ரத்த மகுடம்



பிரமாண்டமான சரித்திரத் தொடர் 67

சில கணங்களுக்கு முன் கஜசாஸ்திரியான தன் நண்பன் தன்னிடம் சொன்ன வாசகங்கள் அனைத்தும் எவ்வித பிசிறும் இன்றி அப்பொழுது கரிகாலனின் செவியில் எதிரொலித்தன.குறிப்பாக இறுதியாக அவன் சொன்னது:‘‘யார் கண்டது, மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவளாகவும் இவள் இருக்கலாம்! எந்த தேசத்து அரச குடும்பம் என்பதைக் கண்டுபிடி... இந்த வனம் முழுக்க நம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இவளால் இங்கிருந்து தப்பிக்க முடியாது. எல்லைக்குள் இருப்பவளை எல்லை அறிந்து விசாரித்து உண்மைகளை வெளிக் கொண்டு வா...’’சொன்ன நண்பன் கரிகாலனின் செவிக்கருகில் ‘‘விசாரணையில் தேகத்தின் பங்கும் இருக்கிறது!’’ என்று சொல்லிவிட்டு அகன்றதை அக்கணத்தில் நினைத்துக் கொண்டான்.அந்தச் சொற்கள் ஒவ்வொன்றும் ஈட்டியாக கரிகாலனின் உள்ளத்தை இப்பொழுதும் தைத்தது.

செல்வத்துக்கும் சரி, பதவிக்கும் சரி, உணர்ச்சிக்கும் சரி... எதற்குமே வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வு உண்டு. அந்த ஏற்றத் தாழ்வுகளால் அடியோடு பாதிக்கப்படாதவன் யோகியாகிறான். அடியோடு பாதிக்கப்படுபவன் ஒன்று போகியாகிறான் அல்லது ரோகியாகிறான். சற்று பாதிக்கப்பட்டாலும் சமய சந்தர்ப்பங்களை உத்தேசித்து அவற்றினின்றும் சட்டென்று விலகிக் கொள்கிறவன் விவேகியாகிறான்.கரிகாலன் அந்த நேரத்தில் விவேகியாக மாறினான். அதன் காரணமாகவே அவன் உயிர் தப்பித்தது.இல்லை என்றால் சிவகாமியின் குறுவாள் அவன் நெஞ்சில் பாய்ந்திருக்கும்! ஆம். சுயநினைவு அடைந்து தன் நண்பன் கஜசாஸ்திரியின் சொற்கள் தன்னுள் எதிரொலித்து விழிப்பை ஏற்படுத்தியதால் கரிகாலன் சற்றே புரண்டான். அப்படிப் புரண்டதே அவன் உயிரையும் காத்தது.

இல்லையெனில் சரசமாடியபடியே அவன் எண்ணங்கள் எங்கோ மிதந்த நிலையைப் பயன்படுத்தி தன் இடுப்பிலிருந்து மலரினும் மெல்லிய கையால் குறுவாளை எடுத்து சிவகாமி ஓங்கி கீழ் இறக்கியது அவன் நெஞ்சில் பாய்ந்திருக்கும்!அதிர்ச்சியோ திகைப்போ எதுவும் இன்றி சிவகாமியைப் பார்த்தான். அவள் கண்களிலும் எவ்வித சலனமும் இல்லை. ‘‘இமைக்கும் பொழுதில் தப்பித்திருக்கிறீர்கள்! ஒன்றும் பிரச்னையில்லை. இமைப்பதற்குள் இப்பொழுது முடிந்து விடுவீர்கள்!’’ சொன்னதுடன் நிற்காமல் தன் இரு கால்களுக்கு இடையில் அவன் உடலைச் சிறைப்படுத்தினாள். கரிகாலனின் வயிற்றில் அழுத்தமாக அமர்ந்தாள். தன் குறுவாளை மீண்டும் அவன் நெஞ்சைக் குறிபார்த்து ஓங்கினாள்.

