பீட்சா வெண்டிங் மெஷின்!



புதுப்புது கண்டுபிடிப்புகளின் தலைநகரமாகத் திகழ்கிறது, ஜப்பான். ஸ்மார்ட் டாய்லெட் முதல்  ஹியூமன் ரோபோ வரை ஜப்பானியர்கள் ஏதாவது ஒன்றைக் கண்டுபிடித்து வருகின்றனர்.
அந்த வகையில் புது வரவு, பீட்சா வெண்டிங் மெஷின் எனும் விற்பனை இயந்திரம். பொதுவாக இந்தியாவில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே விற்பனை இயந்திரங்களைப் பார்க்க முடியும். அதில் அதிகபட்சமாக குளிர்பானங்கள் இருக்கும்.

அந்த இயந்திரத்தில் பணம் செலுத்துவதற்கான ஒரு வாயில் இருக்கும். அதில்குளிர்பானத்துக்குஉண்டான தொகையை செலுத்தி விட்டால், இன்னொரு வாயில் வழியாக குளிர்பானம் வரும்.

ஆனால், ஜப்பானில் விற்பனை இயந்திரத்தின் மூலம் பீட்சாவையே விற்பனை செய்கின்றனர். அந்த இயந்திரத்தில் எந்த வகையான பீட்சா வேண்டும் என்று தேர்வு செய்துவிட்டு, அதற்கு உண்டான தொகையைச் செலுத்த வேண்டும். 

சில நிமிடங்களில் பீட்சா தயாராகி, அதற்கு உண்டான வாயில் வழியாக வரும். தவிர, இன்னொரு வாயிலில் கை துடைப்பதற்கான காகிதமும் வரும். இப்படி விற்பனை இயந்திரத்தின் மூலமாக பீட்சா விற்பனை செய்யப்படுவது இதுவே முதல்முறை.

த.சக்திவேல்