சிவப்புத் தவளை!



சுமார் முப்பது கோடி வருடங்களாக வாழ்ந்து வரும் ஓர் உயிரினம் தவளை. பூமியில் 4,800 வகையான தவளை இனங்கள் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இதில் 85 சதவீத தவளை இனங்கள் நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியவை. காட்டிலுள்ள பூச்சிகளை உண்டு வாழும் தவளைகள், பாம்புக்கு உணவாகப் பயன்படுவதால் உணவுச்சங்கிலியில் தவிர்க்க முடியாத இடத்தை வகிக்கின்றன. அதே நேரத்தில் தவளை இனங்கள் அதிவேகமாக அழிந்து வருகின்றன. 1950களுக்குப் பிறகு மூன்றில் ஒரு பகுதி தவளை இனங்கள் அழிந்துவிட்டன.விஷயம் இதுவல்ல.

தென் அமெரிக்காவில் உள்ள மழைக்காடுகளிலும், குறிப்பாக பனாமாவிலும் அதிகமாக வாழக்கூடியவை சிவப்புத் தவளை. ‘டென்ட்ரோ பேட்ஸ் டிங்டோரியஸ்’ என்ற உயிரியல் பெயரில் அழைக்கப்படும் இவை 5 முதல் 7 செ.மீ நீளம் உடையவை. அதிகபட்சமாக இதன் எடை 70 கிராம். 15 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன. இதில் மட்டும் 200 வகையான இனங்கள் உள்ளன. சிவப்பு மட்டுமல்லாமல் பச்சை, நீலம், மஞ்சள் என பல வண்ணங்களில் காட்சியளிக்கும் இந்தத் தவளைகள் குளவி, எறும்பு, பூச்சி, வண்டுகளை உணவாக உட்கொள்கின்றன. பார்ப்பதற்கு மனதைக் கவரும் அழகுடையவை என்றாலும் கொடிய விஷத்தவளைகள் இவை. உலகின் அதிக விஷத்தன்மைகொண்ட உயிரினமாக இந்தத் தவளையைத்தான் விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.

ஒரு தவளையின் உடம்பிலிருக்கும் விஷத்தை எடுத்து 20 ஆயிரம் எலிகளைக் கொல்ல முடியுமாம். இந்தத் தவளையின் முதுகுப்பகுதியில் பிசின் போல விஷம் சுரக்கிறது. அந்த விஷம், சயனைடை விட அதிக திறன் வாய்ந்தது. அமேசான் காடுகளில் வாழ்ந்த பழங்குடி மக்கள் இந்த விஷத்தை அம்புகளில் தடவி விலங்குகளை வேட்டையாடினார்கள். ஆனால், சிவப்புத் தவளை விஷத்தை எதற்கும் பயன்படுத்துவதில்லை என்பது இதில் ஹைலைட்.

* த.சக்திவேல்