தங்கம் விலை உயர்வு ஏன்?



ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டாக இருந்தாலும் சரி... கோயம்பேடு மார்க்கெட்டாக இருந்தாலும் சரி... எப்படி காய்கறியின் விலை ஒன்றாக இருக்கிறது..?உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என இதற்கு விடை அளிக்கலாம். அதாவது சம்பந்தமே இல்லாதவர்களின் சம்மதத்துடன் எல்லா இடங்களிலும் ஒரே விலை நிர்ணயிக்கப்படுகின்றன.இதே சூத்திரம்தான் வரலாறு காணாத அளவுக்கு இன்று தங்கம் விலை உயரவும் காரணம். சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையை லண்டனில் உள்ள ஒரு குழு தினமும் நிர்ணயம் செய்கிறது.

தங்கத்தின் உற்பத்திக்கும், தேவைக்கும் இடையிலான இடைவெளி; பல்வேறு நாட்டு அரசாங்கங்களின் தங்க கொள்முதல் கொள்கைகள்; கச்சா எண்ணெய் விலை; அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டி மாற்ற கொள்கைகள்; பொருளாதார வல்லமை படைத்த நாடுகளுக்கிடையே ஏற்படும் வர்த்தகப் போர்; உலக பொருளாதாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் நாடுகளில் ஏற்பட்டுள்ள குழப்பமான அரசியல்; போர்க்கால சூழ்நிலை... என தங்கத்தின் விலை உயர்வதற்கு காரணிகளாக சொல்லப்படுகின்றன.

சுருக்கமாக சொல்வதென்றால் அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் தொடர்பிருக்கிறது! சர்வதேச அளவில் 2 லட்சம் டன் அளவுக்கு தங்கத்தின் புழக்கம் இருந்தாலும், 2018ம் ஆண்டு புள்ளிவிவரப்படி, சுமார் 8,000 டன் தங்க கையிருப்புடன் அமெரிக்க அரசு முதலிடத்தை வகிக்கிறது. சுமார் 600 டன் கையிருப்புடன் இந்திய அரசு 10வது இடத்தில் உள்ளது. ஆனால், இந்திய மக்களிடம் மட்டும் சுமார் 25 ஆயிரம் டன் தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் சொல்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 100 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1,300 மடங்கு அளவுக்கு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

அதாவது 1920ல் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.21தான். 1960ல் இது ரூ.80 ஆக உயர்ந்தது. இதையே கிட்டத்தட்ட 40 ஆண்டுகளில் வெறும் 60 ரூபாய் அளவுக்கே சவரனின் விலை உயர்ந்தது என்றும் சொல்லலாம்.ஆனால், அடுத்த 20 ஆண்டுகளில், அதாவது 1987 வாக்கில், ஒரு சவரன் 2,016 ரூபாய்க்கும்; 2008ல் 10,000 ரூபாய்க்கும் விற்றது. இந்நிலையில் 2008ல் ஏற்பட்ட உலகளவிலான பொருளாதாரத் தேக்க நிலை, சர்வதேச நாடுகளுக்கு ஒரு பாடத்தை கற்பித்தது. அதாவது, அனைத்து நாட்டு மத்திய வங்கிகளும், புழக்கத்தில் இருக்கும் தங்கள் நாட்டின் நாணயத்தைத் தவிர, தங்கத்தை ஒரு ‘ரிசர்வ்’ நாணயமாகக் கருதி அதனை அதிகளவு கொள்முதல் செய்து கஜானாவில் இருப்பு வைக்க முடிவு செய்தன.

