ரவியை போட்டுத் தள்ள திட்டம் தீட்டிய ஜெகன்மோகன் ரெட்டி?!



போஸ்ட் மார்ட்டம்-13

என்ன பயன்?


24 ஆயிரம் ஓட்டுகளில் பரிதலா ரவி தனது பெனுகொண்டா தொகுதியில் வெற்றி பெற்ற பிறகும் மாநில அளவில் தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மை பெறவில்லை. மாறாக காங்கிரஸ் கட்சியே ஆட்சியைப் பிடித்தது.இதனைத்தொடர்ந்துதான் பரிதலா ரவியின் கிராஃப் சரியத் தொடங்கியது.

காங்கிரஸ் அமைச்சரவை பொறுப்பேற்ற மூன்றாவது நாளில் இருந்து அனந்தப்பூர் மாவட்டத்தில் பழிக்குப் பழியான கொலைச் சம்பவங்கள் தொடர ஆரம்பித்தன. இந்த முறை மாட்டிக் கொண்டவர்கள் தெலுங்கு தேசம் தொண்டர்கள்தான்.இந்தப் பிரச்னைகளுக்கிடையில் ரவிக்கு கொடுத்திருந்த பலமான பாதுகாப்பை விலக்கிக்கொண்ட மாநில அரசு, இரண்டே இரண்டு மெய்க்காவலர்களையும், இரண்டு துப்பாக்கி ஏந்திய மெய்க்காவலர்களையும் மட்டுமே அளித்தது.

இப்படி வந்த புதிய பாதுகாவலர்களும் 40 வயதைத் தாண்டியவர்களாக இருந்தார்கள்!இது தன்னை கல்லறைக்கு அனுப்ப அரசு செய்யும் சதி என்று நினைத்து ரவி கதறத் தொடங்கினார். மாநில அரசிடம் தனது நிலையை எடுத்துச் சொல்லி தனக்குக் கூடுதல் பாதுகாப்பு கோரினார். ஆனால், தரப்படவில்லை. ஆந்திர உயர்நீதிமன்றத்தில் இது குறித்து மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் ஐந்து காவலர்களையும், ஐந்து துப்பாக்கி ஏந்திய காவலர்களையும் ரவிக்கு வழங்கும்படி பரிந்துரைத்தது.

வேறு வழியில்லாமல் அரசு இதனை வழங்கியது.ஆனாலும் ரவி தன்னைக் கொல்ல சூரி சிறையில் இருந்தபடியே முயற்சிகளைச் செய்து வருகிறார் என்பதை உணர்ந்து அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டார். எப்போதும் 40 வாகனங்கள் சூழ சென்று வந்தவர் இப்பொழுது இரு வாகன வரிசைக்கு மாறினார். இதனால் தன்னை அடையாளம் காண முடியாது என்று நினைத்தார்.

எதிர் கோஷ்டியினரின் திட்டம் வேறு மாதிரியாக இருந்தது. ரவி பயப்படுகிறார் என்பதை அறிந்தவர்கள், அந்த அச்சத்தை அதிகரிக்கும் வகையில் ரவியை விட்டுவிட்டு அவரது சுற்றத்தை அழித்தொழிக்கத் தொடங்கினர். ரவிக்கு மிகச் சிறந்த ஆலோசகராகத் திகழ்ந்த பாட்சா 2004ம் ஆண்டு தர்மாவரம் அருகே சூரியின் ஆதரவாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். போலவே ரவியின் ஆதரவாளர்களில் ஒருவரான ஆதிநாராயணன், சோமந்தபள்ளி அருகே சுடப்பட்டார்.

தகரகுண்டா பிரபாகர், ஜலகண்டி சீனிவாச ரெட்டி, தாமோதர் ரெட்டி, பாஸ்கர் ரெட்டி... என சுடப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தனது வீட்டின் அருகே வாக்கிங் சென்ற ஆர்.கே. என்னும் ரவியின் ஆலோசகரும் வெட்டிச் சாய்க்கப்பட்டார்.சோமந்தபள்ளியில் நடந்த இடைத்தேர்தலில் பிரசாரத்துக்கு ரவி வந்தால் அவரைப் படுகொலை செய்வது என திட்டமிட்ட சூரி தரப்பு அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது. இதனை ஸ்மெல் செய்த ரவி, தனது பிரசாரத்தை ரத்து செய்தார்.

சூரி தரப்பு என்றில்லை.. அரசுத் தரப்பும் ரவியின் சிறகுகளை முறிக்கும் வேலையில் இறங்கியது. ரவியின் கொடுக்கல், வாங்கல்களை கவனித்துக் கொண்டிருந்த பவுரலா கிருஷ்ணனையும் இவரது தம்பியையும் ‘ஸ்டேஷனுக்கு வாங்க... கொஞ்சம் விசாரிக்கணும்...’ என்று அனந்தப்பூர் டிஎஸ்பி நரசிம்ம ரெட்டி போன் செய்து அழைத்தார்.

மரியாதைக்கு போய் வருவோம் என்று நினைத்து கிளம்பிய அவர்களை வழியிலேயே சூரி தரப்பு மடக்கி சொர்க்கத்துக்கு அனுப்பியது.பெயருக்கு கைதியாக இருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் அதி தீவிரத் தொண்டர், தலைவர் என்கிற முறையில் சூரிக்கு சிறையில் ராஜமரியாதை கிடைத்தது. சிறையில் அவரால் சுதந்திரமாக செல்போனில் பேச முடிந்தது. இதனால்தான் தனது ஆதரவாளர்களுக்கு பல கொலைகளுக்கு இன்ஸ்ட்ரக்‌ஷனும், ஸ்கெட்ச்சும் போட்டு அவரால் கொடுக்க முடிந்தது.

