இவர்களை ஏன் இப்போது சிபிஐ விசாரிக்கவில்லை?!‘‘இன்றைய புதிய இந்தியாவில் ஊழல் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்குமுன் இதுபோன்ற நடவடிக்கை கிடையாது. ஊழலுக்கு புதிய இந்தியாவில் இடமில்லை. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த 75 நாட்களுக்குள் பல வலுவான முடிவுகளை எடுத்துள்ளது...’’ சமீபத்தில் பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, யுனெஸ்கோ தலைமையகத்தில் இந்தியர்கள் மத்தியில் இப்படி உரையாற்றினார்.

இப்போது மட்டுமல்ல... ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக 2014 முதலே பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் கூறி வருகிறது.ஆனால், எதிர்க்கட்சி தலைவர்களை மட்டுமே குறி வைத்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஏனெனில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பாஜக தலைவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை; அவர்கள் மீது விசாரணையும் நடத்தப்படவில்லை!

இதற்கு உதாரணமாக, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் காலகட்டத்தில், ரபேல் விமான பேர ஒப்பந்தத்தை விசாரிக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் மறுத்ததைக் கூறலாம். உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவைப் பிறப்பித்தும், ஊழலை ஒழிக்க பாடுபட்டு வரும் சமூக சேவகர் அன்னா ஹசாரே போன்றோர் தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியும், ‘லோக்பால்’ அமைப்பை உருவாக்காமல் 5 ஆண்டுகளாக பாஜக அரசாங்கம் இழுத்தடித்ததையும் குறிப்பிடலாம்.

போலவே சில அரசியல்வாதிகள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், சிபிஐ மற்றும் பிற விசாரணை அமைப்புகள் மென்மையாக நடந்து வருவதையும் சுட்டலாம். இவர்களில் சிலரைக் குறித்து இங்கு பார்க்கலாம்.

பி.எஸ்.எடியூரப்பா

கர்நாடக மாநில பாஜக தலைவராக இருக்கும் எடியூரப்பா, ஏற்கனவே 3 முறை முதல்வர் பதவியை வகித்தவர். இப்போது மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பெரும்பான்மை இழந்த நிலையில், 4வது முறையாக அம்மாநில முதல்வராகப் பதவியேற்றிருக்கிறார்.ஏற்கனவே இவர் முதல்வராக இருந்தபோது, இப்போதைய பாஜக தலைவர்கள், வக்கீல்கள், நீதிபதிகள் உள்ளிட்டோருக்கு ரூ.1,800 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டதாக சில மாதங்களுக்கு முன் இவரது டைரி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

ஆனால், ‘வருமான வரித்துறை போலி ஆவணங்கள் என்று நிராகரித்த குறிப்புகளை வைத்து, தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் அவதூறு பிரசாரம் செய்கிறது’ என்று எடியூரப்பா இதற்கு பதிலளித்தார். நிலம் மற்றும் சுரங்க மோசடிகள் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் எடியூரப்பா மீது உள்ளன. இதில் பெரும்பாலானவற்றில் இருந்து இவர் ‘விடுவிக்கப்பட்டிருக்கிறார்’! எப்போது? பிரதமராக மோடி பதவிக்கு வந்த பின்!

பெல்லாரி ரெட்டி சகோதரர்கள்

2018ல் நடந்த கர்நாடக தேர்தலுக்கு முன்னர், பெல்லாரி ரெட்டி சகோதரர்களுக்கு எதிராக ரூ.16,500 கோடி மதிப்புள்ள சுரங்க முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளை சிபிஐ விரைவாக முடித்து வழக்குகளை மேல் விசாரணைக்குக்கொண்டு சென்றது.ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தபின் ரெட்டி சகோதரர்களின் சுரங்க ஊழலைக் கண்டுபிடித்த ஐஎஃப்எஸ் அதிகாரி கைலோல் பிஸ்வாஸ், கடந்த ஜூலையில் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார்! காரணம், பாஜக ஆதரவாளர்களாக ரெட்டி சகோதரர்கள் இருப்பதுதான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்!  

ஹிமாந்தா பிஸ்வா சர்மா

‘வடகிழக்கு மாநிலங்களின் அமித் ஷா’ என்று அழைக்கப்படும் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருந்து ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவர். அசாமில் நீர் வழங்கல் துறை ஊழலில் சிக்கிய சர்மாவுக்கு எதிராக தேர்தல் காலத்தில் பாஜக கடுமையான பிரசாரத்தை மேற்கொண்டது. ஊழல்களை பட்டியலிட்டு ஒரு கையேட்டையும் கூட வெளியிட்டது.

