முப்படைக்கும் ஒரே தலைமைத் தளபதி… மத்திய அரசின் முடிவு சரியா?



இந்த வருட சுதந்திர தின உரையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இராணுவம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.  ஆம்! ‘இந்தியாவின் முப்படைகளான தரைப்படை, கப்பல் படை, விமானப்படை ஆகியவற்றுக்கு ஒரே பொதுவான தளபதி நியமிக்கப்படவுள்ளார்...’ என்று அறிவித்தார் மோடி. இந்த புதிய பதவி தலைமை ராணுவ அதிகாரி (Chief of Defence Staff - CDS) என்று அழைக்கப்படுவார்.

ஏன் திடீரென இப்படி ஒரு பதவி உருவாக்கப்படுகிறது..?

இது திடீரென எடுத்த முடிவில்லை! கார்கில் போருக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. 1999ம் ஆண்டிலேயே கார்கில் மீளாய்வுக் குழு (Kargil Review Committee) இந்தப் பரிந்துரையை அப்போதே முன்வைத்ததாகவும், ஆனால் அது அப்போது நிராகரிக்கப்பட்டுவிட்டதாகவும், இப்போது அதுதான் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றும் அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள்.இப்படி ஒரு புதிய பதவி உருவாக்கப்படுவதன் தேவை என்ன என்று பார்ப்போம். நமது இராணுவத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு படைக்கும் ஒரு தலைமைத் தளபதி இருப்பார்.

தரைப்படைக்கு Chief of Army Staff (COAS) என்றும், கப்பல் படைக்கு Chief of Naval Staff (CONS) என்றும், விமானப்படைக்கு  Chief of the Air Staff (CAS) என்றும் சொல்வார்கள். இந்த முப்படைகளின் தளபதிக்கும் தலைமைத் தளபதி நமது ஜனாதிபதிதான். இதுதான் இப்போது வரை நடைமுறை.  இந்திய இராணுவம் உலகின் மிகப் பெரிய இராணுவங்களில் ஒன்று. நமது இராணுவத்தின் வலிமை இன்று வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உயர்ந்துகொண்டே இருக்கிறது. தரைப் படை, விமானப்படை, கப்பல் படை என முப்படைகளுமே இன்று நன்கு வளர்ந்துள்ளன.

இன்றும் நமது மொத்த பட்ஜெட்டில் பெரும்பகுதி இராணுவச் செலவுகளுக்காகத்தான் இருக்கிறது என்பதால் நமது இராணுவ உட்கட்டமைப்பு வசதி நன்றாகவே உள்ளது. சுயமாக அணுகுண்டு தயாரித்து வைத்திருக்கும் நாடுகளில் ஒன்றாக நாமும் இருக்கிறோம். அதாவது சீனா, அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மன், இஸ்ரேல் போன்ற வளர்ந்த நாடுகளின் இராணுவ தரத்துக்கு நிகராக நம்மிடமும் மிகச் சிறந்த வீரர்கள் உள்ளனர். மேலே சொன்ன எல்லாமும் உண்மை என்றாலும் நமது இராணுவம் இயங்கும் முறைகளில் கடுமையான நடைமுறைச் சிக்கல்கள் நிலவுகின்றன.

அதில் முதன்மையானது அடிப்படையான தகவல் பரிமாற்றங்களில் ஏற்படும் கோளாறுகள். மூன்றுவிதமான தலைமைகள் இருப்பதால் நமது இராணுவத்தினரிடையே ஒத்திசைவு மற்றும் கூட்டுச் செயல்பாடு சிறப்பாக இருப்பதில்லை. சாதாரண விஷயங்களில் இப்படி என்றால் பரவாயில்லை. போர்ச்சுழல்களில் இது நிகழ்ந்தால் கடுமையான பின்னடைவையும் இழப்புகளையும் நாம் சந்திக்க நேரிடும். அதனால்தான் கார்கில் போர் காலத்திலேயே இராணுவ நிபுணர்கள் இந்த முப்படைகளையும் இணைப்பதற்கான அதிகாரபூர்வ அமைப்பு அல்லது பதவி வேண்டும் என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஜனாதிபதிதான் முப்படைகளின் தளபதி என்று சொன்னாலும் அது ஓர் அதிகாரப் பதவி அல்ல. கிட்டத்தட்ட ஒரு கவுரவப் பதவிதான். இராணுவ அமைச்சர் அல்லது இராணுவ தலைமைச் செயல் அதிகாரி ஆகியோர்தான் இராணுவம் சார்ந்த முக்கிய முடிவுகளை எப்போதுமே எடுப்பார்கள். இராணுவம் சார்ந்து... அதன் துறைசார்ந்த சிக்கல்கள், சவால்கள், சாத்தியங்கள் சார்ந்து... ஜனாதிபதியால் யூகிக்க முடியாது. எனவே, அந்தப் பதவி பெயரளவில் இருப்பதைவிடவும் நிஜமாகவே துறை சார்ந்த ஒருவரிடம் இருப்பது மிகவும் ஆக்கபூர்வமானது என்று இராணுவ நிபுணர்கள் கருதுகிறார்கள்.  அதற்குத்தான் இப்போதைய மத்திய அரசு செயல் வடிவம் கொடுக்க முன்வந்துள்ளது.

