கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள் - 16



40 வருடங்களுக்கு ஒருமுறை காட்சி தரும் அத்திவரதன்!

நாகராஜனின் வீடு அன்று பரபரப்பாக இருந்தது. எப்பொழுதும் அமைதி தவழும் அந்த வீட்டில் ஏன் திடீர் பரபரப்பு..?
எதிர் வீட்டில் இருந்த கண்ணனுக்கு குறுகுறு என்று இருந்தது. காரணம் அறிவதற்காக உடனடியாக அங்கு சென்றான்.நாகராஜனும் அவர் மனைவி ஆனந்தவல்லியும் எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தார்கள். ‘‘என்ன தாத்தா...

இந்த வேகாத வெயில்ல எங்க கிளம்பிட்டீங்க..?’’ ஆச்சர்யத்துடன் கண்ணன் கேட்டான்.‘‘அத்திவரதரை பார்க்கப் போறோம்டா கண்ணா! இன்னும் ஒரு அஞ்சு நிமிஷத்துல கார் வந்துரும்...’’ நாகராஜன் புன்னகைத்தார்.
கண்ணனின் முகத்தில் யோசனையின் ரேகைகள்.

அதைக் கண்ட ஆனந்தவல்லி வாய்விட்டுச் சிரித்தாள். ‘‘நீயும் எங்க கூட வர்றியா..? நாப்பது வருஷங்களுக்கு ஒருமுறைதான் அத்திவரதரைப் பார்க்க முடியும்...’’சட்டென கண்ணன் மலர்ந்தான். இதற்காகத்தானே காத்திருந்தான்! ‘‘அம்மாகிட்ட சொல்லிட்டு இதோ வந்துடறேன் பாட்டி...’’
ஓட்டமாக தன் வீட்டுக்கு வந்தவன், அம்மாவிடம் தகவல் தெரிவித்துவிட்டு மடமடவென முகம் கழுவி தயாராகி நாகராஜனின் வீட்டுக்கு வந்தான்.
அவன் வருவதற்கும் டிராவல்ஸில் இருந்து கார் வரவும் சரியாக இருந்தது.

நாகராஜனும் ஆனந்தவல்லியும் கண்ணனுமாக காரில் ஏறினார்கள்.‘‘காஞ்சிபுரம் வரதர் கோயிலுக்குப்பா...’’ டிரைவரிடம் நாகராஜன் சொன்னார்.
‘‘சரி சார்...’’ என்றபடி அவன் காரைக் கிளப்பினான்.‘‘பாட்டி ஏதோ நாப்பது வருஷங்களுக்கு ஒருமுறைதான் வரதர் வருவார்னு சொன்னாங்களே... அது எப்படி தாத்தா... அதைப்பத்தி சொல்லுங்க...’’ இருக்கையில் சாய்ந்து அமர்ந்தபடி கண்ணன் கேட்டான்.நாகராஜன் சொல்லத் தொடங்கினார்.பிரம்மலோகம்.

சோகமே வடிவாக அமர்ந்திருந்தார் நான்முகன். எல்லாவற்றிற்கும் காரணம் அவரது திருவாய்தான். தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் நடந்த வாக்குவாதத்தில் ரிஷிகளின் சாபத்திற்கு பயந்து அவர்களுக்கு சாதகமான தீர்ப்பை - அது தவறான தீர்ப்பு என்று தெரிந்த போதும் - வழங்கினார்.
‘உலகத்தை ஆக்கும் உன்னத பதவியில் இருப்பவர் இப்படிச் செய்யலாகாது... அதனால் உமது பிரம்ம பதவி பறி போகட்டும்...’ என்று தேவர்கள் சபித்து
விட்டனர்.

முனிவர்களின் சாபத்திற்கு பயந்த பிரம்மாவிற்கு தேவர்களும் சாபம் தர வாய்ப்பிருக்கிறது என்று தோன்றவில்லை போலும்.
இப்போது பிரம்ம பதவியை இழந்து போக்கிடம் இல்லாமல் பரிதவிக்கிறார் அயன். போதாத குறைக்கு நாமகளும் அவரை விட்டு நீங்கிவிட்டாள். அதற்குக் காரணமும் அவரது வாய்க் கொழுப்புதான். நாமகள் ‘‘உலகில் யார் மிகச் சிறந்த உத்தமி?’’ என்று நான்முகனைக் கேட்டாள்.