அசாமில் நீர் மேலாண்மைத் திட்டத்தை மேற்கொள்ள அமெரிக்காவின் லூயிஸ் பெர்கர் நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததால், இவ்வழக்கை ‘லூயிஸ் பெர்கர் வழக்கு’ என்கின்றனர்.2001 முதல் 2015 வரை காங்கிரஸ் கட்சியில் அசாம் ஜலுக்பாரி எம்எல்ஏவாக இருந்த ஹிமாந்தா, 2016ல் பாஜகவில் சேர்ந்தார். இப்போது மாநில பாஜக ஆட்சியில் அவர் நிதித்துறை, கல்வித்துறை, சுகாதாரம் உள்ளிட்ட முக்கியத் துறைகளின் அமைச்சர்!

சிவராஜ் சிங் சவுகான்

மத்தியப்பிரதேச மாநிலத்தில் தொழில் முறை தேர்வுகளுக்கான வாரியம் (வியாபம்) மூலம் நடக்கும் நுழைவுத் தேர்வுகளில் மாணவர்களுக்குப் பதிலாக போலியான நபர்கள் ேதர்வை எழுதினர். மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில், தகுதியற்ற மாணவர்களுக்கு இடமளிக்கப்பட்ட புகாரில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிக் கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

பல ஆண்டுகளாக நடந்த வியாபம் மெகா ஊழலில், முன்னாள் பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பெயரும் அடிபட்டது. சிபிஐ விசாரித்த இவ்வழக்கில் 2,000 பேருக்கு மேல் கைதான நிலையில், 49 பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். முக்கிய திருப்பமாக 2017ல் முதல்வராக இருந்ததாக சவுகானுக்கு சிபிஐ ‘நற்சான்று’ வழங்கியது. இவ்வழக்கு இன்னும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது!

முகுல் ராய்

மேற்குவங்க மாநிலத்தில் இடதுசாரி, காங்கிரஸ் கட்சிகளின் வீழ்ச்சியை பயன்படுத்தி, ஆளும் மம்தா அரசுக்கு எதிராக வலுவான தளத்தை நிறுவ பாஜக முயன்று வருகிறது. அதற்கு உள்ளூர் பிரபல அரசியல் புள்ளிகள் தேவைப்படுவதால் மோசடி வழக்கில் கறைபடிந்த திரிணாமுல் காங்கிரஸ் தேசிய துணைத் தலைவர் முகுல் ராயை, 2017ல் தங்களது கட்சிக்குள் பாஜக வளைத்துப் போட்டது.

முன்னதாக சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முகுல்ராயிடம், 2015ல் சிபிஐ விசாரணை நடத்தியது நினைவில் இருக்கலாம்!நாரதா ‘ஸ்டிங் ஆபரேசன்’ என்ற பெயரில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் லஞ்சம் பெறும் உளவு வீடியோக்கள் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்டன. இவ்விவகாரத்தில், அமலாக்கத்துறை இயக்குநரகம் முகுல்ராயை அழைத்த உடனேயே, அவர் பாஜகவில் சேர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது இவர் மீதான சட்டநடவடிக்கையின் வேகம் குறைந்துள்ளது!

ரமேஷ் போக்ரியால்

இன்றைய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரான ரமேஷ் போக்ரியால், உத்தரகாண்ட் மாநில முதல்வராக இருந்தபோது, அவர் மீது நிலம் மற்றும் ஹைட்ரோ எலக்ட்ரிக் திட்டங்களில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன.

பல்வேறு ஊழல் வழக்குகளால் பாதிக்கப்பட்ட அவர், 2011ல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இவ்விவகாரத்தில், சிபிஐயோ அல்லது உத்தரகாண்ட் மாநில அரசோ ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஆர்வம் காட்டவில்லை என்றே கூறுகின்றனர்.இருந்தாலும், ரமேஷ் போக்ரியால், பிரதமர் மோடியின் இப்போதைய அமைச்சரவையில் முக்கிய இலாகா அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார்!

நாராயண் ரானே

மகாராஷ்டிரா மாநிலத்தில் 1999ல் சிவசேனா கட்சி சார்பில், முதல்வராக நாராயண் ரானே பதவி வகித்தார். அப்போது, கட்சித் தலைவர்களில் ஒருவரான உத்தவ் தாக்ரேவை விமர்சித்ததால் 2005ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின், காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், மாநில வருவாய்த் துறை அமைச்சரானார். கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருந்த அவர், 2017ல் பாஜகவில் இணைந்தார். அவருக்கு ராஜ்யசபா பதவியும் வழங்கப்பட்டது.

இதன்பின், இவர் மீதோ அல்லது இவரது குடும்பத்தினர் செய்த பல்வேறு பல கோடி பண மோசடி வழக்குகள் ெதாடர்பாகவோ சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியன விசாரிக்கவோ அல்லது அவரது சொத்துக்களை சோதனை செய்யவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது!

செ.அமிர்தலிங்கம்