கரிகாலன் அசையவில்லை; அவளைத் தடுக்கவும் முற்படவில்லை; விலகவும் முயற்சிக்கவில்லை.மாறாக, அவள் நயனங்களையே ஊடுருவியபடி தரையில் படுத்திருந்தான்.சிவகாமி புன்னகைத்தாள். ஓங்கிய தன் குறுவாளை மெல்ல இறக்கி அவன் முகத்தின் அருகில் கொண்டு வந்தாள். குறுவாளின் நுனி கரிகாலனின் புருவத்தின் மேல் பயணித்தது. சீலையில் ஓவியம் தீட்டும் சித்திரக்காரனின் லாவகத்துடன் தன் குறுவாள் நுனியால் அவன் முகத்தை அந்த முகத்திலேயே சித்திரமாக தீட்டத் தொடங்கினாள்.புருவத்தைத் தொடர்ந்து கண்கள். பிறகு நாசி. பின்னர் தாடைகள். அதன் பள்ளங்கள். செவிகள். செவியின் வளைவுகள், துவாரங்கள். மேலுதடு. கீழுதடு. உதடுகளின் இடைவெளி. உதட்டின் மேல் சின்னச் சின்ன கோடுகள்.கடைசியாக இமைகளின் ரோமங்கள்.இறுகப் பிடித்திருந்த குறுவாளின் நுனியையே தூரிகையாக்கி கரிகாலனின் வதனத்தை முழுமையாக வரைந்தாள்! அதுவும் அளவெடுத்து படைக்கப்பட்ட அவன் முகத்தின் மீதே!

கரிகாலன் அவளது ஒவ்வொரு அசைவையும் பார்த்தபடியே இருந்தான்.குனிந்தபடிதான் சித்திரத்தைத் தீட்டினாள். எனவே அவன் கண் முன்னால் கச்சைகளுக்குள் திமிறிய கனிகள் நெருங்குவதும் விலகுவதுமாக இருந்தன.இயல்பாக இருந்த சிவகாமியின் உணர்வுகள் மெல்ல மெல்ல கொதிக்கத் தொடங்கின. அதற்கு அடையாளமாக அவளது கொங்கைகள் விரிவதும் சுருங்குவதுமாகத் தம் பணியைத் தொடங்கின.புற்களையும் புதர்களையும் தென்றல் தழுவியபோதும் முத்து முத்தாக சிவகாமியின் முகத்தில் வியர்வைகள் பூக்க ஆரம்பித்தன. அனைத்தையும்... சகலத்தையும்... எல்லாவற்றையும் பார்த்த படியே இருந்தான் கரிகாலன்.

ஆனால், தன் பார்வையை மட்டும் சிவகாமியின் கருவிழிகளை விட்டு அவன் அகற்றவில்லை. வேறு அங்கங்களில் பதிக்கவுமில்லை. மற்ற அங்கங்களின் அசைவுகள் மங்கலாகவே தெரிந்தன. தெளிவாகப் பார்க்கும்படி அவனை அவை சுண்டி இழுத்தபோதும் தன் நிதானத்தை அவன் கைவிடவில்லை.இதையெல்லாம் சிவகாமி உணரவே செய்தாள். அதன் காரணமாகவே அவள் உதடுகள் பிரிந்து முத்துக்களைச் சிதறவிட்டன. அவனது நாசியின் துவாரத்துக்குள் தன் குறுவாளின் நுனியை நுழைத்து லேசாக ஒரு சுற்று சுற்றியவள் எழுந்தாள்.அவள் கருவிழிகளை விட்டு தன் பார்வையை விலக்காமல் அப்படியே அசையாமல் கரிகாலன் படுத்திருந்தான்.

தன் வலது கால் பாதத்தை உயர்த்தி தன் இடது கணுக்காலின் பின்பக்கம் தட்டினாள்.பாதத்தில் இருந்த தூசுகள் அனைத்தும் உதிர்ந்தன.அடுத்த கணம் வலது பாதத்தை எடுத்து அவன் முகத்தில் வைத்தாள். அழுத்தவில்லை. மந்தாரை இலையின் மீது வைக்கப்பட்ட புஷ்பங்களைப் போல் பதித்தாள். பின்னர் தன் பாதத்தை அப்படியே அவன் முகத்தில் இருந்து கழுத்து வரை இறக்கினாள்.வலது கால் கட்டை விரலை அவன் உதடுக்குள் நுழைத்தாள். கடிப்பான் என எதிர்பார்த்தாளோ என்னவோ... கரிகாலன் அப்படியேதும் செய்யவில்லை. அப்படியே படுத்திருந்தான். சடலமாக என்று சொல்ல முடியாது. இதயத்தின் துடிப்பை அவள் பாதம் உணர்ந்தது. அவனது குருதியின் அதிவேக ஓட்டத்தை அவள் பாத நரம்புகள் உணர்ந்தன.ஆனால், இதற்கான சலனங்கள்... எதிரொலிகள்... எதுவுமே அவன் கருவிழிகளில் வெளிப்படவில்லை.

