பட்ஜெட்டில் காணாமல் போன ரூ.2 லட்சம் கோடி!



ஒரு படத்தில் வடிவேல், ‘‘ஐயா என் கிணத்தைக் காணோம்...’’ என்று அலறியபடி போலீஸ் ஸ்டேஷனுக்குள் ஓடிவருவார்.அங்கிருக்கும் காவல்துறை அதிகாரி ‘‘என்னது... கிணத்தைக் காணமா?!’’ என்று அதிர்வார். கிட்டத்தட்ட இந்தியப் பொருளாதார நிபுணர்கள் இப்படித்தான் அதிர்ந்திருக்கிறார்கள்!வடிவேல் போல் ‘கிணற்றைக் காணோம்’ என்று அலறியவர் ரத்தின் ராய்.

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் உறுப்பினராக உள்ளார் இந்த ரத்தின். இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் முடிந்த மூன்றாம் நாளில் ரத்தின் ராய் ஒரு பொருளாதார நாளிதழில் எழுதிய கட்டுரைதான் இந்தப் பஞ்சாயத்தை உலகறியச் செய்தது. என்னதான் நடந்தது?

அந்தக் கட்டுரையில் பட்ஜெட்டையும் இந்திய அரசின் பொருளாதாரக் கணக்கெடுப்பையும் (Economic Survey) ஒப்பிட்டு எழுதியிருந்தார் ரத்தின்.

அதன்படி 2018 - 19ம் ஆண்டுக்கான வருவாய் மதிப்பீடுகள் (Revenue Estimates) - அதாவது இவ்வாண்டில் அரசு எவ்வளவு வருமானம் ஈட்டியுள்ளது என்பது பட்ஜெட்டில் உள்ளதைவிடவும் பொருளாதாரக் கணக்கெடுப்பில் சில சதவீதப் புள்ளிகள் குறைவாக உள்ளதாம். இந்த சதவீதப் புள்ளிகளை தொகையில் சொன்னால் சுமார் 1.7 லட்சம் கோடி வித்தியாசம் என்கிறார்கள்.

பொதுவாக, பட்ஜெட்டில் திருத்தப்பட்ட மதிப்பீடு (Revised Estimates) என்ற கலைச்சொல் பயன்படுத்தப்படும். இது ஒரு குறிப்பிட்ட நிதி ஆண்டில் அரசு எவ்வளவு வருவாயை எதிர்பார்க்கிறது என்பதைக் குறிக்கும். ஆனால், பொருளாதார கணக்கெடுப்பு கணக்கீட்டு அசல் (Provisional Actuals) என்ற கலைச் சொல்லைப் பயன்படுத்தும். இது வெறும் திட்டமிடல் (Projection) அல்லது எதிர்பார்ப்பு அல்ல. ஒரு குறிப்பிட்ட நிதி ஆண்டின் குறிப்பிட்ட சில காலங்களில் எவ்வளவு தொகை வருவாயாக வந்துள்ளது என்பதைப் பற்றிய திட்டவட்டமான கணக்கீடு (Provisional) ஆகும்.

பட்ஜெட்டில் 2018 - 19ம் ஆண்டில் இந்த திருத்தப்பட்ட மதிப்பீடு 17.3 லட்சம் கோடி என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அப்டேட்டட் ஆன பொருளாதார சர்வேயோ, அரசு 15.6 லட்சம் கோடிக்கும் குறைவாக ஈட்டியுள்ளது என்று சொல்கிறது. இதன்படி இவ்விரண்டு தகவல்களுக்கு இடையே 1.7 லட்சம் கோடி துண்டு விழுகிறது. இதை சதவீதக் கணக்கில் சொன்னால், திருத்தப்பட்ட மதிப்பீட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.2 சதம் எனப்படுகிறது.

ஆனால், பொருளாதாரக் கணக்ெகடுப்பின்படி இது 8.2 சதவீதமே உள்ளது. இரண்டுக்கும் இடையே ஒரு சதவீத வித்தியாசம் உள்ளது.இந்தத் துண்டு, பட்ஜெட்டில் அரசின் செலவீனங்களிலும் முரண்பாடான தொகைகளை உருவாக்குகிறது. பட்ஜெட்டின்படி 24.6 லட்சம் கோடி அரசின் செலவீனம் எனப்படுகிறது. பொருளாதார கணக்கெடுப்போ இந்திய அரசு 23.1 லட்சம் கோடிதான் செலவழித்துள்ளது என்கிறது. எனவே, செலவீனத்தில் 1.5 லட்சம் கோடி துண்டு விழுகிறது.

இதற்குக் காரணம் அரசின் வரி வருவாயில் ஏற்பட்ட தேக்கம்தான் என்கிறார்கள். பட்ஜெட்டின்படி அரசு 14.8 கோடி வருவாயாக ஈட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொருளாதாரக் கணக்கெடுப்புகளின்படி 13.2 லட்சம் கோடி மட்டுமே அரசு ஈட்டியுள்ளது தெரியவந்துள்ளது.இது தொடர்பாக மீடியாக்கள் இந்திய நிதி அமைச்சகத்திடம் கேட்டதற்கு சரியான பதில் இன்னமும் கிடைக்கவில்லை.

தேசிய புள்ளியியல் ஆணையத்தின் தலைவரும் இந்தியாவின் முதல் தலைமை புள்ளியியல் நிபுணருமான ப்ரொனாப் சென் ‘இந்த விஷயம் கவனிக்கப்பட வேண்டியது’ என்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், ‘நான் பட்ஜெட்டையும் பொருளாதாரக் கணக்கெடுப்பையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது இவ்விரண்டுக்கும் இடையே முரண்பாடு இருப்பதைக் காண்கிறேன். இனி நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க வேண்டும் என்றால் ஏற்கெனவே செய்யப்பட்ட ஒதுக்கீடுகளை மேலும் குறைக்க வேண்டியிருக்கும். இதுதான் இதனால் ஏற்பட்டுள்ள பெரும் தலைவலி. இதனால், நிதியமைச்சகத்தின் திட்டங்கள் அதன் கைமீறிச் செல்லும்...’ என்று கவலை தெரிவித்துள்ளார்.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பொருளாதார படிப்பு மையத்தின் பொருளாதாரத் துறை பேராசிரியர் ஜெயந்தி கோஷ், ‘பொருளாதாரக் கணக்கெடுப்பின் விவரங்கள்தான் சரி என்றால் ஒருவேளை புதிய பட்ஜெட் போட வேண்டியது இருந்தாலும் இருக்கும்...’ என்று அதிர்ச்சி தெரிவிக்கிறார்.  

மொத்தத்தில் இந்தியப் பொருளாதார நிபுணர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது இந்த பட்ஜெட்.புறநானூற்றிலிருந்து கவிதையை சரியாகச் சொன்னால் போதுமா..? அதற்கு ஏற்ப நடக்க வேண்டாமா... என்று கேட்கிறார்கள் வல்லுநர்கள்! l

இளங்கோ கிருஷ்ணன்