தமிழுக்கு படையெடுக்கும் பிரமாண்டமான மொழி மாற்றுப் படங்கள்...நல்லதா கெட்டதா..?



திரைமொழி என்பது பார்வையாளரின் விருப்பங்களை மட்டுமே ஒட்டுமொத்தமாக சார்ந்து விடாமல் மக்கள் ரசனையின் கண்களை நன்றாகத் திறந்து விடக் கூடியதாக இருந்தால் நல்லது. தமிழ் சினிமாவில் பாரதிராஜா தொடங்கி வைத்த நிஜ கிராமச் சித்திரங்களின் தொடர்ச்சி இன்று என்னவாக இருக்கிறது? கிராம வாழ்வின் ஏனைய பகுதிகள் பேசப்படாமல் சாதீய வீரங்களை ரசிக்கும் கண்ணோட்டத்தைப் பதிவு செய்வதில் சிக்கிக் கொண்டது.
விதிவிலக்குகளும், அரிய தருணங்களும் தமிழ் சினிமாவை இப்போது மலர்த்திப் போடுகின்றன. நல்ல திரைப்படங்களைப் பற்றிய நமது அனைத்து உரையாடல்களையும் உறுதி செய்பவர்கள் படத்தின் தயாரிப்பாளர்கள்தான். வேருக்கு நீர் பாய்ச்சம் அவர்களின்றி எந்தவொரு நல்லபடைப்பும் நிலம் காணாது.

மலையாளத்தில் வரும் நல்ல திரைப்படங்களைத் தொடவே, ஒரு வேளை நாம் நிதானத்திற்கு திரும்பினால், இன்னும் ஐந்தாறு வருடங்கள் பிடிக்கலாம். இத்தகைய வேளையில் தமிழில் சேர்ந்து தயாரித்து அல்லது முறையான மொழிமாற்றம் செய்து வந்த ‘பாகுபலி’, கேஜிஎஃப்’ படங்கள் பெரும் வெற்றி பெற்றன. வறண்டு கிடந்த தமிழக சினிமாவில் பெரிய மலர்ச்சி தென்படுகிறது.

ஆமாம். இது தமிழ் சினிமாவில் புது நிலை. தியேட்டர்கள் சூடு பிடித்திருக்கின்றன. கல்லா கட்டத் தொடங்கியிருக்கிறார்கள். விநியோகஸ்தர்களின் முகத்தில் மலர்ச்சி. மேலேயிருந்து கீழே வரைக்கும் காசு புரளுவது வெளிப்படையாகத் தெரிகிறது. ‘பாகுபலி’யும், ‘கேஜிஎஃப்’பும் போட்ட பாதையில் இதோ ‘சாஹோ’வும், ‘பயில்வானு’ம் நடைபோடுகின்றன. பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பி காத்திருக்க வைக்கின்றன. குறிப்பாக ‘சாஹோ’, ‘பயில்வானி’ன் தயாரிப்பு விவரணைகள் மூச்சடைக்கச் செய்கின்றன.

புது அனுபவத்தையும், வேறுபட்ட வடிவத்தையும் பிரம்மாண்டத்தையும் கொண்டு வரும் இந்தப் படங்கள் நம்மிடம் எந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன?தயாரிப்பாளரும், சினிமா ஆர்வலருமான தனஞ்செயன் இந்த நிலையை உற்சாகமாகப் பார்க்கிறார்: ‘‘ஹாலிவுட்டிலிருந்து வருகிற படங்களுக்கு நாம் கலெக்‌ஷன் செய்து கொடுக்கிறோம். அது மாதிரி பெரிய படங்களை நாம் பண்ணும்போது அதை நல்ல விஷயமாக, எண்ணமாகப் பார்க்கணும்.

மேலும் அதில் விஷயம் இருந்தால்தான் ஓடப்போகிறது. பெரிய படம் என்பதால் மட்டுமே ஓடியதாக முன்பின்னான சரித்திரங்கள் இல்லை. வெளிநாட்டிற்குப் பணம் அள்ளிக் கொடுப்பதை நம் சகோதரர்களுக்குக் கொடுக்கலாமே! ‘கேஜிஎஃப்’ போன்ற படங்கள் பெரும் பணத்தைச் சம்பாதித்துத் திரும்பக் கொடுத்ததும் நம்பிக்கையூட்டும் விஷயம். அதைப் போல ‘சாஹோ’, ‘பயில்வான்’ போன்ற படங்களும் நம்பகமான வெற்றியைத் தரும் என்று தோன்றுகிறது.

