ரோஸ் நகரம்!



நதிக்கரையில் நாகரிகங்கள் மட்டுமல்ல; நகரங்களும் தோன்றின. காரணம், தண்ணீர். ஆனால், தண்ணீர் இல்லாத பாலை வனத்தில் தோன்றி நம்மை ஆச்சர்யப் பட வைக்கிறது பெட்ரா. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு தோன்றிய இந்த நகரம் அரேபிய பாலைவனத்தின் வடமேற்குப் பகுதியில் ஒய்யாரமாக அமைந்திருக்கிறது. இன்று ஜோர்டான் நாட்டின் அடையாளமாகவே மாறிவிட்டது பெட்ரா.

யுனெஸ்கோவின் பாரம்பரிய அங்கீகாரம், புதிய ஏழு அதிசயங்களின் பட்டியலில் இடம் என ஏகப்பட்ட பெருமைகளுக்குச் சொந்தம் கொண்டாடும் பெட்ராவின் கட்டடக்கலை மற்றும் நகர வடிவமைப்பு குறித்து வியக்காதவர்கள் யாருமில்லை. கற்களைக் குடைந்து உருவாக்கப்பட்ட கட்டடங்கள், நீர் சேகரிப்புத் தளங்கள் ஒவ்வொன்றும் ஆச்சர்யத்தின் உச்சம். கதிரவன் மறையும் நேரத்தில் அடர்ந்த ரோஜா தோட்டத்தைப் போல காட்சியளிக்கும் பெட்ராவை ‘ரோஸ் நகரம்’ என்றே அழைக்கின்றனர். இத்தனைக்கும் வருடத்துக்கு சுமார் 15 சென்டிமீட்டர் மழைதான் பெட்ராவில் பெய்கிறது. இருந்தாலும் அதையே மக்கள் பாதுகாத்து பயன்படுத்தி வருகின்றனர்.

 த.சக்திவேல்