பெண்களை இழிவுபடுத்தும் நாசா!



ஆண் - பெண் என்கிற  பாலின பாகுபாடு நாசாவையும் விட்டு வைக்கவில்லை. ‘‘விண்வெளி ஆடைகள், குளிர்சாதனப் பெட்டி, மொபைல், செயற்கை நுண்ணறிவு, கார் உள்ளிட்ட விண்வெளி வீரர்களுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் ஆண் விண்வெளி வீரர்களுக்கு உகந்த மாதிரி மட்டுமே நாசாவில் வடிவமைக்கப்பட்டுள்ளன...’’ என்ற விண்வெளி வீராங்கனைகளின் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

1961ம் வருடம் முதன் முறையாக ஓர் ஆண் விண்வெளி வீரரைத்தான் விண்வெளிக்கு அனுப்பியது நாசா. அதற்குப் பிறகு இருபது வருடங்கள் கழித்து 1983ல் முதன் முறையாக சல்லி ரைட் என்ற விண்வெளி வீராங்கனையை விண்வெளிக்கு அனுப்பியது.அன்று முதல் இன்று வரை நாசாவில் இருந்து 40 பெண்கள் மட்டுமே விண்வெளிக்குச் சென்று வந்திருக்கின்றனர். ஆனால், விண்வெளிக்குச் சென்று வந்த ஆண்களின் எண்ணிக்கையோ முந்நூறைத் தாண்டும்.

இந்த விவரங்களையெல்லாம் தூசு தட்டிப் பார்ப்பதற்காகவே ஒரு சம்பவம் சமீபத்தில் அரங்கேறியது.பெண் விண்வெளி வீராங்கனைகளை விண்வெளிக்கு அழைத்துச் சென்று, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே அவர்களை நடக்க விட வேண்டும். பிறகு அவர்களை வைத்தே மின்கலன்களைப் பொருத்த வேண்டும் என்று ஒரு திட்டத்தை இரண்டு மாதங்களுக்கு முன்பு தீட்டியது நாசா.

வரலாற்றிலேயே முதன் முறையாக பெண்கள் மட்டுமே விண்வெளியில் மேற்கொள்ளவிருந்த ஒரு சாகச திட்டம் இது. இதற்காக கிறிஸ்டினா கோச், ஆனி மெக்ளைன் என்ற இரு விண்வெளி வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இந்த அற்புதத் திட்டத்தை திடீரென ரத்து செய்தது நாசா.

விண்வெளியில் விண்கலத்தைவிட்டு வெளியே செல்லும்போது பயன்படுத்தும் விண்வெளி ஆடைகள் பெண்களுக்கு இல்லை என்பதுதான் இந்த ரத்துக்குக் காரணம். அந்த இரு விண்வெளி வீராங்கனைகளுக்கும் விண்வெளி ஆடை இரண்டு தேவைப்பட்டது. ஆனால், இருந்ததோ ஒன்று மட்டும்தான்.

இந்தியாவில் இரண்டு பெண்கள் முன்னின்று நிகழ்த்திய ‘சந்திரயான் - 2’ நிகழ்வுடன் ஒப்பிட்டு நாசாவின் செயலை இப்போது கேலிசெய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.