இசையால் உலகைப் பார்க்கும் 18 வயதுக் குழந்தை!



‘போகும் பாதை தூரமில்லை…’ எனும் பாடலை வயலினில் இசைத்து வரவேற்ற ஜோதி, பிறவியிலேயே பார்வையின்றி பிறந்தவர். கூடவே ID, அதாவது இன்டலெக்சுவல் டிஸபிளிட்டி (intellectual disability) என்னும் மூளை வளர்ச்சிக் குறைபாடு வேறு.

ஆனால் இன்று?

ஜோதி பாடகி! சோஷியல் மீடியாவில் வலம் வருபவர்களுக்கு ஜோதியைத் தெரியாமல் இருக்க முடியாது. வயலின், கீ போர்ட், பாட்டு, லைட் மியூசிக், வெஸ்டர்ன் மியூசிக், சன் சிங்கர் ரியாலிட்டி நிகழ்ச்சியில் டாப் 20க்குள் ஒருவர்... என சாதித்து வருபவர். ‘‘எந்த சக்ஸஸும் சுலபத்தில் கிடைக்காது. பிரச்னைகளைப் பார்க்காம வாய்ப்பை பார்ப்பவங்கதான் முத்திரை பதிப்பாங்க. நம் குழந்தைகளின் கனவுகளை பேஷனாக்கி (passion), பேஷனையே புரஃபஷனாக்கினா வாழ்க்கை ஜொலிக்கும்...’’ என்கிறார் ஜோதியின் அம்மா கலைச்செல்வி.

‘‘இந்த வெற்றிக்குப் பின்னாடி 18 வருடப் போராட்டம் இருக்கு! ஜோதிக்கு பிறக்கும்போதே இரண்டு கண்களிலும் பார்வை இல்ல. பிறந்த மறுநாளே அவ குடல்ல மிகப்பெரிய சர்ஜரியை செய்ய வேண்டிய சூழல். பிழைப்பாளானு பயந்தோம். இரத்த உறவுக்குள்ள நான் திருமணம் செஞ்சுகிட்டேன். ஆர்.எச். வகை இரத்தம்தான் எனக்கும் என் கணவருக்கும்.

என் கணவரும் சரி... அவர் குடும்பத்தினரும் சரி... ஜோதி வேண்டாம்னுதான் சொன்னாங்க. ஆனா, குழந்தையைக் காப்பாற்றியே ஆகணும்னு நானும் என் குடும்பமும் உறுதியா நின்னோம். இதனால இரு குடும்பத்துக்குள்ள பிரச்னை. அப்ப எனக்கு வயசு 26. ஜோதியால சரியா நிற்க, பேச, நடக்க முடியாது. அதுக்கான முயற்சியும் அவகிட்ட இருக்காது. ஒரு நிமிஷம் கூட தூங்கவே மாட்டா. அவளை அமைதிப்படுத்தறதும் கஷ்டம்.

ஜோதிக்கு 4 வயசானப்ப அவளுக்கு மூளை வளர்ச்சி குறைபாடுனு ஸ்கேன்ல தெரிஞ்சுது. எனக்கும் என் கணவருக்கும் பிரச்னைகள் தொடர்ந்ததால மணவிலக்கு பெற்றோம். குழந்தையோடு என் பெற்றோர் வீட்ல தங்கிட்டேன்...’’ கடந்து வந்த துக்கத்தை சர்வசாதாரணமாக விவரிக்கும் கலைச்செல்வி, 4 வயதில் செய்ய வேண்டியதை 7 வயதில் மெதுவாகத்தான் ஜோதி செய்ய ஆரம்பித்தாள் என்கிறார்.

‘‘சமயத்துல செய்ததையே ஆயிரம் முறை திரும்பச் செய்யறா மாதிரி ஆகும். 8 வயசு வரை அவ செட்டிலாகலை. பார்வையில்லாததால புற உலக சிந்தனையும் அவளுக்கு இல்ல. உண்மையை சொல்லணும்னா ஜோதியின் குழந்தைப் பருவம் துயரமான காலக்கட்டம். தேனாம்பேட்டைல இருக்கற பார்வையற்றோர் பள்ளில 8 வயசுல அவளைச் சேர்த்தேன். மனவளர்ச்சி இல்லாத அவளுக்கு பள்ளி செட்டாகலை. எதுக்காக அழறானே தெரியாம பல நாட்கள் நான் அழுதிருக்கேன்!

அப்புறம் மயிலாப்பூர்ல இருக்கற க்ளார்க் ஸ்கூல்ல சேர்த்தேன். விளையாட்டு முறையிலான கல்வி அங்கிருந்தது. நல்ல ஆசிரியர்கள்.  கிடைக்க, ஜோதியும் அங்க மகிழ்ச்சியா இருந்தா. எங்கப்பா தமிழ் இலக்கியம் படிச்சவர். ஜோதிக்கு சரியா வார்த்தைகள் வராது. ஆனாலும் முயற்சித்து திருக்குறளையும், பாரதியார், பாரதிதாசன் கவிதைகளையும் அவளுக்கு இசை வடிவுல பாட்டா சொல்லிக் கொடுத்தார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், தத்துவப் பாடல்கள், நீதிக் கதைகளை தொடர்ந்து ஆடியோல கேட்க வைச்சார்...’’ என்ற கலைச்செல்வி மெல்ல மெல்ல ஜோதிக்கு வார்த்தைகள் வசப்படத் தொடங்கியது என்கிறார்.