நிர்மலமாக அவை அப்படியே அவளை நோக்கிக் கொண்டிருந்தன. அதுவும் இமைக்கவும் மறந்து!‘‘நாடகத்தை பின்னர் தொடரலாம்... இப்பொழுது எழுந்து வாருங்கள்!’’குரல் கேட்டு சிவகாமி திரும்பினாள். திகைத்தாள்.கரிகாலனும் அதிர்ச்சியுடன்தான் குரல் வந்த திக்கை ஏறிட்டான். ஆனால், வெவ்வேறு உணர்ச்சிக் குவியலில் இருவருமே மூழ்கினார்கள்.கரிகாலனின் அதிர்ச்சிக்குக் காரணம், ‘இவன் எப்பொழுது இங்கு வந்தான்...’ என்ற கேள்வி. சிவகாமியின் திகைப்புக்குக் காரணம், ‘இவனால் எப்படி தமிழை பிசிறில்லாமல் பேச முடிகிறது’ என்ற வினா.இரண்டையுமே புரிந்து கொண்டவன் போல் அந்தக் குரலுக்கு உரியவன் புன்னகைத்தான். ‘‘ஒரு சீனன் எப்படி தமிழை ஸ்பஷ்டமாகப் பேசுகிறான் என சிவகாமி... அப்படித்தானே நடித்துக் கொண்டிருக்கிறாய்..? உண்மை வெளிப்படும் வரை சிவகாமி என்றே அழைக்கிறேன்... திகைக்கிறாள்... பல்லவ இளவலின் நண்பனான இவன் எப்பொழுது இந்த வனத்துக்கு வந்தான் என கரிகாலன் அதிர்கிறான்... என்ன சரிதானே..?’’

‘‘நீதான் யாங்சின்னா..?’’ அலட்சியமாகக் கேட்டபடியே கரிகாலனின் முகத்தில் பதித்திருந்த தன் பாதத்தை சிவகாமி எடுத்தாள்.‘‘எளியவனின் பெயரை தாங்கள் அறிந்திருப்பது குறித்து மகிழ்ச்சி... சாளுக்கியர்களின் ஒற்றர் சகலத்தையும் அறிந்தவராக இருப்பது உண்மையிலேயே நிம்மதியைத் தருகிறது. யாரை எதிர்க்கிறோமோ அவரும் வலுவாக இருந்தால்தான் அந்த எதிர்ப்பில் ஓர் அர்த்தம் இருக்கும். அந்தச் சுவையை இக்கணத்தில் நான் உணர்கிறேன்! நன்றி...’’ சீன முறையில் சிவகாமிக்குத் தலைவணங்கினான் யாங்சின்.சிவகாமியின் புருவங்கள் முடிச்சிட்டன. எதையோ சொல்வதற்காக வாயைத் திறந்தாள்.அதற்குள் கரிகாலனின் குரல் அழுத்தமாக ஒலித்தது. ‘‘எப்பொழுது வந்தாய் யாங்சின்..?’’‘‘உங்கள் கண்முன்னால் உங்கள் தந்தையை சிவகாமி கத்தியால் குத்தினாளே... அந்தக் கணத்திலேயே வந்துவிட்டேன். தேரில் சோழ மன்னரை நீங்கள் அனுப்பி வைத்தது முதல் அவருக்கு சிகிச்சை அளித்து வருவது அடியேன்தான்...’’  

‘‘இப்பொழுது தந்தை எப்படியிருக்கிறார்..?’’‘‘நான் சொல்வதை விட நீங்களே நேரில் பாருங்கள்... வாருங்கள் சிவகாமி... இவர்கள்..?’’‘‘தப்பிக்க மாட்டேன்...’’ சிவகாமி வெறுப்புடன் சொன்னாள். ‘‘வனத்தைச் சுற்றி காவல் இருப்பது தெரியும். தவிர தப்பித்துச் செல்லும் எண்ணமும் இல்லை...’’‘‘புரிகிறது... புரிகிறது...’’ கரிகாலனையும் சிவகாமியையும் மாறி மாறிப் பார்த்து சீனன் சிரித்தான்.சங்கடத்துடன் இருவரும் நெளிந்தார்கள்.‘‘விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்... என்றே சொல்ல வந்தேன்...’’ சிவகாமி தலையைக் குனிந்தாள்.‘‘தெரியும்... தெரியும்... விசாரணை முறையைத்தான் கண்ல் பார்த்தேனே...’’ யாங்சின் இளித்தான்.‘‘போதும்... தாமதிக்காமல் தந்தை இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்...’’ கரிகாலன் சூழலை இயல்பாக்க முயன்றான்.

