அழியும் மாம்பழ இனங்களை மீட்கும் 64 வயது விவசாயி!



மாம்பழம் என்றதும் நம் நினைவுக்கு வருவது, பள்ளி தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறையில் சந்தோஷமாக சுற்றித்திரிந்த நாட்கள்தான்.
அந்த நாட்களில் தினமும் மாம்பழம் சாப்பிடுவதுதான் நம் ஒரே வேலை. ஆனால், சிறுவர்களாக இருந்தபோது சுவைத்து மகிழ்ந்த மாம்பழங்கள், இப்போது இல்லை! பூச்சிக்கொல்லி தெளித்து, இரசாயனம் பூசிய, கார்பைட் கல் வைத்து பழுக்கவைத்த மாம்பழங்களைத் தான் கடைகளில் வகைவகையாக அடுக்கி வைக்கின்றனர். மாம்பழங்களின் சுவையும் மணமும் மாறிவிட்டன.

இதற்குக் காரணம் பாரம்பரிய மாம்பழங்கள் பல அழிந்து வருவதுதான். சரியாக விவசாயம் செய்யாமல் பல மாம்பழங்கள் அழிந்துவிட்டன; அழிந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் 90களில் பெரியகுளம் தோட்டக்கலை ஆராய்ச்சி மையம், ‘புளியடி’ மாம்பழ வகை முற்றிலுமாக அழிந்துவிட்டதாக வெளியிட்ட செய்தியைப் படித்து பதறிப்போன  ஜெகன்னாத ராஜா, மாம்பழங்கள் இப்படி ஒவ்வொன்றாக அழிந்து வந்தால் வருங்காலத்தில் வெளிநாட்டிடமிருந்து இறக்குமதி செய்யும் நிலைமை ஏற்பட்டுவிடுமோ என அஞ்சி மாம்பழங்களை காக்கும் பொறுப்பை, தானே ஏற்றுக்கொண்டார்!

இந்த ஜெகன்னாத ராஜா, ராஜபாளையத்தைச் சேர்ந்தவர். 64 வயதில், அழிந்துபோய்விட்டதாக சொல்லப்பட்ட புளியடி மாம்பழத்தை, மூன்று ஆண்டுகளாக தேடிக் கண்டுபிடித்து அதை கிராப்டிங் முறையில் இன விருத்தி செய்து பெரியகுளம் தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தில் சமர்ப்பித்தார்.

அழிந்துபோன மாம்பழ வகையைப் பார்த்ததும் ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியத்தில் திளைத்தனர். மூன்று ஆண்டுகள் கடின உழைப்பிற்குப்பின் கிடைத்த வெற்றிதான் அவருக்கு மேலும் அரிய வகை மா உற்பத்தி சாகுபடியில் அதீத ஆர்வத்தை உண்டாகியது.

தொடர்ந்து அழிவின் விளிம்பில் இருக்கும் அரிய வகை மாம்பழங்களை மீட்கும் பணியைத் தொடங்கினார். 2003ல் ஆரம்பித்து பதினாறு ஆண்டுகளாக தொடர்ந்து இப்பணியைச் செய்துவருகிறார். இதுவரை 5 வகையான அரிய மாம்பழங்களை இன விருத்தி செய்து, அவற்றை விவசாயிகளுக்கு வழங்கி உற்பத்தி செய்யுமாறு அறிவுறுத்தியிருக்கிறார்.

‘‘உலகில் மொத்தம் 6 ஆயிரம் மாம்பழ வகைகள் இருக்கும். அதில் இந்தியாவில் மட்டும் 3 ஆயிரம் வகைகள் இருக்கும். இதில் சுமார் ஆயிரம் வகையான மாம்பழங்கள் வணிகத்திற்காக உற்பத்தியாகிறது. உலகிலேயே இந்தியாதான் மா உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ளது. ஐம்பது சதவீத மாம்பழங்கள் இந்தியாவிலிருந்துதான் பிற நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது...’’ என்ற ராஜா, அரிய வகை மாம்பழங்களின் சிறப்புகளை விளக்கினார்.