பிரமன் சற்றும் சிந்திக்காமல் ‘‘அகில உலகிற்கும் ஒரே தாயாக விளங்கும் அந்த மகாலக்ஷ்மி தேவியே பெண்களில் சிறந்தவர்...’’ என்று உண்மையைக் கூறிவிட்டார். தன்னையே பிரமன் சிறந்தவள் என்பார் என்று எதிர்பார்த்த கலைமகளுக்கு இந்த பதில் பெருத்த அவமானத்தைத்
தந்தது. கோபித்துக்கொண்டு, பிரம்மனை நீங்கிச் சென்று விட்டாள். இதில் பெரிய கொடுமை என்னவென்றால் ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்தால்தான் பிரம்மனுக்கு மீண்டும் அவருடைய பதவி கிடைக்கும்.

ஓர் அஸ்வமேத யாகம் செய்வதே பெரும் பாடு. இதில் ஆயிரம் அஸ்வமேத யாகங்களை அவர் எப்போது முடிப்பார்..? அதுமட்டுமல்ல, எந்த ஒரு தர்ம காரியம் செய்தாலும் அருகில் மனைவி இருந்தாலொழிய அது பூரணமான பலனைத் தராது. இப்போது, சரஸ்வதி உடன் இல்லாததால், ஒருவேளை அவர் அஸ்வமேத யாகம் செய்தாலும் அது பூரண பலன் தராது.

மொத்தத்தில் பதவி போய்விட்டது, மனைவியும் போய்விட்டாள். பதவியை மீண்டும் பெறுவதற்கான வழியோ கடுமையாக இருக்கிறது. அப்படியே கடுமையாக முயற்சித்து அந்த உபாயத்தைச் செய்யலாம் என்றாலும் மனைவி உடனில்லை. அப்பப்பா ஒருவருக்கு இவ்வளவு கஷ்டங்களா..?
பிரம்மனின் நிலையைக் கண்டு பரம்பொருளான நாராயணனின் உள்ளம் இளகியது. ‘‘மகனே நான்முகா! கவலையை விடு. சத்யவிரத க்ஷேத்திரம் என்று தமிழகத்தில் ஒரு புனிதத்தலம் இருக்கிறது. மகிமை வாய்ந்த அந்த திவ்ய தேசத்தில் எந்தவொரு புண்ணிய காரியம் செய்தாலும் அது ஆயிரம் மடங்கு பலனைத் தரும்.

எனவே அங்கு சென்று நீ ஒரே ஒரு அஸ்வமேத யாகம் செய்தாலும் ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். நா மகள் உன்னைவிட்டு பிரிந்ததை எண்ணிக் கவலை கொள்ள வேண்டாம். காயத்ரி, சந்தியா என்ற உன்னுடைய மற்ற இரு மனைவிமார்களைக் கொண்டு அஸ்வமேத யாகத்தை முடி.

அநியாயமான தீர்ப்பு வழங்கிய பாவம் உன்னைவிட்டு நீங்கிய மறுகணம் நீ பிரம்ம பதவியையும் உன் மனைவியையும் மீண்டும் பெறுவாய். என்னுடைய நாராயண நாமம் என்றும் உனக்கு துணையாக இருக்கும். ஆசிகள்...’’என்று அசரீரி வாக்காகப் பேசி தனது கருணையை மழையாகப் பொழிந்தார் அந்த கார்முகில் வண்ணன்.

அதைக் கேட்ட பிரமன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். மாதவனின் தனிப் பெரும் கருணையை எண்ணி தனது இரு கரங்களையும் முடி மேலே குவித்து, ‘‘பரம்பொருளே! வைகுண்டவாசா! திருமகள் நேசா! ஈடு இணை இல்லாத கருணையின் திருவுருவமே...’’ என்று மாதவன் அருளை மனமாரப் போற்றினார் பிரமன்.