பஞ்சத்தால் அடிபட்டது மாதிரி இருந்த தமிழ் சினிமாவிற்கு இது நல்ல வேளைதான். இப்படியொரு மார்க்கெட் உருவாகும்போது நமது சந்தை மதிப்பு கூடும். இதில் மொழி ஒரு பொருட்டே இல்லை. கலைஞர்களுக்கும், கலைக்கும் மொழி ஒரு தடையாக இருக்க அனுமதிக்கவே கூடாது.

மக்களுக்கு சினிமா பிடித்திருந்தால், அவர்கள் இதற்குமுன் பார்த்திராத சின்ன விஷயம் இருந்தால் கூட கொண்டாடி விடுவார்கள். இதே நிலைமை நீடித்தால் தமிழ் சினிமா கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவிடும். அதற்கான ஆரம்ப அடையாளங்கள் எல்லாமே என் கண்ணில் படுகின்றன. ஆக இது நல்ல தொடக்கம்...’’ என்கிறார் தனஞ்செயன்.

‘‘இதை நாம் தமிழில் கூட செய்யலாம். ஆனால், மாட்டார்கள்...’’ என அதிரடியாக ஆரம்பித்தார் பிரபல விநியோகஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியன்: ‘‘இங்கே ஹீரோவின் கால்ஷீட்டை மட்டும்தான் வாங்குவார்கள். கதையை அவருக்கு ஏற்றதாக மாற்றுவார்கள். இதுதான் சினிமாவிற்கு அழிவுகாலம்.

‘பாகுபலி’ கதையை எழுதிவிட்டு அந்தப் பையன் பிரபாஸை தேர்ந்தெடுத்தார்கள். அதற்குப் பிறகுதான் அவர் பெரிய இடத்திற்குப் போனார். சரியாக இருந்ததால் கட்டப்பாவிற்கு சத்யராஜ் படத்திற்குள் போனார்.

இங்கே எல்லோரும் முதல் அமைச்சராக ஆசைப்படுவதால் அதற்கு ஏற்றமாதிரி படம் எடுக்கிறார்கள். அதுதான் பிரச்னையே. உயரமான நடிகரின் படத்தை எடுத்த இயக்குநர் ‘முதல் பாதியை நான் எழுதின மாதிரி எடுத்தேன், அடுத்த பாதியை அவர் அரசியல் விருப்பத்திற்கு தகுந்தமாதிரி எடுக்கும்படி ஆகிவிட்டது...’ என்று சொன்னார்.

‘லயன் கிங்’ ஒரு டப்பிங் படம்தான் சார். ஒரு ராஜா, அவருக்குப் பிறகு ஒரு குட்டி ராஜா என ஒரு நல்ல கதை. நம்மை சின்னப்பிள்ளை ஆக்கிவிட்டு வேடிக்கை பார்க்க வைக்கிறது! கரை புரண்டு இப்படம் ஓடுகிறது என்றால் சும்மா இல்லை. விஷயத்தை அப்படி நறுக்காக கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள்.

‘கே.ஜி.எஃப்’ சக்கைப்போடு போடுகிறது. படம் அவ்வளவு சரியாக இருக்கு. 40 வருஷங்களுக்கு முன்னாடி ‘கள்ளா குள்ளா’ என ஒரு கன்னடப்படம் இப்படி சக்கைப்போடு போட்டது. அதற்குப் பிறகு இதுதான். இந்தியில் சல்மான் தனது ‘ஹீரோ’ படத்தை மூன்று மொழிகளில் இறக்கினார். ரசிகர்களுக்கு தமிழில் பேசினால் போதும். அட... புரிந்தால் போதும்... பிடித்திருந்தால் கொண்டாடி விடுவார்கள்.

இங்கே ஓடின ‘நேர் கொண்ட பார்வை’யும், ‘லயன் கிங்’கும் ஒரே வசூல்தான். ஆனால், முந்தைய படத்துக்கு 70% ஷேர் கொடுத்தோம். ‘லயன் கிங்’கிற்கு 50% ஷேர்தான். இந்த வகையில் பார்த்தால் ‘லயன் கிங்’தான் லாபம்...’’ என்கிறார் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன்.