இதன் எதிரொலிதான் இன்றைய தங்கத்தின் மீதான விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.சரி, உலக நாடுகளுக்கு எல்லாம் யார்தான் தங்கத்தை சப்ளை செய்கின்றனர்?தென்னாப்பிரிக்கா, சீனா, பெரு போன்ற நாடுகள்!இந்தியாவைப் பொறுத்தவரை, ஓர் ஆண்டின் மொத்த தங்க உற்பத்தியின் அளவு சுமார் 14 டன் மட்டுமே. ஆனால், தங்கப் பயன்பாட்டில் - மக்கள் நுகர்வில் - சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. அதனால்தான், ஆண்டுக்கு சுமார் 800 டன் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்கிறது. ஆமாம்... கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக, தங்கத்தைத்தான் இந்தியா அதிகளவில் இறக்குமதி செய்கிறது.
தங்கத்தின் மீதான மோகம் மக்களிடையே அதிகரித்து வருவதால், தங்க மார்க்கெட்டில் 22 காரட் ஆபரணத் தங்கம் (ஒரு பவுன் 8 கிராம்) வரலாறு காணாத வகையில் ஆகஸ்ட் 13ம் தேதி ரூ.29 ஆயிரத்தைத் தாண்டியது. இந்தியாவில் மட்டும் கடந்த ஓராண்டில் சுமார் 24%மும், கடந்த 3 மாதங்களில் 15%மும் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதுமே பல நாடுகளிலும் தனிமனித வருமானம் அதிகரித்து வருவதால், தங்கத்தின் மீதான சில்லறை முதலீடும் அதிகரித்து வருகிறது.‘தோண்டத் தோண்ட தங்கம் கிடைக்கும்’ என்று கூறுவதுபோல் சர்வதேச தங்க மார்க்கெட்டில் பின்னிக் கிடக்கும் சூழ்ச்சி வலைப்பின்னல்கள் விவரிக்க முடியாதவை.

முதலாவதாக, அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர், தங்கத்தின் விலையில் உறுதியான தாக்கத்தைச் செலுத்துகிறது. பெரும் பொருளாதாரத்தைக் கொண்டவை இவ்விரு நாடுகளும். இந்நிலையில் டாலருக்கு நிகரான சீன நாட்டின் யுவான் மதிப்பு, ஒரு டாலருக்கு 7 யுவான் என்ற அளவுக்கு வீழ்ந்துள்ளது! இதற்கு, சீன அரசை அமெரிக்கா கடுமையாக குற்றம் சாட்டுகிறது.அடுத்ததாக, இந்தியாவைப் பொறுத்தவரை தங்கத்தின் மீது இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து, 12.5 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

இதனால் தங்கத்தின் விலை கடந்த மத்திய பட்ெஜட் அறிவிப்புக்கு பிந்தைய காலகட்டத்தில் அதிகளவில் உயரத் தொடங்கியது. மூன்றாவதாக, கடந்த ஜூலை 31ம் தேதி அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து 2 - 2.5 சதவீதமாக நிர்ணயித்தது.அதேபோல், இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. மேற்கண்ட வங்கிகளின் வட்டிவிகிதக் குறைப்பு, பணத்துக்கு பதில் தங்கத்தில் முதலீடு செய்யும் ஆர்வத்தை மக்கள் மத்தியில் தூண்டியது.

விளைவு, தங்கத்தின் விலை அதிகரிப்பு!நான்காவதாக, சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, அமெரிக்க - சீன வர்த்தகப் போர் அல்லது ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது ஆகியவை மூலம் வளர்ச்சியில் மந்தம் ஏற்பட்டு முதலீடுகளை பலவீனமடையச் செய்யும் என்ற கணிப்பு. ஐந்தாவதாக, உலக தங்க கவுன்சில் தரவுகளின்படி பார்த்தால் மத்திய வங்கிகள் கடந்த காலாண்டில் 224.4 டன் தங்கத்தை வாங்கியுள்ளன. ஆனால், ஆண்டின் முதல் பாதியில் 374 டன் வாங்கப்பட்டுள்ளது! 2018ல் இதே காலக்கட்டத்தில் 238 டன் தங்கம் மட்டுமே உலக நாடுகளின் மத்திய வங்கிகளால் வாங்கப்பட்டுள்ளன.