இதற்கென இப்போது ஒரு நிர்ணயக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழு இன்னமும் இரண்டு மூன்று மாதங்களில் தன்னுடைய பரிந்துரைகளை அரசுக்கு சொல்லும். அதன் அடிப்படையில் இந்த புதிய சி.டி.எஸ் பதவி உருவாக்கப்படும். இந்தப் புதிய தலைமைப் பதவியில் இருப்பவர்தான் இனி முப்படைகளின் செயல்பாடுகள், அதற்குத் தேவையான கொள்முதல்கள், நவீனமயமாக்கல்கள் ஆகிய முக்கிய முடிவுகளை எடுப்பார்.  போர்க் காலங்களில் எல்லா முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரமும் இவரிடமே இருக்கும்.

அதேபோல் இந்த புதிய இராணுவத் தலைமை அதிகாரி பிரதமருக்குக் கட்டுப்பட்டவரா, வீரர்களுக்கான இராணுவப் பயிற்சி தொடர்பான விவரங்கள் மற்றும் பென்சன் போன்ற விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கக்கூடியவரா என்பதை எல்லாம் அமைக்கப்பட்டுள்ள நிர்ணயக் குழு முடிவு செய்து பரிந்துரைக்கும்.இப்போது ஒருங்கிணைந்த இராணுவ அதிகாரி (Chief of Integrated Defence Staff (CIDS)) என்று ஒரு பதவி உள்ளது. இராணுவ உளவு அமைப்புகள் மற்றும் அவற்றின் கூட்டுச் செயல்பாடுகள், பயிற்சி மற்றும் அவசரகால மீட்புப் பணிகள், சேவைகள் ஆகியவை உட்பட சில  முக்கியப் பணிகளை இவர்தான் பார்த்துவருகிறார்.

இனி, இந்தப் பணிகளின் தலைமையும் புதிய சி.டி.எஸ் அதிகாரியிடமே செல்கிறது.அதே போல், நவீன இராணுவ டொமைன்கள், வான்வெளி, சைபர் படை, சிறப்புப் படை உட்பட அனைத்துவகையான இராணுவத் தலைமையாகவும் இனி சி.டி.எஸ் என்ற ஒற்றைப் பதவியே இருக்கும். இந்த ஆய்வுக் குழு பாதுகாப்புக்கான அமைச்சகக் குழுவில் (Cabinet Committee on Security) இவரை இடம்பெறச் செய்வது தொடர்பாகவும் பரிசீலித்து வருகிறது. ஏற்கெனவே உள்ள முப்படைகளின் தளபதிகள் அந்தந்தப் படைகளுக்கான தலைமையாகவும் அதன் முதன்மை அதிகாரியுமாகவே இனி இருக்க முடியும். அதிகாரம் சி.டி.எஸ் பதவிக்குத்தான் செல்கிறது என்று நிபுணர்கள் கணிக்கிறார்கள்.

இப்போது ராணுவத் தலைமைத் தளபதியாக உள்ள ஜெனரல் பிபின் ரவாத்தான் இந்தியாவின் முதல் CDS அந்தஸ்துக்கு வருவார் என்றும் ஆருடம் சொல்கின்றனர். இதெல்லாம் ஒருபுறம் இருக்க, இப்படி இந்தியாவில் இராணுவ அதிகாரத்தை ஒரே ஒரு தலைமையின் கீழ் திணிப்பது ஆபத்தானது என்ற குரல்களும் எழத் தொடங்கிவிட்டன. நமது பக்கத்து நாடான பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்களைக் கவிழ்த்துவிட்டு இராணுவ அதிகாரிகள் திடீரென ஆட்சியைக் கைப்பற்றுவது அடிக்கடி நடப்பதற்குக் காரணம் இராணுவத் தலைமையை ஒருவரிடம் குவித்திருப்பதுதான் என்பது அவர்கள் வாதம். அதில் உண்மையில்லாமல் இல்லை.

நம்முடைய அரசமைப்புச் சட்டத்தின்படியும் இராணுவ நடைமுறைகளின் படியும் முப்படைகளின் தளபதிகள் இப்போது சேர்ந்து இயங்க முடியாது என்பதால் இங்கு இராணுவ ஆட்சி என்ற நிலையே உருவாகாது. ஆனால், ஒற்றைத் தலைமையைக் கொண்டு வருவதன்மூலம் இதற்கான முதல் விதைதூவப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் நமக்கு எழுகிறது. ஆயுதம் வைத்திருப்பவர்களிடம் அதிகாரமும் கொடுத்தால் விளைவுகள் மோசமாக இருக்கும். எல்லா சர்வாதிகார, இராணுவ ஆட்சி நாடுகளுமே இப்படித்தான் ஜனநாயகமாக அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து பிறகு அவதிப்பட்டன... நெருப்போடு விளையாட வேண்டாம் என்கிறார்கள் சமூகவியல் ஆய்வறிஞர்கள். மொத்தத்தில் இந்த முடிவு நல்லதா கெட்டதா என்பதை எதிர் காலம்தான் சொல்ல வேண்டும்.

 இளங்கோ கிருஷ்ணன்