சென்னை டூ ஜெர்மன்...சைக்கிளிஸ்ட் தமிழன்!



பத்து கிமீ முதல் 200 கிமீ வரை சைக்கிளில் பயணம் செய்பவர்களைப் பார்த்திருக்கிறோம்.சென்னை டூ ஜெர்மன் வரை சைக்கிளில் செல்பவரை கேள்விப்பட்டிருக்கிறோமா? நரேஷ்குமார் அதைத்தான் செய்திருக்கிறார். இரண்டு கண்டங்களைக் கடந்த முதல் நபர், 13 நாடுகள்... 90 நாட்கள்... 8,700 கி.மீ பயணம்... என அசத்துகிறார்.  

‘‘ஆரோக்கியத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் மட்டுமில்ல... சமூகப் பிரச்னைக்கும் குரல் கொடுக்க நினைச்சேன். அதனால்தான் இந்தப் பயணம்...’’ புன்னகைக்கும் நரேஷ்குமார், இரண்டு பேர் அமர்ந்து ஓட்டும்படியான இணைந்த சைக்கிளுக்கு சொந்தக்காரராக அடுத்த சாதனைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

‘‘வடசென்னை கொடுங்கையூர்லதான் பிறந்தேன். அப்பா நாகபூஷண் வாட்ச் சேல்ஸ்மேன். அம்மா மனோகரி இல்லத்தரசி. ஒரு அக்கா. ஸ்காலர்ஷிப்லதான் நான் டாக்டர் எம்ஜிஆர் யுனிவர்சிட்டில இன்ஜினியரிங் படிச்சேன். ரெண்டு மூணு வருஷங்கள் இந்தியாவுல வேலை செய்துட்டு அமெரிக்கா போனேன்.

ஆனா, வாழ்க்கைல எதையோ இழந்த மாதிரியே ஃபீலிங். ரன்னிங், சைக்கிள்தான் அப்ப கைகொடுத்தது. ஒருமுறை அல்ட்ரா ரன்னிங்குக்காக நேபாளத்துல இருக்கிறப்ப ஒருத்தர், ‘பொண்ணு வேணுமா சார்’னு கேட்டார். அதோட பெருமையா ‘குழந்தைகளும் இருக்காங்க சார்’னு சொன்னார்!
ஷாக் ஆனேன்.

அப்பதான் இனி சும்மா ஓடக் கூடாது... இந்த அவலத்தை மக்கள்கிட்ட சேர்க்கணும்... பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு கொடுக்கணும்... கொத்தடிமைகளை ஒழிக்கணும்... இதுக்காகவே சைக்கிளிங் செய்யணும்... ஓடணும்னு தோணிச்சு. இதுக்குப் பின்னாடி எவ்வளவு பணம் புழங்குது தெரியுமா...?’’ ஆவேசப்படும் நரேஷ்குமார், பல அமைப்புகள் இதற்காக முயற்சிப்பதையும் இவற்றை எல்லாம் ஒழிக்க பணம் தேவைப்படு
கிறது என்றும் குறிப்பிட்டார்.

‘‘அதனால பணம் திரட்டவும் ஓட ஆரம்பிச்சேன். குழந்தைகள் பாலியல் பலாத்காரத்தை எதிர்த்து ஓடணுமா... வெறுமனே சொன்னா யாரும் கேட்க மாட்டாங்களானு நீங்க கேட்கலாம்.உடல் உழைப்பு இல்லாம பணம் கொடுத்தாலோ... நம்மை நாமே வருத்திக்காம எதையும் சொன்னாலோ... அது மக்கள்கிட்ட போய்ச் சேராது. நீங்க சொல்றதை அவங்க காது கொடுத்து கேட்கணும்னா... அவங்களால முடியாததை அல்லது செய்யத் தயங்குவதை நாம செஞ்சு காட்டிட்டு சொல்லணும்!’’ அழுத்தமாகச் சொல்லும் நரேஷின் சாதனைகள் பெரிது.  

‘‘முதல் சாதனை நியூசிலாந்துல முதல் இந்தியனா அதிகபட்ச தூரமா 3100 கிமீக்கு மேல இருந்து கீழே ஓடினேன். அதீத குளிர், உறையுற பனி... அதுல ஒரு மனுஷன் ஓடி வர்றான்னா நிச்சயம் மக்கள் நின்னு கேட்பாங்க இல்லையா..? கேட்டாங்க... இந்தப் பிரச்னைகளை சொன்னேன்.

அப்புறம் இந்த சைக்கிள்லயே அதே நியூசிலாந்துல மேல இருந்து கீழ பயணம் செஞ்சேன். இந்த டபுள் சைக்கிள் எதுக்கு தெரியுமா..? யாராவது ஏன் இப்படினு கேட்டதும் அவங்களையும் சைக்கிள்ல ஏத்திட்டு மிதிப்பேன்... அப்ப என் பிரசாரத்தை மேற்கொள்வேன்... அவங்களும் சைக்கிள் மிதிப்பாங்க!
இப்படி மூணு வயசு முதல் 80 வயசு வரைக்கும் இருக்கறவங்க என் கூட சைக்கிள் ஓட்டியிருக்காங்க.

இதன் வழியா நாற்பதாயிரம் டாலர் கலெக்ட் ஆச்சு. அப்புறம் ஆஸ்திரேலியா முழுக்க சைக்கிள் பயணம். அதுல ஆன்லைன் பாலியல் பிரச்னைகள் பத்தி விழிப்புணர்வு கொடுத்தேன்...’’ என்ற நரேஷ் இந்த நேரத்தில்தான் கிண்டி ரோட்டரி க்ளப் தன்னை அணுகியது என்கிறார்.

‘‘இந்த வருஷம் தங்களோட கான்ஃபிரன்ஸ் ஜெர்மனில நடக்குதுனு சொல்லி சென்னை டூ ஜெர்மனி சைக்கிள் ஓட்ட முடியுமானு கேட்டாங்க. உடனே ஓகே சொன்னேன். 90 நாட்கள்... முழுமையா 74 நாட்கள்... மீதி நாட்கள் எல்லாம் விசாவுக்காக வெயிட்டிங்லயும், சைக்கிள் பயணத்தில ஏற்பட்ட பஞ்சர், காலநிலை பிரச்னைகள்லயும் போனது.

இப்படியா பிப்ரவரில தொடங்கி மேல என் பயணத்தை முடிச்சேன். இந்தியாவுல 38 டிகிரி வெயில். ஈரான்ல மழை. துருக்கியில 12 மணி நேரம் தொடர் மழை. கூடவே உறைகிற பனி...  இந்தப் பயணத்துல 130க்கும் மேலான மக்கள் என் கூட சைக்கிள் ஓட்டினாங்க! யார் யாரோ உதவினாங்க. சாப்பாடை என் பேக் முழுக்க நிரப்பிக் கொடுத்தாங்க. செக் பாயிண்ட் போலீஸ் எனக்கு தங்க இடம் கொடுத்து அடுத்த நாள் என் கூட சைக்கிள் ஓட்டிட்டு வந்தாங்க.

இது என் ஒருத்தனால சாத்தியப்படலை. பலருடைய கைகள் சேர்ந்து முடிச்ச சாதனை!’’ என்று சொல்லும் நரேஷ்குமார், அடுத்து கிர்கிஸ்தான் சில்க் ரோடில் நடக்கவிருக்கும்  உலகிலேயே கடினமான சைக்கிள் ரேஸு க்கு தயாராகி வருகிறார்.  

ஷாலினி நியூட்டன்