‘‘திருக்குறள்ல எந்த அதிகாரத்தைக் கேட்டாலும் சரியாக சொல்ற அளவுக்கு உயர்ந்தா. நினைவாற்றலும் அதிகரிச்சது. தன்னைச் சுற்றி ஒலிக்கும் ஒலிக்கு மெல்ல மெல்ல செவிசாய்க்க ஆரம்பிச்சா.இந்த நேரத்துலதான் இசைல அவளுக்கு ஆர்வம் இருக்கறது புரிஞ்சது. உடனே இசை கற்க ஏற்பாடு செஞ்சேன். ஒரே மாசம்தான்... எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைச்சா! ஜோதிகிட்ட நிறைய மாற்றங்கள் தெரியத் தொடங்கிச்சு. நல்லா தூங்கினா. எல்லாத்தையும் கவனிக்க ஆரம்பிச்சா.

13 வயசுல அடையாறு இசைக் கல்லூரில சேர்த்தேன். கல்லூரிக்கு பக்கத்துலயே வீட்டையும் மாற்றினேன். ‘உங்க பொண்ணு வைரம்மா...’னு இசை ஆசிரியர் பெருமையோடு சொன்னது இப்பவும் நினைவுல இருக்கு.முறையா இசையைக் கற்று 3 வருட டிப்ளமோவை முடிச்சா. ஸ்க்ரைப் உதவியோடு சமச்சீர் கல்வில 10 மற்றும் 12வது தேர்வுகளை எழுத வைச்சேன்.

இசை ஆசிரியருக்கும் படிக்க வைச்சேன். முதல் மாணவியா டிஸ்டிங்ஷன்ல தேர்வானா. மத்தவங்களுக்கு இசையை சொல்லித் தரும் அளவுக்கு உயர்ந்தா. வகுப்புகளும் எடுக்கத் தொடங்கினா...’’ சொல்லும்போதே பூரிப்பில் கலைச்செல்வியின் கண்கள் கலங்கி குரல் தழுதழுக்கிறது. சமாளித்தபடி தொடர்ந்தார்.

‘‘இப்ப வயலின்ல இரண்டாம் ஆண்டு படிக்கிறா. மாலைல இந்துஸ்தானி வோக்கல், வெஸ்டர்ன் வோக்கல், கர்னாடிக் வயலின், வெஸ்டர்ன் வயலின், கீ போர்ட்னு தூங்கற நேரம் தவிர மத்த நேரம் பூரா இசையோடயே வாழறா! இசைல எம்.ஏ. படிக்கும் ஆசையும் அவளுக்கு இருக்கு!

‘லிட் த லைட்ஸ்’ (Lit the lights) அமைப்பு மூலமா ஜோதி பாடின ‘கண்ணம்மா... கண்ணம்மா...’ பாட்டு சமூக வலைத்தளங்கள்ல வைரலாச்சு. இதைப் பார்த்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தன்னுடைய ‘அடங்காதவன்’ படத்துல ஜோதிக்கு வாய்ப்பு கொடுத்து அவளை பாடகியா அறிமுகப்படுத்தினார்.

அந்தப் பாட்டும் ஹிட்டாகி சிறந்த அறிமுகப் பாடகிக்கான கலாட்டா டெபூட் (Galatta Debut) விருதையும் அவளுக்கு வாங்கிக் கொடுத்தது. எந்தக் குழந்தை சபிக்கப்பட்ட நிலைல பிறந்ததோ அதே குழந்தையின் குரல் உலகம் முழுக்க ஒலிக்கறதை கேட்டுகிட்டே எங்கப்பா 2017ல காலமானார்...’’ நிறுத்திவிட்டு சில நொடிகள் இமைகளை மூடி மவுனமாக இருந்த கலைச்செல்வி, பின் கண்களைத் திறந்து ஜோதியைப் பார்த்து புன்னகைத்தார்.

‘‘சமீபத்துல அரசு நிகழ்ச்சிக்காக நாடாளுமன்றத்துல பிர்தமர், ஜனாதிபதி முன்னாடி ஜோதி வயலின் வாசிச்சா! உலக சாதனைக்காகவும் பயிற்சி எடுத்துட்டு வர்றா! இரண்டு முறை இசை நிகழ்ச்சிக்காக மலேசியா போயிட்டு வந்திருக்கோம். அடுத்த மாசம் குவைத்துக்கும் ஸ்காட்லாந்துக்கும் ஜோதி போகப் போறா! சென்னைலயும் அவளைப் பாடச் சொல்லி நிறைய பேர் கேட்கறாங்க. தன்னார்வ அமைப்புகள் பல போட்டிபோட்டுகிட்டு ஜோதியை மேடை ஏத்தறாங்க! இப்ப ஜோதிக்கு 18 வயசாகுது. இசைல கரையறா... ஆனாலும் அவ குழந்தைதான். அதுவும் என் குழந்தை! இசையின் குழந்தை!’’ கம்பீரமாகச் சொல்கிறார் கலைச்செல்வி!                             

மகேஸ்வரி

ஆ.வின்சென்ட் பால்