இயக்குநர் ‘மூடர் கூடம்’ நவீன் சொல்வது இன்னொரு விதமாக இருக்கிறது: ‘‘முன்னாடி இங்கே ஹாலிவுட், ஹாங்காங் சினிமாக்களுக்கு மட்டுமே ஆதரவு இருந்தது. ‘பாகுபலி’ ஜப்பானில் கூட பெரிய வரவேற்பு பெற்றது. ரஜினிகாந்த் படத்திற்கு ஜப்பானில் ஆதரவு இருப்பது தெரிந்த விஷயம்.
 
ஆனால், இதெல்லாமே ‘எந்திரன்’ படத்தின் வருகைக்குப் பின்பே நடந்தது. இங்கே ஷங்கர்தான் ஆரம்பித்து வைத்தார். அதற்குப் பிறகு ‘2.0’ தொடர்ந்தது. ‘பாகுபலி’யின் கதையமைப்பு எல்லோரையும் கவர்ந்து விட்டது. ராஜா, ராணி, வாரிசு, போர், தந்திரங்கள், யுக்திகள் எங்கேயும் செல்லுபடியாகும்.

இந்த மாதிரி பெரிய பட்ஜெட், அதுவும் கச்சிதமான கதை அமைப்புடன் வருவது தமிழ் சினிமாவிற்கு நலம் தரும். எப்படியும் அவை தமிழ்தான் பேசுகின்றன. தமிழிலும் இனிமேல் இதுபோல் நடக்கும். இனிமேல் வருகிற ‘இந்தியன் 2’ கூட இப்படித்தான் இருக்கும்...’’ என்கிறார் நவீன்.

சமூக ஆய்வாளரும், தில்லி அம்பேத்கர் பல்கலைக்கழக பேராசிரியரும், சினிமா ஆர்வலருமான ராஜன் குறை வேறொரு கருத்தை முன் வைக்கிறார்:
‘‘இதில் சில அடிப்படை விஷயங்களை பார்க்க வேண்டியிருக்கிறது.பெரிய பட்ஜெட் என ஆகும்போது கேளிக்கை விஷயங்கள் நிறைய இருக்க வேண்டும். இதுமாதிரியான பிரம்மாண்டம் எல்லோரையும் பார்த்தே தீரவேண்டும் என்ற உந்துதலைத் தூண்டுகிறது. அதற்கான அளவுகளில் அவர்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள்.

நல்ல கருத்துகள் வந்தாலும், கேளிக்கைகள் இப்படி முன் வந்து நிற்பது வாடிக்கையாக இருக்கிறது. குறிப்பாக ‘பாகுபலி’யில் காலகேயன் என்ற பாத்திரம். அவர்கள் எல்லாம் கருப்பாக இருந்தார்கள். சிவப்பானவர்கள் நல்லவர்கள், கருப்பாக இருப்பவர்கள் கெட்டவர்கள் என்ற பொதுப்புத்தியை முன்வைத்துவிட்டது.

குறிப்பாக கட்டப்பா பாத்திரம். நேர்மையான, சிறந்த, விசுவாசமான வீரன். ஆனால், அவன் முதுகில் குத்துவதாக கதை அமைத்திருந்தார்கள். நல்ல வீரர்களுக்கு அது அழகு ஆகாது. ஆனாலும் அதையே அந்தப்படம் பிரதானப்படுத்தி, அடுத்த பாகத்தை முன் வைத்தது.
இந்த மாதிரியான படங்கள் வருவதும், வசூல் காண்பதும், சினிமா உலகம் மகிழ்ச்சி அடைவதும், சம்பந்தப்பட்ட குடும்பங்கள் சந்தோஷப்படுவதும் நல்லதுதான். உழைக்கும் வர்க்கம் தன் எதிர் நிற்கும் கவலை மறந்து களிப்புறுவது கூட நல்ல விஷயம்தான்.

ஆனாலும் இதிலிருக்கிற இப்படியான போக்கும், அதிகப்படியான கேளிக்கைகளும் தவிர்க்கப்பட வேண்டும்...’’ என்கிறார் ராஜன் குறை.எந்த திசையிலிருந்தாவது நல்ல காற்று வீசினாலும் சரிதான்... தமிழ் சினிமாவின் துயர் நீக்கப்பட்டு ஆவன நடந்தால் எல்லாமே சீராகும். அதற்கான பாதைக்கு வரவேற்பு தருவோம்!

நா.கதிர்வேலன்