மிஸ் இங்கிலாந்து பட்டம் பெற்ற இந்தியர்!



இன்று இங்கிலாந்தின் எந்தப் பத்திரிகையைத் திறந்தாலும் அதில் நிச்சயமாக அச்சாகியிருக்கும் ஒரு பெயர் பாஷா முகர்ஜி. சமீபத்தில் கூகுளில் அதிகம் பேர் தேடிய பெயரும் இதுவே. ஒரே நாளில் உலகப் பிரபலம் ஆகிவிட்டார் பாஷா.
பெங்காலி, ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், இந்தி என ஐந்து மொழிகளிலும் சரளமாகப் பேசுகின்ற புலமை, 146 ஐக்யூ லெவலுடன் மின்னும் ஜீனியஸ், மெடிக்கல் சயின்ஸ் மற்றும் மெடிசின் அண்ட் சர்ஜரி என்று இரண்டு மருத்துவப் பட்டங்கள் என இவரது சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.அழகும் அறிவும் சேர்ந்த பொக்கிஷமாக மிளிரும் பாஷாவின் வயது 23.

இப்போது இதற்கெல்லாம் மகுடம் வைப்பதைப் போல ‘மிஸ் இங்கிலாந்து 2019’ பட்டத்தைத் தன்வசமாக்கி அழகுராணியாகவும் மிளிர்கிறார். வருகின்ற டிசம்பரில் இங்கிலாந்தின் சார்பாக ‘மிஸ் வேர்ல்டி’ல் களமிறங்கப்போகும் தேவதையும் இவர்தான்.

மிஸ் இங்கிலாந்து பட்டத்தைப் பெற்ற சில மணிநேரங்களுக்குப் பின் ஒரு மருத்துவமனையில் ஜூனியர் மருத்துவராக பணியைத் தொடங்கியிருக்கும் பாஷா, ஓர் இந்தியர். அவருக்கு ஒன்பது வயதாக இருந்தபோது பாஷாவின் குடும்பம் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்குக் குடியேறி அங்கேயே செட்டிலாகிவிட்டது. கடந்த ஜூலையில்தான் மருத்துவப் படிப்பை முடித்தார்.

ஏழு வருடங்களாக மாடலிங்கில் ஈடுபட்டு வரும் பாஷாவிற்கு அலங்கார அணிவகுப்பு மற்றும் அழகிப் போட்டிகளில் பெரிதாக ஆர்வமில்லை. படிப்பு கெட்டுவிடும் என்று அதை தவிர்த்து வந்தார். நண்பர்கள் மற்றும் வழிகாட்டிகளின் வற்புறுத்தலாலும், அவர்கள் தந்த நம்பிக்கையாலும் அழகிப்போட்டியில் கலந்துகொண்டு மகுடம் சூடியிருக்கிறார். ‘‘கனவு காண்பதும், அதைப் பின் தொடர்ந்து செல்வதும், கடினமாக உழைப்பதும் ரொம்பவே முக்கியமானது...’’ என்பதே இளசுகளுக்கான பாஷாவின் ஒரே அறிவுரை.         

த.சக்திவேல்