ஜெகன்மோகன் ரெட்டி கர்நாடகாவில் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டபோது அங்கும் ரவி அவருக்கு தொல்லைகள் கொடுத்தார்.
எனவே, ரவியை ஒழித்துக் கட்டினால்தான் நிம்மதியாகத் தொழிலை நடத்த முடியும் என்று நினைத்த ஜெகன்மோகன் ரெட்டி, சிறையில் பலமுறை சூரியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். எல்லாமே ரவியை போட்டுத்தள்ளும் திட்டத்துக்காகத்தான் என்கிறார்கள்.

இதற்கு செர்லாபள்ளி ஜெயில் கண்காணிப்பாளர் மிலிகாந்தும் துணை போயிருக்கிறார் என்று ரவியின் கொலைக்குப் பின்பு தெலுங்கு தேசம் கட்சிக்காரர்கள் புகார் பட்டியல் வாசித்தனர்!தன்னை கொலை செய்ய ஜெகன்மோகன் ரெட்டி முயற்சிக்கிறார் என்று ரவி பகிரங்கமாகப் புகார் செய்ய... இதனை மறுத்து ஜெகன்மோகன் ரெட்டி புலிவெந்துலா கோர்ட்டில் ரவியின் மீது மான நஷ்ட வழக்குத் தொடர்ந்தார்.

சம்மனைப் பெற்றுக் கொண்ட ரவி, கோர்ட்டுக்கு செல்லும் வழியில் தன்னைக் கொல்ல சதி நடப்பதாக புகார் செய்தார். போலீஸ் பலத்த பாதுகாப்பு தரும் என்று சொல்லியும் தன் ஆதரவாளர்களும் உடன் செல்ல அனுமதி வேண்டும் என்று கோரினார் ரவி. அது நிராகரிக்கப்பட்டது என்றாலும் இரு வாகனங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு வந்து சென்றார் ரவி.இந்த நேரத்தில்தான் ரவி தனக்குத்தானே யோசிக்கத் தொடங்கினார்.

எத்தனை நாட்கள்தான் எதிர்ப்பது..? எத்தனை கொலைகளைத்தான் செய்வது..? பேசாமல் சமாதானம் பேசி விடலாமே..?

இந்த முடிவுக்கு வந்ததும் காலம் கடத்தாமல் சூரியைச் சிறையிலேயே நேரில் சென்று சந்தித்திருக்கிறார் ரவி!ஆனால், ‘‘நீ செத்தால்தான் என்னால் நிம்மதியாகத் தூங்க முடியும்...’’ என்று சூரி நேருக்கு நேராகத் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டதால் சமாதானக் கொடி பாதியிலேயே உடைந்து போனது!

2004 - 2005 ஆண்டுகளில் ரவி தனது அடிதடி, கொலை சம்பவங்களைச் சுருக்கிக் கொண்டாலும் கர்நாடக எல்லையில் இருக்கும் சுரங்கங்களில் மாமூல் வசூலிப்பது, அனந்தப்பூர் மாவட்டத்தின் வழியாக சரக்கை ஏற்றிச் செல்லும் லாரிகளிடம் கப்பம் வசூலிப்பது... என தனது ‘அளப்பறையை’ ரவி தொடரவே செய்திருக்கிறார். என்றாலும் வீட்டை விட்டு வெளியே செல்வதைத் தவிர்த்திருக்கிறார்.

தெலுங்கு, தமிழ் மசாலா படங்களில் வில்லன் கோஷ்டியினர் ஒரே நிற டாடா சுமோக்கள் சூழ சர்... சர்... என பறப்பார்கள் அல்லவா..? அப்படித்தான் பரிதலா ரவியும் வலம் வந்திருக்கிறார். இதற்காகவே ஒரே வண்ணத்தில் பல வண்டிகளை வாங்கி தன் வீட்டு வாசலில் நிறுத்தினார்.
எதிரிகளின் துப்பாக்கிக் குண்டில் இருந்து தப்பிக்க புல்லட் ப்ரூஃப் ஆடையையும் வாங்கினார். ஒரே எண் கொண்ட காரில் பயணிப்பதைத் தவிர்த்தவர் வண்டி மாறி பயணிப்பதை வழக்கமாக்கிக் கொண்டார்.  

சிறையில் இருந்த சூரிக்கு இருப்பு கொள்ளவில்லை. ரவியே நேரில் வந்து சமாதானம் பேசியதை தனக்குக் கிடைத்த வெற்றியாக நினைத்த சூரி, இதுதான் தன் பரம எதிரியைப் போட்டுத்தள்ள சரியான நேரம்... என்ன செய்யலாம்..?

யோசித்தபடியே குறுக்கும் நெடுக்குமாக நடந்தார் சூரி.மனதுக்குள் திட்டம் ஒன்று உருவானது. அது சரியா என்பதைக் குறித்து சிறையில் தனக்குக் கிடைத்த புதிய நண்பரான ஜூலகண்டி சீனிவாச ரெட்டியுடன் கலந்தாலோசித்தார்.‘சூப்பர் திட்டம்...’ என ஜூலகண்டி சீனிவாச ரெட்டி பச்சைக் கொடி காட்ட...புன்னகையுடன் சூரி அதை செயல்படுத்தத் தொடங்கினார்!      
           
(தொடரும்)  

கே.என். சிவராமன்