‘‘ஒவ்வொரு மாம்பழத்திற்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. புளியடி மாம்பழம்தான் இனிப்பான மாம்பழம். அதுதான் முதலில் பூ பூத்து, காயாகி பழமாகும். அதனால், மற்ற மாம்பழங்களுக்கு முன்னரே சந்தைக்கு வந்து நல்ல வியாபாரம் நடக்கும். பஞ்சவர்ணம் என்ற மா ரகத்தை ஒரு வருடம் வரை பாதுகாத்து, குளிர்காலத்தில் கூட சாப்பிடலாம். அது கெட்டுப்போகாது. அதனால் வியாபாரம் செய்பவருக்கும் வாங்குபவருக்கும் பாதிப்பு இருக்காது. சீசன் முடிந்தும் அந்த மாம்பழங்கள் விற்பனையாகும். வீணாகாது.

கருப்பட்டிக் காய் என்ற வகை, பனை கருப்பட்டி சுவையைப் போலவே இருக்கும். அது மாம்பழத்தின் சுவையைத் தராது. வாசனையும் பனங்கருப்பட்டி போலத்தான் இருக்கும்.நூறு வயதான மாமரம் ஆயிரத்திற்கும் அதிகமான மாம்பழங்களை எளிதாகக் கொடுக்கும். அதனால் நல்ல வியாபாரமும் ஆகும்.

இந்த வகை மாம்பழங்கள், மா செடிகள் என்னிடம் மட்டுமே தற்சமயம் இருக்கின்றன. விவசாயிகள் என்னிடம் வந்துதான் இந்த ரக செடிகளை வாங்கிச் செல்கிறார்கள்...’’ என்றவர் அரிய வகை மாம்பழங்களை சிரமப்பட்டுத்தான் தேடிக் கண்டுபிடித்து இனவிருத்தி செய்கிறார்.

‘‘ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறப்பு சேர்க்கும் மாம்பழங்கள் தனியே இருக்கும். ஆனால், அந்த ஊரைத்தாண்டி அதன் சிறப்புகள் வேறு யாருக்கும் தெரியாது. அந்த அரிய வகை மரம் 30, 50 வருடங்களுக்கு முன்னால் யாரிடம் இருந்தது என்று கிராமத்தைச் சுற்றி இருப்பவரிடம் விசாரிப்போம்.

சுற்றி திரிந்து ஒரு வழியாக கண்டுபிடித்து அது சரியான மரம்தானா என உறுதிசெய்ய, காய் காய்த்து பழமாகும் சீசனில் திரும்பிச் சென்று பார்க்க வேண்டும். அந்த மாமரம் நாம் தேடிவந்த ரகம்தான் என உறுதியானதும், கிராப்டிங் முறையில் செடியை எடுத்து கட்டி விடுவோம்.

ஐம்பது கிராப்டிங் எடுத்தால், அதில் 30 - 35தான் மரக்கன்றாக வளர்ந்து நிற்கும். அதிலும், குறைந்தது 3 ஆண்டுகள் கழித்து பூ விட்டு காய் காய்க்க ஆரம்பிக்கும் நேரம்தான், அது சரியான மரம் என்ற நிச்சயம் கிடைக்கும். அதிக பொறுமையும், கடின உழைப்பும் இல்லாமல் இதைச் செய்யவே முடியாது...’’ என்ற ஜெகன்னாத ராஜா, பழமையான மாம்பழங்கள் அனைத்துமே அதிக சுவையும் மருத்துவ குணங்களும் நிறைந்தவை என்கிறார். ‘‘மக்கள் இதை வணிகத்திற்காக உற்பத்தி செய்யாமல் வீட்டிலேயே சாப்பிட்டு வந்துள்ளனர். இதனாலேயே இவை மறு உற்பத்தி செய்யப்படாமல் அழிந்துபோகும் அபாயத்தில் இருக்கிறது.

நம் நினைவுகளில் நிறைந்திருக்கும் மாம்பழத்தை, அதே சுவையுடன் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு போய் சேர்ப்பது நம் கடமை!’’ அழுத்தம்திருத்தமாக சொல்லும் ராஜாவின் குடும்பத்தினர் நான்கு தலைமுறைகளாக விவசாயம் செய்து வருகின்றனர். அவர்கள் அதிகமாக உற்பத்தி செய்தது மாம்பழங்களைத்தான். இதனாலேயே தனக்கு மாம்பழங்கள் மீது தீராத ஆசையும் அக்கறையும் இருப்பதாக குறிப்பிடுகிறார்!

ஸ்வேதா கண்ணன்