் மற்றவர்களும் அறிந்தது. அவர்கள் அறியாதது, உப்பரிகையில் அம்பு பாய்ந்த நிலையில் மயக்கம் அடைந்திருந்த சிவகாமியும் அங்கு இல்லை என்பது!அனந்தவர்மரின் பிரேதக் கண்கள் மேலும் பிரேதத்தை பிரதிபலித்தன. கண்கள் இடுங்கின. அவரால் நடந்ததை எல்லாம் நம்பவும் முடியவில்லை; நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

கடிகை பாலகன் தப்பித்துவிட்டான் என்பதை விட பாய்ந்த புரவிகள் மோதியோ அல்லது அதன் குளம்படிகளில் சிக்கியோ மக்களில் ஒருவரோ அல்லது சாளுக்கிய வீரர்களில் ஒருவரோ காயமும் படவில்லை... உயிருக்கு ஆபத்தான நிலையிலும் இல்லை... என்ற உண்மை அவர் முகத்தை அறைந்தது!

ஒழுங்குபடுத்தப்படாத புரவிகளை அந்தளவுக்கு ஒழுங்குடன் விசாரணை மண்டபத்துக்குள் ஓட விட்டவன் யார்..? அவன் யாராக இருந்தாலும் கைதேர்ந்த அசுவ சாஸ்திரியாக இருக்க வேண்டும்...அனந்தவர்மரின் புருவங்கள் முடிச்சிட்டன. யார் அவன் என்ற கேள்வி அவரைச் சுற்றிச் சுற்றி வந்தது.

‘‘சந்தேகமென்ன... கரிகாலன்தான்!’’ வெறுப்புடன் சொன்னார் ராமபுண்ய வல்லபர்.‘‘எப்படி அவ்வளவு உறுதியுடன் சொல்கிறீர்கள்..?’’ அனந்தவர்மரின் பார்வை வேறு எங்கோ இருந்தது.‘‘அவனைத் தவிர வேறு யாராலும் இந்தக் காரியத்தை செய்திருக்க முடியாது! இந்தப் பகுதியில் மட்டுமல்ல... இந்த பரத கண்டத்திலேயே இரண்டே இரண்டு பேர்தான் கைதேர்ந்த அசுவ சாஸ்திரிகள். அதில் கரிகாலனும் ஒருவன்!’’
‘‘இன்னொருவர் சிவகாமிதானே?’’ சட்டென்று திரும்பிக் கேட்டார் அனந்தவர்மர். அவர் பார்வை சாளுக்கிய போர் அமைச்சரை அம்பென துளைத்தது.

எலும்புக்குள் நடுக்கம் ஊடுருவினாலும் ஸ்ரீராமபுண்ய வல்லபர் தன் பார்வையைத் திருப்பவில்லை. அனந்தவர்மரின் நயனங்களை நேருக்கு நேர் சந்தித்தார். ‘‘ஆம்!’’‘‘அவள் எங்கே..?’’
‘‘இறந்திருக்க வேண்டும்...’’
‘‘அதாவது உறுதியாகத் தெரியாது. அப்படித்தானே?’’
‘‘அப்படியில்லை....’’

‘‘பின் வேறு எப்படி..?’’
‘‘விசாரணை மண்டபத்துக்கு சிவகாமியும் வந்திருந்தாள். நம் வீரர்கள் அவள் மீது அம்புகளைப் பாய்ச்சினார்கள்...’’
‘‘எனில் இறந்துவிட்டாள் என உறுதியாகச் சொல்லவேண்டியதுதானே..?’’
ராமபுண்ய வல்லபர் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக நின்றார்.

‘‘அவள் சடலம் கிடைத்ததா..?’’ அனந்தவர்மர் கேட்டார்.
‘‘இல்லை!’’‘‘அதாவது நம் அனைவரது கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு பாலகனையும் அவளையும் ஒருசேர கரிகாலன் அழைத்துச் சென்றிருக்கிறான்... அப்படித்தானே..?’’முதல் முறையாக ராமபுண்ய வல்லபர் தலைகுனிந்தார்.

‘‘இதனால் என்னென்ன ஆபத்துகள் வரும் என கொஞ்சமாவது யோசித்தீர்களா ராமபுண்ய வல்லபரே! சிவகாமி மீது அம்புகள் பாய்ந்திருக்கின்றன. அவளைக் காப்பாற்ற கரிகாலன் சிகிச்சை அளிக்கப் போகிறான். அப்படி சிகிச்சை அளிக்கப்பட்டால் நம் திட்டம் வெளிப்பட்டு விடாதா..? சிவகாமி யார் என்ற உண்மையைத் தெரிந்து கொள்ள மாட்டானா..? சாளுக்கிய மன்னனான என் தம்பி விக்கிரமாதித்தனுக்குக் கூடத் தெரியாமல் நாம் அரங்கேற்ற நினைத்த காதை அம்பலத்துக்கு வந்தால் நம் நிலை என்னவாகும் என கொஞ்சமாவது யோசித்தீர்களா..?’’ஸ்ரீராமபுண்ய வல்லபர் உதட்டைக் கடித்தார்.

‘‘போங்கள்... உடனடியாக வீரர்களையும் ஒற்றர்களையும் அனுப்பி சிவகாமிக்கு எங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என தேடச் சொல்லுங்கள். அநேகமாக குறுவாள் பாய்ந்த சோழ மன்னருக்கு எந்த மருத்துவர் சிகிச்சை அளிக்கிறாரோ அவரிடம்தான் சிவகாமியையும் கரிகாலன் அழைத்துச் சென்றிருப்பான்...’’

புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக தலையசைத்த ஸ்ரீராமபுண்ய வல்லபர், அனந்தவர்மருக்கு தலைவணங்கிவிட்டு வெளியே சென்றார்.பற்களைக் கடித்தபடி அந்த அறையின் சாளரத்துக்கு அனந்தவர்மர் வந்தார். காஞ்சி மாநகரம் பரந்து விரிந்திருந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்தவரின் பார்வை சட்டென கூர்மை அடைந்து ஓர் இடத்தில் நிலைத்தது.அந்த இடத்தில் புறாக்கள் தானியங்களைக் கொத்திக் கொண்டிருந்தன!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்