விநியோகஸ்தர்களுக்கான புதிய நடைமுறைகள் தயாரிப்பாளர்களை நசுக்குகிறதா?



ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்

சமீபத்தில் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் தங்களின் உறுப்பினர்களுக்கு, ‘விநியோகஸ்தர்களுக்கான புதிய
நடைமுறை’யை அறிவித்திருக்கிறது.

கோலிவுட்டின் லேட்டஸ்ட் சலசலப்பு இதுதான். உடனே இயக்குநர் பாரதிராஜா கொதிப்படைந்து, ‘‘திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியாகவும், வளர்ச்சியாகவும் இருக்க தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களை நசுக்க முடிவெடுத்துவிட்டார்களோ என்ற அச்சம் எழுவதை தடுக்கமுடியவில்லை.

அவர்களின் விகிதாச்சார முறை மட்டும் அமலுக்கு வருமானால் ஏற்கனவே மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள் வர்க்கம் அடியோடு அழிந்து போவதை யாராலும் தடுக்க முடியாது...’’ என்று காட்டமாகவே அறிக்கை வெளியிட்டார்.

இதுபற்றி திரைத்துறையினர் சிலரிடம் பேசினோம். அவர்களும் ஷாக் கொடுக்கிறார்கள்.‘‘இன்னிக்கு சூழல்ல சினிமாவின் நிலைமை கீழ்நோக்கிதான் போய்க்கிட்டிருக்கு...’’ ஆதங்கத்துடன் பேச ஆரம்பித்தார் அபிராமி ராமநாதன். தயாரிப்பாளர் - திரையரங்கு உரிமையாளர் - விநியோகஸ்தர் என பன்முகக்காரர்.
‘‘இப்ப சனி, ஞாயிறுகள்ல மட்டும்தான் தியேட்டர்ல கூட்டம் இருக்கு. மத்த நாட்கள்ல மக்கள் கூட்டம் மொய்க்கறதில்ல. இன்னிக்கு எல்லோர் வீடுகள்லயும் ஸ்மார்ட் டிவி வந்திடுச்சு. மொபைல்ல வெப்சீரிஸ் பார்க்கறாங்க. அந்தப் படங்களுக்கு சென்ஸார் கிடையாது. இதனால யங்ஸ்டர்ஸை அதிகம் வெப் சீரிஸ் ஈர்க்குது. வெளிநாட்டுப் படங்களையும் ஈசியா பார்த்து ரசிக்கறாங்க.

இப்படி பல பொழுதுபோக்குகளைக் கடந்துதான் தியேட்டருக்கே மக்கள் வர்றாங்க. நான் தயாரிப்பாளர், டிஸ்ட்ரிபியூட்டர்னு இருக்கறதால பொதுவா பேசணும்னா... இங்க எல்லார் தரப்பிலும் குறைகள் இருக்கு. ஒவ்வொருத்தரும் தனித்தனியா பேசினால் குறைகள்தான் பெருசா பேசப்படும். அத்தனை பேரும் ஒண்ணு சேர்ந்து மனம்விட்டு பேசினாத்தான் நியாயமான தீர்வுகள் கிடைக்கும்...’’ என்கிறார் அபிராமி ராமநாதன்.

‘மூணு சங்கங்களும் ஒண்ணா சந்திச்சு பேசத் தயாரா?’ என்ற கேள்வியுடன் திருப்பூர் எம்.சுப்பிரமணியத்திடம் பேசினோம். அதிரடி ரூல்ஸை வெளியிட்ட தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவரும், திரைப்பட விநியோகஸ்தருமானவர் இவர்.
‘‘நாங்க எப்பவும் ரெடியாதான் இருக்கோம். இப்ப தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களோடு கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கணும்னு சொல்லி
யிருக்காங்க. அதை தாராளமா சந்திக்க காத்திருக்கோம்.

நாங்க யாரோடவும் சண்டை போட வரல. எங்க பக்க நியாயத்தை சொல்ல தயாராகவே இருக்கோம். இந்த புது டேர்ம்ஸை எங்க மெம்பர்களுக்கு ஓர் ஆலோசனையாகத்தான் சொல்லியிருக்கோம். அது தீர்மானமோ இல்ல பிரெஸ் ரிலீஸோ கிடையாது. விஷயம் இப்ப சர்ச்சையானதால உண்மையை தெளிவுபடுத்திடுறேன்...’’ என்றபடி ‘விநியோகஸ்தர்களுக்கான புதிய நடைமுறை’ குறித்து பேச ஆரம்பித்தார் திருப்பூர் எம்.சுப்பிரமணியம்.
‘‘நம்ம பக்கத்து மாநிலங்களான ஆந்திராவுல 60% டேர்ம்ஸ்(terms)தான் நடைமுறைல இருக்கு. கேரளாவில் மம்மூட்டி, மோகன்லால் படங்களுக்கும்கூட அதிகபட்சம் 61%தான். கர்னாடகாவில் 50% டேர்ம்ஸ்தான்.

