சந்தானத்தின் வடசென்னை காதல்!



‘‘லவ் சப்ஜெக்ட்தான் ‘A1’. செகண்ட் ஆஃப் ப்ளாக் காமெடி. மொத்தத்துல இதுல லைவ்வா ஒரு வாழ்க்கை அடுத்தடுத்து நகர்ந்துகிட்டே இருக்கும். பொதுவா சந்தானம் ஒரு பன்ச் அடிப்பார். எதிரே நிற்கிறவர் அதை கவுண்டர் பண்ணுவார். இவரும் அதை ரீ கவுண்டர் பண்ணணும். அதுக்கு ரொம்ப யோசிக்கணும். இதில் அப்படியில்லாமல் வியாசர்பாடி பையன் மாதிரி வர்றார். அவரோட மேனரிசத்தை மாத்தியிருக்கோம். அவரை வைத்து ஓவர் பந்தா, மாஸ் வேலையெல்லாம் காட்டலை.  

நீங்க சராசரியாக வாழ்க்கையில் ஒரு நார்த் மெட்ராஸ் பையனை எப்படி பார்ப்பீங்களோ... அப்படித்தான் சந்தானம் இருப்பார். ஒரு மலையாளப் படத்தை இயல்பா பார்க்கிறமாதிரி இருக்கும். ஒரு லோக்கல் பையனுக்கும், ஒரு பிராமணப் பொண்ணுக்கும் இடையில் நடக்குற காதல்தான் விஷயம். சும்மா இருக்கிற சந்தானத்தை பிரச்னைகள் கூடி வந்து கும்மியடிச்சுக்கிட்டு நிற்கும்.

அவருக்கு அப்படியே அமைகிற நண்பர்கள். ஒரு சிலருக்கு இது சந்தானம் படமான்னு புதுமையாகக்கூட இருக்கலாம். இதோ ரிலீசுக்கு ரெடி...’’ மில்லிமீட்டர்கூட பதற்றமே இல்லாமல் சிரிக்கிறார் அறிமுக இயக்குநர் ஜான்சன்.உண்மையிலேயே அழகா இருக்கார் சந்தானம்...

காமெடியனா இருந்தால் கூட பரவாயில்லை, தொப்பை கூட வச்சிருக்கலாம். ஹீரோவுக்கு அதெல்லாம் அலவ்டு கிடையாது. வேர்த்து விறுவிறுத்து சைக்கிளிங் போய் உடம்பை அவ்வளவு சரியா வைச்சிருக்கார். லவ் சப்ஜெக்ட்தான். அதற்கு வேண்டிய மேனரிசம் சொல்லிக்கொடுத்தால் புது இயக்குநர்னு பார்க்காமல் அற்புதமாகச் செய்தார்.

இத்தனைக்கும் அவர் 120 படத்திற்கு மேல நடிச்சிட்டாருனு அவருடைய திரைப்பட்டியல் கணக்கு சொல்லுது. கொஞ்சமும் மிகை இல்லாமல் எடுத்திருக்கோம். சந்தானம் என்னிக்கும் டைரக்டர் ஆக்டர். ஏதாவது புதுசா இருக்கணும். நம்மளை ஸ்கிரிப்ட்டுக்குள்ளே கொண்டு போகணும்னு நினைக்கிறார்.

அவருக்கு அப்படி அமைஞ்சதுதான் இந்த ‘A1’. இப்போ எல்லா அனுபவத்தையும் உணர்ந்து நடிச்சு நல்ல நடிகனாக வரணும்னு ஆசைப்படுகிறார். அந்த ஆசைக்கும் இந்தப்படம் துணை போகும்.

ஒரு காமெடியனாக வந்து இப்ப ஹீரோவாக அருமையான ஒரு இடத்தில் நிற்கிறார். இப்படி கலரை மாத்தறது பெரும்பாடு. இதை நம்ம ஸ்கிரிப்ட்னு நினைச்சு, மக்களோட ரசனையை அளவு வைச்சு சரியாகப் பண்ணியிருக்கார். படம் கலகலன்னு இருக்கும். இத்தனை வருட உழைப்பு அவரை அவ்வளவு அழகா பதப்படுத்தி வைச்சிருக்கு.

ஒரு காதலியையும், அவரை வம்புக்கு இழுத்துவிடுகிற நண்பர்களை சமாளிச்சு எழுவதும்தான் கதை.அன்பு, காதல், வறுமை, கொடுமைன்னு அத்தனை விஷயங்களையும் காமெடியோடு பிசைந்து கொடுத்தால் அது ரொம்ப அழகா இருக்கும்.