எப்படி கூட்டிக் கழித்துப் பார்த்தாலும், வல்லரசு நாடுகள் மட்டுமல்லாது வளரும் நாடுகளும் தங்கத்தை வாங்கி கஜானாவை நிரப்புவதில் குறியாக இருப்பதை அறியலாம். இதனாலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. சரி... இப்படி வாங்கப்படும் தங்கங்கள் எங்கு முதலீடு செய்யப்படுகின்றன..? மத்திய அரசின் தங்கப் பத்திரங்கள் (Sovereign gold bonds), மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கோல்டு இடிஎஃப் மற்றும் கோல்டு ஃபண்டுகள் ஆகியவை முக்கியமான முதலீட்டு வழிகளாக கதவைத் திறந்து வைத்துள்ளன. இந்த பாண்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது.

ஒருவர் ஒரு நிதி ஆண்டில் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை வாங்க முடியும். முதலீட்டுக் காலம் எட்டு ஆண்டுகள்; அதன்பிறகு அதை விற்றால் நீண்ட கால மூலதன ஆதாய வரி கிடையாது. அதேபோல், ஆன்லைன்மூலம் பங்கு முதலீடு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு பாண்டுகளை வாங்க முடியும்.இந்த முறையில் வெகு சிலர் மட்டுமே முதலீடு செய்கின்றனர். ஆனால், பெரும்பாலானவர்கள் வீட்டில் அல்லது வங்கி லாக்கரில் பாதுகாத்து வைக்கின்றனர். குறிப்பாக மத்திய தர வர்க்கமும் அடித்தட்டு வர்க்கமும் இப்படிச் செய்கின்றனர். ரைட்.

தங்கத்தின் விலை உயர்வைப் பார்த்துவிட்டு, இருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு சாமான்யன், மோதிரமோ, செயினோ செய்யச் சொல்லி கடைக்குப் போகிறான் என வைத்துக் கொள்வோம்.‘செய்கூலி, சேதாரம்’ என்ற வார்த்தைகள் அவனைத் திக்குமுக்காட வைத்துவிடும்.உண்மையில் இதில்தான் நகைக் கடைக்காரர்களின் பிழைப்பே அடங்கியுள்ளது. அதாவது, சேதாரம் என்பது நகை செய்யும்போது ஏற்படும் உலோகத்தின் இழப்பு. இதனை ஈடுகட்ட, நகையைப் பொறுத்து 5 முதல் 30% வரை சேதாரத் தொகையை வசூலிக்கின்றனர். இதெல்லாம் வாடிக்கையாளரின் தலையில்தான் விழும்.

நகைக்கடைக்காரர்களின் செய்கூலி, சேதாரக் கணக்கை யாராலும் புரிந்து கொள்ள முடியாது; அது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ‘தொழில்’ ரகசியம். அன்றாட சர்வதேச விலை நிலவரத்தை அடிப்படையாக வைத்துதான் நகை வியாபாரிகள் சங்கம், ஒரு பவுன் தங்கத்தின் விலையில் 2 அல்லது 3 சதவீதத்தை கூடுதலாக வைத்து லாபம் சம்பாதிக்கின்றனர்.ஆனால், இதையே ஆபரணமாக வாங்கும்போது, அதன் விலை வேறு மாதிரியாகத்தான் இருக்கும்!இந்த நிலை இந்தியாவில் மட்டும்தான்! மற்ற நாடுகளில் செய்கூலி, சேதாரம் என்றெல்லாம் கணக்கிடாமல் கூலியை மட்டுமே கூடுதலாக வசூலிக்கின்றனர்.

‘தங்கத்தின் தரத்திற்கான சான்றிதழை மத்திய அரசு வழங்குவதுபோல், சேதாரத்திற்கும் ஓர் அளவை நிர்ணயம் செய்ய வேண்டும். அப்படிச்  செய்தால், சேதாரம் என்கிற பெயரில் நடக்கும் கொள்ளையைத் தடுக்க முடியும்’ என காலம் காலமாக பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். அதை செவி கொடுத்து கேட்கத்தான் இந்திய அரசு தயாராக இல்லை.இதற்கிடையில்தான் தங்கத்தின் விலை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.பாவம் மக்கள்... தங்கள் முழிகள் தெறித்து விழுவதை கையறு நிலையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!

செ.அமிர்தலிங்கம்