தமிழ்நாட்டுல ரஜினி, அஜித், விஜய் படங்களுக்கு முதல் வாரம் 60% வசூலையும், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி படங்களுக்கு 55% வசூலையும், மற்ற நடிகர்களின் படங்களுக்கு 50 சதவிகித வசூலையும் அந்தப் படங்களை விநியோகிப்பவர்களுக்கு கொடுக்க திட்டமிட்டிருக்கோம்.

இப்படி ஒரு விஷயம் அமல்படுத்தினா எப்படியிருக்கும்னு எங்க மெம்பர்கள்கிட்ட கேட்டிருக்கோம். இப்ப சிங்கிள் தியேட்டர்களுக்கு வழக்கம் போல 70% வசூலும், மல்டிபிளக்ஸ்களுக்கு 50% வசூலும் கொடுத்திட்டிருக்கோம். அதுல எந்த மாற்றமுமில்லை. உடனே, ‘தயாரிப்பாளர்கள் நசுக்கப்படுறாங்க... ஏற்கெனவே தியேட்டர்காரங்க கொள்ளையடிக்கறாங்க! இதுல இது வேறயா?’னு குரல் கொடுக்க ஒரு கூட்டம் கிளம்பிடுது.

தமிழ்நாட்டுல நாலாயிரம் தியேட்டர்கள் இருந்த இடத்துல இப்ப வெறும் தொள்ளாயிரம் தியேட்டர்கள்தான் இருக்கு. அப்படி தியேட்டர்காரங்க கொள்ளையடிச்சா நாலாயிரம் தியேட்டர் 15 ஆயிரம் தியேட்டரா மாறியிருக்கணுமே? ஏன் மாறலை?

சிங்கிள் தியேட்டருக்கு கொடுக்கறது மாதிரி 75% வசூலை கேட்டா எப்படி? ஏற்கெனவே தியேட்டர் பராமரிப்பு செலவு உயர்ந்துடுச்சு. வேலையாட்கள் சம்பள உயர்வு, சொத்து வரி உயர்வு, 18% ஜிஎஸ்டி, 8% தமிழ்நாடு அரசின் அடிஷனல் வரினு அதுவே 26% போயிடுது. இதைப் புரிஞ்சுக்காம போராட்டம் நடத்துவோம்னு சொல்றாங்க. எங்க போராட்டம் நடத்தணுமோ அங்க நடத்தறதில்ல. 5 கோடி சம்பளம் வாங்குறவங்களுக்கு 80 கோடியை தூக்கிக் கொடுக்கறாங்க.

ஹீரோக்களின் சம்பளத்தினால்தான் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுறாங்க. உண்மையும் அதான். முன்னாடியெல்லாம் எம்ஜிஆர் - சிவாஜியோட சம்பளம் ஒரே மாதிரிதான் இருந்தது. அதிகபட்சம் அஞ்சோ அல்லது பத்து பர்சன்டோதான் ஏறும். அவ்ளோதான்.
இப்ப மாதிரி ஒரேடியா ரெண்டாயிரம் மடங்கெல்லாம் ஏறினதில்ல! ஸோ, ஹீரோக்களின் சம்பளத்தை குறைக்கும் வழியை முதல்ல பாருங்க!’’ சூடாகச் சொல்கிறார் திருப்பூர் எம்.சுப்பிரமணியம்.

‘‘அவர் சொல்ற கருத்து தவறு. புது நடைமுறை தயாரிப்பாளர்களை நசுக்கும் நடவடிக்கைதான்...’’ என ஆணித்தரமாகச் சொல்கிறார் தன் பெயரை வெளியிட விரும்பாத ஒரு தயாரிப்பாளர்.‘‘எங்க காலத்துல தயாரிப்பாளர்கள்னா ஹீரோக்கள்ல இருந்து டெக்னீஷியன்கள் வரை அத்தனை பேரும் ‘முதலாளி’ ஸ்தானத்துல வச்சு மரியாதையா நடந்துப்பாங்க. இப்ப ஹீரோக்கள் சொல்றபடிதான் தயாரிப்பாளர்கள் ஆட வேண்டியிருக்கு.
இங்க ஹீரோக்கள் தங்களோட படத் தயாரிப்பாளரை செலக்ட் பண்ற விதமே தந்திரமானதா இருக்கு.