வாழ்க்கையின் அத்தனை அம்சங்களையும் நகைச்சுவையோடு பார்க்க ஆரம்பிச்சிட்டா நாம் எல்லோரும் தப்பிச்சிடலாம். கொஞ்சம் வாழ்க்கையை அதன் போக்குல ரசிச்சுக்கிட்டு பார்த்தால் உலகமே அழகா இருக்கும். அப்படியான ஒரு படமாக இருக்கும். கதைக்கு எப்படிப் பார்த்தாலும் இந்தத் தலைப்புதான் கச்சிதமாக இருந்தது.

‘A1’ன்னா அக்யூஸ்ட்னுதான் அர்த்தம். ‘A1 படம்’னும் சொல்லலாம். எனக்கே இது முதல்படம் என்பதால் நம்பிக்கை தரவும் இந்த டைட்டில் உதவியாக இருந்தது. நிச்சயம் அடர்த்தியான கதை கொடுத்திருக்கேன்னு நம்புறேன்.இந்திப் பொண்ணை ஹீரோயினாக கொண்டு வந்திட்டிங்க...

ஆமாம். தாரா அலிஷா. இந்தியிலும், தெலுங்கிலும் நடிச்சிருங்காங்க. சொல்றதை உடனே உள் வாங்கிட்டு நடிக்கிற பொண்ணு. நாம் சொல்லிக் கொடுத்ததை செய்வாங்க. எங்க கதையை நல்லாப் புரிஞ்சுகிட்டு நடிச்சாங்க. பந்தா எதுவும் காட்டாமல் நல்ல பொண்ணாக இருந்து நடிச்சுக் கொடுத்தாங்க.

சந்தோஷ் நாராயணன் இசை கவனத்திற்கு உள்ளாகியிருக்கே...சில கதைகளுக்குன்னு ஒரு பவர் இருக்கு. எங்கே சுத்தியும் அது சரியானவங்ககிட்டே வந்து சேர்ந்திடும். படத்தில் மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர், டோனி, சாய்குமார்னு அத்தனை கேரக்டரும் என் கதைப்படியே அமைஞ்சது. என் கணக்கிலிருந்து எதுவும் தப்பாமல் என் கைக்குள் வந்தது படம்.

லவ் படம்னு வர்றவங்க இதில் இருக்கிற எமோஷன், சென்டிமென்ட், டிராமா, ஜனரஞ்சகத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு போயிடுவாங்க. இதில் நார்த் மெட்ராஸ் ஏரியாதான் அதிகம். கானாப்பாட்டு, அதற்கேற்ற மியூசிக்னா இப்ப முதல் வரிசையில் நிக்கிறது சந்தோஷ் நாராயணன்தான். அவரோ வர்ற படத்தையெல்லாம் அட்வான்ஸ் வாங்கிட்டு சேர்க்கிறவரில்லை. அவர்கிட்டே கதை சொல்லப் போனால் ‘லைன் சொல்லுங்க, பிடிச்சிருந்தா கண்டிப்பாகப் பண்றேன்’னு சொன்னார்.

‘கதையாகவே முழுக்க சொல்லிடுறேன்’னு இன்வால்வ் ஆகி சொன்னேன். சொல்லிட்டு நான் கார் ஏறி வீட்டுக்குப் போறதுக்குள்ளே என் புரடியூசர் போன் பண்ணி ‘சந்தோஷ் ஓகே சொல்லிட்டாரு’ன்னு சந்தோஷப்பட்டார். விருப்பமான ட்யூன்கள் போட்டுக் கொடுத்தார். அவர் செய்கிற படங்கள் எல்லாமே வேறுவேறு தினுசில் இருக்கிற மாதிரி வித்தியாசமான பாடல்கள். சும்மா அள்ளுது.

கேமிரா கோபி ஜெகதீஸ்வரன். களம் தெரிஞ்சு வேலை பார்க்கிறவர். அவருக்கு சுதந்திரம் கொடுத்திட்டால், படத்தை தூக்கி சுமப்பார். படம் செய்யும்போது என்னை சந்தோஷமாக வைத்திருந்தவர் தயாரிப்பாளர் ராஜநாராயணன். இத்தனைக்கும் அவருக்கும் இது முதல் தயாரிப்பு. இப்படி சந்தோஷமாக எல்லாம் அமைந்து இந்தப்படம் செய்தேன். அதுவே எனக்கு மனநிறைவு.                       

நா. கதிர்வேலன்