‘‘நானா தாமதித்தேன்..?’’ வாய்விட்டு நகைத்த யாங்சின், அதன் பிறகு எதுவும் பேசவில்லை. திரும்பிப் பார்க்காமல் வனத்துக்குள் நுழைந்தான். சிவகாமியும் கரிகாலனும் அவனைப் பின்தொடர்ந்தார்கள். ஒரு நாழிகை பயணத்துக்குப் பின் குடிசை ஒன்று தென்பட்டது. வாசலில் ஒரு வீரன் நீரைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தான்.‘‘தயாராக இருக்கிறதா..?’’ என்று கேட்ட சீனன், சற்று ஓரமாக இருந்த பட்டுப் பையை எடுத்துக் கொண்டான். ‘‘ம்...’’ வீரன் தலையசைத்தான்.கொதித்துக் கொண்டிருந்த நீரில் தன் விரல்களை விட்ட யாங்சின் முகத்தில் திருப்தி நிலவியது. ‘‘உஷ்ணம் சரியாக இருக்கிறது... சிந்தாமல் கொண்டு வா...’’ கட்டளையிட்டுவிட்டு குடிசைக்குள் நுழைந்தான் சீனன்.சிவகாமியும் கரிகாலனும் அவனைப் பின்தொடர்ந்து நுழைந்தார்கள்.

குடிசையின் நடுவில் பஞ்சணை போடப்பட்டிருக்க... அதன் மேல் கரிகாலனின் தந்தை படுத்திருந்தார். ‘‘சோழ மன்னருக்கு இன்னமும் நினைவு திரும்பவில்லை... ஆனால், இன்னும் சற்று நேரத்தில் அவர் கண் திறந்துவிடுவார்...’’ என்ற யாங்சின், ‘‘ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன். நான் சிகிச்சை அளிக்கும்போது எது நடந்தாலும் இருவரும் குறுக்கிடக் கூடாது... என் பணியில் இடையூறை ஏற்படுத்தக் கூடாது... அப்படி நடந்தால் கரிகாலா... உன் தந்தையின் உயிருக்கு நான் பொறுப்பல்ல... சிவகாமி புரிந்ததா? ஏற்கனவே உன் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள். அதன் கூடவே சோழ மன்னரை கொலை செய்த பாவத்தையும் சேர்த்துக்கொள்ளாதே...’’ அழுத்தம்திருத்தமாக சீனன் சொன்னான்.பிறகு வீரனை நோக்கித் திரும்பினான். ‘‘சுடுநீரை இங்கே வைத்துவிட்டுச் செல்... வாசலில் காவல் இரு...’’யாங்சின் சொன்னபடியே செய்துவிட்டு அந்த வீரன் வெளியேறினான்.

அதன்பிறகு சீனன் யாரையும் திரும்பிப் பார்க்காமலும் பொருட்படுத்தாமலும் தன் பணியில் இறங்கினான்.தன் கையில் இருந்த பட்டுப் பையை அவிழ்த்து அதிலிருந்து மெல்லிய ஆறு ஊசிகளை எடுத்து சுடுநீர் இருந்த பாத்திரத்தில் போட்டான். பிறகு மெல்லிய பட்டு நூல் கோர்த்த இன்னொரு பெரிய ஊசியையும் பட்டு நூலுடன் சுடுநீரில் போட்டான். பினர் தன் கச்சையில் இருந்து புதுக் கத்தி ஒன்றை எடுத்து சுடுநீரில் போட்டுவிட்டு இருவரையும் விலகி நிற்கும்படி சைகை செய்தான்.அதன்பின் சோழ மன்னரை உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆராய்ந்த யாங்சின், அவரது இரு கைகளையும் இரு கால்களையும் நன்றாக உருவிவிட்டான். இடது காதை நிமிண்டினான்.அவன் முகத்தில் திருப்தி படர்ந்தது.உற்சாகத்துடன் சுடுநீர் பாத்திரத்துக்குள் இருந்த மெல்லிய நீண்ட ஊசிகளை எடுத்து தன் இடது கையில் வைத்துக்கொண்டு ஒன்றன்பின் ஒன்றாக அந்த ஊசிகளை பல இடங்களில் பொருத்தத் தொடங்கினான்!

(தொடரும்)  
கே.என்.சிவராமன்
ஓவியம்: ஸ்யாம்