அதாவது தன் படத்துக்கு பிரமாண்ட பட்ஜெட்ல செலவு பண்ணக்கூடிய தயாரிப்பாளராகவும் அவர் இருக்கணும். அதைப்போல அந்த படம் படு ஃப்ளாப் ஆனாலும் அந்த தயாரிப்பாளர் நொடிச்சுப் போகக்கூடாதுனு யோசிச்சு கால்ஷீட் தர்றாங்க. மத்தபடி கதையை யாருமே ஒரு பொருட்டா நினைக்கறதில்ல. இண்டஸ்ட்ரியில் உள்ளவங்களுக்கு இது நல்லாவே தெரியும்.

தவிர ஹீரோவே, தன் படத்திற்கான இயக்குநர் யார் என்பதையும் முடிவு பண்றார். அதையும் மீறி தயாரிப்பாளரே இயக்குநரை செலக்ட் பண்ணினா அவருக்கு ஹீரோக்கள் ஒத்துழைக்கறதில்ல. ஹீரோக்கள் சம்பளத்தை குறைக்கணும்னு சினிமா ஸ்டிரைக் எல்லாம் நடந்தது. தயாரிப்பாளர் சங்கத்துல உள்ள ஹீரோதான் நடிகர் சங்கத்துலேயும் இருந்தார். சம்பளத்தை குறைக்க அவர் என்ன நடவடிக்கை எடுத்தார்?

தெலுங்குப் படவுலகில் மகேஷ்பாபு உள்பட டாப் ஹீரோக்கள் யாரும் ஷூட்டிங் தொடங்கும்போதே தங்களோட சம்பளத்தை வாங்கிக்கறதில்ல. அந்தப் படத்தோட ஷூட் முடிஞ்ச பிறகு கடைசியாதான் வாங்கிக்கறாங்க.

அதனால தயாரிப்பாளர்கள் பெருமளவில் வட்டி கட்டுற சுமையிலிருந்து விடுதலையாகறாங்க. கோலிவுட்ல அப்படியா இருக்கு?

இப்ப ஒரு இடத்தை வாங்கி, அதுல தியேட்டர் கட்டினா பிசினஸ் ஆகாதுதான். ஆனா, இப்ப உள்ள அத்தனை தியேட்டர்களுமே அந்தக் காலத்துல வாங்கிப் போட்ட இடத்துல கட்டின தியேட்டர்கள்தான். சமீபத்துல கூட ஒரு மால் தியேட்டர் ஐநூறு கோடிக்கு வியாபாரம் ஆச்சே! தியேட்டர்ல லாபம் கிடைக்காமலா அவ்ளோ கோடி கொடுத்து வாங்கியிருப்பாங்க?

தியேட்டர்ல விற்கற ஸ்நாக்ஸ், பார்க்கிங் விலையை எல்லாம் தயாரிப்பாளரா நிர்ணயம் பண்றார்? இடைவேளையில் வரும் கமர்ஷியல் விளம்பர வசூல் எல்லாம் தயாரிப்பாளருக்கா போகுது? சினிமா ஸ்டிரைக் அப்ப தியேட்டர்கள் டிக்கெட் விற்பனையாகும் சிஸ்டத்தை முறைப்படுத்தி அதை கம்ப்யூட்டரைஸ்டு ஆக்கிடுவோம்னு சொன்னாங்க. இதுவரை அப்படி எதுவும் நடக்கலை!

தயாரிப்பாளரான நாங்க ஒரு படம் ரிலீஸ் பண்ணினா, ‘இடையே நாங்க வேற படம் ஒரு ஷோ ஓட்டிக்கறோம்’னு சொல்லி அநியாயம் பண்றாங்க.
இப்ப வரை தங்களோட படத்துக்கு எத்தனை டிக்கெட் வித்துருக்குனு தியேட்டர்காரங்க சொல்ற கணக்கைத்தான் தயாரிப்பாளர்கள் நம்பியாக வேண்டியிருக்கு.

இதுல சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் நிலைதான் மோசம். பெரிய தயாரிப்பாளர்கள் சிலர் தியேட்டர்ல எத்தனை டிக்கெட் விற்பனை ஆகியிருக்கு? தங்களோட படத்துக்கு பதிலா வேற படம் ஏதாவது ஓட்டுறாங்களானு தெரிஞ்சுக்க ஓர் ஆளை அனுப்பறாங்க. ஆனா, அப்படி வர்றவங்களையும் தியேட்டர்காரங்க கரெக்ட் பண்ணிடறாங்க!

இப்ப ஹீரோக்களே தயாரிப்பாளராகவும் மாறிட்டதால ஹீரோக்களே கிடைக்காம தயாரிப்பாளர்கள் நிலை இன்னும் மோசமாகிடுச்சு...’’ எனக் குமுறுகிறார் அந்தத் தயாரிப்பாளர்.அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!                         

மை.பாரதிராஜா