ஒரேமூச்சாக சத்யவிரத க்ஷேத்திரத்தை பிரம்மா வந்தடைந்தார். நல்ல நாள் ஒன்றில் சந்தியாவையும் காயத்ரியையும் கொண்டு அஸ்வமேத யாகத்தை இனிதே தொடங்கினார். ஏற்கனவே பிரம்மா தன்னை அவமதித்ததாக எண்ணிக் கொண்டிருந்தாள் கலைமகள். இப்போது, தர்மபத்தினியான தன்னை விடுத்து மற்ற பத்தினிகளைக் கொண்டு பிரம்மா யாகம் செய்வதை அறிந்து மேலும் கோபமடைந்து, ‘அந்த யாகத்தை எப்படியாவது தடுத்து நிறுத்துவேன்...’ என்று சபதம் எடுத்தாள்.  

அரக்கர்களையும் நாகர்களையும் சரப பக்ஷிகளையும் பிரம்மாவின் யாகத்தைத் தடுக்க அனுப்பினாள் சரஸ்வதி. இவர்கள் அனைவரும் கோபாவேசமாக பிரம்மாவின் யாகத்தை அழிக்க சீறிக்கொண்டு சென்றனர்...‘‘அதுக்கப்புறம் என்ன ஆச்சு தாத்தா..?’’ கண்ணன் பரபரத்தான்.
அவனை அமைதியாக இருக்கும்படி சைகை செய்தாள் ஆனந்தவல்லி.‘‘கொஞ்சம் வண்டிய இந்தக் கோயில்கிட்ட நிறுத்துப்பா...’’ டிரைவரிடம் சொன்னார் நாகராஜன்.

டிரைவரும் நிறுத்தினார். மூவரும் இறங்கி கோயிலுக்குள் சென்றனர். அங்கே சன்னிதானத்தில் எம்பெருமான் எட்டுக் கரங்களோடு காட்சி தந்தார். சங்கு, சக்கரம், வில், வாள், கேடயம், தாமரை மலர் இப்படி பல வஸ்துக்கள் அவர் திருக்கைகளை அலங்கரித்தபடி இருந்தன. மனமுருக மூவரும் பெருமாளை வணங்கிவிட்டு வெளியே வந்தனர். ‘‘சரஸ்வதியின் ஆட்கள் பிரம்மாவ தாக்க வர்றச்சே பெருமாள் இப்பிடி எட்டு கைகளோட வந்து எல்லாரையும் சம்ஹாரம் பண்ணினார். பிரச்சனையே இல்லாம பிரம்மா யாகத்தை தொடர்ந்தார்.

பிரம்மாவின் யாகத்தை காத்த அதே ரூபத்துல இந்தக் கோயில்ல பெருமாள் காட்சி தர்றார்...’’ சொல்லிவிட்டு கண்ணனைப் பார்த்துப் புன்னகைத்தார் நாகராஜன். ‘‘அதுமட்டுமில்ல கண்ணா... ‘ஆதிமூலமே’னு ஒரு யானை கூப்பிட்டதும் ஓடி வந்து பெருமாள் அருள் செஞ்சார் இல்லையா... அந்த சம்பவமும் இங்கதான் நடந்தது...’’ தன் பங்குக்கு ஆனந்தவல்லியும் கோயிலின் பெருமையை விளக்கினாள்.  

‘‘அதனால எந்த ஆபத்து வந்தாலும் இந்த அஷ்டபுஜ பெருமாளை வேண்டிக்கிட்டா போதும்... நொடில பிரச்னை எல்லாம் ஓடியே போயிடும்...’’ என்றபடி கண்ணனை அழைத்துக்கொண்டு காருக்குத் திரும்பினார் நாகராஜன்.மூவரும் ஏறியதும் கார் மீண்டும் புறப்பட்டது.
‘‘அப்புறம் என்னாச்சு தாத்தா..?’’ கண்ணன் விடுவதாக இல்லை.

‘‘ஞானமே வடிவான சரஸ்வதி, இருளையே ஓர் அரக்கனா மாத்தி, அதை பிரம்மா மேல ஏவி விட்டுட்டா. அந்த அரக்கன் எல்லா இடத்துலயும் இருளைப் பரப்பிகிட்டே பிரம்மாவை நோக்கி ஆவேசமா வந்தான்...’’ நாகராஜன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர் மனைவி ஆனந்தவல்லி இடைமறித்தாள்.

‘‘கதையை அப்பறமா கண்ணனுக்கு சொல்லுங்க... டிரைவர்... இந்தக் கோயில் வாசல்ல கொஞ்சம் நிறுத்துப்பா...’’ என்றாள்.
கார் நின்றது. மூவரும் இறங்கி உள்ளே சென்று தேவி, பூதேவியோடு நிற்கும் நிமலனை சேவித்தார்கள்.‘‘தன்னை நோக்கி வந்த இருள் அரக்கனைப் பார்த்து பயந்த பிரம்மா, வழக்கம்போல பெருமாளை வேண்டிக்கிட்டார். உடனே பெருமாள் கோடி சூரிய பிரகாசத்தோடு வந்து நின்றார். ஞானமே வடிவான பரம்பொருள் முன்னாடி அறியாமை என்ற இருள் எப்படி இருக்கும்? அந்த இருள் அரக்கன் ஓடியே போயிட்டான்.

இப்படி பிரம்மாவின் யாகத்துக்கு வெளிச்சமா... விளக்கா... பெருமாளே வந்து நின்னதால அவருக்கு ‘விளக்கொளி பெருமாள்’னு திருநாமம் வந்தது...’’ கோயிலைவிட்டு வெளியே வந்ததும் நாகராஜனே விட்ட இடத்திலிருந்து கதையைச் சொல்லி முடித்தார்.  
‘‘சூப்பர் தாத்தா.... அந்த பெருமாள் எங்க இருக்கார்?’’

‘‘இதோ இந்தக் கோயில்லதான்!’’ ஆனந்தவல்லி சிரித்தாள். ‘‘என்ன பாட்டி... இன்னிக்கி அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சியா தர்றீங்க!’’
‘‘இன்னும் நிறைய இருக்கு கண்ணா... தன்னை வணங்கினவங்களுக்கு ஞானத்தை வாரி வழங்குவதில் இந்தப் பெருமாளுக்கு நிகர் இவர்தான். தன் அடியவர்கள் வாழ்க்கைல ஒளி ஏத்தி வைப்பதையே தன் கடமையா நினைச்சு இந்தப் பெருமாள் செய்யறார்...’’ என்றபடி அருகில் இருந்த சின்ன கோயிலுக்கு கண்ணனை அழைத்துச் சென்றார் நாகராஜன்.

அந்தக் கோயிலின் சன்னதியை, வேதாந்த தேசிகர் என்னும் மகானின் திருஉருவம் அலங்கரித்தபடி இருந்தது. அவருக்கு முன்னால் ஒரு ஹயக்ரீவர் திருஉருவம். இவை அனைத்தையும் கண்ணனுக்குக் காட்டி, ‘‘கண்ணா... இவர்தான் வேதாந்த தேசிகர். பெரிய மாகான். அவர் பூஜை செய்த ஹயக்ரீவர்தான் இங்க இருக்கு. இவருக்கு ஹயக்ரீவர் மந்திரத்தை கருடனே உபதேசம் செய்தார் தெரியுமா..?

இவரோட மகிமைக்கு எல்லையே கிடையாது. இவர் பிறந்து வாழ்ந்த ஊர்தான் இது. பெருமாளின் அருள் கிடைக்கணும்னா, குரு அருள் வேணும். அதனால இவர கெட்டியா புடிச்சுக்கோ...’’ நெகிழ்ந்தபடி சொன்னார் நாகராஜன்.மனமார வணங்கிவிட்டு மூவரும் வெளியே வந்து காரில் ஏறினார்கள். அமர்ந்ததுமே கண்ணன் கேட்டான்.‘‘தாத்தா, பிரம்மா செய்த யாகம் என்னாச்சு..?’’

ஆபத்தில் உதவும் பெருமாள்

44வது திவ்ய தேசம். காஞ்சிபுரம் வரதர் கோயிலில் இருந்து 1 கிமீ தொலைவில் உள்ளது. நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.

விளக்கொளி பெருமாள்

வாழ்வில் விளக்கேற்றி ஞானத்தை அருளும் பெருமான்45வது திவ்ய தேசம்.காஞ்சிபுரம் வரதர் கோயிலுக்கு அருகில் உள்ளது. நேரம்: காலை 7:30 மணி முதல் 10 மணி வரைமாலை 5 மணி முதல் 7 மணி வரை.

(கஷ்டங்கள் தீரும்)

ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்